COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 15, 2013

முசாபர்நகரில் மதவாத வெறியாட்டம்

பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனக்கே உரிய வழியில் தயாராகிறது. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர்.  நரேந்திர மோடியின் குஜராத் நரவேட்டைத் தளபதி அமித் ஷா, உத்தரபிரதேச மாநிலத்துக்கு பாஜக தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர். எது நடக்க வேண்டுமோ அது நடந்து விட்டது.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் இசுலாமியர்கள் வேட் டையாடப்பட்டனர். படுகொலை, குண்டு வீச்சு, வீடு எரிப்பு, வீடு இடிப்பு எல்லாம் நடந்தேறின. சாவு எண்ணிக்கை நாற்பதை நெருங்கி விட்டது.


உத்தரபிரதேசத்தில் பிரதான போட்டியாளர்கள் முலாயமும் மாயாவதியும்தான். பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே, முதலிடத்திற்கான போட்டியாளர்கள் அல்ல. யார் மூன்றாம் இடம், யார் நான்காம் இடம் என்பதில் தான் அவர்கள் போட்டி. உத்தர பிரதேசத்தில் நாம் எதிர் இசுலாமியர்கள் என்ற சமன்பாட்டை, இந்து அணிதிரட்டலை உருவாக்குவதில் தான், பாஜக உத்தரபிரதேசத்தில் கணிசமான நாடாளுமன்ற இடங்களைப் பிடிக்க முடியும்  எனக் குரூரமாகத் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது சங்பரிவார். இந்த அரசியல் சதுரங்கத்தில், மனிதத் தலைகளே வெட்டுண்டு மண்ணில் விழுகின்றன. டில்லி சிம்மாசனம் நோக்கிய பயணப் பாதையில் கடந்த காலத்தில் அத்வானியின் ரத யாத்திரை மூலம் ரத்த ஆற்றை ஓட வைத்தார்கள். பிணக் குவியல் மீது கால்வைத்து ஏறி பதவியைப் பிடித்தார்கள்.


நிலம் கையகப்படுத்துதல், ஓய்வூதியம் போன்ற அனைத்து விசயங்களிலும் காங்கிரசோடு நாடாளுமன்றத்தில் கார்ப்பரேட் கருத்தொற்றுமை  கொண்டுள்ள பாஜகவிற்கு, நாடு நெருக்கடியில் இருந்து மீள அந்நிய முதலீடும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுமே முன்னிபந்தனைகள் என காங்கிரசைக் காட்டிலும் உரத்துக் குரல் எழுப்பும் பாஜகவிற்கு, இப்போது, வசதியாகக் கை கொடுக்கும் ஒரே துருப்புச் சீட்டு மதவாதமே. சங்பரிவார், சில இந்துக்களை, ஓர் இசுலாமிய பெரும்கும்பல் கொடூரமாக கொல்வது போல், ஒரு போலி காணொளிக் காட்சியை தயாரித்து வெளியிட்டதும், பிரச்சனைக்கு ஒரு முக்கிய காரணம்.


முசாபர்நகர் நிகழ்வுகளை, முலாயம் அது ஜாட் - இசுலாமியர் சண்டை மட்டுமே என்றும் அதற்கு மதவாதச் சாயம் பூசக்கூடாது என்றும் பேசுகிறார். முலாயம், பாஜகவின் மதவாதத்தோடு நேருக்கு நேர் மோத இந்து வாக்கு வங்கியிடம் இருந்து அந்நியப்படத் தயாரில்லை. அதனால்தான், முசாபர்நகரில், தடையின்றி ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட மகாபஞ்சாயத்து ஆகஸ்ட் 31 அன்று நடந்துள்ளது. அங்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஹ÷கும் சிங், சுரேஷ் ரானா, சங்கீத் சிங் சோம் மற்றும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்கள் நரேஷ் திகாயத், ராகேஷ் திகாயத் ஆகியோர், இசுலாமியர்களுக்கு எதிராக மதவெறி நஞ்சை பாய்ச்சும் உரையாற்றினர்.

அதற்குப் பிறகே, இசுலாமியர் மீதான தாக்குதல் வேட்டை துவங்கியது. மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பேசியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. (அவர்கள் பேசிய விஷயங்களை, தேசிய தொலைக்காட்சி அலை வரிசைகள் வெளியிட்டன). நரேந்திர மோடி ஆட்சிக்கு வர இத்தனை உயிர்ப்பலி என்றால், அவர் பிரதமரானால் என்னவெல்லாம் நடக்கும்?


மேற்கு உத்தரபிரதேசத்தில் ‘சங்பரிவார் விஷம் காய்ச்சுகிறது’ எனத் தலைப்பிட்டு செப்டம்பர் 11 இந்து நாளேட்டில் பிரஷாந்த் ஜா சங் பரிவார் சதியை அம்பலப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ராமதாஸ், சாதி இந்துப் பெண்களை தலித்துகளிடம் இருந்து பாதுகாப்பதாகச் சொல்லி புறப்பட்டதுபோல், விசுவ இந்து பரிசத்தின் சந்திரமோகன் சர்மா இசுலாமியர்கள் உத்தரபிரதேசத்தில் காதல் புனிதப் போர் (ஜிகாத்) தொடுத்துள்ளதாகச் சொல்கிறார். ‘நல்ல தோற்றம் கொண்ட இசுலாமிய இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சோனு, ராஜ÷ போன்ற இந்துப் பெயர்கள் வழங்கி, அவர்களுக்கு ஜீன்ஸ், டி சர்ட், மொபைல் மோட்டார் பைக் வாங்கித் தருகிறார்கள்; அவர்கள் இந்து பெண்களுக்கு கல்லூரி, பள்ளி வாசல்களில் காதல் வலைவிரித்து எப்படியோ, மடக்கி விடுகிறார்கள். இந்து இளைஞர்கள் இசுலாமியப் பெண்களுடன் ஓடிப்போவதில்லை. ஓடிப்போகும் 100 பெண்களில் 95 பேர் இந்துக்கள். அவர்கள் இசுலாமியர்களுடன்தான் ஓடிப்போகிறார்கள்’.


பாரத் மாதா மந்திரில் இருந்து விஎச்பியின் சுதர்சன், ‘மகாபஞ்சாயத்துக்குப் பிறகு, உத்தரபிரதேசத்தின் கோத்ரா நடந்தது; இந்துக்கள் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை; கோத்ராவிற்குப் பிறகு, 2002ல் குஜராத்தில் இந்துக்கள் செய்ததையே இப்போது இங்கு இந்துக்கள் செய்துள்ளார்கள்’. ‘வெற்றி எங்களுக்கே. கோயில்களை, பெண்களை, பசுக்களை, கங்கையை, நம் மதத்தைப் பாதுகாக்க சங் பரிவார் இந்துக்களை ஒன்று படுத்தும்’.
2002 குஜராத் படுகொலைக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இசுலாமி யர்களுக்கு மற்றவர்களோடு சேர்ந்து வாழ முடியவில்லை என்றார்.

இன்று உத்தரபிர தேசத்தின் சங்பரிவாரம், இசுலாமியர்கள், குஜ்ஜார், பார்ப்பனர், தலித், தாகூர், குஷாவா, ஜாட் என எல்லோருடனும் சண்டையிடுவதாகச் சொல்கிறது. சங்பரிவார் கூட்டம், ‘ஜாட்டும் முஸ்லீமும் முதல் முறையாக சண்டை போடுகின்றனர்; இது பெரிய சாதனை. ஜாட்கள் இந்துக்கள் போல முதல் முறையாக சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். எவ்வளவு அதிகமான இந்து சாதிகள் இசுலாமியர்களோடு சண்டையிடுகின்றனரோ, அவ்வளவுக்கு அவ்வளவு சங்பரிவாருக்கும் பாஜகவுக்கும் ஆதாயம்’ எனச் சொல்கிறது.

முசாபர்நகர், ஓர் எச்சரிக்கை மணி. ஆகஸ்ட் 25 அன்று அயோத்திக்குள் நுழைந்து கலவரம் செய்யப் பார்த்த விஎச்பியின் முயற்சிகள் பிசுபிசுத்துப் போயின. கோயில் கதை எடுபடாததால் இப்போது, நேரடியாக மதவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. சங்பரிவாரை, காங்கிரஸ் எதிர்க்காது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜனநாயக உணர்வுடைய மதச்சார்பற்ற சக்திகள், சங் பரிவாருக்கு எதிரான மக்களின் போராட்ட ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டும்.


எம்ஜிஆருக்கு ஒரு தேவாரம் போல் மோடிக்கு இருந்தவர் குஜராத் டிஜிபி வன்சாரா. போலி மோதல் படுகொலை நிபுணர். மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதிகள் என்று சொல்லி போலி மோதல் படுகொலைகளை நிகழ்த்தியவர். இன்று விசாரணைக் கைதியாக குஜராத் சிறையில் இருக்கிறார். போலி மோதல் படுகொலைகளில் அவருடன் இணைந்து செயல்பட்ட இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் அவருடன் சிறையில் இருக்கிறார்கள். இந்தப் படுகொலைகளுக்கு பின்னால் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா வெளியில் வந்து உத்தரபிரதேசத்தில் தனது அடுத்த வெறியாட்டத்தைத் துவங்கிவிட்டார்.


ஆனால், அதே வழக்குகளில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் யாரையும் வெளியே கொண்டு வர குஜராத் அரசாங்கம் முயற்சி ஏதும் எடுக்கவில்லை. வன்சாரா பொறுமை இழந்து விட்டார். ஆங்கிலத்தில் ஸ்பில்லிங் தி பீன்ஸ் என்று சொல்வார்கள். மனதில் இருந்த உண்மைகள் சிலவற்றை சமீபத்தில் தனது கடிதம் ஒன்றில் சொல்லியுள்ளார். போலி மோதல் படுகொலைகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லித்தான் செய்தோம் என்றும், மொத்த அரசாங்கமும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். அதாவது, நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட அரசாங்கம் சிறையில் இருக்க வேண்டும் என்று சொல்லி, மோடிதான் குஜராத்தில் நடந்த பல போலி மோதல் படுகொலைகளுக்குக் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.


சாட்சிகள் சொன்னதைத்தான் நம்ப வில்லை. சக கொலையாளி சொல்வதையாவது நம்ப வேண்டாமா?

Search