COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 1, 2013

தோழர்கள் சந்திரகுமார், சந்திரசேகர், சுப்பு நினைவாக

இரண்டு கனவுகள் இரண்டு பாதைகள்

மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா பற்றி கொண்டிருந்த மாபெரும் கனவு போல் தனக்கும் தமிழ்நாடு பற்றி ஒரு கனவு இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா சொல்கிறார். அவர் கனவு காணும் தமிழ்நாட்டில் இளைஞர் எவரும் வேலை இன்றி இருக்கமாட்டார். தனி நபர் வருமானம் 6 மடங்கு உயர்ந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரமாக இருக்கும். ஒவ்வொரு குடிமகனும் மருத்துவம், கல்வி, தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் பெற்றிருப்பார்கள்.

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு தொழிற்சாலையும் வர்த்தக நிறுவனமும் தங்கு தடையற்ற மின்சாரம் பெற்றிருக்கும். உயர்நிலைப்பள்ளிக் கல்வித் தகுதி பெற வேண்டிய அனைவரும் கல்வி பெற்றிருப்பார்கள். சேரிகள் இல்லாத, குடிசைகள் இல்லாத, திறந்த வெளி கழிப்பறைகள் இல்லாத தமிழகம் உருவாகியிருக்கும். வறுமை முழுவதுமாக ஒழிக்கப்பட்டிருக்கும். எல்லோரும் எல்லாமும் பெற்றிருப்பார்கள். மாநிலத்தின் அனைத்து மக்களும் செழிப்பும் பாதுகாப்பும் அமைதியும் பெற்றிருப்பார்கள்.


இந்தக் கனவுகள், ஏற்கனவே இரண்டு முறை புரட்சித்தலைவி ஆட்சியில் இருந்தபோது ஏன் உருவாகவில்லை? இவரது வழிகாட்டி புரட்சித் தலைவர் ஆட்சியில் இருந்தபோது அவருக்கு ஏன் இந்தக் கனவு கள் வரவில்லை?

இப்போது, நூறாண்டு பேசும் ஓராண்டில், சரித்திரம் பேசும் ஈராண்டில் ஏன் இந்த சாதனைகள் நடக்கவில்லை?  சுதந்திரம் அடைந்த 65 ஆண்டுகளில் திராவிட ஆட்சி நடந்து கொண்டிருக்கும் 45 ஆண்டுகளில் ஏன் நடக்கவில்லை? இது பற்றியெல்லாம் அவரது கனவுத் திட்டத்தில் எந்த ஆய்வும் இல்லை.


மேலே கூறியுள்ள கனவுகளை முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி நனவாக்கப் போகிறார்? 15 லட்சம் கோடி இருந்தால் போதும் எட்டிவிட முடியும் என்கிறார். இந்த 15 லட்சம் கோடியை வைத்து என்ன செய்வார்? உலகத் தரம் வாய்ந்த உள்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவார். தற்போதுள்ள 10 நகரங்களை அனைத்து உள்கட்டுமான வசதிகளும் கொண்டதாக உலகத்தரத்துக்கு இணையாக மாற்றுவார். தமிழ்நாடு முழுவதும் 6 வழி, 8 வழிச் சாலைகள், பாலங்களை உருவாக்குவார்.


15 லட்சம் கோடி எங்கிருந்து வரும்? தனியார் அமைப்புகள், வங்கிகள், நேரடி அன்னிய முதலீடு மூலமாக வரும் என்கிறார். இந்த 15 லட்சம் கோடியை ஈர்க்க, உள்கட்டுமான திட்டங்களிலும் சேவை வழங்குவதிலும் தனியார் முதலீடு ஊக்குவிக்கும் முதலீட்டுக்கு உகந்த ஆசியாவின் மூன்று முக்கிய இடங்களுள் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டால் முதலீடு வெள்ளமெனப் பாயும் என்கிறார். எனவே, தமிழ்நாட்டை முதலீட்டுச் சூழலுக்கான முக்கியமான இடமாக மாற்றுவதே தொலை நோக்குத் திட்டம் 2023ன் முக்கியமான கொள்கைத் திட்டமென்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆக மூலதனம் வந்துவிட்டால் முதலாளித்துவம் வளர்ந்துவிட்டால் தமிழ்நாடு தலைகீழாக மாறி விடும் என்கிறார்!


முதல்வர் வெளியிட்டுள்ள தொலை நோக்குத்திட்டம், உள்கட்டுமான திட்டங்களில் தற்போதுள்ள தனியார் முதலீட்டு வரம்பு 19 சதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்த்தப்படுமென்கிறது. உள்கட்டுமானம், சேவைத்துறைகளில் தனியார் நுழைந்தால் அடிப்படை வசதிகள் தனியார்மயமாகும், வர்த்தகமயமாகும். தண்ணீர், மின்சாரம், சாலை, மருத்துவம், கல்வி, உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் காசு கொடுத்துத் தான் வாங்க வேண்டும்.


ஜெயலலிதாவின் கனவுத் திட்டத்தில், மார்ட்டின் லூதர் கிங் கனவு போல் எதுவும் இல்லை. பிறப்பில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் பார்ப்பனியம் ஒழிய வேண்டும். தீண்டாமை மறைய வேண்டும். சாதி ஒழிய வேண்டும். பெண்ணை அடிமை கொள்ளும் ஆணாதிக்கம் அடியோடு சாய வேண்டும். கண்மூடி வழக்கங்கள் மண்மூடி மறைய வேண்டும், கழிவுகளை மனிதர் சுத்தம் செய்யும் காலம் மறைய வேண்டும், காதலை வெறுக்கும் கயமை ஒழிய வேண்டும், காதலர்களை கொலை செய்யும் கயவர்கள் தொலைய வேண்டும், கவுரவக் கொலைகள் காணாமல் போக வேண்டும், கொத்தடிமையும் குழந்தை தொழிலாளர் உழைப்பும் மொத்தமாய் ஒழிய வேண்டும் என்பது போன்ற எதுவும் இல்லை. தலித்துகளும் சிறுபான்மையினரும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்  இருளரும் குறவரும் அடக்கப்பட்டோரும் ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் ஒன்று கூடி சாதிகள் ஒழிந்தன, சழுக்கர்கள் மறைந்தனர், தீமைகள் மாய்ந்தன, தீயோர் மறைந்தனர், அடக்குமுறை ஒழிந்தது, அநியாயங்கள் மறைந்தன என்று கூத்தாடும் நாள் ஒன்று வரவேண்டும் என்பது போன்ற கனவுகள் எதுவும் இல்லை.


தமிழகம் பற்றிய தனது கனவான தொலைநோக்கு 2023 திட்டத்தை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது கனவுத் திட்டத்தை நனவாக்குவதில் உணவுப் பாதுகாப்பும் இரண்டாம் பசுமைப்புரட்சியும் மிக முக்கிய அங்கமாக இருக்கும் என்றார். அதே மேடையில் முதலாளிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். கடலூர்-நாகை மாவட்டங்களில் பெட்ரோ-ரசாயன பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தப்படி தொண்ணூறாயிரம் கோடியில் உருவாக இருக்கும் அந்த வளாகத்துக்கு 62,000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆண்டுக்கு 62 லட்சம் கிராமப்புற மக்கள் வேலை இழப்பார்கள், நெல் உற்பத்தி ஆண்டுக்கு 62 லட்சம் மூட்டைகள் காணாமல் போகும்! இதைத்தான் இரண்டாம் பசுமைப்புரட்சி என்கிறார்; உணவுப் பாதுகாப்பு என்கிறார்.

பத்தாண்டுகளில் வறுமையை, வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்பது இருக்கட்டும், ஒரே ஆண்டில் சிலவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா செய்யலாம். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை, நாளொன்றுக்கு ரூ.148 கூலி என்று அறிவித்தார். ஒரு ஊராட்சியில் கூட நிறைவேறவில்லை. கோயில் மடத்து நிலங்களில் குடியிருக்கும் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அந்த இடங்களைச் சொந்தமாக்க வேண்டும் என்று கோருகிறார்கள் ஏழைகள். அதிமுக ஆட்சி நிறைவேற்றவில்லை. கோவில் மடத்து நிலங்களை அரசுடைமையாக்கி நிலமற்றவர்களுக்கு கொடுத்தால் கிராமப்புற வறுமை ஓரளவுக்கு குறையும். அதை செய்ய தயாராக இல்லை. அபகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான பஞ்சமர் நிலங்களை மீட்டு உரிய தலித்துகளிடம் ஒப்படைத்தால் தலித்துகளுக்கு நீதி கிடைக்கும்.

 டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் ஏழைகள் சாமான்யர்களின் உயிரும் வருமானமும் பாதுகாக்கப்படும். இதைச் செய்யத் தயாராக இல்லை. எல்ஏ பில் 47/2008 திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுத் தந்தால் தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக இருக்கும் லட்சக்கணக்கான பயிற்சியாளர்கள், வாழ்வில் மாற்றம் வரும். அதைச் செய்வதற்கு முன் வரவில்லை.

 சுமங்கலித் திட்டத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கும் லட்சக்கணக்கான இளம் பெண்களை மீட்டு மறுவாழ்வு அளித்தால் அவர்கள் கவுரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வார்கள். இதைச் செய்வதற்கு தயாராக இல்லை. இருளர் பெண்களை பால் வல்லுறவுக்கு ஆளாக்கிய போலீஸ்காரர்களை சிறைக்கு அனுப்பினால் குற்றவாளிகளுக்கு பயம் உண்டாகும். குற்றங்கள் குறையும். பரமக்குடியில் தலித்துகளைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்களின் காக்கிச் சட்டையைக் கழற்றினால் தலித்துகளுக்கு நியாயம் கிடைக்கும். இயற்கை வளங்களை கிரானைட், தாதுமணல், ஆற்று மணல்களைக் கொள்ளையடிக்கும் வைகுண்ட ராஜன் போன்றவர்களை உள்ளே தள்ளி சொத்துக்களைப் பறிமுதல் செய்தால் டாஸ்மாக் வருமானம் தேவைப்படாது.

இவற்றையெல்லாம் செய்ய ஜெயலலிதா பிரதமராக ஆக வேண்டியதில்லை. முதலமைச்சராக இருந்து கொண்டே அந்த அதிகாரத்தைக் கொண்டே செய்ய முடியும். இதற்கு பத்தாண்டு தேவையில்லை. ஒரே ஒரு ஆண்டு போதும். இதையெல்லாம் செய்யாதவர் எப்படி 10 ஆண்டில் தமிழ்நாட்டை வறுமை இல்லாத மாநிலமாக்கப் போகிறார்? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம் என்ற தமிழ்நாட்டுப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!


கூடங்குளத்தில் அணு உலை கூடாது என்று போராடியவர்கள் மீது 2 லட்சம் தேசத் துரோக வழக்குகளைப் போட்டுள்ளார்! பரமக்குடியில் வீதிக்கு வந்த தலித்துகளை, வன்முறையாளர்கள், தீய சக்திகள், சமூக விரோதிகள், அவர்களைப் போலீஸ் சுட்டிருக்காவிடில் பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்கும் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சட்டமன்றத்திலேயே சாடியவர் ஜெயலலிதா! ஒரு தேர்தலில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் ஓட்டுகளை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராக கத்தியை தூக்கிய உட்ரோ வில்சனைப் போல் தலித்துகளின் ஓட்டுகளையும் வாங்கி அதிகாரத்துக்கு வந்ததும் தலித்துகளுக்கெதிராக துப்பாக்கியை தூக்கியவர்தான் ஜெயராம் ஜெயலலிதா!

விழுப்புரம், தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களை 144 தடை உத்தரவின் கீழ் வைத்திருக்கிறார். சட்டமன்றத்தில் அவரைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என்பதற்காக 111, சட்டமன்றத்துக்கு வெளியே அவரது கட்சியைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என்பதற்கு 144, அமெரிக்காவை ஆண்ட உட்ரோ வில்சனை படித்து உற்சாகமடைந்ததாலோ என்னவோ இந்தியாவை ஆள பிரதமர் கனவு காண்கிறார்!


ஜனநாயகம் இல்லாத சமுதாய வாழ்வில் மக்களின் பொருளாதார வாழ்வும் பறிக்கப்படும். அதிமுக ஆட்சி விழுப்புரத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்ததால் தேசிய ஊரக வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டது. தலித்துகளும் வன்னியர்களும் ஊரக வேலைத் திட்டத்தில் சந்தித்தால் சாதிக் கலவரம் வெடிக்கும் என்று காரணம் சொல்லப்பட்டது.


எனவேதான் அரசின் கட்டமைப்பை நடவடிக்கைகளை முழுமையாக ஜனநாயகப்படுத்த வேண்டும் என இகக(மாலெ) கட்சித் திட்டம் கூறுகிறது.

 சமமான, நேரடியான, வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்கு எல்லா மட்டத்திலும் அரசியல் அதிகார உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். (சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவுத் தேர்தலில் அதிகாரம் அனைத்தையும் அதிமுகவினரே பறித்துக் கொண்டனர்). அரசு நிர்வாகம் வெகுமக்கள் மேற்பார்வைக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். அதிகாரம் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அதிகாரிகளையும் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். ஜனநாயகக் கட்சிகள், அமைப்புகளின் தனிப்பட்ட, கூட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு பயங்கரவாதம், காவல்துறைக் காட்டுமிராண்டித்தனம் (பரமக்குடி, கூடங்குளம்) ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அரசியல் பொருளாதார வாழ்வின் அனைத்து தளங்களிலும் குற்றமயமும் ஊழலும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். துரிதமான, முற்போக்கான, நீதி வழங்கும் முறை வேண்டும்.


நெப்போலியனது கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்ததற்காக நாடு கடத்தப்பட்ட பிரஞ்சுப் புரட்சியின் தேசிய நாயகனாக மதிக்கப்பட்ட கவிஞர், நாவலாசிரி யர், நாடகாசிரியர் விக்டர் ஹ÷கோ சொன்னதை ஜெயலலிதா சுட்டிக் காட்டுகிறார்.

 ஒரு கருத்தின் காலம் வந்துவிட்டால் இந்த பூமியில் அதை தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது என்று விக்டர் கூறியதை சுட்டிக் காட்டுகிறார். இதைச் சொல்வதன் மூலம் வரலாறு முடிந்து விட்டது. வர்க்கப் பேராட்டம் முடிந்து விட்டது. முதலாளித்துவம்தான் எல்லாம் என்ற கருத்தை ஜெயலலிதா முன்வைக்கிறார். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் முதலாளித்துவம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. ஜனநாயகம், சோசலிசம் என்ற கனவை நோக்கி மக்கள் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவுக்கு  நினைவுபடுத்துவோம்.

மூலதனத்தின் கொடூரக் கனவை முதலாளிகளின் கோரக் கனவை உழைக்கும் மக்களின் கனவாக மாற்றத் துடிக்கும் ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கனவைக் கலைக்க சந்திரகுமார் - சந்திரசேகர், சுப்பு ஆகிய தோழர்களின் கனவையும் லட்சியத்தையும் உயர்த்திப் பிடிப்போம்.  அப்பு, சந்திரகுமார்-சந்திரசேகர், சுப்பு ஆகியோரைக் கொன்ற கொலையாளிகளை நீதிமன்றங்கள் தப்பிக்க விட்டிருக்கலாம். ஆனால் புரட்சியாளர்களின் கனவும் தியாகமும் அநீதியின் அடிப்படையிலான முதலாளித்துவ ஆட்சிமுறையை தண்டிக்காமல் விடாது.

விக்டர் ஹ÷கோ சொன்னதை காலப் பொருத்தத்தோடு சொல்வோம். இது வரலாற்றின் காலம், வர்க்கப் போராட்டத்தின் காலம், இந்தக் கருத்தை தடுத்து நிறுத்த ஜெயலலிதா உள்ளிட்ட எந்த சக்தியும் இந்த பூமியில் இல்லை.

Search