COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, November 14, 2018

ஆறு லட்சம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.720 கோடி தர முடியாதுமூன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.35,000 கோடி தர வேண்டும்

2018 மார்ச்சில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் மாதிரி நலத்திட்டம்  வடிவமைக்கப்பட்டது.
6 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 ஓய்வூதியம் தரப்பட வேண்டும் என்றும் கட்டுமானப் பணிகளில் வசூலிக்கப்படும் கட்டுமான நலநிதியில் 20% கட்டுமானத் தொழிலாளர்களின் ஓய்வூதியத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் திட்ட நகல் சொன்னது. இறுதிப்படுத்தப்பட்டுள்ள திட்டம் ஓய்வூதியம் தர முடியாது என்கிறது. அது நிரந்தரமான செலவினமாக இருக்கும் என்றும் அதை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு சொல்கிறது. 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் என்றால், ஆண்டுக்கு ரூ.720 கோடிதான் செலவாகும். இதுவும் நலநிதியில் இருந்து தரப்படுவதுதான். 6 லட்சம் பேருக்கு ரூ.720 கோடி ஓர் ஆண்டுக்கு தர முடியாது என்று சொல்லும் மோடி அரசு, வெறும் மூன்று நிறுவனங்களுக்கு ரூ.35,000 கோடி தரத் தயாராகிறது.
அதானி, டாடா, எஸ்ஸôர் நிறுவனங்கள் பெரும் சிரமத்தில் இருப்பதாகவும் அவற்றுக்கு மொத்தமாக ரூ.35,000 கோடி கடன் தள்ளுபடி தர வேண்டும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. மதுரை மாணவன் லெனின் வாங்கிய கல்விக் கடனைக் கேட்டு தொந்தரவு செய்து அவனது தற்கொலைக்குக் காரணமானது இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாதான். (லெனினை மிரட்டியது கடன் வசூல் செய்யும் பணிக்கு அமர்த்தப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம்). விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தருவது கடன் வாங்குவோரின் ஒழுங்குக் கட்டுப்பாட்டை குலைத்து விடும் என்று அன்றைய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா சொன்னார். இன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி வேண்டும் என்று அதே வங்கி முறையிடுகிறது. என்னென்னதான் நடக்கும் மோடியின் கொலைகார ஆட்சியில்? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்த நிறுவனங்கள் நாடு முழுவதும் வெவ்வேறு தொழில்களில் இருந்தாலும், குஜராத்தில் இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள மின் உற்பத்தி தொழிலில் இந்த நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடியை சமாளிக்க இந்தக் கடன் தள்ளுபடி கேட்கப்படுகிறது.
இன்றைய நிலைமைகளிலேயே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன்கள் ரூ.2.3 லட்சம் கோடி. ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவுக்கு குஜராத்தின் முந்த்ராவில் உள்ள அதானி பவர் நிறுவனம் ரூ.19,127 கோடியும் எஸ்ஸôர் பவர் குஜராத் நிறுவனம் ரூ.4,214 கோடியும் டாடா கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் நிறுவனம் ரூ.10,159 கோடியும் பாக்கி வைத்துள்ளன. எஸ்ஸôர் பவர் நிறுவனத்துக்கு இது தவிர இன்னும் ரூ.1,100 கோடி கடன் பாக்கி உள்ளது.
இந்த மின்உற்பத்தி நிறுவனங்கள், மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்ட விலையை அதிகரிக்க ஏப்ரல் 2017ல் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு, துன்பத்தில் இருக்கிற நிறுவனங்களுக்கு உதவ என்ன செய்யலாம், எப்படி அவற்றைப் பாதுகாக்கலாம் என்று ஆய்வு செய்ய, குஜராத் அரசாங்கம், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையில் ஓர் ஆய்வுக் குழு அமைத்தது. இந்தக் குழு அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, மின்உற்பத்தி நிறுவனங்கள் மின்கட்டணத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும், அல்லது வங்கிகள் கடன் தள்ளுபடி - ஆங்கிலத்தில் ஹேர் கட், முடி வெட்டு என்கிறார்கள்; வருகிற கோபத்துக்கு நம்மவர்கள் இதை நன்றாகச் சொல்வார்கள் - தரலாம் என்றும் இரண்டு பரிந்துரைகளை செப்டம்பர் 2018ல் தந்தது. இந்தப் பரிந்துரைகள் அடிப்படையில்தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. குழு அமைப்பது, பரிந்துரைகள் பெறுவது, பின்னர் உச்சநீதிமன்றம் செல்வது எல்லாம் குஜராத் மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் ஜனநாயக முறைப்படி செய்தன என்று நாம் நம்ப வேண்டும். விஜய் மல்லய்யா தனியொருவர் அல்ல.
ரூ.35,000 கோடி கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு பச்சைக் கொடி காட்டிவிட்டதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனது பிரமாண வாக்கு மூலத்தில் சொல்லியுள்ளது. இந்த விசயத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் தள்ளுபடி தர மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதை விரைவாகச் செய்ய வேண்டும் என அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுதான் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. ‘விரைவாக’ என்பதை ‘ஆட்சிக் காலம் முடிவதற்குள்’ என்று நாம் வாசிக்க வேண்டும்.
ரூ.19,143 கோடி சொத்து மதிப்புடன் டாடா பவர் நிறுவனமும் ரூ.18,021 கோடி சொத்து மதிப்புடன் அதானி பவர் நிறுவனமும் இந்தியாவின் பெரிய 100 நிறுவனங்கள் பட்டியலுக்குள் வந்துவிடுகின்றன. எஸ்ஸôர் பவர் நிறுவனம் இந்தப் பட்டியலுக்குள் வரவில்லை என்றாலும் நிறுவனத்தின் உரிமையாளர்களாக, நாட்டின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 49ஆவது இடத்தில் இருக்கும் ரூயா சகோதரர்களின் நிகர சொத்து மதிப்பு 2018 அக்டோபரில் ரூ.21,000 கோடி (2.9 பில்லியன் டாலர்). 10ஆவது இடத்தில் இருக்கும் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.84,000 கோடி (11.9 பில்லியன் டாலர்).
வாங்கிய கடனை விடக் கூடுதலான மதிப்புள்ள சொத்துக்களை இந்த நிறுவனங்களும், அவற்றின் உரிமையாளர்களும் வைத்திருப்பது பொது வெளியில் தெரியும்போது, அந்த நிறுவனங்களிடம் இருந்து பாக்கியை வசூல் செய்யாமல், ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும்?
இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் நிலக்கரி விலையை 250%க்கும் மேல் கூடுதலாகக் காட்டி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துபாய், சிங்கப்பூர், ஹாங்காங், கிளைகள் மூலம் நடந்த பண பரிமாற்றங்கள் மூலம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கிட்டத்தட்ட ரூ.30,000 கோடியை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் விழுங்கிவிட்டதாக குற்றச்சாட்டு 2016ல் எழுந்தது. வருவாய் நுண்ணறிவு விசாரணை இயக்குநரகம் இது தொடர்பான விவரங்களைக் கேட்டபோது அன்றைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ரகசிய காப்பு விதிகள் உள்ளதாகச் சொல்லி அந்த விவரங்களை தரவில்லை. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரியில் 70% அதானி குழுமத்துக்கும் 5% அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கும் செல்கிறது. எஸ்ஸôர் குழுமமும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறது. இந்த நிறுவனங்களின் நிதி பரிமாற்றங்களில் 85% ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் நடந்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வேண்டுகோள் பட்டியிலில் கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றுள்ள எஸ்ஸôர் நிறுவனத்தின் பெயரும் இந்த முறைகேடுகள் பட்டியலில் உள்ளது. அருந்ததி பட்டாச்சார்யா இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசில் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 17 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் அங்கு இயக்குநராக இருப்பார். நாட்டுக்கு பல இழப்புகள், அபகரிப்புகள் பற்றி தெரியாமலே போக வாய்ப்பிருக்கிறது என்பது இந்த நியமனத்தில் தெரிகிறது.
முதலாளித்துவ பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அடிப்படையில் முதலாளித்துவத்துக்கே சேவையாற்றும். வங்கி தேசியமயாக்கம் நடந்தபோது, நாட்டில் உள்ள மொத்த நிதியையும் திரட்டி முதலாளிகள் தொழில் நடத்த தருவதற்காகவே என்று சொன்னோம். மோடியின் ஆட்சியில் திரைமறைவு எதுவும் தேவைப்படாமல் அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. நாடு கடந்து சென்று விடக் கூட ஏற்பாடு நடக்கிறது. நாட்டை விட்டு ஓடிய ஒரு சிலர் பற்றி நாடு பேசிக் கொண்டிக்கும்போது, நாட்டுக்குள் இருக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாபம் குறைந்துவிடாமல் இருக்க தோதான நடவடிக்கைகள் நிறுவனரீதியாகவே தயக்கம் ஏதுமின்றி மேற்கொள்ளப்படுகின்றன.
பாசிச பாஜக ஆட்சி ஒழிக!

Search