COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, November 30, 2018

ஏற்கனவே தமிழக மக்கள் வயிறு பற்றி எரிகிறது
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்

திரைப்படம் எடுக்கும் சிலருக்கு பொதுப்புத்திக்கு அப்பால் எந்த அறிவும் இல்லை என்பதை பொறுத்துக் கொள்கிறோம்.
அது பொழுதுபோக்கு வகையினத்தில் வந்துவிடுகிறது. வைகோ கூட திடீரென ஆவேசம் வந்தால் ஏதாவது பேசுவார். இப்போது கூட, உணவும் குடிநீரும் கூட இல்லாமல் மக்கள் பரிதவிக்கும்போது, கஜா புயல் நிவாரணப் பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்கிறது என்று புளங்காகிதத்துடன் பேசுகிறார். அவர் பேசுவது பழகிவிட்டது. ஆனால் கற்றறிந்த நீதிபதிகள் சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகளில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும்படியான கருத்துகள் சொன்னால் நாம் எங்கு சென்று முறையிடுவது?
விலையில்லாப் பொருட்கள் மக்களைச் சோம்பேறிகளாக்கிவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரனும் அப்துல் குத்தூசும் அடங்கிய அமர்வு சொல்கிறது. ‘அரிசி, பிற உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உண்மையில் யார் ஏழைகளோ அவர்களுக்குத்தான் தர வேண்டும். அடுத்தடுத்த அரசாங்கங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக அனைவருக்கும் விலையில்லாப் பொருட்கள் வழங்குகின்றன. அதனால் எல்லாவற்றையும் அரசாங்கம் விலையின்றி தர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்படி மக்களின் மனநிலை மாறிவிட்டது. விளைவாக மக்கள் சோம்பேறிகளாகிவிட்டார்கள். இதனால் சாதாரணமான வேலைகளுக்குக் கூட நாம் வடநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது’.
‘அரிசியை விலையில்லாமல் அனைவருக்கும் ஏன் தர வேண்டும்? இதனால் அரசுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.2,000 கோடி செலவாகிறதே. இந்த நீதிமன்றம் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு வறியவர்களுக்கு அரிசி வழங்குவதற்கு எதிரானது அல்ல. வறியவர்கள், வறுமைக் கோட்டுக்குக்கீழே இருப்பவர்களுக்கு அப்பால் யாராவது இந்தத் திட்டத்தில் பயன் பெறுவார்களேயானால் அவர்கள் அநியாயமாக அரசின் செலவில் பணக்காரராகிறார்கள் என்று பொருள். மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை என்ன, அவர்களுக்கு மட்டும் தருவதானால் தேவைப்படும் அரிசியின் அளவு என்ன அதன் மதிப்பு என்ன என்ற விவரங்கள் வேண்டும்’.
நீதிபதிகளின் இந்தக் கவலை நியாயமானதுதான். ஆனால், பிரச்சனை பற்றிய தீர்வுக்கு அவர்கள் தந்திருக்கும் அழுத்தம் இடம் மாறி தீர்வை, விவாதத்தை திசைமாற்றி தீர்வே கிடைக்காமல் செய்து விடுகிறது. பிரச்சனையின் அடிப்படை காரணங்களை, ஆட்சியாளர்களின் குற்றமய அலட்சியப் போக்கை, மக்கள் விரோதக் கொள்கைகளை, நடவடிக்கைகளை அடையாளம் காணத் தவறி விடுகிறது. அவர்கள், இந்தக் கேள்விகளுக்குப் பின் ஒளிந்து கொள்ள இடம் தந்துவிடுகிறது.
உங்களுக்குக் கூட சம்பளம், பிற படிகள் தந்து விட்டு, வீடு வேறு ஏன் தர வேண்டும்? வெளியேறிவிடுகிறீர்களா? உயர்அதிகாரிகள், அமைச்சர்கள் அரசு செலவில் பயணம், சொகுசு விடுதிகளில் தங்குவது என பல சலுகைகள் ஏன் பெறுகிறார்கள்? அவற்றை எல்லாம் நிறுத்திவிடச் சொல்வீர்களா?
ரேசன் அரிசி கடத்தல் பிரச்சனையில் வட மாநிலத் தொழிலாளர்களை ஏன் கொண்டு வந்து இணைக்க வேண்டும்? அவர்கள் இங்கு வந்து வேலை செய்வது குறைகூலி மட்டுமே தரும் முதலாளிகளால்தான் என்பதை அனைவரும் அறிவர். தமிழ்நாட்டின் நல்வாழ்வு நடவடிக்கைகளோடு, விலையில்லாப் பொருட்களோடு இணைத்து சுருக்கிப் பார்க்கக்கூடிய எளிதான பிரச்சனையா இடம்பெயரும் தொழிலாளர் பிரச்சனை? அது சர்வதேச பிரச்சனை அல்லவா?
வழக்கு, ரேசன் அரிசி கடத்தல், முறைகேட்டில் ஈடுபடுவதாக சொல்லப்படும் ஒருவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிராக போடப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பானது. இந்த வழக்கில் ரேசன் அரிசி கடத்தலின் ஆதாரமாக இருக்கும் அதிகாரிகள் வலைப்பின்னல் என்ன என்று கண்டறிந்து களைவது பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு தரும். அவர்கள் சாமான்ய மக்களுக்குச் சென்று சேர வேண்டியதை கடத்தி விற்று சொத்து சேர்க்கிறார்கள். சட்டப்படி குற்றம் செய்கிறார்கள். அவர்கள் மீது அந்த அறச்சீற்றம் எல்லாம் பாய்ந்தால், அது நடவடிக்கைகளாக மாறுமானால், அய்யா, எங்கள் வயிற்றில் பாலை வார்த்தீர்கள் என்பார்கள் மக்கள்.
இதோ, சத்துணவு முட்டை, சத்து மாவு ஊழலில் ரூ.2,400 கோடி லஞ்சம் என்று வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு சொல்லப்படுகிறது. இது வரை நடந்த வருமானவரித் துறை சோதனைகள் என்ன ஆயின, இந்த முறையாவது அது எங்கள் பார்வைக்கு, கண்காணிப்புக்கு, பரிசீலனைக்குப் பிறகு பரிந்துரை அல்லது உத்தரவுக்கு, அதைத் தொடர்ந்த சரிசெய் நடவடிக்கைகளுக்கு உட்பட்டாக வேண்டும் என்று சொல்வதில் இருந்து நீதிபதிகளை யாரும் தடுக்க முடியாது. அப்படி ஓர் உத்தரவு வருமானால் அரசுப் பள்ளிக்கு அனுப்பினால் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கும் தமிழக மக்கள் நீதிபதிகளுக்கு வாழும் காலத்திலேயே சிலை வைப்பார்கள்.
அமைச்சர்கள், அதிகாரிகள் மீது எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து கேள்வி கேட்டால், அந்தக் கேள்விகளுக்கு விடை காண, அதன் தர்க்க எல்லை வரை தொடர விடாப்பிடியாக செயல்பட்டால் ஊழல் செய்பவர்களுக்கு ஓரளவாவது அச்சம் வரும். தமிழ்நாட்டு மக்களுக்கு அதற்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை.
அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர் கஜா புயலில் பெய்த மழையால் நனைந்து நாசமாகிக் கிடக்கிறது. தண்ணீர் வரும் கால் வாயில் பழுது பார்க்கும் பணி தாமதமானதால் பயிர் வைக்க தாமதமானது. 15 நாட்களுக்கு முன்பு தண்ணீர் கிடைத்திருந்தால் அறுவடையும் 15 நாட்களுக்கு முன்பு முடிந்திருக்கும். இந்தத் தாமதத்துக்கு யார் காரணம், விவசாயிகள் உழைப்பு வீணாகிப் போனதற்கு, அவர்கள் அடுத்து எதிர்கொள்ள உள்ள துன்பங்களுக்கு, உணவு உற்பத்தி அடிவாங்கியதற்கு யார் காரணம் என்று கண்டறிவது மிக அடிப்படையான விசயம். நடக்குமா?
மிகப்பெரும் அளவில் கருத்துகள் மறுஉற் பத்தி செய்யப்படும் காலம் இது. நீதிபதிகள் சொல்லும் கருத்துகள் பல்வேறு மட்டங்களில் தாக்கம் செலுத்துபவை. இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் பெரும்பான்மை மக்கள் நலன்களுக்கு எதிராக மிகத் திறமையாக கருத்துகளை உற்பத்தி, மறுஉற்பத்தி செய்கின்றன. இந்த வழக்கில் நீதிபதிகள் பல்வேறு விசயங்கள் பேசியிருந்தாலும், விலையில்லா அரிசி வேண்டாம் என்பதையே அந்த கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. அதைச் சுற்றி விவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. அரசுகள் தரும் கட்டணமில்லா, விலையில்லா பொருட்கள் சாமான்ய மக்களுக்குத் தரப்படும் மானியங்கள் அல்ல. அவை உண்மையில், மக்களை ஒட்டச் சுரண்டும் முதலாளிகளுக்கு, குறைகூலி தரும் முதலாளிகளுக்கு எதிராக, மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் வாங்கும் சக்தி மறுக்கப்படும் மக்கள் போராடுவதைத் தடுக்க, மக்கள் கொந்தளிப்பை தற்காலிகமாக சமாளிக்க, முதலாளித்துவ அரசுகளால் வழங்கப்படுபவை. அவை முதலாளிகளுக்கு வழங்கப்படும் மானியங்களேயன்றி வறிய மக்களுக்கு வழங்கப்படுபவை அல்ல. இதுவும் அந்த வறிய மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்துதான் தரப்படுகிறது என்பதையும் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாளித்துவ நீதிமன்றங்கள் நிச்சயம் மார்க்சிய கண்ணோட்டத்தில் இருந்து பிரச்சனைகளை அணுகப் போவதில்லை. அப்படி யாரும் இங்கு எதிர்ப்பார்க்கவும் இல்லை. முதலாளித்துவ நீதிமன்றங்கள் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைகளையாவது, முதலாளித்துவ ஜனநாயகக் கருத்துகளையாவது பேணிப் பாதுகாக்க வேண்டும். பாசிச இருள் சூழ்ந்திருக்கும் இன்றைய சூழலில் அது நிறை வேற்றப்பட்டுவிட்டாலே மிகப் பெரிய சாதனைதான். மிகப்பெரிய மக்கள் சேவைதான்.
விலையில்லாப் பொருட்களை வரிசையில் நின்று வாங்கி வந்து வீட்டில் சேர்த்துவிட்டதால் அவர்கள் கோடீஸ்ரரர்கள் ஆகிவிடவில்லை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, வேலை வாய்ப்பு, நீதி, நியாயம் என எதுவும் சரியாக கிடைக்காமல் துயருற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு உரியவை எல்லாம், அவர்கள் உழைப்பில் உருவானவை எல்லாம் அவர் கண்ணெதிரிலேயே கொள்ளை போவதைப் பார்க்கிறார்கள்.
ஏற்கனவே தமிழக மக்கள் வயிறு பற்றி எரிகிறது. இதற்கு மேல் யாரும் அந்த வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்.
(நீதிபதிகளை விமர்சிக்கிறீர்களா என்று யாரும் பொங்கி எழ வேண்டாம். நீதிபதிகளின் கருத்துகளை விமர்சனத்துக்கு உட்படுத்த ஜனநாயகத்தில் இடமுண்டு. இங்கு அதுதான் நடந்துள்ளது. ஏழரை கோடி பேரை சோம்பேறிகள் என்று சொல்வது மட்டும் அருள்வாக்கா?)

Search