COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 15, 2019

வைரங்களும் கரன்சி நோட்டுகளுமாய்
செல்வம் கொழிக்கும் தமிழ்நாடு


பிப்ரவரி கடைசி வாரத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் பெயருக்கு கொண்டாடிக் கொண்டிருந்தபோது, குஜராத்தின் சூரத்தில் வைரச் சந்தையில் +11 வைரத்தின் விலை 30% வீழ்ந்தது.
பிப்ரவரியில் மட்டும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் மும்பை வைரச் சந்தை தரகர்கள் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வைரம் தமிழ்நாட்டில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வைரமும் கரன்சி நோட்டுகளும் கொட்டிக் கிடக்கின்றன.
2016 செப்டம்பர் 22 அன்று ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி, அவர் இறப்புக்கான காரணம் பற்றி மக்கள் பணத்தை வீணடித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி, 2016, நவம்பர் 8 அன்று பணமதிப்பகற்றம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் தரகர்கள் மூலம் ஜெயலலிதா மும்பை வைரச் சந்தையில் +11 தரத்தில் 2 லட்சம் கேரட்டுக்கும் மேல் வைரம் வாங்கியுள்ளார் என்று சொல்கிறது.
1 கேரட் வைரத்தின் விலை ரூ.14 லட்சத்துக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. சில தரமான வைரங்கள் விலை 1 கேரட் ரூ.21 லட்சம் வரை கூட இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாம் ரூ.14 லட்சம் என்று வைத்துக் கொண்டால், 2 லட்சம் கேரட் வைரங்களின் மதிப்பு ரூ.28,000 கோடிக்கும் மேல். ரூ.1.72 லட்சம் கோடி 2 ஜி ஊழல் எனப் பேசிப்பேசி ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து, தமிழக மக்களுக்காகவே எந்நேரமும் சிந்தித்து செயல்பட்டு, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பணமதிப்பு அகற்றப்பட்ட சில நாட்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் வாங்கியிருக்கிறார்! (பணமதிப்பகற்றம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த வைர விற்பனை நடந்துள்ளதாக இந்த செய்தி சொல்வது மட்டும்தான் ஆறுதல்).
கொடநாட்டு கொலைகள் பற்றி மேத்யு சாமுவேல் செய்தி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். கதவை உடைத்தார்கள், ஆவணங்களை எடுத்தார்கள் என்றார். இது நடந்தது ஜனவரி மாதத்தில். பிப்ரவரியில் தமிழ்நாட்டிலிருந்து மும்பைச் சந்தைக்கு வைரங்கள் விற்பனைக்குப் போகின்றன. அதுவும் 1 லட்சம் கேரட் அளவுக்கான வைரங்கள். இந்த அளவுக்கு திடீரென நடந்த தாக்குதலால், சூரத் வைரச் சந்தையில் வைர விலை வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சிக்கு பிறகுதான், 2 லட்சம் கேரட் வைரம் வாங்கப்பட்டதும், அதில் 1 லட்சம் கேரட் விற்பனைக்கு வந்ததும் செய்தியாகியுள்ளது. இன்னும் மீதம் இருக்கிற 1 லட்சம் கேரட் வைரமும் வந்து சந்தையைத் தாக்கினால் சந்தை தாங்காது என்ற அச்சத்தில் இப்போது இந்தச் செய்தி  வெளியாகி இருக்கலாம். 2016ல் வாங்கப்பட்டதை விட குறைந்த விலையில் இப்போது விற்கப்பட்டதாகவும் மும்பை வைரச் சந்தை தரகர் ஒருவர் சொல்கிறார்.
வைரச் சந்தை தரகர் அதிமுகவின் ஆட்சி யாளர்கள், அதிகாரப் பிரிவினர்போல் வசதி படைத்தவராகத்தான் இருப்பார். அவரது தொழில் பாதிக்கப்படும் என்பது பற்றி நாம் இங்கு கவலைப்பட வேண்டியதில்லை. பண மதிப்பகற்றம் அறிவிக்கப்பட்டு சில நாட்களில் வெளியில் வரும் கிட்டத்தட்ட அந்த ரூ.30,000 கோடி யாருடையது, என்ன கணக்கு, எப்படி, யார் ஈட்டிய வருமானம் என்ற கேள்விகளுக்கு அதிமுகவினர் பதில் சொல்ல வேண்டும். ஜெயலலிதா இட்டிலி சாப்பிட்டதை விசாரித்துக் கொண்டிருப்பதை விட முக்கியமான பிரச்சனை இது. இது எல்லாம் மக்கள் பணம். கடந்த ஏழு ஆண்டுகளில் மக்களுக்கு எந்த வசதியும் ஏன் சென்று சேரவில்லை, மக்கள் ஏன் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், அவர்கள் வாழ்வாதாரங்கள் எப்படி பறிபோயின போன்ற கேள்விகள் பதில் இல்லாமல் காத்திருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கும் இந்த வைர விற்பனைக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது.
மிகச் சில நாட்களில் வைரங்கள் மட்டுமே இந்த அளவுக்கு பெரிய தொகையில் வாங்க முடியும் என்றால் கொடநாட்டில் பல லட்சம் கோடிகளில் மக்கள் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்று நமக்கு சந்தேகம் வருகிறது. போயஸ் கார்டனுக்குள் யாரையும் நுழைய விடவில்லை. அங்கு என்ன இருக்கிறது, நாளும் பரபரப்பாக இயங்கும் அஇஅதிமுக அலுவலகம், ஜெயலலிதாவின் பிற சொத்துகள்... இவற்றில் தமிழக மக்கள் ரத்தம் இன்னும் எத்தனை லட்சம் கோடிகளாக உருமாறி கிடக்கின்றன என்று கேள்வி வருகிறது.
இப்போது நடந்துள்ள வைர விற்பனையிலும் யார் விற்றார்கள், என்ன தொகைக்கு விற்றார்கள், விற்ற பணம் யாரிடம் சேர்ந்திருக்கிறது பற்றிய விவரங்கள் வேண்டும் என்று எந்த அதிகார அமைப்பும் கேள்வி எழுப்பவில்லை. பணமதிப்பகற்ற அறிவிப்பு வந்த சில நாட்களில் வாங்கப்பட்ட வைரங்கள், தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன் குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன என்றால், விற்ற பணம், தேர்தல் களத்துக்கு வந்து விளையாடும் என்று முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
நடக்கவிருப்பது மக்களவைத் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் என்றாலும், 2011 முதல் எட்டு ஆண்டுகளாக அஇஅதிமுக ஆட்சி தமிழக மக்களுக்கு இழைத்துள்ள துரோகம், 2016க்குப் பிறகு நடக்கும் அடிமைகள் ஆட்சியால் பறிக்கப்படுகிற மாநில உரிமைகள், கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்ட அன்றாட வாழ்க்கை என தமிழக மக்கள் அனுபவிக்கிற துன்பங்கள் எல்லாம் ஒன்று திரண்டு, அடிமை அதிமுக ஆட்சியாளர்களை, மக்களை ஆனவழிகளில் எல்லாம் பிளவுபடுத்தி அரசியல்ரீதியாக குளிர் காயும் பாசிச பாஜகவை தண்டிக்க, நீறுபூத்த நெருப்பாக, தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள்.
அஇஅதிமுக தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியை தேஜமு என்றுதான் சொல்ல வேண்டும் என்று கூட்டணியில் அய்ந்து தொகுதிகளில் மட்டும் போட்டியிட உள்ள பாஜகவின் தலைவர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மிரட்ட முடிகிறது. உன்னை ஒரு கை பார்க்கிறேன் என்று தேர்தல் காலத்தில் கூட, மக்கள் மத்தியில் முழுவதும் அந்நியப்பட்டுள்ள பாஜகவிடம் அடிமை ஆட் சியாளர்களால் பேச முடியவில்லை. அப்படிப் பேச முயற்சி ஏதும் செய்ததால்தான் வைர விற்பனை தேர்தல் சந்தைக்கு வந்துள்ளதா என்றும் கேள்வி எழுகிறது. வைர விற்பனை பற்றி தினகரனும் பேசவில்லை என்பது சந்தேகத்தை உறுதி செய்கிறது. பாசிச பாஜகவைப் பொறுத்தவரை, தேர்தல் செலவுக்கு பணத்துக்கு பணம் ஆயிற்று, அதிமுகவினரையும், தினகரனையும் கூட மிரட்டி வைத்ததாற்போல் ஆயிற்று என்று இரட்டை வெற்றி பெற்றதாக மகிழ்ச்சியடையலாம். ஆனால், கன்டெய்னர் பணம் போல் இது காற்றில் கலந்துவிடக் கூடாது. அந்தப் பணம் யாருடையது? எங்கிருந்து வந்தது? எங்கு போயிருக்கிறது? என்ன ஆகும்? தமிழக மக்களுக்கு பதில் கிடைத்தாக வேண்டும்.

Search