COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, March 6, 2019

அரசியல் தலைமைக் குழு செய்தி

புல்வாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உருவாகியுள்ள பதட்டம் ஆகியவற்றை
, பாஜக தலைமையும் மோடி அரசாங்கமும் வருகிற தேர்தல்களில் வாக்குகள் பெற பயன்படுத்தும் முயற்சிகளை, மார்ச் 4 - 5 தேதிகளில் டில்லியில் கூடிய  இகக (மாலெ) (விடுதலை)யின் அரசியல் தலைமைக் குழு கண்டித்தது. புல்வாமா தாக்குதலும் பாலகோட் வான்வழி தாக்குதலும் எழுப்பியுள்ள கேள்விகளை, கேள்வி எழுப்பும் மக்கள் தேச விரோதிகள் என்று சொல்லி பின்னுக்குத் தள்ளிவிட முடியாது. உண்மையில் இவை,  வேலை வாய்ப்பின்மை, விவசாய நெருக்கடி, பொருளாதார அழிவு, மதவெறி வன்முறை, அரசியல்சாசனத்தின் மீதான தாக்குதல் ஆகியவற்றுடன் சேர்ந்து கொள்ளும், மோடி அரசாங்கத்தின் பளிச்சென தெரிகிற சமீபத்திய தோல்விகள்.

பிரதமர் மோடி மாற்றுத் திறனாளிகள் பற்றி அவமரியாதையாகப் பேசியதை அரசியல் தலைமைக் குழு கண்டிக்கிறது. அவரது அரசியல் போட்டியாளர் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கேலி செய்ததன் மூலம், அவமானப்படுத்தியதன் மூலம், கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மோடி உண்மையில் கேலி செய்தார்; அவமரியாதையாகப் பேசினார். மோடி தான் பேசியது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் தலைமைக் குழு வலியுறுத்துகிறது.

ஆதார் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை செயலிழக்கச் செய்யும் விதம், மோடி அரசாங்கம், ஆதார் சட்டத்தைத் திருத்தி அவசரச் சட்டம் கொண்டு வந்திருப்பதை  அரசியல் தலைமைக் குழு கண்டிக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை  எளிதில் எடுப்பதை அனுமதிக்கும் இந்த அவசரச் சட்டம், தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை யாரிடமும் கேட்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாக உள்ளது.

கல்லூரி ஆசிரியர் பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 13 புள்ளிகள் ரோஸ்டர் முறைக்கு எதிராக வெற்றிகரமான பாரத் பந்த் நடத்தியதற்காக, அரசியல்சாசனத்தின், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டின் பாதுகாவலர்களுக்கு அரசியல் தலைமைக் குழு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறது. இடஒதுக்கீட்டின் மீதான தாக்குதல், அரசியல் சாசனத்தின் மீதான, இந்திய மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்யும் அதன் கடப்பாட்டின் மீதான தாக்குதலாகும். சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவை தொடர்பான அரசியல்சாசன கடப்பாட்டை சீர்குலைக்கும் மோடி அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளுக்கு எதிராக அரசியல்சாசனத்தைப் பாதுகாப்பதில் இந்திய மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் வனஉரிமைச் சட்டத்தை நியாயப்படுத்தும் கடமையில் இருந்து தவறிய மோடி அரசாங்கத்தை அரசியல் தலைமைக் குழு கண்டிக்கிறது. மோடி அரசாங்கம் இந்தக் கடமையில் தவறியதால்தான் கிட்டத்தட்ட 20 லட்சம் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி குடும்பங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வந்தது. இப்போது இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் வனங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்படும் ஆபத்தின் நிழல் இன்னும் படிந்துள்ளது. வனஉரிமைச் சட்டத்தைப் பாதுகாக்க, சட்டம் முறையாக அமலாக்கப்படுவதை உறுதி செய்வதில் விழிப்பும், போராட்டங்களும் அவசியம் என அரசியல் தலைமைக் குழு வலியுறுத்துகிறது.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் நடத்திய மிகவும் கொடூரமான படுகொலையான ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூறாவது ஆண்டில் இந்திய மக்கள் அந்தத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என அரசியல் தலைமைக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. ஆயுதம் ஏதும் இல்லாத மக்கள் மீது, எந்த அசம்பாவிதமும் நடக்காத போதும், துப்பாக்கிச் சூடு நடத்துவது இன்னும் தொடர்கிறது; சமீப காலங்களில் அதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துவிட்டன; மத்தியபிரதசத்தின் மான்ட்சாரில் விவசாயிகளும் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். சுதந்திர இந்தியாவில், காவல்துறை கொடூரங்களும் கருப்புச் சட்டங்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இகக மாலெ ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டை அனுசரிக்கும்.

மோடி அரசாங்கத்தை விரட்டியடித்து, சங் பரிவாரின் பாசிசத் தாக்குதலில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்க, வருகிற தேர்தல்களில் இககமாலெ தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சி போட்டியிடும். பாஜக மற்றும் தேஜமு வேட்பாளர்களின் தோல்வியை உறுதி செய்ய, இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு, பிற தொகுதிகளில் ஆதரவு தரும்.

பிரபாத் குமார்
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்
இகக (மாலெ) (விடுதலை)
புதுதில்லி, 6 மார்ச் 2019

Search