COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 30, 2018

உயர்கல்வியை மூடத்தனங்களின் கூடமாக்கி முடக்கும் மோடி அரசு

மோடி அரசின் ஆட்சிக் காலம் முடிய இன்னும் அய்ந்து மாதங்களே உள்ளன. ஆனாலும், அது தனது அராஜக ஆக்டோபஸ் பாசிச நடவடிக்கைகளை அதிகரித்துக் கொண்டே போகிறது.
பிளவுகளை, கலவரங்களை உருவாக்கி மீண்டும் அரியணை ஏறத் துடிக்கிறது. ஏக இந்தியா - ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு -  இந்தியாவில் இருப்பவர்களெல்லாம் இந்துக்களே, இந்தியா, இந்துஸ்தான், இந்துக்கள் தேசம்  என ஒவ்வொரு நாளும் புதுப்புது போதனைகளையும் விளக்கங்களையும் நடைமுறைகளையும் புகுத்திக் கொண்டே செல்கிறது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் தரத்தை உயர்கல்வியில் கொண்டு வர, அதை ஊக்குவித்து உத்தரவாதப்படுத்த, ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி கண்காணிக்க, ஏற்கனவே உள்ள பல்கலைக் கழக மானியக்குழுச் சட்டம் 1956அய் நீக்கி விட்டு அதற்குப் பதிலாக இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக் கழக மானியக்குழு சட்டத்தை நீக்கும்) சட்டம் 2018 அமல்படுத்தப்பட வேண்டும் என்று மோடி அரசு புதிய சட்ட நகலை வெளியிட்டுள்ளது. அந்த சட்டத்தின் பெயரிலேயே 62 ஆண்டு கால  ‘பல்கலைக் கழக மானியக் குழு சட்டத்தை நீக்கும்’ என்பதும் சேர்ந்தே வருகிறது. சட்ட நகலின் முன்னுரையில், உயர்கல்வியின் மாறி வரும் முன்னுரிமைகள் அடிப்படையி லும் அவற்றை வளர்த்தெடுக்கவும் ஏற்கனவே இருக்கிற சட்டப்படியான ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக் கழக மானியக்குழு மறு வரையறை செய்யப்பட வேண்டியுள்ளது என்று குறிபிடப்பட்டுள்ளது. ஆனால், மோடி அரசு மறுவரையறை செய்யவில்லை. நீக்குகிறது.   
பல்கலைக் கழக மானியக்குழு சட்டம் 1956 அமைக்கப்பட்டதன் நோக்கமே உயர்கல்வியை ஊக்குவிக்கவும் ஒருங்கிணைக்கவும் உயர்கல்வி நிலையங்களைக் கண்காணிக்கவும் கல்வித் தரத்தை தீர்மானிக் கவும் கற்பிக்கவும் பயிற்சி அளிக்கவும் தேர்வுகள் நடத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளவும் உயர்கல்வி நிலையங்களுக்கு உயர்கல்வி பயில்வோருக்கு கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவும் நிதி மற்றும் மானியங்கள் அளித்து உதவிடவும்தான். உண்மையில் அதை வெற்றிகரமாகவே செய்து வந்து கொண்டிருக்கிறது பல்கலைக் கழக மானியக் குழு. குறைவான நிதி ஆதாரம், அதிகப்படியான அதிகாரத்துவப் போக்கு, தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியாமை, கல்விக் கட்டணக் கொள்ளை என பல்வேறு குறைபாடுகள் எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோல் இதிலும் இருக்கிறது என்பதும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற ஊழல் இங்கும் இருக்கிறது என்பதும்  உண்மைதான். அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் சாராய வியா பாரிகளில் இருந்து சமூக விரோதிகள் வரை கல்வி நிறுவனங்களை நடத்துவதும் கல்வித் தந்தைகளாக உருவெடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால்,   முதலாளித்துவ ஆட்சியாளர்களும் அவர்களின் கல்வி வியாபாரக் கொள்கைகளும் அதற்குக் காரணம். இதையெல்லாம் காரணமாகச் சொல்லிக் கொண்டு, பல்கலைக் கழக மானியக்குழுவை நீக்கிவிட்டு அதன் இடத்தில் புதிய ஆணையத்தை அமைப்பது என்பது எண்ணெய் சட்டியிலிருந்து தப்பி எரியும் நெருப்பிற்குள் விழுவதாகும்.
பாசிச சங்கிகளின் மோசடித் திட்டம்
பல்கலைக் கழக மானியக் குழு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்குப் பதிலாக சட்டத்தையே நீக்குகிறது மோடி அரசு. அதன் உண்மை நோக்கம், கல்வியில், குறிப்பாக உயர்கல்வியில் வரலாறுகளை மாற்றி எழுதுவது, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டை ஒழிப்பது, சிறுபான்மையினர் நடத்தும் பல்கலைக் கழகங்களை, கல்வி நிறுவனங்களை அழிப்பது, இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்வதே. பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே அறிவியலுக்குப் புறம்பான, பகுத்தறிவிற்கு எதிரான கருத்துக்களை, புராண இதிகாசப்  புரட்டுகளை, பசு அறிவியலை மோடி முதல் அவரது அமைச்சர்கள், பாஜக, ஆர்எஸ்எஸ் சங்கிகள் வரை திட்டமிட்டு பரப்ப ஆரம்பித்தனர். புரட்சிகரச் சிந்தனைகளுக்கு புகலிடங்களாக இருக்கிற உயர்கல்வி நிறுவனங்களை காவிகள் கைப்பற்றுவதும் அவற்றைத் தனியார் வசம் ஒப்படைப்பதும்தான் அவர்களின் தலையாய நோக்கம்.
புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கும் இந்திய உயர் கல்வி ஆணையச் சட்டம் 2018ன் கீழ் அமைக்கப்படும் உயர்கல்வி ஆணையத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்படும் 12 உறுப்பி னர்கள் இருப்பார்கள். ஆணையத்தின் தலைவர் தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவால் நியமிக்கப்படுவார். இந்தக் குழுவின் தலைவர் மத்திய அமைச்சரவைச் செயலாளர். மற்றவர்கள் உயர்கல்விச் செயலாளர் மற்றும் 3 சிறந்த கல்வியாளர்கள். இந்த ஐவர் குழுதான் உயர்கல்வி ஆணையத்தின் தலைவர் துணைத் தலைவரை தேர்வு செய்யும். அடுத்து ஆணையத்தின் 12 உறுப்பினர்களில், மத்திய அரசின் பிரதிநிதிகள் 3 பேர், அவர்கள் உயர் கல்வித்துறை செயலாளர், திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகச் செயலாளர், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைச் செயலாளர். அடுத்து 2 பேர்களில் கல்வி ஒழுங்குமுறை அமைப்புகளில் இருந்து. ஒருவர் அனைத்திந்திய தொழிற் கல்விக் குழுவின் தலைவர், மற்றொருவர் ஆசிரியர் கல்வி தேசியக் குழுவின் தலைவர், அடுத்த 2 பேர்  கல்வி நிறுவனங்க ளுக்கு அங்கீகாரம் வழங்கும் அமைப்புகளின் தலைவர்கள், அடுத்து பதவியில் இருக்கும் 2 துணை வேந்தர் கள், அடுத்தது ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் புகழ் பெற்ற 2 பேராசிரியர்கள், கடைசியாக தொழில்துறையில் அதிக அனுபவம் வாய்ந்த ஒருவர்.
நடைமுறைச் சட்ட விதிகளுக்கு மாறாக மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர்களையே தன் விருப்பத்திற்கு நியமிக்கும் மோடி அரசு உயர்கல்வி ஆணையத்தின் உறுப்பினர்களை எப்படித் தேர்வு செய்யும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இதில் நிச்சயம் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் அமித்ஷாவுக்குமே முன்னுரிமைகள். துணை வேந்தர்கள் எப்படி நியமிக்கப்பட்டார்கள் என்பது பற்றி தமிழக கவர்னர் புஷ்கரப் புகழ் புரோகித் சில நாட்களுக்கு முன் சொன்னார். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் புகழ் பெற்ற பேராசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்லவே வேண்டாம். இராமயண காலத்திலேயே இன்டெர்னெட் இருந்தது என்று கண்டுபிடித்துச் சொன்ன திரிபுராவின் பிப்லப் குமார் தேவ் போன்றவர்கள் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் போது, அது போன்ற (அறிவார்ந்த!) பேராசிரியர்களே உயர்கல்வி ஆணையத்தை அலங்கரிக்கலாம். அனுபவம் வாய்ந்த ஒருவர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பாராம். அந்த ஒருவர், மத்திய புலனாய்வுத் துறையினருக்கு ஊழல் வெளியே நாறாமல் இருக்க (வாழும் கலை) பயிற்சி அளிக்கும் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கராகவோ,  பதஞ்சலி புகழ் கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ்வாகவோ,  ஆதிசிவன் பெயர் சொல்லி காட்டை கபளீகரம் செய்து  வைத்துள்ள ஜக்கி வாசுதேவாகவோ கூட இருக்கலாம். இவர்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை உருவாக்கிய பண்டிட் தீன தயாள் உபாத்யாயாவின் போதனைகளும் கோல்வாக்கரின் சிந்தனைகளும் மனுதர்மம், இராமாயணம், மகாபாரதங்களுமே உயர் கல்விக்கான பாடங்கள் என பரிந்துரைக்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாதவர்கள், ஆங்கிலேயருக்கு அடிமைகளாகச் செயல்பட்ட ஆர்எஸ்எஸ்காரர் கள் எல்லாம் மகா தேச பக்தர்களாக பாடப் புத்தகங்களை அலங்கரிப்பார்கள். வரலாற்றையே முற்றிலும் மாற்றி எழுதிடும் இந்துத்துவ பாசிசத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் வரவிருக்கும் இந்திய உயர் கல்வி ஆணையச் சட்டம்.
பறிபோகும் மாநில உரிமைகளும்
மத்தியில் குவியும் அதிகாரமும்
இந்திய உயர்கல்வி ஆணைய சட்டப்படி உயர் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். மாநில அரசுகளுக்கு உயர்கல்வியின் மீதோ உயர்கல்வி நிறுவன கள் மீதோ எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில் இருந்து அவற்றின் பாடத்திட்டங்களை, பயிற்று மொழியைத் தீர்மானிப்பது, துணை வேந்தர்களை, முதல்வர்களை, பேராசிரியர்களை நியமிப்பது அதற்கான சட்ட திட்டங்களை உருவாக்குவது, மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, கல்விக் கட்டணம் என எல்லாவற்றையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்த ஆணையம்தான் தீர்மானிக்கும். ஓர் இடத்திலேயே எல்லாம் என்கிற அதிகாரக் குவிப்பு நிச்சயம் ஊழலுக்குத்தான் வழி வகுக்கும்.
மாநில சுயாட்சியை, மாநில உரிமைகளை முற்றிலுமாக பறிக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகி றது. அனைத்திந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2016-17 ன் படி நாட்டில் 864 பல்கலைக் கழகங்கள், 40,026 கல்லூரிகள், 11,669 நிகர் நிலை கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவை பொதுவான பாடத்திட்டங்கள் மட்டுமின்றி அந்தந்த பிராந்தியங்களில் அந்தந்த பகுதிகளுக்கேற்ப பாடத்திட்டங்கள், பயிற்சி மொழிகள், தாய் மொழிக் கல்வி என நடைமுறைப்படுத்தி வருகின்றன. இனி மாநிலங்கள் பாடத்திட்டங்களை வகுக்க முடியாது. தமிழகத்தைப் பற்றி, கேரளத்தைப் பற்றி, கர்நாடகாவைப் பற்றி சங்கிகள் அவர்கள் இஷ்டத்திற்கு எழுதுவார்கள். படேல் சிலையின் கீழ் ‘ஸ்டேட்டுகே ஒப்பி யுனிட்டி’ என்று தமிழில் எழுதியது போல் எழுதுவார்கள். ‘உயர்கல்வி நிறுவனங்கள்’ என்ற ஒரே தலைப்பின் கீழ் பல்கலைக் கழகங்களையும் கல்லூரிகளையும் கொண்டு வருகிறார்கள். இந்திய உயர்கல்வி ஆணையச்  சட்டம் 2018, பல்கலைக் கழகத்திற்கும் கல்லூரிக்கும் இனி வித்தியாசம் கிடையாது என்கிறது.
தற்போது கல்லூரிகள் பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்குகின்றன. பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகள் புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்த பல்கலைக் கழகங்களிடமிருந்து முன்னனுமதி பெற வேண்டும். மாநிலச் சட்டங்கள் மூலம் உரு வாக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் சுயமாக சட்ட திட்டங்களை, பாடத்திட்டங்களை உருவாக்கி பட்டங்களை தற்போது கொடுத்து வருகின்றன. புதிதாக வரவிருக்கும் உயர்கல்வி ஆணையச் சட்டம் பிரிவு 16ன் படி பல்கலைக் கழகங்களும் மத்திய ஆணையத்திடமிருந்து முன்னனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுதான் ஒவ்வொரு புதிய பாடத் திட்டங்களையும் பட்டங்களையும் உருவாக்க முடியும். ஏற்கனவே இருக்கிற பல்கலைக் கழகங்களும் தாங்கள் தற்போது வைத்துள்ள பாடத்திட்டங்கள், பட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் உயர் கல்வி ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுவிட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வப்போது அங்கீகாரம் புதுபிக்கப்பட வேண்டும். பிரிவு 20ன் படி ஆணையம் நினைத்தால் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். பிரிவு 23ன்படி ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றால், குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு மேல் முறையீட்டிற்கு வழியில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 226 ஷரத்தின்படி பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்.
நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான கல்லூரிகளுக்கும் பல லட்சக் கணக்கான பாடத்திட்டங்களுக்கும் வெறும் 15 பேர் கொண்ட மத்திய உயர் கல்வி ஆணையம் மட்டுமே முழு அதிகாரம் படைத்த அமைப்பு என்றால், அதுவும் குரங்கை தன் மடியில் வைத்துக் கொண்டு அரசாங்கக் கோப்புகளில் கையொப்பமிடும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி போன்றவர்கள் அதில் உறுப்பினர் ஆனார்கள் என்றால், கல்வியின் தரம் என்னவாகும்? கல்வி நிறுவனங்களைப் பார்வையிட அங்கீகாரம் வழங்க ஆய்வாளர்கள் குழுவை இனிதான் உருவாக்கப் போகிறார்களாம். பல்லாயிரக்கணக்கான கல்லூரிகளை பார்வையிட்டு எந்தக் காலத்தில் அங்கீகாரம் கொடுத்து மாணவர்கள் படித்து முடிக்க? காசுள்ளவர்கள் காரியம் சாதிப்பார்கள். அம்பானியின் துவங்கப்படாத பல்கலைக் கழகத்திற்கு நிதியையும் ஒதுக்கி, சிறந்த கல்வி நிறுவனம் என்று சான்றும் வழங்கிய மோடி அரசு, எண்ணெய் வளங்களை ஒட்டுமொத்தமாக அம்பானியின் கையில் தந்துவிட்டதுபோல் உயர்கல்வியையும் அம்பானி, அதானிகள் நடத்தி, அவர்களுக்குத் தேவையானவர்களை உருவாக்கினால் போதும் என்று நினைக்கிறது போலும்.
இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 பிரிவு 24ன்படி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்படுமாம். அந்தக் குழுவின் ஆலோசனைகளை, அறிவுரைகளை அமல்படுத்த உயர்கல்வி ஆணையம் கடமைப் பட்டதாகும். எல்லா உயர்கல்வி நிறுவனங்களும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டில். உயர்கல்வி ஆணையம் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் கட்டுபாட்டில். அந்த அமைச்சரோ மோடி யின் கட்டுப்பாட்டில். மோடியோ ஆர்எஸ்எஸ் மற்றும் அம்பானி அதானிகளின் கட்டுப்பாட்டில். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியா வரும். ஏற்கனவே உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவை (யுஜிசியை) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது என்பதும் அதில் இருப்பவர்கள், அதை இயக்குபவர்கள் உயர்ந்த கல்வியாளர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். யுஜிசியைப் பொறுத்தவரை அதன் தலைவர் மத்திய, மாநில அரசு களில் உறுப்பினராக இருக்க முடியாது. 10 உறுப்பினர் களில் குறைந்தது 4 பேர் பேராசிரியர்கள், மற்ற 6 பேர் கண்டிப்பாக மத்திய, மாநில அரசாங்கப்பணிகளில் இல்லாதவர்கள். ஆனால், புதிய ஆணையத்தில் 4 பேர் மட்டுமே பேராசிரியர்கள்.
பல்கலைக் கழக மானியக்குழு உயர்கல்வி நிறுவ னங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் அதிகம் கவனம் செலுத்துவதால் அவற்றின் தரத்தைக் கண்டு கொள்வதில்லை என்று புதிய சட்டம் உருவாக்க ஒரு காரணம் சொல்லப்படுகிறது.  இந்த உயர்கல்வி ஆணையம் கல்வித் தரத்தில் மட்டுமே கவனம் செலுத்துமாம். உண்மை என்னவென்றால், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்கிறது. ஏற்கனவே மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் யுஜிசியில் இருந்து நிதி ஒதுக்கீட்டுப் பணியை ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் என்கிற அமைப்பி டம் கொடுத்து சில மாநிலங்களில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. அய்முகூ அரசு இருக்கும் போதே உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. மோடி வந்ததும் அது மேலும் மோசமாகி விட்டது.
இந்த உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 ஆசிரியர்கள் சம்பளம் மற்றும் அவர்கள் பணி நிலைமைகள் பற்றி மவுனம் காக்கிறது. கல்வி பயில்பவருக்கும் கல்வி பயிற்றுவிப்பவர்களுக்கும் பொறுப்பேற்பதில் இருந்து அரசு தன்னை விலக்கிக் கொள்கிறது. உலக அளவில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் இந்தியா 121ஆவது இடத்தில்தான் உள்ளது. வெறும் 3.8 சதவீதம்தான் மொத்த கல்விக்கும் நிதி ஒதுக்கீடு செய்கிறது இந்திய அரசு. இதில் ஒரு சிறு பகுதிதான் உயர் கல்விக்குப் போகிறது. அதிலும் பெரும்பான்மை நிதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுக்கே சென்று விடுகின்றன. உயர்கல்வி ஆணையச் சட்டத்தின் நோக்கம் மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமின்றி, இலவசக் கல்வியை இல்லாமல் செய்து ஏழை மாணவர்கள் உயர் கல்வியை எட்டாமல் செய்வதும் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதுமாகும். அது மட்டுமன்றி, தனி நபர் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு, ஆராய்ச்சித் திட்டங்களுக்கு  இந்த உயர்கல்வி ஆணையம் நிதி ஒதுக்காது. அறிவியல் வல்லுநர்களும் கல்வியாளர்களும் தாங்களே தங்கள் ஆராய்ச்சிப் படிப்புக்கு செலவு செய்து கொள்ள வேண்டும் என்றால், நாட்டின் கல்வித்தரம் எங்ஙனம் உயரும்? யுஜிசியின் செயல்பாடுகள் தொடர்பாக மக்களிடம் கருத்துக்கள் கேட்க அறிவிப்பு ஒன்றை ஜøன் 10 அன்று நாடாளு மன்ற நிலைக்குழுவின் உயர்கல்வி தொடர்பான துறை வெளியிட்டது. மக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட் கள் அவகாசம் தரப்பட்டது. அந்த 15 நாட்கள் முடிந்து இரண்டே நாட்களில் உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 நகல் மீது கருத்து சொல்ல மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டு, மக்களுக்கு 10 நாட்கள் மட்டும் கால அவகாசம் கொடுத்தது. பின்னர் அதை ஜøலை 20 வரை நீட்டித்தது. மோடி அரசு காட்டிய இந்த அவசரம் எதற்கு? மக்கள் நலனிற்கா? அல்லது காவிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நலனிற்கா?
தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசுத் தேர்வாணை யத்தின் கேள்வித்தாளை தமிழில் தயாரிக்க ஆள் இல்லை என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் பேசும் மோடியின் எடுபிடி ஆட்சியாளர்கள் உயர்கல்வியில் மாநில உரிமை பறிபோவதைப் பற்றியா அக்கறை கொண்டுவிடப் போகிறார்கள்? தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் என முற்போக்காளர்களை கொலை செய்தபோதும் ரோகித் வெமுலாவின் நிறுவனமயப்படுத்தப்பட்ட படுகொலைக்குப் பின்னரும்  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் உமர் காலித்தை தொடர்ந்து துரத்தி துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்திப் பார்த்தும் முற்போக்கு, இடதுசாரி சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் களமாக மாறி வருகிற ஜேஎன்யு போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் படுதோல்வியைச் சந்தித்து வரும் இந்துத்துவ பாசிச, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிச் சங்கிகள், சமூக நீதியைப் புறந்தள்ளி தங்கள் நிகழ்ச்சிநிரலான பார்ப்பனீய பிற்போக்கு மூடத்தனங் களை முன்னெடுக்க உயர்கல்வியை, உயர்கல்வி நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இந்தியாவின் பன்மைத்துவத்தை கருவறுக்கத் துடிக்கிறார்கள். ஆனால், என்ன விலை கொடுத்தேனும் அவர்கள் எண்ணத்தை ஈடேற்ற விடமாட்டார்கள் இந்தியப் பாட்டாளிகளும் புரட்சிகர இளைஞர்களும்.

Search