COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 30, 2018

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை 
அடித்து நொறுக்குவோம்

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குவோம். இப்படிச் சொல்வதில் என்ன பிரச்சனை?
இந்த வாசகத்தைச் சுற்றி எழுந்த சர்ச்சை, இப்படிச் சொல்வது இன்று மிகவும் அவசியம் என்று மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இசுலாமியர் ஒருவர் கடவுச்சீட்டு பெற உதவியதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொந்த கட்சியினராலேயே ட்விட்டரில் தாக்குதலுக்கு உள்ளானார்.
பத்து ஆண்டுகளாக, தனது கருத்தைச் சொல்ல ட்விட்டரை பயன்படுத்தி வந்த ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் ஷெஹ்லா ரஷீத், ட்விட்டரில் இருந்து சமீபத்தில் விலகி விட்டார். தனது கருத்துகளை எதிர்கொள்ள முடியாத, பின்தொடர்ந்து தாக்கும் சங்கிகள் படை (ட்ரோல் ஆர்மி), தனக்கு எதிராக மிகவும் ஆபாசமான அவதூறு செய்திகளை விடாமல் பதிவிடுவதாகவும் அதனால் மன உளைச்சல் நேர்வதாகவும் அதனால் ட்விட்டரில் இருந்து விலகுவதாகவும் அவர் சொன்னார்.
சங் பரிவாருக்கு எதிராக, மோடி ஆட்சிக்கு எதிராக கருத்து வெளியிடுபவர்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் மோசமாக பாலியல்ரீதியாக ட்விட்டரில் அவதூறுகளை, துன்புறுத்தல்களை சந்திப்பது தடை இன்றி நடந்துகொண்டுதான் இருக்கிறது. ட்விட்டரில் எதிர்ப்புக் கருத்துகளை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் கூச்சலுக்கு ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியே இன்று ஆளாகிவிட்டார். பிராமணர்கள் அமைப்பொன்று ஜோத்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கூட தொடுத்துள்ளது.
ட்விட்டரை பயன்படுத்தும் பெண்களின் அனுபவங்கள், ட்விட்டரில் அவர்கள் சந்திக்க நேரும் துன்புறுத்தல்கள், அவதூறுகள் பற்றி கருத்துகள் பரிமாறும் கூட்டம் ஒன்று டில்லியில் நவம்பர் 18 அன்று ட்விட்டர் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டார்சி கலந்துகொண்டார். பெண் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் 7 பேர் கலந்துகொண்டனர். தலித் செயல் பாட்டாளரான சங்கபாலி அருணா, அய்க்கிய அமெரிக்காவில் இருக்கும் தேன்மொழி என்ற ஓவியர் 2016ல் வரைந்த ‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குவோம்’ என்ற வாசகம் தாங்கிய படத்தை டார்சிக்கு பரிசாகத் தந்தார். ஜேக் டார்சி அந்த படத்துடன் நிழற்படத்துக்கு நின்றார். அந்த வாசகம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தாக்குவதாக, ஒரு சிறுபான்மை(?) பிரிவினருக்கு எதிராக வெறுப்பை, வன்முறையை தூண்டுவதாக எதிர்ப்புகள் எழுந்தபோது, ட்விட்டர் நிறுவனம் அதற்காக மன்னிப்பு கேட்டது. இது எங்கள் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்று சொன்னது.
ஜேக் டார்சியே நேரடியாக இப்படிச் சொல்லவில்லை. ட்விட்டர் இந்தியப் பிரிவின் அதிகாரி மன்னிப்பு செய்தியை ட்விட்டரில் வெளியிட்டார். சுஷ்மா, ஷெஹ்லா போன்ற பெண்கள் ட்விட்டரில் விரட்டப்பட்டு வேட்டையாடப்பட்டபோது ட்விட்டரின் எந்த அதிகாரியும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. ஆபாசமாக கருத்து பதிவிட்டவர்களை, மிரட்டுகிற கருத்து பதிவிட்டவர்களை என்னவென கேட்கவில்லை. வேறு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. சங்கும்பல்களின் வன்மத்துக்கு, வக்கிரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால், பார்ப்பனிய கும்பல்களின் மிரட்டலுக்கு, அவதூறுக்கு அடிபணிந்து ட்விட்டர் மன்னிப்பு கேட்கிறது. இன்றைய சூழல் அப்படி கேட்க வைக்கிறது. இதுதான் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. ட்விட்டர் நிறுவனம் கருத்துச் சுதந்திரத்தை காவு கொடுத்துவிட்டது. பார்ப்பனிய மிரட்டல்கள் வெற்றி பெற்றுவிட்டன.
வாசகம் பார்ப்பனிய ஆணாதிக்கத்தைத்தான் அடித்து நொறுக்கச் சொல்கிறது. சங்கிகள் இசுலாமியர்களை அடித்துக் கொல்வோம் என்று சொல்வதுபோல் அல்ல இது. பார்ப்பனிய ஆணாதிக்கம் என்ற கருத்தாக்கத்தை, கட்டமைப்பை அடித்து நொறுக்கச் சொல்கிறதே தவிர பார்ப்பனர்களை எதுவும் செய்யச் சொல்லவில்லை என்பது மிக எளிதாக அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.
‘பார்ப்பனிய’, ‘அடித்து நொறுக்குவோம்’ என்ற பதங்கள் பிரச்சனை என்றால், அவற்றில் என்ன தவறு கண்டுபிடித்தார்கள்? அனிஹிலேட் கேஸ்ட், சாதியை அழித்தொழி என்று அம்பேத்கர் சொன்னது வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக, நடக்கிற வன்முறையை தடுத்து நிறுத்துகிற நோக்கம் கொண்டது என்பதும் இந்தியர்களுக்கு, இந்திய சமூக கட்டமைப்பு பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த விசயம்தானே.
மனுஸ்மிரிதியை எரித்தபோது அம்பேத்கர் சொன்னார்: நாங்கள் வேண்டுவது சாதியில் இருந்து விடுவிக்கப்படுவது அல்ல. அப்படியானால் இந்த கட்டமைப்பு அப்படியே தொடரட்டும், எங்களை அதிலிருந்து விடுவித்தால் போதும் என்று கேட்கிறோம் என்று பொருளாகி விடும். நீங்கள் ஒரு விசயத்தை ஒழிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை அடித்து நொறுக்கிவிட வேண்டும். அதற்கு ஒரு முடிவு மட்டும் வந்தால், அது மீண்டும் வந்துவிடும். அதை ஒரேயடியாக முழுவதுமாக தகர்த்துவிட வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.
அம்பேத்கர் வாசகங்களால் இந்தியாவில் ஒரு வன்முறைச் சம்பவம் கூட இது வரை நிகழவில்லை. ஆணாதிக்கம் ஒழிய வேண்டும் என்ற முழக்கங்களாலும் இதுவரை ஒரு வன்முறைச் சம்பவமும் நடக்கவில்லை. பார்ப்பனிய ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குவோம் என்ற வாசகத்திலும் வன்முறையைத் தூண்ட எதுவுமில்லை. மாறாக, இப்படி ஒரு வாசகத்தை தாங்கிய அட்டை உலகப் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் கைகளில் இருக்கிறதே, வாசகத்துக்கு அங்கீகாரம் கிடைக்கிறதே என்ற வன்மம்தான், அந்த வாசகம் வன்முறையை தூண்டுகிறது என்று பழியை திருப்பி விடுகிறது. ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சுமத்தும் போக்குதான் இங்கும் வெளிப்படுகிறது.
சபரிமலையில் என்ன நடக்கிறது? பெண்கள் கோயிலுக்கு வரக் கூடாது என்று தடை போட்டது யார்? சட்டரீதியாக தடை உடைக்கப்பட்ட பிறகும் அவர்களை அனுமதிக்காமல் தடுப்பவர்கள் யார்? பெண்கள் அசுத்தமானவர்கள் என்று சொன்னது யார்? பார்ப்பனியத்தின் மனுவிதிதானே? பெண்கள் மீது, தலித் பெண்கள் மீது கொடூரமான தாக்குதல்கள், பாலியல் வன்முறை தாக்குதல்கள் நாடெங்கும் தீவிரமடைந்து வரும் இன்றைய சூழலில், அந்தச் சூழலுக்கு அடிப்படையான கருத்தை அடித்து நொறுக்குவோம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் சொல்வது, அவர்கள் தாக்கப்படுவதை விடவா ஆபத்தானது?
சாதியாதிக்கக் கொலை பற்றி நடக்கிற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஆதிக்க சாதி பக்கம் பேசும் ஒருவர் சாதிமறுப்பு திருமணங்கள் நடந்தால் இப்படித்தான் கொலைகள் நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்கிறார். மீண்டும் விளக்கத்துக்காக கேட்கும்போதும் மீண்டும் ஆணித்தரமாக அதைச் சொல்கிறார். உலகமே பார்க்கிறது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பவர்கள் பார்க்கிறார்கள் என்று நன்றாக தெரிந்துதான் பேசுகிறார். யார் தந்த துணிச்சல் அது? மனுவுக்கு, மனு முன்வைக்கிற ஆணாதிக்க விதிகளுக்கு இன்று இருக்கிற அரசியல்ரீதியான ஆதரவு தருகிற துணிச்சல் அல்லவா?
உலகில் வேறெங்கும் சாதி இல்லாதபோது இந்தியாவில் மட்டும் நிலவி சமத்துவமின்மையை தக்கவைக்கும் சாதியை ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியும் ட்விட்டரும் எதிர்த்தால் என்ன தவறு? அதே ட்விட்டரில் உங்கள் நியாயங்களை சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே?
நாம் உரக்கச் சொல்வோம்: பார்ப்பனிய ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்குவோம்.

Search