COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 15, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொழில் வழக்கில்
குற்றவாளிக் கூண்டில் தமிழக அரசு! 


பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும்!

சிறுமி ஹாசினிக்கு நடந்த கொடுமை தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குற்றவாளி பிடிபட்டான்.
சிறை சென்றான். பிணையில் வந்து தாயை கொலை செய்தான். தப்பித்தான். மீண்டும் பிடிபட்டு சிறையில் இருக்கிறான். அயனாவரம் சிறுமி பலரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு, ஹாசினி வழக்கை போலவே பெரும் அதிர்ச்சி தந்தது. குற்றவாளிகள் சிறையில். திருடச் சென்ற வீடுகளில் பெண்களை பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கியவனையும் கைது செய்துவிட்டார்கள். இந்த தனித்தனிச் சம்பவங்களில் கைது, சிறை என நடந்ததற்கு தமிழக மக்கள் நடத்திய போராட்டங்கள் முக்கிய காரணமாக அமைந்தன.
அடுத்த பேரதிர்ச்சியாக, பல்கலைகழக பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு வந்தது. பெண்களை படிக்க எப்படி அனுப்புவது என பெற்றோரை யோசிக்க வைத்ததற்கு காரணம், ஆளுநர் பெயர் வரை அதில் அடிபட்டது. ஓர் ஆண்டாக நடக்கும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. யாரும் தண்டிக்கப்படவில்லை. நிர்மலா தேவிக்கும் பிணை கிடைத்துவிட்டது. அதிகாரம் படைத்தவர்களின் வலைப்பின்னல் பற்றி இப்போது அங்கு பேச்சே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர், அவர்கள் என்ன ஆனார்கள் என எதுவும் தெரியவில்லை.
இப்போது பொள்ளாச்சி தமிழ்நாட்டை சுழற்றி அடிக்கிறது. தமிழக மக்கள் உண்மையில் அதிர்ந்து போயிருக்கிறார்கள். என்ன நடக்கிறது, என்ன நடக்கும், பெண்களைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் இருக்கிறார்கள். இருநூறு பெண்கள் என்று காவல்துறை அதிகாரியே சொல்கிறார். அப்படியானால் அது இருநூறுக்கும் மேல் இருக்கும் அல்லவா? இந்தப் பெண்கள் பகுதியில் இருக்கும் கல்லூரிகளில் படிப்பவர்கள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் தமிழ்நாட்டில் பெண்ணை படிக்க வைத்து, வேலைக்கனுப்பி அதிகாரம் பெறுவதை அழகு பார்க்கும் ஆசை பெற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா? பாலியல் வன்முறை தொழில் அல்லவா நடந்திருக்கிறது.
நிர்பயா பற்றி விவாதம் பற்றியெரிந்தபோது, நிர்பயா எதிர்த்துப் போராடாமல், அண்ணா விட்டுவிடுங்கள் என கேட்டிருந்தால் அவர்கள் அவளை விட்டிருப்பார்கள் என சங்பரிவாரின் ஆசாராம் பாபு சொன்னார். (பிறகு ஆசாராம் பாபுவுக்கு இரண்டு பாலியல் வன்முறை வழக் குகளில் தண்டனை தரப்பட்டது). பொள்ளாச்சி வீடியோவில் அந்தப் பெண் அண்ணா, அடிக்காதீங்க என்றுதான் கதறுகிறாள். அந்தக் கதறலை, அண்ணா என அழைக்கப்பட்டவன் உட்பட யாரும் பொருட்படுத்தவில்லை.
நிர்பயா பாலியல் வன்முறை தொடர்பான போராட்டங்களும் விவாதங்களும் நாட்டை ஆக்கிரமித்திருந்தபோது, அதையொட்டி சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டபோது, ஜெயலலிதா கூட, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற பெயரில் 13 அம்ச நடவடிக்கை  பற்றி பேசியபோது, இது போன்ற பரபரப்பான பின்னணியில், பொள்ளாச்சி கயவர்கள் தமிழக இளம்பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, மிரட்டி பணம் வசூலித்து, வேறு வித மாக பயன்படுத்தி..... எல்லாம் நடந்திருக்கிறது.  மனுஷ்ய புத்திரன், மிகச் சரியாகவே, தலைக்குள் பிசாசு இறங்கியதாகச் சொல்கிறார்.
கிட்டத்தட்ட அந்தப் பின்னணியில் துவங்கியவர்கள், அதற்குப் பிறகு பல்வேறு கட்டங்களிலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் கெதிராக நாடெங்கும் போராட்டங்களும் விவாதங்களும் நடந்து கொண்டிருந்த பின்னணியில், பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகளில் புகார்கள் தர பெண்கள் முன்வரும் பின்னணியில், எந்த சலனமும் இல்லாமல் தங்கள் வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்.
அப்படியானால் அவர்களுக்கு தண்டனை பற்றிய அச்சம் எதுவும் இல்லை. பிடிபட மாட்டோம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. பிடி பட்டாலும் தப்பி விடலாம் என்ற நம்பிக்கையும் இருந்திருக்கிறது. இல்லையென்றால், இந்த கொடூரமான, மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளில் திட்டமிட்ட விதத்தில் நடந்துகொள்வது கடினம். அரசு எந்திரத்தின் சமரசமற்ற பாதுகாப்பு இருந்தால் மட்டுமே இந்த குற்றவாளிகள் இப்படி நடந்து கொள்ள முடியும். குற்றவாளிகளுக்கு ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் இருந்தே இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. நாளாக நாளாக அந்த நம்பிக்கை வலுப்பெற்றிருக்கிறது. குற்றவாளிகள் இதை ஒரு தொழிலாகச் செய்து வந்திருக்கிறார்கள் என்றால் அஇஅதிமுக ஆட்சி உருவாக்கியுள்ள தொழிலும் வேலை வாய்ப்பும் இதுதானா?
தமிழக மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த, தீவிரப்படுத்த, அதிகாரத்தில் இருப்பவர்களின் பதில்வினை இன்னும் கவலை தருகிறது. பெரிய வீட்டு பிள்ளைகள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், அதை பெரிதுபடுத்தக் கூடாது என்று சொன்ன துணை சபாநா யகர் பொள்ளாச்சி ஜெயராமன், தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறாக எழுதுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும் நக்கீரன் கோபால் மீதும் புகார் தந்துள்ளார். அவர்களுக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு புகார் தந்த பெண், புகார் தருவதில், நடவடிக்கை இந்த அளவுக்கு வந்துள்ளதில், பொள்ளாச்சி ஜெயராமன்தான் தனக்கு உதவியதாகவும் தேர்தல் வந்ததால்தான் இந்த விசயம் கசிய விடப்பட்டதென்றும், இதற்கு மேல் பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது என்றும் சொல்கிறார். அந்தப் பெண் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் தானாகச் சொல்கிறார் என்று நாம் நம்பப் போவதில்லைதான். ஆனால், மனிதத் தன்மையற்ற கொடூரமான ஒரு வழக்கில் ஒரு சாட்சி பலவீனமாகிறது. குற்றவாளிகள் எதிர்ப்பார்த்தது நடக்கிறது.
கோவை கிராமப்புற காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துகொண்டிருக்கும்போது, வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றும் அரசாணை, பாதிக்கப்பட்ட பெண் பெயர், எந்தக் கல்லூரியில் படித்தார் போன்ற விவரங்களை வெளியிடுகிறது. பிடிபடும் முன்னரே, வழக்கை சிபிசிஅய்டிக்கு மாற்ற வேண்டும் என திருநாவுக்கரசு கேட்டதும் இப்போது சிபிஅய்க்கு வழக்கு அனுப்பப்படுவதும், எல்லாம் திட்டமிட்டு நடப்பது போல் உள்ளது.
போராட்டங்கள் வலுப்படும் பின்னணியில் மாநில பெண்கள் ஆணையம் விழித்துக் கொள்கிறது. வாய் பேச முடியாத பிள்ளை முதல் முறை பேசியபோது தாயிடம் ஏதோ கேட்டது என்று சொல்வார்கள். பெண்கள் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் கொடுங்கள் என்கிறது. பாண்டியராஜன் முதல் நாளே இதைச் சொன்னார். இன்னும் யார் வந்து இவர்களுக்கு புகார் தர வேண்டும்? குற்ற வலைப்பின்னலை கண்டுபிடிப்பதை விட பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதில் அரசு எந்திரம் ஏன் இந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது? இந்த விசயத்தில் அரசியல்வாதிகள் யாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விசாரண எதுவும் நடத்தாத முதல் நாளிலேயே பாண்டியராஜன் கண்டு பிடித்துச் சொன்னது, அரசியல்வாதிகளுக்கு  தொடர்பு உள்ளதென்பதை உறுதிப்படுத்துவது போலவே, மாநில பெண்கள் ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண முயற்சி செய்வதும் அதை உறுதிப்படுத்துகிறது. மாநில பெண்கள் ஆணையம் முதலில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசிய துணைசபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களுக்கு இதற்கு மேல் என்ன புகார், யார் தர வேண்டும்? காவல்துறையினரே ஆயிரத்துக்கும் மேல் ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்கின்றனர். புகார் தந்தவர் குடும்பம் தாக்கப்படுகிறது. அப்பட்டமான அச்சுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பாண்டியராஜனும் மாநில பெண்கள் ஆணையமும் சேலம் வினுப்ரியாவை மறந்து போயிருக்கலாம். ஒரு பெண்ணின் ஆபாசப் படத்தில் தனது முகம் இணைக்கப்பட்டு சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தது என வினுப்ரியா ஜ÷ன் 23, 2016 அன்று சேலம் காவல்துறையினரிடம் புகார் தருகிறார். காவல்துறையினர் வழக்கம் போல் மெத்தனம் காட்ட ஜ÷ன் 26 அன்று இன்னொரு படம் வெளியாகிறது. கூடவே வினுப்ரியாவின் தந்தையின் தொலைபேசி எண்ணும் தரப்படுகிறது. ஜ÷ன் 27 அன்று வினுப்ரியா தற்கொலை செய்துகொள்கிறார். புகார் தரும் பெண்ணின் பாதுகாப்புக்கு பாண்டியராஜனும் மாநில பெண்கள் ஆணையமும் என்ன ஏற்பாடு வைத்திருக்கிறார்கள் என்று முதலில் சொல்லட்டும். வினுப்ரியா வழக்கில் குற்றவாளி என யாரையாவது கண்டுபிடித்தார்களா, கைது செய்தார்களா, நீதிமன்றத்தில் நிறுத்தினார்களா என ஏதாவது சொல்லட்டும்.
புகார் வந்துதான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கட்டத்தை பிரச்சனை தாண்டிவிட்டது. அரசிடம், காவல்துறையிடம் போதுமான அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. பரவியிருக்கிற வலைப்பின்னலின் பின் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான் இப்போது முக்கியமே தவிர பாதிக்கப்பட்ட பெண் யாரென்று கண்டுபிடிப்பது அல்ல.
பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றம் ஆண்டுக்கணக்கில் நடப்பதை கண்டும் காணாமல் இருந்த காவல்துறை, அதற்கு எதிராக மாணவர்கள் போராடும்போது, போராட்டத்தை ஒடுக்க சரியாக வந்து நின்றுவிட்டது. போராட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது. எந்த சட்டம் ஒழுங்கை இவர்கள் இங்கு இப்போது காப்பாற்றப் போகிறார்கள்?
கொங்கு மண்டலத்தில், சாதி வெறியும் ஆணாதிக்கமும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையும் கொடி கட்டிப் பறக்கின்றன. கோகுல்ராஜ், சங்கர் மரணத்துக்கும் பொள்ளாச்சிக்கும் தொடர்பு உண்டு. பெருமாள்முருகன் வேட்டையாடப்பட்டதற்கும் பொள்ளாச்சிக்கும் தொடர்புண்டு. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில், ஒரு பெண்ணைக் கை நீட்டி அறைந்த பாண்டியராஜன், இன்று கோவை காவல் கண்காணிப்பாளர். இந்த மண்டலத்தில்தான் ஒரு பெண் டிஎஸ்பி தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பகுதி கார்ப்பரேட், சாதியாதிக்க, மதவெறி சக்திகளின் பரிசோதனைக் கூடம். கோட்டை.
இங்கு கிடைத்த வெற்றியால்தான் 2016ல் அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தது. இங்கிருந்து வெற்றி பெற்று வந்தவர்தான் முதலமைச்சர். பொள்ளாச்சியின், தமிழ்நாட்டின்  குமுறலுக்கு இந்த கேடு கெட்ட ஆட்சியும்  முதலமைச்சரும் பதில் சொல்லியாக வேண்டும். பாலியல் வன்முறை தொழில் வழக்கில் குற்றவாளிக் கூண்டில் இருப்பது தமிழக அரசுதான்.
சேலம் வினுப்ரியா உட்பட, இந்தப் பகுதி யில் 2012க்குப் பிறகு நடந்த இளம்பெண்கள் தற்கொலைகள், மர்ம மரணங்கள், விபத்துகள் எல்லாம் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொழில் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும்.
குற்றவாளிகள் அனைவரும், குற்ற வலைப்பின்னல் முழுவதும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மத்திய புலனாய்வு துறைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ள பின்னணியில், மத்திய புலனாய்வுத் துறை நம்பகத்தன்மை இழந்துவிட்ட பின்னணியில், பெண்கள் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் பிரதிநிதிகள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் வழக்கு துரிதமாக குறிப்பிட்ட காலக்கெடுவில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
சங்கிகளுக்கும் நல்லெண்ணத்தில் நடுநிலை பேசும் நல்லவர்களுக்கும் சில செய்திகள் சொல்ல வேண்டியுள்ளது. அந்தப் பெண்கள் ஏன் போனார்கள் என்ற கேள்வியை சங்கிகளும் ஆணாதிக்க நியாயவான்களும் வழக்கம் போல் முன்வைக்கிறார்கள். ஆனால், நடந்திருப்பது பாலியல் வன்முறை மட்டுமல்ல, பாலியல் வன்முறை தொழில் என்ற பின்னணியிலல், அந்தக் கேள்விகள் எதிர்த்தாக்குதலை சந்திக்கின்றன. அரசியல்படுத்தாதீர்கள் என்ற அபயக் குரல் தமிழிசையிடம் இருந்து கேட்கிறது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தித்தான் பாலியல் வன்முறை தொழிலாக நடந்துள்ளது. அதனால் நீங்கள் முடிந்த அளவில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். இது லவ் ஜிகாத் போல் குற்றம் இல்லை, எனவே சம்பந்தப்பட்டவர்கள் வழக்குகளைத் திரும்பப் பெற்று கவுரவத்தைக் காப்பாற்றுங்கள் என்கிறார் எச்.ராஜா. போர் வெறியூட்டி, வாக்குகள் அள்ள திட்டமிட்டவர்கள் நினைப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொழில் பிரச்சனை மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. புலம்பட்டும்.
மறுபக்கம், பெண்ணுடல் மீதான பெண்ணின் உரிமை, பெண் விடுதலை, பெரியார் கருத்துகள், ஆண்களை வளர்க்கும் பெற்றோர்களிடம் ஏற்பட வேண்டிய மாற்றம், பெண் பிள்ளைகளை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு ஆண் பிள்ளைகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்துவது என்றெல்லாம் ஆரோக்கியமான கருத்துகள் வருகின்றன. இந்தக் கருத்துகளில் கவனம் செலுத்தும் அதே நேரம், குற்றவாளிக் கூண்டில் நிற்கும் தமிழக அரசு தப்பித்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. பெற்றோர் யாரும் எந்த ஆண் பிள்ளையையும் எப்படி வளர்த்திருந்தாலும், சட்டத்தின் ஆட்சி நடப்பதாகச் சொல்லப்படும் ஒரு சமூகத்தில் குற்றம் என்று வரையறுக்கப்பட்ட ஒரு செயலை மீண்டும் மீண்டும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட விதத்தில் பல ஆண்டுகளாக ஒரு கும்பல் செய்ய முடிகிறதென்றால், சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்படுவதை நடத்துபவர்கள் அந்த குற்றம் நடப்பதை அனுமதித்திருக்கிறார்கள், வளர விட்டிருக்கிறார்கள் என்று பொருள். அது சரியாக இருந்திருந்தால், ஹாசினி வழக்கிலோ, அயனாவரம் சிறுமி வழக்கிலோ நடந்ததுபோல், குற்றவாளி பிடிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நிர்மலா தேவி பிரச்சனையில் பாலியல் தொழில் நடப்பதை அதிகார தாழ்வாரம் கண்டுகொள்ளவில்லை என்றால் பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை தொழில் நடப்பதற்கு அது துணை போயுள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது.
பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் துயரங்கள் தமிழக மக்களின் ஆவேசக் குரல்களாகட்டும். கொடியவர்களுக்கு துணிச்சல் தந்த குற்றமய ஆட்சிகள் முடிவுக்கு வரட்டும்.


Search