COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, November 14, 2018

அவ்னியின் கொலை எழுப்பியுள்ள கேள்விகளுக்கான பதில்களை 
தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாகச் செய்யாததை நாங்கள் 60 மாதங்களில் செய்கிறோம் என்று மக்களுக்கு வாக்குறுதி தந்து
ஆட்சிக்கு வந்த மோடி, காங்கிரஸ் 60 ஆண்டுகளாகச் செய்ததை நாங்கள் 60 மாதங்களில் செய்து முடிக்கிறோம் என்று அம்பானி வகையறாக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதை அவரது ஆட்சிக் காலம் முடிகிற நேரத்தில் நாட்டு மக்கள் புரிந்து கொண்டுவிட்டபோது மிகப்பெரிய பாதிப்புகள், சேதங்கள், இழப்புகள் ஏற்பட்டுவிட்டன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளைக்கு உதவ மக்களை பலி கொடுப்பவர்கள் விலங்குகளையா விட்டு வைக்கப் போகிறார்கள்? மகாராஷ்டிராவில் அவ்னி என்ற ஒரு புலி கொல்லப்பட்டுவிட்டது. வன ஆர்வலர்கள், விலங்குகள் நலம் காக்கும் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். புலியைக் கொல்ல ஆணை பிறப்பித்த மகாராஷ்டிரா அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனும் அளவுக்கு மத்திய அமைச்சர் பேசுகிறார். மோடி வழக்கம்போல், மவுனம் காக்கிறார். நாய்க்குட்டி காரில் மாட்டிக் கொண்டால் வருத்தம் ஏற்படும் என்று குஜராத் படுகொலை பற்றி பேசியவருக்கு புலி கொல்லப்பட்டதில் வருத்தம் ஏற்படவில்லை.
நமது திட்டத்துக்கு பிரச்சனை ஏதுமில்லை என்ற நிறைவோடு அனில் அம்பானி வேடிக்கை பார்க்கிறார்.
இரண்டு ஆண்டுகளில் அந்தப் புலி 13 பேரைக் கொன்றுவிட்டது, எனவே வேறு வழி இன்றி அதைக் கொல்கிறோம் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. மகாராஷ்டிராவின் தேஜமுவில் உள்ள சிவசேனா, பாஜக தனது மனசாட்சியை ரிலையன்சுக்கு விற்றுவிட்டது என்கிறது.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் பந்தர்கவாடா வனப்பகுதி கனிம வளம் நிறைந்தது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் சிமென்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிமென்ட் ஆலை அமைக்க 467.5 ஹெக்டேர் வன நிலத்தை வெறும் ரூ.40 கோடிக்கு மகாராஷ்டிராவின் பாஜக அரசாங்கம் தந்துவிட்டது. ஒப்பந்தங்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்தது முந்தைய காங்கிரஸ் அரசாங்கம்தான் என்கிறது பாஜக. இருக்கட்டும். நீங்கள்தான் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று சொல்கிறீர்களே, பிறகு ஏன் காங்கிரஸ் செயல்பாடுகளை அதன் தர்க்க எல்லைக்கு எடுத்துச் செல்ல இப்படி அக்கறை எடுக்கிறீர்கள்? 2018 ஜனவரியில், இன்னும் ஓராண்டு காலம்தான் ஆட்சி எனும்போது ஏன் அந்த வேலையை அவ்வளவு அவசரமாக முடிக்கப் பார்க்கிறீர்கள்? இந்த வனப்பகுதிக்கு அருகில் புலிகள் இனப்பெருக்கத்துக்கான பகுதி இருக்கிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருவது ஏன் உங்கள் காதுகளில் விழவே இல்லை? விவசாய நெருக்கடியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை வேடிக்கைப் பார்த்த அரசுக்கு 13 பேர் கொல்லப்பட்டதில் என்ன திடீர் அக்கறை என்று எழுப்பப்படும் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?
ராணுவத்துக்கான வெடிபொருட்கள் உற்பத்தி செய்ய சோலார் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சக்தோ வனப்பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள 88 ஹெக்டேர் நிலம் வெறும் ரூ.7.09 கோடிக்கு தர மகாராஷ்டிரா அரசாங்கம் ஒப்புதல் தந்துவிட்டது. அவ்னி கொலை செய்யப்பட்டதை ஒட்டி மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளபோதுதான் இதுவும் நடந்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் சிமென்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் சிமென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் சிமென்ட் உற்பத்தி செய்கிறது. இந்த துணை நிறுவனத்தின் ரூ.4,800 கோடி மதிப்புள்ள தொழிலின் 100% பங்குகளை 2016ல் பிர்லாவுக்கு விற்றுவிட்டது. ரிலையன்ஸ் சிமென்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.4,800 கோடி வந்து விட்டது. வரவுள்ள நிலத்தை காட்டி பிர்லாவுக்கு விற்றார்களா? ரிலையன்ஸ் சிமென்டேஷன் பிரைவேட் லிமிடெட்தானே சிமென்ட் உற்பத்தியில் இந்தப் பகுதியில் இறங்குகிறதா? அல்லது இரண்டுமா? ரிலையன்ஸ் சிமென்டேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இப்போது தரப்படும் நிலம் அம்பானிக்கா? பிர்லாவுக்கா? சோலார் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் உற்பத்தி செய்யும் ராணுவ வெடி பொருட்கள், அனில் அம்பானியின் ராணுவ உற்பத்தி தொழிலுக்கா? அல்லது நமது ராணுவத்துக்கா? மோடி அவர்களே, உங்கள் கார்ப்பரேட் பாசத்தின் எல்லையை, வீச்சை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. விளக்குங்கள். இந்தக் கேள்விகளை எல்லாம் அவ்னியின் கொலை எழுப்பியுள்ளது. தேசம் தெரிந்து கொள்ள விரும்புகிறது.

Search