COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 15, 2013

கச்சத்தீவை மீட்க வேண்டும்தான். மீனவர் மீட்புக்கு என்ன வழி?

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது, கைது செய்யப்படுவது, இலங்கை சிறைகளில் வாடுவது, கொல்லப்படுவது, அவர்கள் உறவினர்கள் அலைகழிக்கப் படுவது என்று அவர்கள் கடலிலும் கரையிலும் கண்ணீர் சிந்துகிற பின்னணியில், கருணாநிதியை விட கூடுதல் அரசியல் மதிப்பெண் பெற, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை அழைக்க டில்லிக்கு வந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், மிகவும் திட்டவட்டமாக, கச்சத்தீவை இந்தியாவுக்குத் தரும் திட்டம் ஏதும் இல்லை என்றார். கச்சத்தீவு தொடர்பாக டெசோ தொடர்ந்துள்ள வழக்கில் உச்சநீதி மன்றம் பெரீசுக்கு தக்க பதிலடி தரும் என்று கருணாநிதி வீர  உரை ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த அதிர்ச்சி செய்தி அய்முகூ அரசாங்கத்திடம் இருந்து வந்தது.

 
2008ல் அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஜெயலலிதா கோரியதன் அடிப்படையில் வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு, இலங்கைக்கு இந்தியப் பகுதி எதுவும் தரப்பட வில்லை (அதாவது மத்திய அரசின் கூற்றுப்படி கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி இல்லை) என்றும் 1974 மற்றும் 1976 ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடல் பகுதியில் (அதாவது கச்சத் தீவில்) மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்றும் அது தாரை வார்க்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்வது அரசு ஆவணங்களுக்கு முரணானது என்றும் தனது பிரமாண வாக்கு மூலத்தில் சொல்கிறது.


இதுவே விவாதத்துக்குரிய விசயமாக மாறியுள்ளது. மத்திய அரசின் தமிழர் விரோதத் தன்மைக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் எதிர்ப்பாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் சொல்ல, ‘தமிழர் நலனை’ அல்லும் பகலும் பாதுகாத்துக் கொண்டிருக்கிற அதிமுக, திமுக முதல் திராவிடக் கட்சிகள் அனைத்தும் கொந்தளித்துப் போக, தமிழ்நாட்டின் சந்தர்ப்பவாத அரசியல் வானத்தில் அறிக்கை மழை பெய்து தள்ளியது.


கருணாநிதி ஆட்சியில்தான் கச்சத்தீவு கைவிட்டுப் போனது என்று ஜெயலலிதா குற்றம்சாட்ட, இரண்டு நாடுகளுக்கிடையில் நல்லுறவு பேணும் நோக்கில்தான் கச்சத்தீவு தரப்பட்டது என்று ஜெயலலிதா என்றோ சொன்னார் என்பதையும், கச்சத்தீவை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதையும் கருணாநிதி நினைவுபடுத்த, ஒருவர் துரோகத்தை, மற்றொருவர் அம்பலப்படுத்தினார்கள்.

இரண்டு நாடுகள் போட்ட ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்று இககமா நாடாளு மன்ற உறுப்பினரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இககமா சட்டமன்ற உறுப்பினர் தமிழக சட்டமன்றத்திலும் சொல்கின்றனர். இந்த வேறு வேறு நிலைப்பாடுகளுக்கு வேறு வேறு விதமான பதில்கள் சொல்லிக் கொள்ளலாம். சந்தர்ப்பவாத அரசியலில் இவை சகஜம். இககமா நாடாளுமன்ற உறுப்பினர் இதையும் தாண்டி இன்னொரு விசயம் கேட்கிறார். கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்று இன்று ஆதாரம் தருபவர்கள், அதாவது, கருணாநிதி, அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது ஏன் வேடிக்கைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார். அதாவது, ஜெயலலிதாவை விட திறமையாக கருணாநிதியை கார்னர் செய்கிறார்.

கொ.ப.செ. தா.பா., கச்சத்தீவை மீட்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவு கோரியிருக்கிறார்.

ஞானதேசிகன் கச்சத்தீவை குத்தகைக்கு எடுக்கும் தற்காலிகத் தீர்வை முன்வைக்கிறார். ராமதாஸ், வைகோ இன்னும் மற்றோரும் பெருபாரியைத் துணைக்கழைத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். இவர்கள் அனைவருமே கச்சத்தீவு மீட்கப்படுவதே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று சொல்கிறார்கள்.
  
பொதுவாகச் சொல்லப்படுவதுபோல் பெருபாரி திரும்பப் பெறப்படவில்லை. பெருபாரி பாகிஸ்தானுக்கு என்று இரண்டு நாடுகளுக்கு இடையிலும் ஒப்பந்தம் ஏற்பட்டபோது, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான், ஒரு நாட்டின் ஒரு பகுதியை ஓர் ஒப்பந்தத்தின் மூலம் இன்னொரு நாட்டுக்கு தர முடியாது என்றும் அரசியல் சாசனத்தின் சட்டத்திருத்தம் மூலம்தான் அது செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பானது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு ஒன்பதாவது அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் பெருபாரியை பாகிஸ்தானுக்கு வழங்க வழி செய்தது. ஆனால், அதற்குப் பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக, பங்களாதேஷ் உருவாக, ஒன்பதாவது அரசியல் சாசனத் திருத்தத்தை அமல்படுத்த முடியாமல் போனது. பெருபாரி இந்தியாவுடன் நின்றது.

இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இப்போது தமிழ்நாட் டில் குரல்கள் எழுகின்றன. நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தம் செய்யாமல் கச்சத்தீவை இலங்கைக்கு தந்திருக்கக் கூடாது என்ற வாதம் சரியே. அந்த அடிப்படையில் 1974, 1976 ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் பின்னணியில் இது மிகவும் அவசியமாகிறது.


ஆனால், ஜெயலலிதாவும் கருணாநிதியும் மற்றவர்களும் தமிழக மீனவர் நலன்களில் கொண்டுள்ள அக்கறையில் இருந்துதான் இந்தப் பிரச்சனையை எழுப்புகிறார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை பொறுத்தவரை, தமிழர் நலன் காப்பவர்களாக காட்டிக் கொள்வதைத் தவிர, தங்கள் சொந்தத் தேர்தல் நலனைத் தவிர வேறேதும் இல்லை. தமிழக மீனவர் நலனில் அவர்களுக்கு இருக்கும் அக்கறையை கூடம்குளம் மக்கள் அன்றாடம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மொத்த எதிர்கால சந்ததியே பாழாகிப் போகும், எங்களை விட்டுவிடுங்கள் என்று விதவிதமாகக் கேட்டுப்பார்க்கும் அவர்கள் குரல் ஜெயலலிதா, கருணாநிதி இருவர் காதுகளிலும் இன்று வரை விழவில்லை. தமிழக காவல் துறையை அனுப்பி அவர்களை ஒடுக்கியவர், அவர்கள் மீது பொருத்தமில்லாத பொய் வழக்குகள் போட்டவர் ஜெயலலிதா. அந்த வழக்குகளை திரும்பப்பெறச் சொல்லி உச்சநீதி மன்றம் சொன்னதைக் கூட இன்னும் அமல்படுத்தாதவர் ஜெயலலிதா. இவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்து ரசிக்கிறவர் கருணாநிதி. இவர்கள் இருவருமே, மீனவர் நலன் பற்றி, தமிழர் நலன் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள்.


தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு கச்சத்தீவில் தொடங்கி கச்சத்தீவில் முடிந் துவிடவில்லை. கச்சத்தீவு மீட்கப்பட்டுவிட்டால் மட்டும் அந்தப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடப்போவதில்லை.


தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் மட்டும் துன்பம் ஏற்படுவதில்லை. வெளிநாட்டு மீன்பிடி கலன்களை ஊக்குவிக்கும் இந்திய அரசின் மீன்பிடி கொள்கைகள், அந்தக் கொள்கையை அமல்படுத்துவதாகச் சொல்லும் இந்திய கடலோர காவல் படையினர் என உள்
நாட்டுக்காரர்களாலும் தமிழக மீனவர்களுக்கு துன்பம்தான்.


ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க 1991ல் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்திய மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுத்துவது என்ற பெயரில் வெளிநாட்டு மீன்பிடிக் கலன்கள் இந்திய கடல் பகுதிகளில் மீன் பிடிக்க நுழைந்தன. இந்திய பொருளாதார தனி உரிமைப் பகுதிகளில் உள்ள மீன்வளத்தை இந்த அந்நியக் கலன்கள் அபகரிக்கின்றன. கடலோரப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பாரம்பரிய மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் மீன் வளம் குறைந்திருப்பதால் ஆழ்கடலுக்குள் செல்லும்போது, வெளிநாட்டு மீன்படி கலன்களுடன் சமனற்ற போட்டியில் இறங்கி படாதபாடுபட வேண்டியுள்ளது. விசைப் படகுக்கு உரிமம் வைத்திருக்கிறாயா என்ற கடலோர பாதுகாப்புப் படையினரின் கேள்விமுதல் வலையை இழுத்துக் கொண்டு ஓடி விடும் அந்நியக் கலன்கள் வரை பல்வேறு துன்பங்களை சந்தித்து அவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு விலையை அவர்கள் சொல்ல முடியாது. அவர்கள் உழைப்பில் இருந்து முற்றிலுமாக அவர்கள் அந்நியப்படுத்தப்பட்டு வியாபாரிகள் விலை நிர்ணயிக்கிறார்கள்.


ஆழ்கடல் மீன்வளம் வீணாகக் கூடாது என்பதற்கு மேல் அது இந்தியர்களுக்கு பயன் படுகிறதா என்பதைப் பற்றி இந்திய அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆழ்கடல் மீன்பிடிப் பில் அனுமதிக் கடிதமுறை மூலம் இந்திய கடல் எல்லைக்குள் சட்டபூர்வமாக மீன்பிடிக்கும் அந்நிய கலன்கள், தாங்கள் பிடித்த மீன்களை கடலிலேயே சட்டபூர்வமாக வேறொரு கப்பலுக்கு மாற்றி சர்வதேச சந்தையில் விற்று விடுகின்றன. இதனால், இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பு குறைவதுடன், இந்தியாவுக்கு, இந்தியக் கடல் எல்லைக்குள் இருக்கும் மீன் வளத்தால் எந்தப் பயனும் இல்லாமல் போகிறது. டாடா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அய்டிசி, இந்துஸ்தான் லீவர், டன்லப் போன்ற நிறுவனங்கள் அந்நிய மீன்பிடி கலன்களுக்கு உரிமம் பெற்றுள்ளன. ஆண்டொன்றுக்கு, மீன்பிடி கலன் ஒன்றுக்கு, ரூ.630 கோடி மதிப்பில் மீன்பிடிப்பு செய்யும் இந்த அந்நியக் கலன்கள் மூலம் மிகசொற்பத் தொகையாக உரிம கட்டணம் தவிர வேறு எந்த வருமானமும் இந்திய அரசாங்கத்துக்கு அவற்றை அனுமதித்தன் மூலம் கிடைப்பதில்லை. ஆண்டொன்றுக்கு ரூ.815 கோடி முதல் ரூ.1196 கோடி வரை இழப்பும் ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த மீன்கலன்கள் கடலோரப் பகுதிகளுக்குள் வந்து அங்கும் பாரம்பரிய மீனவர் பிழைப்பைப் பறிக்கின்றன. இந்தியக் கடலின் ஆழ்கடல் மீன்வளத்தையும் இந்த அந்நியக் கலன்கள் ஒட்டுமொத்தமாக சுரண்டி விடுகின்றன.

அந்நிய மீன்பிடி கலன்களோடு, இலங்கை மீனவர்களோடு மட்டுமன்றி, பிற மாநில மீனவர்களுடனும் தமிழக மீனவர்கள் போட்டிபோட வேண்டியுள்ளது. குமரி மாவட்ட மீன வர்கள் கேரளா மற்றும் மகாராஷ்டிரா கடல் பகுதிகளுக்குச் செல்கிறார்கள். தமிழக கடல் பகுதிக்குள்ளேயே விசைப் படகுகளுக்கும் நாட்டுப் படகுகளுக்கும் இடையில் மீன் பிடிப்பதில் போட்டி உள்ளது. விசைப்படகுகள் தங்கள் வலைகளை அறுத்துவிட்டதாக மற்றவர்கள் புகார் செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதுபோன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் அன்றாட வாழ்க்கையை கவுரவமாக, குறைந்தபட்ச பாதுகாப்புடன் நகர்த்த சில அடிப்படைக் கோரிக்கைகளை நீண்டகாலமாக எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கடலில் இருக்கும் இடத்தைக் காட்டும் ஜிபிஎஸ் கருவிகள், கடலில் மீன்கூட்டம் கண்டு பிடிக்கும் கருவிகள், கரையுடன் தொடர்பு கொள்ளும் கருவிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
மீன்பிடித் தடை காலத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி நீண்ட காலமாக குரல் எழுப்புகிறார்கள். அந்த காலத்தில் மாற்று வேலைவாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அந்நியக் கலன்களுக்கு மான்ய விலையில் டீசல் தரும் அரசாங்கம் தங்களுக்கும் தர வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்யும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அந்நிய மீன் பிடி கலன்கள் பற்றி, அவற்றால் மீனவ மக்கள் வாழ்விழப்பது பற்றி என்றாவது கேள்வி எழுப்பியிருக்கிறார்களா? தமிழக மீனவர் எழுப்பிவரும் சாதாரண கோரிக்கைகளைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்களா?

கடலோரப் பகுதிகளை அழகுபடுத்துவது என்று அங்கு தலைமுறைகளாக வாழும் மீன வர்களை அப்புறப்படுத்துவதற்கும் இலங்கைக் கடற்படை தாக்குவதற்கும் என்ன பெரிய வேறுபாடு? தாது மணல் கொள்ளையால் கடல் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் நாசமாகி றது என்று சொல்கிற தூத்துக்குடி கடலோர மக்களுக்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும்  இன்று வரை என்ன பதில் சொன்னார்கள்? ஆறுகளில் கொட்டப்படும் ஆலை மாசுக்கள் கடலில் கலந்து கடல் நீரை மாசுப்படுத்தி மீன் வளத்தை நாசப்படுத்தி, மீனவர் வாழ்வாதாரத்தைப் பறிப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? கடலில் மீன் பிடிக்கப் போய் காணாமல் போய்விடும் மீனவர்கள் 7 ஆண்டுகளுக்கு வரவில்லையென்றால் தான் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. அது வரை அந்தக் குடும்பங்கள் என்ன ஆகின்றன என்று என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறார்களா?


தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்வதற்கும் கச்சத்தீவு மீள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழக மீனவர்கள் சொந்த நாட்டு ஆட்சியாளர்களால் ஒரு விதமான தாக்குதலுக்கும் உரிமை பறிப்புக்கும் வேற்று நாட்டு ஆட்சியாளர்களால் வேறுவித மான தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள்.


இந்தியப் பிரதமரை சந்திக்க வந்த பெரீசும், இலங்கைக் கடல் பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர் நைலான் வலைகள் மற்றும் ட்ராலர்கள் பயன்படுத்துவதால் அந்த பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார். மீனவர்கள் என்ற பொருளில் இலங்கை மீனவர்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

எரிகிற வீட்டில் கிடைக்கிற வரை லாபம் என்று சிலர் சீன ராணுவம் கச்சத்தீவில் தளம் அமைக்கிறது என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். சீனமோ, இந்தியாவோ, வேறொரு மய்யத் தில் இருந்துதான் ஒன்றன்மீது ஒன்று தாக்குதல் தொடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை. அந்தந்த நாடுகளுக்கு உள்ளிருந்தே, அடுத்த நாட்டைத் தாக்கும் ஏவுகணைகளை இரண்டு நாடுகளுமே வைத்துக் கொண்டுள்ளன. கச்சத்தீவு பிரச்சனையாகவே தொடர்வது ஜெயலலிதா, கருணாநிதிக்கு மட்டுமின்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நல்லது. அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து அரசியல் நடத்த இரண்டு நாட்டு மீனவர்கள் வாழ்க்கையையும் துயரத்தில் தள்ளி, பிரச்சனைகள் தீராமல் பார்த்துக் கொள்வார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் எங்கள் மீனவர்களை நாங்களே ஒடுக்கிக் கொள்கிறோம், இலங்கை கடற்படை ஒடுக்கக் கூடாது என்று மட்டும் உரிமைக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பார்கள்.

Search