COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 30, 2018

கஜா புயல் நிவாரணப் பணிகளில் இகக (மாலெ)யும் 
அதன் வெகுமக்கள் அமைப்புகளும்

கஜா புயல் பல மாவட்டங்களில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான மரங்களை, பயிர்களை வேரோடு சாய்த்து முற்றாக விவசாயத்தை அழித்துவிட்டது.
கால்நடைகளைக் கொன்று குவித்து, குடிசை ஓட்டு வீடுகளை பிய்த்து எறிந்து தாங்கொணா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் கொசுக் கடியில் தூங்க முடியாமல் விவசாயிகளும் கிராமப்புற வறியவர்களும் கடும் துன்பத்தில் உள்ளனர். இகக(மாலெ)யும் அதன் வெகுசன அமைப்புகளும் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தஞ்சையில் தங்கி டெல்டா மாவட்ட வேலைகளில் கவனம் செலுத்தி வரும் மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, சென்னை மாநகரக் குழு உறுப்பினர் தோழர் மோகன், மாணவர் அழகோவியன் ஆகி யோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். கஜா புயல் நிவாரண நிதி திரட்ட கட்சி, ஊழியர்களுக்கு அறைகூவல் விடுத்தது. அன்று காலையே தோழர் எ.எஸ்.குமார் ரூ.10,000 திரட்டினார். சென்னை பிஎஸ்என்எல் ஊழியர்கள் முதல் தவணையாக ரூ.6,000 தந்தனர். அம்பத்தூர் வரதராஜபுரத்தில் 7 பேர் கொண்ட குழு ரூ.2,100 நிவாரணம் திரட்டியது.
22.11.2018 அன்று விருத்தாச்சலத்தில் மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் ரூ.13,000 வசூலாகியுள்ளது. வசூல் தொடர்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், 20.11.2018 மற்றும் 22.11.2018 தேதிகளில் ரூ.25,000 வசூல் செய்தது. 22.11.2018 அன்று சென்னையில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கமும், புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரணம் வேண்டும், சாதி ஆதிக்க கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தின.
சென்னையில் தோழர்கள் முனுசாமி, பசுபதி, பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், சேகர் மற்றும் சுகுமார் ஆகியோர் தொடர்ந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 22.11.2018 அன்று புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் நிதி வசூல் செய்தனர். அன்று மட்டும் ரூ.3,500 வசூல் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் 23.11.2018 அன்று தோழர்கள் சங்கரபாண்டியன் தலைமையிலான குழு புயல் நிவாரண நிதி வசூல் செய்தது. ரூ.4,200 திரட்டியது. சாதி ஆதிக்கக் கொலைகளைக் கண்டித்தும், புயல் நிவாரணத்தில் அரசின் மெத்தனத்தைக் கண்டித்தும் நெல்லையில் புரட்சிகர இளைஞர் கழகம் 25.11.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புஇக மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் உரையாற்றினார். அன்று மாலையே நெல்லை புதிய பேருந்து நிலை யத்தில் புயல் நிவாரணநிதி ரூ.10,000 திரட்டப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் புரட்சிகர இளைஞர் கழகம் மாவட்டம் முழுவதும் முறையாக நிவாரண நிதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர்கள் திருமேனிநாதன், பாலஅமுதன், இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் விஜயன் உள்ளிட்ட தோழர்களோடு சென்னைத் தோழர் மோக னும் கலந்து கொண்டார்.
நவம்பர் 25 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியிலும், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி கொல்லையிலும் புரட்சிகர இளைஞர் கழகம், இகக (மாலெ) சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
நூறு நாட்கள் கடந்துவிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் பிரிக்கால் தொழிலாளர்கள் ஒரு குழுவாகவும் கோவை நகரத்திற்குள் தோழர் வேல்முருகன் தலைமையிலும் தூய்மைப் பணியாளர்கள், எல்ஜிபி தொழிலாளர்கள் ஒரு குழுவாகவும் நிதி வசூலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையத்தில் ரூ.3,000 வசூல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பழைய ஜெயங் கொண்ட சோழபுரம் சந்தையில் புயல் நிவாரண நிதி ரூ.3,000 வசூலிக்கப்பட்டது. சேலத்தில் ரூ.5,000 திரட்டப்பட்டது. நாகை, தஞ்சை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நிதி திரட்டல் நடந்துள்ளது.

Search