COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 30, 2018

பாஜகவை வெளியேற்றுவோம்! வறியவர்களைப் பாதுகாப்போம்!

அனைத்திந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் 6ஆவது தேசிய மாநாட்டு அறைகூவல்

நாடெங்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலத்துடன் அயர்லாவின் 6ஆவது தேசிய மாநாடு பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நவம்பர் 19, 20 தேதிகளில் நடைபெற்றது.
பாஜகவை வெளியேற்றுவோம், வறியவர்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் 2018, நவம்பர் 19 அன்று நடைபெற்றப் பேரணியில் பீகார் மாநிலம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாய, கிராமப்புற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் அம்பேத்கர், சுவாமி சஜானந்தா ஆகியோர் சிலை களுக்கு இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஸ்வதேஷ் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிரபல பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரஸ்ம் உடனிருந்தார்.
தோழர் திபங்கர் உரையில் இருந்து: இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெகனாபாத்துக்கு மாபெரும் தியாக வரலாறு உண்டு. இந்த மண்ணில்தான் தோழர்கள் ஷா சந்த், மஞ்சுதேவி, வீரேந்திர வித்ரோஹி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் வீரமர ணம் அடைந்திருக்கிறார்கள். வறிய மக்களை அடக்கிவிடலாம் அவர்கள் குரல்களை ஒடுக்கிவிடலாம் என மதவாத பாசிச சக்திகள் கனவு காண்கிறார்கள். ஆனால் எங்களுடைய போராட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என இங்கே காந்தி மைதானத்தில் குழுமியிருக்கும் பத்தாயிரக்கணக்கானவர்கள் செய்தி சொல்கிறார்கள்.
நாடு இதுபோன்ற ஒரு வறியவர் விரோத ஆட்சியை இதுவரைப் பார்த்ததில்லை. அதனால்தான், கிராமப்புறங்களில் பாஜகவை வெளியேற்றுவோம், வறியவர்களைக் காப்போம் என்ற முழக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான்கரை ஆண்டுகால ஆட்சியில் நாடு மிக மோசமான துன்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம் இந்த நாட்டிற்கு பேரழிவு என்பது நிதர்சனமாகிவிட்டது. அவர்கள் வறியவர்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள். ஊரக வேலைவாய்ப்பு சட்டம் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது.
பழங்குடியினரும் கிராமப்புற வறியவர்களும் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப்படுகி றார்கள். உணவுப் பாதுகாப்புச் சட்டம் நகைச்சுவையாக குறுகிப் போய்விட்டது. ரேசன் அட்டையை ஆதாரோடு இணைப்பது என்ற திட்டம் வறியவர்களின் பட்டினிச் சாவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இதுவரை 60, 70 பேர் பட்டினியால் இறந்துவிட்டார்கள். மோடி அரசாங்கம் 2022 பற்றிப் பேசுகிறது. இன்றைக்கு என்னவென்று பேச மறுக்கிறது. எல்லா முனைகளிலும் தோல்வி கண்ட இந்த அரசாங்கம் வேறுவழியின்றி  ராமர் கோவில் பிரச்சனையை கையில் எடுக்கிறது. மனிதாபிமானமற்ற அரசாங்கமாக இது இருப்பதால் இந்த தேசியப் பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும் என நாம் முடிவெடுக்கிறோம். நமது சுதந்திரத்தை நமது அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டப் பார்ப்பது சாதாரண விசயமல்ல. இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் அழித்துவிடப் பார்க்கிறது. எனவே நமது முதல் கடமை உழைக்கும் மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத ஒற்றுமையைக் கட்டமைத்து இந்த ஆட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதே ஆகும்.
பேரணியில் உரையாற்றிய அவிமச பொதுச் செயலாளர் தோழர் ராஜாராம் சிங், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியம் என்றார். நவம்பர் 29, 30 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள விவசாயிகளின் பேரணி, இந்த அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கும் என்றார்.
மாநாட்டில் இகக (மாலெ) பீகார் சட்ட மன்ற உறுப்பினர்கள் தோழர் மகபூப் ஆலம், தோழர் சுதாமா பிரசாத், தோழர் சத்ய தேவ் ராம், முற்போக்கு பெண்கள் கழக பொதுச் செயலாளர் தோழர் மீனா திவாரி, மாநிலச் செயலாளர் தோழர் சசி யாதவ் அயர்லா தலைவர் தோழர் குந்திதேவி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக முதுபெரும் தலைவர் பிரதாப் தாஸ், காந்தி மைதானத்தில் கொடியோற்றினார். பொதுக் கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ரமேஷ்வர் பிரசாத் தலைமை வகித்தார்.
இரண்டாம் நாள் மாநாட்டு அமர்வை 13 பேர் கொண்ட தலைமைக்குழு வழிநடத்தியது. தமிழகத்திலிருந்து தோழர் ஜானகிராமன் தலைமைக் குழுவில் இடம் பெற்றிருந்தார். பொது மாநாட்டில் பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரஸ், உரையாற்றினார். அஸ்ஸôம் மக்கள் இயக்க செயற்பாட்டாளர் அய்பா பேகம், ஜேஎன்யு பல்கலைக்கழக முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சிந்து குமாரி, தோழர் திபங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருந்தனர்.
பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரஸ் தனது உரையில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, பொது விநியோகம் இன்னபிற திட்டங்களெல்லாம் ஊழலின் பிடியில் சிக்கியுள்ளன என்றும் ஆட்சியில் இருப்பவர்களின் கடப்பாடு சாமான்ய மக்களுக்கானதாக அல்லாமல் கார்ப்பரேட் குழுமங்களுக்கானதாக இருக்கிறது என்றும் சொன்னார். மோடியின் ஆட்சியில் இந்தத் திட்டங்கள் மோசமான நிலையிலிருந்து மிகவும் மோசமான நிலைக்குப் போயிருப்பதால்தான் இன்று நாடு முழுக்க பட்டினிச்சாவு நிகழ்வுகள் நடப்பதாகச் சொன்ன அவர், வறியவர்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு உணவு தேவைப்படுகிறது, ஆனால் அவர்கள் வீட்டில் உணவு தானியங்கள் இருப்பதில்லை என்றார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு வேளை உணவுக்காவது உத்தரவாதம் வேண்டும் என்று வலியுறுத்தினார். உணவுப் பாதுகாப்புச் சட்டம் நகைப்புக்குள்ளாகிவிட்ட நிலையில் மக்களை அணி திரட்டியே ஆக வேண்டும் என அழைப்பு விடுத்தார். புரட்சிகர சமூக மாற்றத்திற்காக போராடுகிற அதே வேளை, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத்திற்காகவும் நாம் போராட வேண்டும் என்ற ஜீன் ட்ரஸ் இந்த இரண்டு விசயங்களிலும் அயர்லா வலுவாக முன்னேறி வருவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பிரதிநிதிகள் அவையில் அயர்லா பொதுச் செயலாளர் தோழர் திரேந்திர ஜா, நிலவும் அரசியல் சூழல் மீதான அமைப்பு அறிக்கையை முன்வைத்தார். மோடி ஆட்சியை சாடிய அறிக்கை, தொழிலாளர்களின், தலித்துகளின் வாழ்வாதாரம், வீட்டுமனை, கல்வி, மருத்துவம், புலம் பெயர்ந்த தொழிலாளர் மீதான தாக்குதல், துண்டுதுக்காணி நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களை அப்புறப்படுத்துவது, பழங்குடியினர், வனப்பகுதியில் குடியிருப்போர் உரிமைகள் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்தது.
பணமதிப்பகற்றம், விவசாயத்தின் மீதான, அமைப்புசாரா துறையில் கோடிக்கணக்கான வேலைகளைப் பறித்த அதன் அழித்தொழிக்கும் தாக்கம், விவசாயிகளின், தொழிலாளர்களின் பொருளாதார சீர்குலைவு, ஊரக வேலை உறுதித் திட்ட வேலை வாய்ப்பு, சந்தையின் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் கீழான ஊதியம் நிர்ணயப்பதில் உள்ள சதி, வேலையில்லாக் காலப் படி உள்ளிட்ட பல விசயங்களில் எழுப்பப்பட்ட விவாதங்களில் பிரதிநிதிகள் அறிக்கையை செழுமைப்படுத்தினர்.
நவம்பர் 29 - 30 டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஒருமைப்பாட்டை தெரிவித்த மாநாடு, 2019, ஜனவரி 8 - 9 தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க தீர்மானித்தது.
இகக (மாலெ) பீகார் மாநிலச் செயலாளர் தோழர் குணால் தனது உரையில் புரட்சிகர போராட்டங்களின் மய்யமான ஜெகனாபாதில் நடைபெறும் இந்த மாநாடு போராடும் மக்களுக்கு மேலும் வலுவூட்டும் என்றார்.
தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் நினைவு வளைவு மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் இருந்து பத்து தோழர்கள் தேசிய குழுவுக்கும் தோழர்கள் பாலசுந்தரம், ஜானகிராமன், குணசேகரன் தேசிய செயற்குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

Search