COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, November 14, 2018

கிராமப்புற வேலையின்மை மற்றும் 
வருமானமின்மை பற்றிய ஆய்வு

ஆசைத்தம்பி

முற்றி பரவி வருகிற விவசாய நெருக்கடியும், குறை கூலி, குறை வருமானம், உள்ளிட்ட வேலையின்மையும், தமிழ்நாட்டு மக்களை அழுத்தும் இரண்டு பெரும் பிரச்சனைகள் என இககமாலெ இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறது.
விவசாய நெருக்கடி, கிராமப்புற நெருக் கடி மட்டுமல்ல என்றும், அது விவசாயிகள், விவசாய, கிராமப்புற தொழிலாளர்களை மட்டும் பாதிப்பது அல்ல என்றும், அது ஒட்டுமொத்த சமூகத்தின் நெருக்கடி என்றும் வலியுறுத்தி வருகிறது. அது, ஒரு பேரிடராக, பெரும் துயரமாக மாறியுள்ளது. விவசாயம், விவசாயிகள், விவசாய, கிராமப்புற தொழிலாளர்கள் கடந்த காலத்தின் எச்சமல்ல என்றும், அவர்களுக்கும் தமிழ்நாட்டின், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது என்றும் வலியுறுத்தி வருகிறது.
வேலையின்மையும், குறை கூலி, குறை வருமான நிலைமைகளும் நகரத்தோடு மட்டும் தொடர்பு உடையவை அல்ல. அவை கிராமப்புறங்களோடும் தொடர்பு உடையவை. இந்தியாவின் ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் கூட கிராமப்புற வறுமை, வேலையின்மை என்ற பிடித்தாட்டும் பிரச்சனைகளை உணர்ந்ததால்தான், தேசிய வேலை உறுதி திட்டமும், சட்டமும் கொண்டு வந்தார்கள். கிராமப்புற வேலையின்மையால், வறுமையால் விவசாய நெருக்கடியால், பெரும் எண்ணிக்கையில் கிராமப்புற தொழிலாளர்கள் உருவாகிறார்கள் என உணர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற பெயர் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் என மாற்றப்பட்டது. கிராமப்புற சமூகத்தில் நேர்ந்துள்ள இந்த புறவயமான மாற்றத்தை, சிந்தனையில், வேலைகளில் உள்வாங்க வேண்டியிருந்தது. இது தொடர்பான காத்திரமான ஆய்வுகள் தேவை என இகக மாலெ கருதியது.
இந்த பின்னணியில்தான் அவிகிதொச டிசம்பர் 25, 26, மாநில மாநாட்டை ஒட்டி மாலெ தீப்பொறியின் அடுத்தடுத்த இதழ்களில் கிராமப்புற ஆய்வுகள் போராட்டங்கள், செய்திகள் இடம்  பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதியில் மூன்று நாட்கள், 100 பேர் மத்தியில், அவர்கள் வயது, படிப்பு, வேலை, வருமானம் பற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செலவுகள், கடன்கள், குடும்ப நிலைமைகள், பிற சமூக பொருளாதார நிலைமைகளோடு தொடர்புபடுத்தி தகவல்களை திரட்டி விரிவான முறையான ஆய்வை, விவரமான ஆய்வை எப்படிச் செய்வதென்று தெரிந்து கொண்டு பிறகு மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.
ஆய்வு விவரங்கள்: 1. முற்றிலும் விவசாய வேலைகள் மட்டும் செய்யும் பெண்கள் 2. விவசாய வேலை அல்லாத பிற வேலை செய்யும் பெண்கள். 3. விவசாய வேலை மட்டும் செய்யும் ஆண்கள். 4. விவசாய வேலை அல்லாத வேலை செய்யும் ஆண்கள். 5. வெளிநாடுகளில் வேலை செய்யும் ஆண்கள் என 5 வகையினங்களாக விவரங்கள் சேகரிக்கப்பட்டன. (ஆய்வு மொத்த ஊராட்சியிலும் நடத்தப்படவில்லை. ஒரு கிராமத்தில் 100 பேர் மத்தியில் மட்டுமே நடத்தப்பட்டது).
30, 31, 32, 37, 47, 50, 52(2), 53, 55, 62, 65 என வயதுடைய 12 பெண்கள் விவசாய வேலை மட்டும் செய்கிறார்கள். ஆடு மாடு மேய்க்கிறார்கள். விறகு எடுத்து வருகிறார்கள். வீட்டில் வேலை செய்கிறார்கள். இவர்களது உழைப்பால் வரும் வருமானம் கணக்கிடப்படுவதில்லை. வீடு, குடும்பம் பராமரிக்கப்படுவதில் இவர்கள் செய்யும் இந்த வேலைகளுக்கு பங்கு உண்டு.
கணவனை இழந்தவர் உதவித் தொகை பெறும் ஒரு பெண் மாதம் ரூ.1,000 நலப்பயன் பெறுகிறார். அது போக திருச்சி சென்று ஆண்டில் 50 நாட்கள் விவசாய வேலை பார்த்து ரூ.10,000 சம்பாதித்துள்ளார்.
37, 48, 52, 52, 40, 38, 34, 35, 30, 55, 35, 36, 30, 38 என வயது உள்ள 14 பெண்கள், 2018ல் வேலை உறுதித் திட்டத்தில் 3 வாரங்கள் வேலை செய்தனர். வாரம் ரூ.950 என ரூ.2,850 அவர்கள் கணக்கில் வந்தது. இது போக, திருச்சியில் சென்று 50 நாட்கள் வேலை பார்த்து சராசரியாய் நாளொன்றுக்கு ரூ.200 என ரூ.10,000 சம்பாதித்தனர். ஆண்டு வருமானம் ரூ.2,850 + ரூ.10000 = ரூ.12,850. ஒரு முறை விறகு எடுத்து வந்தால், ரூ.200 அதன் சந்தை மதிப்பாகும். 30 முறை ரூ.6,000, 50 முறை ரூ.10,000 என விதிவிலக்காக எடுத்து வந்தவர்களும் உண்டு. இவர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைகளும் செய்கிறார்கள்.
2018, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில், மக்கள் வண்டிகள் அமர்த்திக் கொண்டு ஆணும் பெண்ணுமாய் திருச்சிக்குச் சென்று வேலை பார்த்தார்கள். வாகன வாடகையை அனைவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாகன வாடகை சுமார் ரூ.3,000. மதிய உணவு இவர்கள் செலவு. வேலை தருபவர் தேநீர் வடை வாங்கித் தந்தால் உண்டு. இல்லாவிடில் அதுவும் இவர்கள் கணக்கு. ஒரு பெண் பச்சத் தண்ணி கூட கிடையாதுப்பா என ஆதங்கத்துடன் சொன்னார்.
ஒரு ஏக்கர் நாற்று பிடுங்கி தூக்கிக் கொண்டு போட்டு நடவு செய்து கொடுக்க மொத்தம் ரூ.4,000. நாற்று பிடுங்க 4 பேர் தேவை. நாற்றைத் தூக்கிப் போக தூரத்தைப் பொறுத்து 4 பேர் தேவை. நடவு, மாவுக்கு 6 பேர். 3 பு 6 = 18 பெண்கள். அதிகாலை எழுந்து வண்டியில் சென்று அரை மணி நேரம் நடந்து காலை ஏழரை மணிக்கு வேலை  ஆரம்பித்து, மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை எடுத்துக் கொண்டு மாலை 6 மணிக்கு வேலை முடித்து பின்னர் இரவு ஊர் திரும்புவர்.
சில சமயம் நிலத்தின் அளவை மாற்றிச் சொல்லி நில உரிமையாளர்கள் ஏமாற்றுவதும் உண்டு. வேலை நேரத்துக்கு கூலி அல்ல. வேலை அளவுக்கே கூலி. குறைவானவர்கள் நிறைய வேலை செய்து, ஆனவரை சம்பாதிக்கப் பார்ப்பார்கள். இந்த வேலையால் இந்த தீபாவளி செலவு சமாளிக்க முடிந்தது எனப் பலரும் சொன்னார்கள். மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் ஒரே குடும்பத்தின் பெண்ணும் ஆணும் சேர்ந்து இந்த வேலைக்குச் செல்வது நடந்தது.
விவசாயம் அல்லாத வேலைகளில் 23, 22, 23, 27, 27, 47, 31, 24, 21, 29, 28, 40, 50, 51 வயது உடைய 14 பெண்கள் ஈடுபடுகின்றனர். அரசு பண்ணையில் வேலை செய்யும் பெண்ணுக்கு நாள் கூலி ரூ.251 என வாரத்தில் 2 நாட்களே வேலை கிடைக்கிறது. பல் மருத்துவர் ஒருவர் மட்டும் ரூ.30,000 மாதச் சம்பளம் பெறுகிறார். ஒரு பெண் நாள் கூலி ரூ.170, 4 பெண்கள் நாள் கூலி ரூ.200 என ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களில் ஒருவர் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றவர்.
அங்கன்வாடி தற்காலிகப் பணியாளர் ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.1,500. 9ஆவது 10ஆவது படித்த இரண்டு பெண்கள் முறையே மாதம் ரூ.2,500, ரூ.5,000 வருமானம் ஈட்டுகின்றனர். முதுகலை பட்டம் பெற்ற ஒரு பெண் வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.23,000 மட்டுமே பெறுகிறார். பி.எட், எம்.எட், பி.ஈ., படித்த 4 பெண்கள் மாதம் ரூ.5,000, ரூ.3,000, ரூ.6,500, ரூ.3,000 சம்பாதிக்கின்றனர். பி.ஈ. முடித்து மாதம் ரூ.3,000 சம்பாதித்த பெண்ணுக்கு சம்பளம் தரப்படவில்லை. இந்தப் பெண்ணை மாணவர் சேராத பாலிடெக்னிக்குக்கு ஆள் சேர்க்குமாறும், ஆள் சேர்க்கும் விளம்பரப் பிரசுரங்களை விநியோகிக்குமாறும் வறுபுறுத்தி உள்ளனர். அந்த பெண் அந்த வேலையை விட்டுவிட்டார். இவர்கள் போக 40 வயதுடைய,  திருச்சி நடவு வேலையில் 50 நாட்கள் வேலை பார்த்து ரூ.10000 சம்பாதித்த ஒரு பெண் 1 ஏக்கர் நிலத்தில் சவுக்கு போட்டுள்ளார். பிற்பாடு வரும் பணத்தை மாத சராசரி போட்டால் ரூ.1,000 வரும். 
விவசாய கூலி வேலையில் விவசாய வேலைகளில் ஈடுபடும் ஆண்கள் என்ற அடிப்படையில் 55, 54, 48, 47, 53, 30, 60, 52, 60, 60, 55, 60, 70, 52, 55, 27, 48, 37, 33, 80, 52 வயதுடைய ஆண்களிடமிருந்து விபரம் சேகரிக்கப்பட்டது. 1 ஏக்கர் சவுக்கு போட்ட இருவர் மாதம் ரூ.1,000 வருமானம் என கணக்கிடலாம் என்றும், 100 நாள் வேலை ரூ.2,850 ஆண்டு முழுவதும் கிடைத்ததெனவும் தெரிவித்தனர். 1 ஏக்கர் சவுக்கு போட்ட ஒருவர் அதில் மாதம் ரூ.1,000 வரும் என்றும் ஈரோடு டையிங் ஆலையில் மாதம் ரூ.8,000 சம்பாதிப்பதாகவும் சொன்னார். வெளிநாட்டில் மாதம் ரூ.22,000 சம்பாதித்த ஒருவர் தற்போது வீட்டில் இருக்கிறார். 2 ஏக்கர் சவுக்கு போட்டுள்ளதாகவும் மாதம் ரூ.2,000 வருமானம் வரும் என்றும் சொல்கிறார். 2 ஏக்கர் நெல் விவசாயம் செய்த மூன்று பேர் மாதம் ரூ.7,000 வருமானம் என்றனர். 2 மாநிலத்தில் கடலை விவசாயம் செய்யும் ஒருவர் மூன்று மாதத்தில் ரூ.10,000 சம்பாதித்ததாகவும், 100 நாட்கள் வேலையில் 2018ல் ரூ.2,850 சம்பாதித்ததாகவும் தெரிவித்தார். 55 வயதுள்ள மற்றொருவர் இந்த ரூ.2,850 போக திருச்சி வேலையில் ரூ.10,000 சம்பாதித்ததாகச் சொன்னார். 80 வயதான ஒருவர் 15 மாடுகள் மேய்த்தும் 82 வயதான ஒருவர் விவசாயத்தின் மூலம் பிழைப்பதாகவும் தகவல் தந்தனர். கணக்கில் சொல்லும் வருமானம் இல்லை என்று சொன் னார்கள். ஒருவர் அரசு பண்ணையில் வாரம் 2 நாட்கள் என மாதம் ரூ.2,000, 100 நாட்கள் வேலை மூலம் ரூ.2,850 சம்பாதித்ததாகவும் 2 மாடுகள் மேய்ப்பதாகவும் தெரிவித்தார்.
அரசுப் பண்ணையில் வேலை பார்க்கும் ஒருவர் மாதம் ரூ.2,000 சம்பளம் என்றார். 48 வயதுடைய ஒருவர் மரம் வெட்டும் வேலை கிடைக்கும் நாட்களில் நாள் கூலி ரூ.500 என்றார். சராசரி மாத வருமானம் ரூ.7,500, என வைத்துக் கொள்ளலாம். வெளிநாட்டில் வேலை பார்த்து அடிப்பட்டு திரும்பிய ஒருவர் 100 நாள் வேலையில் ரூ.2,850 மட்டுமே வருமானம் என்றார். மாடு மேய்க்கும் மாற்று திறனாளி ஒருவர் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதாக சொன்னார். ஆடு, மாடு பராமரிக்கும் ஒருவர் 100 நாள் வேலையில் ரூ.2,850 வருமானம் என்றார். இன்னும் ஒருவரும் 100 நாள் வேலையில் ரூ.2,850 மட்டுமே வருமானம் என்றார். 4 பேர் திருச்சி நடவு மற்றும் 100 நாள் வேலை மூலம் ஆண்டில் ரூ.12,850 வருமானம் என்றார்கள் ஒருவர் 20 மாடுகளை பராமரிப்பதாகச் சொன்னார். தூய்மைப் பணியாளரான ஒருவர் ஆண்டுக்கு ரூ.23,000 வருமானம் என்றார். இவர்கள் 55, 54, 48, 47, 53, 30, 60, 82, 52, 60, 60, 55, 60, 70, 40 வயதானவர்கள்.
விவசாயம் அல்லாத வேலை செய்பவர்கள் புதுக்கோட்டையில், தமிழ்நாட்டிற்குள்ளும் வெளிமாநிலங்களிலும் வேலை பார்க்கிற 32 பேரிடம் விவரங்கள் எடுக்கப்பட்டன. இவர்களில் பி.ஈ., முடித்தவர்கள் டிப்ளமா என்ஜினி யர்கள், பி.எட்., முடித்தவர்கள் டிகிரி முடித்தவர் 9 பேர். வெளிநாடுகளில் வேலை செய்யும் 13 பேர், பட்டப் படிப்பு, பொறியியல் பட்டயம், பட்டப் படிப்பு, முடித்தவர்கள்.  24, 25, 28, 26, 26, 25, 25, 24, 28 வயதுடையவர்கள். அவர்களில் ஒருவர் வெளிமாநிலத்தில் 10 மணி நேரத்திற்கு ரூ.400 நாள் கூலி பெறுகிறார். ஒருவர் வெளி மாவட்டத்தில் நாள் கூலி ரூ.700 பெறுகிறார். மற்றவர்கள் மாதம் ரூ.15,000, ரூ,10,000, ரூ.10,000, ரூ.12,000, ரூ,8,000, ரூ.18,000, ரூ.8,000 சம்பாதிக்கின்றனர். ஒருவர் மட்டும் ஆசிரியர். மற்றவர்கள் தொழிலாளர்கள்.
10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, விவசாயம் அல்லாத வேலை செய்பவர்கள் 22, 37, 30, 37, 32, 32, 34, 32, 43, 40 வயதான 10 பேரில் இரண்டு பேர் நாள் கூலி ரூ.300 பெறுகிறார்கள். இரண்டு பேர் நாள் கூலி ரூ.400 பெறுகிறார்கள். ஒருவர் நாள் கூலி ரூ.500, ஒருவர் நாள் கூலி ரூ.700 பெறுகிறார்கள். மூன்று பேர் மாதம் ரூ.8,000, 16,000, ரூ.20,000 பெறுகிறார்கள். ஒருவர் வாரம் ரூ.8,000 பெறுகிறார். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாகன ஓட்டுநர்கள். தவிர சுமை ஏற்றுதல், பனியன் கம்பெனி, எலக்ட்ரிகல், மெக்கானிக், பூக்கட்டுதல் போன்ற வேலைகள் செய்கிறார்கள்.
வெளிநாட்டுக்குச் சென்றவர்கள், செல்லத் தயாராக உள்ளவர்கள் 31, 42, 48, 37, 28, 24, 45, 52, 34, 32, 37, 28, 28 வயதானவர்கள். இவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 2 பேர். பட்டப் படிப்பை இடையில் நிறுத்தியவர் ஒருவர். மற்றவர்கள் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு படித்தவர்கள். 8 பேர் குவைத்திலும், 3 பேர் சிங்கப்பூரிலும், ஒருவர் மஸ்கட்டிலும் ஒருவர் கத்தாரிலும் வேலை பார்க்கின்றனர். இவர்களில் மூன்று பேர் ரூ.15,000, ஒருவர் ரூ.15,500, ஒருவர் ரூ.20,000, மூன்று பேர் ரூ.22,000, ஒருவர் ரூ.23,000, இரண்டு பேர் ரூ.25,000, இரண்டு பேர் ரூ.30,000, மாத வருமானம் என்று சொன்னார்கள். இவர்கள் அனைவரும் அன்ஸ்கில்ட், செமிஸ்கில்ட் வேலைகள் செய்பவர்கள் அதிகபட்சம் கொத்தனார் வேலை பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் இவர்களது வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள், தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் வட மாநிலத் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு ஒப்பானவை.
90க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த விவரங்களில் பளிச்சென புலப்படுகிற சில செய்திகள் உள்ளன. 1. 16 முதல் 25 வயது வரை உள்ளவர்களில் ஓரிருவர் தவிர யாரும் வேலைக்குச் செல்லவில்லை. இவர்கள் அனைவரும் படித்துக் கொண்டிருப்பவர்கள். 2. 25 வயதி லிருந்து உள்ள ஆண்கள் மத்தியில் ஏகப்பெரும்பான்மையினர் விவசாயம் சார்ந்த வேலையில் இல்லை. 3. வயதானவர்களும், வேறு வேலைகளுக்கு செல்லும் மனோநிலையும் வாய்ப்பும் இல்லாத 40 வயதுக்கும் மேற்பட்ட சில ஆண்கள் மட்டுமே கிராமப்புற வேலைகளில் மிஞ்சி இருக்கிறார்கள். 4. பெண்கள் இன்னமும் பெருமளவிற்கு கிராமப்புறத்தில் விவசாய வேலைகளில் நிற்கின்றனர். அவர்கள் மத்தியிலும் வேறுவேறு வெளி வேலைகளுக்கு செல்லும் போக்கு இளம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. 5. விவசாய நெருக்கடி, பெரும்சுமை யாய் குறை கூலி, குறை வருமான நிலைமைகளாய் ஏழை விவசாயிகள், விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் மீது பாய்ந்துள்ளது. நலப்பயன்கள், ஓய்வூதியம் போன்றவை அடிவாங்கும் நிலையில், ஏதிலிகள் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Search