COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 1, 2013

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கலாமா?

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெயலலிதாவும் இதே விசயத்தை வலியுறுத்தி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டார். ஆகஸ்டு 12 அன்று மத்திய பழங்கு டியினர் நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திர தியேவுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தின் சாரம் பின்வருமாறு:

‘தமிழகத்தில் நரிக்குறவர்கள் என்ற ஓர் இனம் உள்ளது... வாழ்நிலை பரிதாபகரமானதாக உள்ளது... காலம் காலமாக நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வதற்கென்று நிலையான இடம் எதுவும் கிடையாது. அவ்வப்போது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கியவர்கள்... நம்மால் இரக்கமுடன் கவனிக்கப்பட வேண்டியவர்கள்... சரித்திர ரீதியாகவும் அவர்கள் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள்... அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்... திமுக அரசு நரிக்குறவர் நலனுக்காக 1970களில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்து, அங்கேயே அவர்களை குடியமர்த்த வழிவகை செய்தது.. 2008 - 2009ல் தனியாக நல வாரியம்  உருவாக்கி, அவர்களுக்கு பல்வேறு வகைகளில் நிதி உதவி செய்தது...’. சிபிஎம் கட்சியும் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்வோம் என பதில் அளித்துள்ளார்.


பழங்குடியினர் வரையறைகள்

இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதுதான் பழங்குடி என அடையாளப்படுத்துவது துவங்கியது. 1901 கணக்கெடுப்பின்போது ஆவி வழி பாடு கொண்டவர்கள் பழங்குடி என பதிவு செய்யப்பட்டனர். 1921 கணக்கெடுப்பில் மலை வாசிகளும் காட்டுவாசிகளும் பழங்குடிகள் என வரையறுக்கப்பட்டனர். 1931 கணக்கெடுப்பில் ‘தொல்பழங்குடிகள்’ எனப்பட்டனர். காலனிய அதிகாரிகள் ட்ரைப், அபாரிஜின்ஸ் என்ற சொற்களையும், ‘ஆதிவாசி’ என்ற சொல்லை இந்தியாவைச் சேர்ந்த அறிஞர்கள், தலைவர்களும் பயன்படுத்தினர். அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய அம்பேத்கர் அட்டவணைப் பழங்குடி (ஷெட்யூல்டு ட்ரைப்) என அடையாளப்படுத்தினார். பின்வரும் அடிப்படைகள் கொண்டவர்கள் பழங்குடியினர் என வரையறுக்கப்படுகிறார்கள்: 1. தொல்குடி எச்சங்களின் அடையாளங்கள் 2. தனிச்சிறப்புமிக்க பண்பாடு 3. பூகோளரீதியில் தனிமைப்பட்டிருத்தல் 4. பெரிய அளவில் சமூகத்துடன் தொடர்பு இல்லாமல் ஒதுங்கியிருத்தல் 5. பின்தங்கிய நிலை.

தமிழகத்திலுள்ள பழங்குடிகளை அவர்களது ‘தொன்மையை’ அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1. தொல்குடி: வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்பவர்கள், தனித்துவமான இனக் கூறுகளை கொண்டிருப்பவர்கள். 2. முதுகுடி: நீண்ட நெடுங்காலமாக தங்களது (மலை, மலை சார்ந்த/வனம் சார்ந்த) பகுதிகளில் மண்ணின் மைந்தர்களாக வாழ்பவர்கள் 3. பழங்குடி: பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், பல்வேறு காரணிகளால் சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப்பகுதிகளுக்குச் சென்று குடியேறி வாழ்பவர்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், வட மேற்கில், குஜராத் பகுதியில் இருந்து, அரசியல் காரணங்களால், இடம் பெயர்ந்து வந்த ஒரு மக்கள் பிரிவு நரிக்குறவர்கள் என அழைக்கப் படுகின்றனர். மராத்தி மொழியின் சாயலுடைய தோமாரி மொழியின் கிளையான வக்ரி போலி என்ற மொழியைப் பேசும் இம்மக்கள் நிலையாக தங்கி வாழும் வாழ்க்கையை மேற்கொள் வதில்லை. துவக்க காலத்தில் நரிகளை வேட்டையாடுவது, பிடிப்பது போன்றவற்றில் ஈடு பட்டதால், நரிக்குறவர்கள் என்றும், பழைய வகையிலான துப்பாக்கிகளை வைத்து பறவை களை வேட்டையாடியதால் குருவிக்காரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். தற்போது பல வகை மணியிலான அணிகலன்களை விற்பவர்களாக உள்ளனர். நரிக்குறவர்களில் பெரும் பான்மையோர் நாடோடி வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். இருப்பிட சான்றிதழ்களோ அல்லது முறையான அதிகாரப்பூர்வமான ஆவணங்களோ இல்லாதவர்களாக உள்ளனர். மிகவும் பிற்பட்டோர் (எம்பிசி) பட்டியலில் உள்ளனர். இவர்களின் திட்டவட்டமான மக்கள் தொகை எண்ணிக்கையும் தெரியவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில், 2005ல், தமிழக அரசு, நரிக்குறவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து கோரி பரிந்துரை செய்தது. மத்திய அரசு நரிக்குறவர் சமுதாயத்தின் பழங்குடி அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு திருப்பி அனுப்பி விட்டது. இவர்கள் சந்திக்கும் மாபெரும் துன்பங்களான ஏழ்மை, நோய்கள், எழுத்தறிவு இன்மை, நிலையாகத் தங்கி வாழும் வசதியின்மை ஆகியவற்றைப் போக்க எந்த அரசாங்கமும் திட்டமிடவில்லை. நரிக்குறவர்கள் ஏழைகள், நாடோடிகள், அக்கறை செலுத்தப்பட வேண்டியவர்கள் என்பதைத் தவிர, மானிடவியல் அளவுகோல்கள் படியும் அரசாங்க (பழங்குடி அமைச்சகம்) வரையறைகளின்படியும் பழங்குடியினர் எனக் கருத முடியாது. மாறாக, நாடோடித் தன்மை வாய்ந்த, இருப்பிட முகவரி தர இயலாத இவர்களுக்குத் தரப்படும் பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து, பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினர் ஆகும் மோசடிக்கு நியாயம் வழங்கும்.


அட்டவணைப் பழங்குடியினரில் (எஸ்டி)
நிரம்பி வழியும் போலிகள்

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் எண்ணிக்கை 6,51,321. இவர்களில், பழங்குடியினர் என்ற போர்வையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போலிச் சான்றிதழ்கள் பெற்றுள்ள பிற சமூகத்தினர். 1961 கணக்கெடுப்பின்போது பழங்குடியினர் மக்கள் தொகை 2,51,991. இது தமிழக மக்கள் தொகையில் 0.75% இருந்தது. 1971 கணக்கெடுப்பில் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515. இது 1981ல் 5,20,226 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது 1971 - 1981 பத்தாண்டுகளில் மட்டும் 67% உயர்ந்துவிட்டது.

பழங்குடியினர் மக்கள் தொகை 1981 - 1991க்கு இடையில் 10%மும், 1991 - 2001க்கு இடையில் 13% மட்டுமே உயர்ந்துள்ளது என்ற விவரங்களைப் பார்த்தால் போலிகள் நுழைவை அறிந்து கொள்ள முடியும். தொல் பழங்குடியினர் என்றழைக்கப்படுகிற, மக்கள் தொகையில் அதிகரிக்காத அல்லது அருகி வருவதாகக் கருதப்படுகிற, 6 தொல்பழங்குடியினரில் காட்டுநாய்க்கர் பிரிவில் சுமார் 33000, கொண்டாரெட்டி பிரிவில் 19,000, குருமன்ஸ் பிரிவில் 20,000, இருளர் பிரிவில் 30,000 பேர் என போலிகள் இணைந்துள்ளனர். நீலகிரி மலைப் பகுதிக்கு வெளியே தமிழகம் முழுவதும் பரவலாக, பல ஆண்டு காலம் போலிகள் வந்து குவிந்துவிட்டனர். காட்டுநாய்க்கன் பிரிவில் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள நாய்க்கர், தொழுவ நாய்க்கர், வெத்திலைக்கார நாய்க்கர், உரிக்கார நாய்க்கர் பிரிவுகளிலிருந்தும் மிகவும் பிற்பட்ட தொட்டிய நாய்க்கர் பிரிவிலிருந்தும் உள்ளே நுழைந்தனர். முற்பட்ட வகுப்பினரான ரெட்டியிலிருந்து கொண்டாரெட்டிக்கும் பிற்பட்ட வகுப்பினரான 27 வகையான குறவரிலிருந்து மலைக் குறவனுக்கும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரான குரும்ப கவுண்டரிலிருந்து குறுமன்ஸ் பிரிவுக்கும், பிற்பட்ட வகுப்பு ஊராளி கவுண்டர்களிலிருந்து ஊராளி பழங்குடிக்குள்ளும் போலிகள் நுழைந்து விட்டனர். 10,000க்கும் மேற்பட்ட பழங்குடி போலிச் சான்றிதழ் வழக் குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அட்டவணைப் பழங்குடியினரில் சொல்லப்படுகிற எல்லை வரம்பு (ஏரியா ரெஸ்ட்ரிக்சன்) அரசு அதிகாரிகளால் கடைபிடிக்கப்படுவதில்லை. அருகி வருவ தாக பட்டியிலிடப்பட்ட சில தொல்பழங்குடியினர் மக்கள் தொகையில் 800% வரை மக்கள் தொகை  உயர்ந்தபோதுதான் ‘போலிகள்’ பற்றிய விவரங்கள் வெளிப்படையாகின. உண்மை யான தமிழகப் பழங்குடியினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை முறையாகப் பெற முடிய வில்லை. தமிழகத்தில் உள்ள 1% (பழங்குடியினர்) இட ஒதுக்கீட்டையும் போலிகளே 90% அபகரித்து உள்ளனர். பிரிட்டிஷார் ஆட்சியில் பழங்குடியினருக்கு எதிரான நில உரிமைச் சட் டங்களாலும் மலைப் பகுதிகளில் காட்டெரிப்பு விவசாய முறை தடை செய்யப்பட்டதாலும், காப்பி எஸ்டேட்டுகள் போன்றவற்றை அமைக்கவும் வெளியேற்றப்பட்ட, மலையாளிப் பழங்குடியினர், நிலங்களைப் பெரிதும் இழந்தனர். போலிச் சான்றிதழ்களால் வேலை வாய்ப்புகளையும் பெற முடியாமல் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

இந்தப் பின்னணியிலிருந்துதான், நரிக்குறவர் சமூகத்தை பழங்குடிப் பட்டியலில் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டியுள்ளது. பழங்குடியினரை வரையறுப்பதற்கான முறையான அறிவியல் பூர்வமான பார்வை மானிடவியல் பார்வையே. ஆனால், பல சந்தர்ப்பங்களில், பழங்குடிகளாக அங்கீகாரம் பெறுவதில், அச்சமூகங்களின் மக் கள் தொகையும், வாக்கு வங்கியும், அரசியல் கட்சித் தலைவர்கள் மூலம் ஏற்படும் அழுத்தங் களும் காரணமாகி விடுகின்றன. மானிடவியல் காரணிகள்/அளவுகோல்கள், அரசாங்கத்தின் வரையறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.


அரசியலமைப்புச் சட்டமும்
அரசியல் தலைவர்களின் கூப்பாடும்

உலகமய, தனியார்மய, தாராளமய கால கட்டத்தில், அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றன. தனியார் நிறுவனங்களில் வேலைகள் வழங்குவதில் இட ஒதுக்கீடு கிடையாது. கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட பிரிவினர் (எஸ்சி & எஸ்டி) வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றுதான் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் நம்பினர். வரம்புக்குட்பட்ட அந்த வாய்ப்பையும் தட்டிப் பறிக்க, அரசியலை பிழைப்பாகக் கொண்ட தலைவர்கள் கூப்பாடுகள் போடுகின்றனர். அறிக்கைகளை வெளியிட்டுத் தள்ளுகின்றனர். ஜெயலலிதாவின், கருணாநிதியின் நரிக்குறவர் கவலை, சிபிஎம் தலைவர்களின் குரும்பர் மற்றும் குறவர் அரசியல் ஆகியவை சமூக வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளை மனதில் கொள்ளாமல் எழுப்பப்படுகின்றன.

பழங்குடியினர் யாவர் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 342 பின் வருமாறு விளக்குகிறது. குடியரசு தலைவர், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் ஆளுநரை கலந்தாலோசித்த பின், பழங்குடிகள் அல்லது பழங்குடி சமூகங்கள் அல்லது பழங்குடிகள்/பழங்குடிச் சமூகங்களின் சில பிரிவினர்களை அல்லது குழுக்களை ஒரு பொது அறிவிக்கையாக, (அரசியலமைப்புச் சட்ட பழங்குடியினர் உத்தரவாக) அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களே இந்த அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அட்டவணைப் பழங்குடியினராக (செட்யூல்டு ட்ரைப்ஸ்) கருதப்படுவர். இந்தப் பட்டியலில் ஒருவரை இணைப்பதையோ அல்லது நீக்குவதையோ, நாடாளுமன்றத்தில் இயற்றும் ஒரு சட்டத்தின் மூலம் செய்யலாம். ஆனால், ஏற்கனவே குடியரசுத் தலைவர் பழங்குடி என பொது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு பிரிவை வேறொரு அறிவிப்பின் மூலம் அவரே கூட நீக்க முடியாது.

நாடாளுமன்றத்தை தவிர எந்தவோர் அதிகார அமைப்பும், ஏற்கனவே வெளியிட்டுள்ள உத்தரவை (பழங்குடியினர் பட்டியலை) மாற்றியமைக்க முடியாது. மாநில அரசாங்கங்களோ, சட்டரீதியான அமைப்பாகக் கருதி நீதி மன்றங்களோ, தீர்ப்பாணையங்களோ, எந்தவொரு அதிகார அமைப்போ இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தவோ, உத்தரவிடவோ முடியாது.

எந்தவொரு பழங்குடியை அல்லது சாதியை இணைக்கவோ, நீக்கவோ கோர முடியாது. கூர்நோக்கு குழு உறுப்பினர்களோ, பழங்குடி வளர்ச்சி/ஆராய்ச்சி அதிகாரிகளோ, ஒரு பழங்குடிப் பெயரை மற்றொன்றாக சித்தரிக்க முயற்சிப்பதோ, எல்லை வரம்புகளை (ஏரியா ரெஸ்ட்ரிக்சன்) மாற்றக் கோருவதோ தவறானது. சட்டவிரோதமானது. பரிசீலனைக்கே உட்படுத்தக் கூடாதது ஆகும்.


அரசியலமைப்புச் சட்டம் பற்றிய சட்ட அறிவு இல்லாதவர்கள் என நாம் அரசியல் கட்சித் தலைவர்களை கருதிவிட முடியாது. சட்ட வல்லுநர்கள் மூலம் தங்கள் கோரிக்கையின் தராதரத்தை அறிந்தே இருக்கிறார்கள். எனினும் அரசியல் நோக்கங்களுக்காக அவ்வப்போது இத்தகைய கோரிக்கைகளை எழுப்புகிறார்கள். இவர்களால் ஊக்கம் பெறப்பட்டே போலிகள் பழங்குடிப் பட்டியலில் நுழைகிறார்கள்.

 பழங்குடி சங்கங்கள் அமைத்துக் கொள்கிறார்கள். கூர்நோக்கு குழு உறுப்பினர்களும், பழங்குடி ஆராய்ச்சி மய்ய அதிகாரிகளும் விலை போகின்றனர். ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கேற்ப ஆய்வுகளை எழுதுகின்றனர். அறிக் கைகளை அனுப்புகின்றனர். வாக்கு வங்கிகளை இலக்காக வைத்து திமுக அதிமுக, சிபிஎம் தலைவர்கள் அரசியல் நடத்துகிறார்கள். பழங்குடி மக்கள் வாழ்க்கையில் விளையாடுகிறோம் என்ற உணர்வே இன்றி, பொழுது போக்குபோல அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். விழிப்புணர்வு பெற்று வரும் பழங்குடிகள் இவர்களை நிச்சயம் முறியடிப்பார்கள். பழங்குடிகள் அரசியல் ரீதியாக வலிமையானவர்கள் என்பதை நிரூபிப்பார்கள்.

Search