COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 1, 2013

அய்சா, ஆர்ஒய்ஏ தோழர்களும் அமைதியிழந்த அமைச்சரும்

சட்டமன்றத்தை முற்றுகையிட்ட அய்சா - ஆர்ஒய்ஏ தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அரசாணை எண் 92அய் அமல்படுத்தக்கோரி 16.08.2013 அன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் சிறைக்குச் செல்ல நேரும் என்ற தயார் நிலையிலேயே இருந்தனர். அய்சா, ஆர்ஒய்ஏ தோழர்கள், பாரிமுனை பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதை ஏற்க மறுத்த தோழர்கள் தலைமை செயலகம் செல்லும் பேருந்தில் ஏறினர். தோழர்கள், பேருந்தில் இருந்து இறங்கி, சட்டமன்றம் நோக்கி கொடி, பேனர், வாசக அட்டைகளை ஏந்தி காவல் துறையினரின் தடுப்பை மீறி சட்டமன்றத்தில் நுழைய முயன்றனர். காவல்துறையினர், தோழர்களை பிடித்துத் தள்ளியபோது, சாலையில் அமர்ந்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர். தோழர்களை காவல் துறையினர் பிடித்து இழுத்து, லத்தியால் அடித்து, சாலையிலிருந்து தரதரவென இழுத்து காவல்துறை வாகனத்தில் தள்ளினர். போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. பெண் தோழர்களை பெண் காவல்துறையினர் பிடித்து இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.


பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்தினர், தலைமை செயலகத்தின் முன்பு மாணவர்கள் மீது தாக்குதல் என்றும், அய்சா, ஆர்ஒய்ஏ அமைப்பினர் அரசாணை 92யை அமல்படுத்தக் கோரி காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாகவும், தலைமை செயலகம் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் நீடிப்பதாகவும், பதற்றம் நிலவுவதாகவும் செய்தி வெளியிட்டனர். தோழர்களை கைது செய்த காவல் துறையினர், எவ்வித நிபந்தனையும் இன்றி மாலையில் அவர்களை விடுவித்தனர். தோழர்களை விடுவிக்கும் போது, காவல் துறை உதவி ஆணையர், அய்சா, ஆர்ஒய்ஏ தரப்பினரிடம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் 19.08.2013 அன்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


இந்த போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். தோழர்கள் சுரேஷ், ஜெனிபர், சீதா, உமா, ராஜலஷ்மி, சுஜாதா, சங்கர், தனவேல், சத்தியகிருஷ்ணன், அருண், ராமநாதன், அதியமான், ராஜகுரு, பாண்டிராஜன், அன்பு, கோபி, செந்தில், ரமேஷ்வர் பிரசாத், திபங்கர், தனசேகர், சந்திரகுமார், பிரதீப், கண்ணன், உசேன் மற்றும் மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன் மற்றும் மாலெ கட்சித் தோழர்கள் ஸ்ரீதர், ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் தோழர் ராமநாதனுக்கு தலையில் அடிபட்டு மூன்று தையல் போடப் பட்டது. தோழர்கள் ராஜகுரு, அதியமான் ஆகியோருக்கு கைகளில் இரத்தகாயம் ஏற்பட்டது.


19.08.2013 அன்று தோழர்கள் பாரதி, விஜய், சீதா, ஜெனிபர், அதியமான் ஆகியோர் கொண்ட அய்சா, ஆர்ஒய்ஏ குழு கோரிக்கைப் பட்டியலுடன் அமைச்சரை சந்தித்தது. அமைச்சரிடத்தில் 20011-2012, 2012-2013, 2013-2014 கல்வி ஆண்டுகளில் சுயநிதி கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்திய ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாமதம் இன்றி கல்விக் கட்டணம் கிடைக்க ஏற்பாடு செய்யவும், அரசாணை 92படி, அரசாணையை அமல்படுத்த குழு அமைத்திடவும், அனைத்து சுயநிதி கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் அரசாணையை ஒட்டி வைக்க நடவடிக்கை எடுக்கவும், அரசாணையை அமல்படுத்தாத அதிகாரிகள் மற்றும் அரசாணையை ஏற்காத சுயநிதி கல்லூரிகள் மீது சட்டப்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கவும், 24.05.2013 அன்று அரசாணை 92க்காக ஒதுக்கப்பட்ட ரூ.482,46,67,000 மாணவர்களுக்குச் சென்று சேரவில்லையென்றும், இத்தொகை மாணவரிடத்தில் சென்று சேர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், சட்டத்துறை, வேளாண்துறை மற்றும் பல துறைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படாத சூழலில் உடனடியாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.


மாணவர், இளைஞர் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் சுப்பிரமணியன், அவர்கள் சொல்வது 10 சதம் உண்மை என்றும், 90 சதம் மிகைப்படுத்தி சொல்வதாகவும் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் எத்தனை மாணவர்களுக்கு எவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்ற தகவல்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்கள் படித்து முடித்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் சேர்ந்ததா என்று பார்ப்பதை விட இந்த வருடம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் சென்று சேருவதை உறுதிப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய கல்விக் கட்டணத் தொகையின் அளவு மாறுவதால் (உதாரணத்திற்கு சென்ற வருடம் ரூ.300 கோடி தேவைப்பட்டதாகவும், இந்த வருடம் ரூ.600 கோடி தேவைப் படுவதாகவும்) அரசாணையை அமல்படுத்த முடியவில்லையென்றும், தன்னால் இதையும் தாண்டி வேலை செய்ய முடியாதென்றும் கூறி மேசை மீது ஓங்கி அடித்தார். தான் 26 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்ததால் மட்டுமே இந்த பதவியில் தொடர முடிகிறது என்றும், தன்னைப் போல் வேறு யாராலும் வேலை செய்ய முடியாதென்றும், தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் அச்சத்துடன் பணிபுரிந்ததாகவும் கூறினார். மாணவர், இளைஞர் நடத்திய போராட்டம் தனக்கு மிகுந்த மன வேதனையை உருவாக்கியுள்ளதாகவும், துணை இயக்குநர், இந்தப் போராட்டத்திற்கு பிறகு அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். நீங்கள் “முதல்வர்” ஆனால் கூட அரசாணையை முழுமையாக அமல்படுத்த முடியாது என்றார். தோழர் சீதா பேச முற்பட்ட போது, “நீ எனக்கு மகள் போல், நான் உனக்கு தந்தை போல்” என்று கூறி அவரைப் பேச விடாமல் தடுத்தார்.


கடலூரில் ஆதிதிராவிட மாணவர் விடுதியில் படித்து முன்னேறுவதை விட, மாடு மேய்த்து முன்னேறலாம் என்று மாணவர்கள் எழுதி வைத்துள்ளதாகவும், மாணவர் விடுதிகளை அசுத்தமாக மாணவர்கள் வைத்திருப்பதாகவும், நாய் வாலை தான் நிமிர்த்த முயற்சிப்பதாகவும், அது தன்னால் முடியவில்லை என்றும், துணை இயக்குநர் பதவிக்கு வருபவர்கள் ஆதிதிராவிடர் பிரிவிலிருந்து பதவிக்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு வேலையைப் பற்றி தெரிவதில்லை என்றும், தானும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், வறுமையான குடும்பத்தில் பிறந்து, அமைச்சர் பதவி வரை முன்னேறி இருப்பதாகவும், தன் நிலைமையை மாணவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள முடியும் என்றும் சொன்னார். அமைச்சர், அரசாணை 92அய் அமல்படுத்த முடியவில்லை என்றும், தாழ்த்தப்பட்ட மாணவர் நிலைமையை நாய் வாலோடு ஒப்பிட்டு பேசியும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து உயர் பதவிக்கு வந்தவர்க்கு ஒன்றுமே தெரியாது என்றும், ஆதி திராவிடர் மாணவர் தவறான வழியில் செயல்படுவதாகவும், தெரிவித்தார். அரசாணையை அமல்படுத்த கண்காணிப்பு குழு ஏன் அமைக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டபோது, அமைச்சர் அதற்கு பதிலளிக்காமல், அமைச்சரின் உதவியாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஆதி திராவிடர் அதிகாரிகள் மூலம் கல்வி கட்டணம் அளிப்பதாக தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்கள் கல்விக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் திரும்பக் கிடைக்க தமிழக அரசு என்ன ஏற்பாடு செய்துள்ளது என்ற தோழர்களின் கேள்விக்கு கடந்த இரண்டு வருடங்கள் படித்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தாமதமாகத்தான் கிடைக்கும் என்றார்.


மாணவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைப்பது தங்களின் உரிமை என்றும், அதற்கு பதிலளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் அரசாணையை அமல்படுத்தாத அதிகாரிகள் மீதும், அரசாணையை ஏற்காத சுயநிதி கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதெனவும் அய்சா, ஆர்ஒய்ஏ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அமைச்சர், கோபத்துடன், குரலை உயர்த்தியும், மேசையை ஓங்கி தட்டியும், அவர் எழுதிய கடிதங்களை காட்டியும் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். தோழர்கள் அமைச்சரின் விளக்கங்களை ஏற்காமல், தமிழக அரசின் செயல்பாடின்மையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கினர்.  ஆதிதிராவிடர், பழங்குடியினர் அமைச்சர், அரசாணை 92அய் முழுமையாக அமல்படுத்த எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை, மாறாக, தமிழக அரசு அரசாணை 92 அமல்படுத்தப்படாத நிலையை நியாயப்படுத்தவே முயன்றார்.  - சுஜாதா

Search