COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 15, 2013

சர்வதேச சம நிலையும் சிரியாவும்

“‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ (இதற்கு உண்மையில் பயங்கரவாதப் போர் என மறு பெயர் சூட்டப்பட வேண்டும்) என அழைக்கப்பட்டு, 9/11அய் அடுத்து அய்க்கிய அமெரிக்காவால் தொடுக்கப்பட்ட போர், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் புதிய புதிய பகுதிகளுக்குப் பரவுகிறது. முதலில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான ஆப்கானிஸ்தானில் ஈராக்கில், போர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. அமெரிக்காவும் அதன் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) கூட்டாளிகளும், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறோம் ஜனநாயகத்திற்கு உதவுகிறோம் என்று சொல்லி, புதிய புதிய சாக்குகளுடன் புதிய புதிய இலக்குகளுடன், இப்போரை ஒரு நிரந்தரப் போராக்கி விட்டனர். சதாம் உசேனை தீர்த்துக்கட்டி ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்த பிறகு, அமெரிக்க -  நேட்டோ அச்சு லிபியாவைக் குறி வைத்து அதன் பலமான தலைவராக விளங்கிய மும்மர் கடாபியைக் கொன்றொழித்தது. இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளது.”

ஏப்ரல் 02 - 06, 2013
இகக மாலெ ஒன்பதாவது அகில இந்திய மாநாடு


போரின் விளிம்பிலிருந்து........

செப்டம்பர் மாதம், 2013. உலகம் ஒரு போரின் விளிம்பு வரை சென்று மீண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஆப்கானிஸ்தான் இராக் ஆக்கிரமிப்பு போல், சிரியாவை ஆக்கிரமிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. அமெரிக்கா, மத்திய தரைக் கடலின் லெபனான் கடற்கரையில் தனது நான்காவது பிரும்மாண்டமான போர்க் கப்பலை நிறுத்தியது. குரூஸ் ஏவுகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல், இதோ அதோ என அச்சுறுத்திக் கொண்டிருந்தது. செப்டம்பர் 12, 2013. உடனடியாய் ஒரு போர் இல்லை என்கிறார் ஒபாமா. தற்காலிகமாகவேனும் உலகம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ஒபாமா தொலைக்காட்சி உரை

செப்டம்பர் 11 அன்று ஒபாமா சிரியா தொடர்பான தமது நிலைப்பாட்டை தொலைக்காட்சி உரை மூலம் அமெரிக்க மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவு படுத்தினார். அந்த உரையின் சில பகுதிகள், நமக்கு, சிரியா தொடர்பான சர்வதேச சமநிலை பற்றிப் புலப்படுத்தும்.
“அமெரிக்கா உலகின் போலீஸ்காரரல்ல. உலகெங்கும் மோசமான விசயங்கள் நடை பெறுகின்றன. ஒவ்வொரு தவறையும் சரி செய்வது நம் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் வாயுக்களால் குழந்தைகள் சாகடிக்கப்படுவதை நம்மால் தடுக்க முடியும். நீண்ட கால அடிப்படையில்  இதுவே நம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ஆகும். நாம் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். அதுதான் அமெரிக்காவை வேறுபடுத்திக் காட்டும்.”
“ஈராக், ஆப்கானிஸ்தானில் பெரும் இழப்புக்களுக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கை பற்றிய எந்தக் கருத்தும் மக்கள் மத்தியில் எடுபடாது என எனக்குத் தெரியும். நானே, கடந்த நான்கரை ஆண்டுகளாக, போர்களைத் துவக்குவதற்காக அல்லாமல் போர்களை முடிவிற்குக் கொண்டு வருவதற்காகவே பதவியில் இருக்கிறேன்.”

“இராணுவ நடவடிக்கை இல்லாமலே, இரசாயன ஆயுதங்கள் அகற்றும் உள்ளாற்றல் ரஷ்ய முன்முயற்சிக்கு இருக்கிறது என நம்புகிறேன். ஏனெனில், ரஷ்யா அசாத்தின் ஒரு பலமான கூட்டாளி ஆகும்.”


குரங்கு, கையில் வைத்திருந்த குண்டை,
கீழே வைத்தது எப்படி?

மேற்கு நாடுகள் இசுலாமிய உலகிடம் கையில் குண்டு வைத்துள்ள குரங்கு போல் நடந்து கொள்கின்றன என ரஷ்ய அயல் விவகாரத்துறை துணை அமைச்சர் டிமிட்ரி ரோகோசின் குறிப்பிட்டார். (குரங்கோ வேறெந்த உயிரினமோ ஏகாதிபத்தியம் போல் அதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் போல் குரூரமானவை அல்ல). அமெரிக்காவின் கூட்டாளியாக இராக் இருந்தபோது, அது ஈரான் மக்களை இரசாயன ஆயுதங்களால்  கொன்று குவித்தபோது அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை; இதே அமெரிக்கா தான் வியத்நாம் மீது நாபாம் எரி குண்டுகளை வீசியது. நாபாம் குண்டு வீச்சுக்குள்ளாகி உடலில் ஆடைகளின்றி எரிந்து கொண்டே ஓடி வரும் வியத்நாமியச் சிறுமியின் புகைப்பட உருவம், மானுட மனச்சாட்சியில் என்றும் உறைந்து போய் இருக்கும். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொல்லி, இராக்கைத் தாக்கினார்கள். சிரியாவின் அரசு வட்டாரங்களில் வாயுக்கள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது பற்றி பேச்சு அடிபடுவதாக இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத் கண்டறிந்ததாம்! அதற்குப் பிறகு குழந்தைகள் உட்பட 300 பேர் வாயு தாக்குதலில் பலியாக, சிரியா அரசு சிவப்புக் கோட்டைத் தாண்டியதாக அமெரிக்கா எகிறி எகிறிக் குதித்தது. உண்மையில், மேற்கு ஆசியாவில் வடக்கு ஆப்ரிக்காவில் வெடித்தெழுந்த மக்கள் இயக்கங்களை, அரபு வசந்தத்தை, ஆட்சி மாற்றம் என்ற பெயரில் இரத்த வெள்ளத்தில் ஏகாதிபத்தியம் மூழ்க டிக்கப் பார்க்கிறது. புதுப்புதுச் சாக்குகள். புதுப்புது இலக்குகள். நிரந்தரப் போர்.

ஆனால், அமெரிக்காவால் மேலை உலகில் தான் விரும்பிய கருத்தொற்றுமையை உரு வாக்க முடியவில்லை. இங்கிலாந்து நாடாளுமன்றமும் ஜெர்மனியும் போர் வேண்டாம் என்றன அமெரிக்க மக்களின் 60% பேர் சிரியா மீது இராணுவ நடவடிக்கை வேண்டாம் என்றனர். உலக மக்களின் ஏகப் பெரும்பான்மையினர் போரை எதிர்த்தனர். சிரியாவில் கலகக்காரர்கள் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டு, தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளத் துவங்கினர். சிரியா விமானத் தாக்குதலை எதிர் கொள்ளத் தயாரானது. ஈரானும் ஹிஸ்புல்லாவும் போர் துவங்கினால் தாம் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றார்கள். இரசாயன ஆயுதங்கள் பயன்பாட்டை அறிய அய்நா குழு சிரியாவில் ஆய்வு செய்வதை சிரியா அரசு வரவேற்றது. (ஏற்கனவே அய்நா, கலகக்காரர்கள்தான் சாரின் விஷவாயுவைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது).

அய்நா குழு சிரியா வந்து ஆய்வுகளைத் துவக்கியது. இந்தப் பின்னனியில் சீனாவும் ரஷ்யாவும், அய்நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் இல்லாமல், சிரியா மீது தாக்குதல் கூடாது என அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார்கள். ஜி 20 நாடுகளில் அமெரிக்காவின் குரல் எடுபடவில்லை. சமாதானம் வேண்டும் என்ற ரஷ்யாவின் குரலே ஓங்கி ஒலித்தது.

ஒபாமா, தாக்குதலுக்கு காங்கிரஸ் ஒப்புதல் பெறப் போகிறேன் எனச் சொல்லி சற்று பின்னே சென்றார். காங்கிரஸ் ஒப்புதல் கிடைப்பது கடினம், தமது கோரிக்கை எடு படாவிட்டால் சங்கடம் எனத் தயங்கி தடுமாறி நின்ற ஒபாமாவிற்கு, மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சொல்லித் தப்பிக்க, ரஷ்யா ஒரு வாய்ப்பு தந்தது.

விவகாரம் கொதி நிலையை அடைந்திருந்தபோது அமெரிக்க அயல் விவகாரச் செயலர் ஜான் கெர்ரி, சிரியா தனது ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் போருக்கு அவசியம் இருக்காது எனப் போகிற போக்கில் குறிப்பிட்டார். அந்த நேரம் சிரியா அயல் விவகார அமைச்சர் ரஷ்யாவில் இருந்தார். ரஷ்யாவின் அயல் விவகார அமைச்சர் லாவ்ரோவ் சடாரென வாய்ப்பைக் கைப்பற்றிக்கொண்டு, ஜான் கெர்ரியின் யோசனையை தாம் வரவேற்பதாகவும் சிரியாவையும் ஏற்குமாறு ஆலோசனை சொல்வதாகவும் தெரிவித்தார். சிரியாவின் அயல் விவகார அமைச்சர் வாலித் அய் முல்லம் தமது அரசும் இந்த யோசனையை ஏற்பதாகச் சொல்ல, சங்கடத்தில் இருந்து வெளியே வர ஒபாமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. போர் என  தான் முடிவு எடுத்ததால்தான் சிரியா வழிக்கு வந்தது என்று சொல்லி, அமைதிக்கு ஒரு வாய்ப்பு தருவதாக ஆரவாரமாகப் பேசி, உடனடிப் போர் என்ற முடிவிலிருந்து ஒபாமா நகர முடிந்தது. (அய்நா ஆய்வாளர்கள் குழந்தைகளைப் படுகொலை செய்த வாயு தாக்குதலை சிரியா அரசு மேற்கொண்டதாகச் சொல்ல சான்றுகள் ஏதும் இல்லை என்றார்கள்)


சிரியாவின் துயரம்

அசாத் முற்போக்காளரா ஜனநாயகவாதியா என்பவை இப்போது உலகின் முன் உள்ள கேள்விகள் அல்ல. அசாத் வேண்டுமா வேண்டாமா, அசாத் ஆட்சி இருக்க வேண்டுமா தூக்கி எறியப்பட வேண்டுமா என்பவை சிரியாவின் மக்கள் விடை காண வேண்டிய கேள்விகள். அமெரிக்காவும் அய்ரோப்பாவும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் ஜனநாயகத்தைக் காக்கிறோம் என ஆட்சிக் கவிழ்ப்புக்களில் ஈடுபடுவதை, எடுபடி ஆட்சிகளை உருவாக்குவதை ஏற்க முடியாது.

அல்கொய்தாவோடு தொடர்புடைய கலகக்காரர்களுக்கு, அமெரிக்காவும் அதன் அரபு அய்ரோப்பிய கூட்டாளிகளும் பணமும் ஆயுதங்களும் தருவதால்தான், இதுவரை சிரியாவில் ஒரு லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். 50 லட்சம் சிரியா மக்கள் வீடு இழந்துள்ளனர். 10 லட்சம் சிரியா குழந்தைகள் அகதிகளாகியுள்ளனர். மூன்றரை லட்சம் குழந்தைகள் லெபனான் முகாம்களில் உள்ளனர். ஜோர்டானின் சடாரி என்ற ஓர் அகதி முகாமில் மட்டும் சிரியாவின் 120000 பேர் உள்ளனர். பிராந்தியம் நெடுக போர் மேகம் சூழ்ந்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்திய உலகம் இஸ்ரேலோடு சேர்ந்து கொண்டு இந்த அநியாயங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டு, இப்போது சிரியாவின் குழந்தைகள் மரணம் பற்றி பேசுவது குரூரமான மோசடியாகும்.


1957லேயே அமெரிக்க ஆங்கிலேய சதி

1957ல் அமெரிக்க அதிபராக அய்சனோ வரும் பிரிட்டிஷ் பிரதமராக மேக்மில்லனும் இருந்தனர். பிரிட்டனின் ராணுவ அமைச்சராக அப்போது இருந்த டன்சன் சாண்டிஸ் வசம் இருந்த ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் மேத்யு ஜோன்ஸ் என்ற கல்வியாளரால் கண்டெடுக்கப் பட்டன. சிஅய்ஏவும் பிரிட்டிஷ் உளவு நிறுவனமான எம்16ம் இணைந்து அப்போதே சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டனர். ஃப்ரீ சிரியா கமிட்டி உருவாக்குவது, மூன்று முன்னணித் தலைவர்களைப் படுகொலை செய்வது, எல்லைகளில் மோதல்களை உருவாக்குவது, கலகக்காரர்களுக்கு ஆயுதங்கள் பணம் தருவது போன்ற சதிச் செயல்களில் அப்போதும் ஈடுபட்டனர். சிரியா மக்கள் இந்த சதிகளை வெறுத்தனர் என அய்சனோவர் நொந்து கொண்டார்.


இப்போது ஒபாமா நொந்து கொள்ளும்
நேரம் வந்துள்ளது

சர்வதேச சமநிலையில், சிரியா விவகாரத்தில், அமெரிக்காவின் பிடி சற்றே தளர்ந்ததும் கூட வரவேற்கத்தக்கது. எல்லா போர்களுக்கும் முடிவு கட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரைத் தீவிரப்படுத்துவோம். 

“இராணுவ அரசியல் அரங்கில் அமெரிக்கா இன்னமும் தன் மேன்மை நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள போதும், பல துருவங்கள் நோக்கிய ஒரு புறநிலைப் போக்கைக் காண முடிகிறது.”
      
இகக மாலெ ஒன்பதாவது அகில இந்திய மாநாடு

Search