COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 15, 2019

அம்பானியின் ஜியோ லாபம் ஈட்டும்போது
மக்களின் பிஎஸ்என்எல் ஏன் லாபம் ஈட்ட முடியாது?


மிகவும் விசுவாசமாகத்தான், வேகவேகமாகத்தான் மோடி அரசாங்கம் கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றியது.
அய்ந்தாண்டு கால ஆட்சியில் நிச்சயம் ஒரு நாள் கூட வீண் செய்யவில்லை. ஆனால், நாட்டில் சீர்குலைக்க வேண்டிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அளவும் பாஜகவின் ஆற்றலை விட கூடுதல். எனவே கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரலை முழுமையாக நிறைவேற்றுவதற்குள்ளாகவே அதன் ஆட்சிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால், மீதமுள்ள நிறுவனங்களை சீர்குலைப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கிவிட்டே பாஜக தனது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்திருக்கிறது. அதன் சீர்குலைவு நடவடிக்கைக்கான அடிப்படைகளில் ஒன்று, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்று எதிர்கொள்கிற நெருக்கடி.
குஜராத் நிலநடுக்கம், காஷ்மீர் வெள்ளம், கேரள வெள்ளம், சென்னை புயல் ஊடாக கஜா புயல் பாதிப்பு வரை, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்தான் இடைவிடாமலும் துரிதமாகவும் சேவை வழங்கியது. தேர்தலை கணக்கில் கொண்டு திட்டமிட்டு, மோடி அரசு நாட்டின் எல்லையில் பாதுகாப்பு நெருக்கடியை, போர்ப் பதட்டத்தை உருவாக்கியபோது அங்கும் தொலைதொடர்பு சேவை பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லால்தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மலைப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் பிஎஸ்என்எல்தான் சேவை வழங்குகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரிந்து பரந்து இருக்கிற அதன் உள்கட்டுமானத்தை உருவாக்க, வளர்த்தெடுக்க, நிலைநிறுத்த, இந்திய மக்களின் வரிப்பணம், உழைப்பு எல்லாம் பிரம் மாண்டமான அளவில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே ஒரு தனியார் நிறுவனம் லாபம் பெற வேண்டும் என்பதற்காக அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பது முதல், பொதுத் துறை நிறுவனத்தை ஒழித்துக் கட்டுவது வரை திட்டமிட்டு செயல்பட்டு வந்தது மோடி அரசு.
பொதுத்துறை நிறுவனத்தை நடத்துவது அரசு. பொதுத்துறை நிறுவனம் நட்டமாகிறது என்றால், அதற்கு பொறுப்பு அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை நடத்துபவர்கள். அதாவது அரசு. அதன் அதிகாரிகள். அவர்களது திறன் அற்ற செயல்பாடு. மிகவும் அடிப்படையான இந்த உண்மையை பின்னுக்குத் தள்ளி நிறுவனத்தின் பிரச்சனை அதன் ஊழியர்கள் என்பதுபோல் கருத்து உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அவர்களை வெளியேற்றிவிட்டால் எல்லாம் சுபிட்சமாகிவிடும் என அதிமேதாவி பரிந்துரைகள் பொழிந்தன.
எண்ணிக்கையில் மிகப்பெரிய பிரிவு. சங்கம், உரிமை, போராட்டம் எனப் பேசுவார்கள். என்ன செய்யலாம் எனப் பார்த்தார்கள். படிப்படியாக, படிகள் ஒவ்வொன்றாக வெட்டிக் கொண்டே வந்தார்கள். போராடிப் பெற்ற வேறு பல உரிமைகளும், நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என்று காரணம் சொல்லப்பட்டு 2014க்கு முன்பிருந்தே பறிக்கப்பட்டுவிட்டன. நிதி நிலை சரியில்லை, நாளை சரியாகும் என்ற நம்பிக்கையில் ஊழியர்கள் பொறுமை காத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய ஆணையப் பரிந்துரைகள் அமலான பின்னணியில், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். நிர்வாகத் தரப்பில் எந்த அசைவும் இல்லாததால், மக்கள் விரோத அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவே, 2017 இறுதியில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த நேர்ந்தது.
அந்தப் போராட்டத்துக்குப் பிறகு பேச்சு வார்த்தைகள் துவங்க, நட்டம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனத்துக்கு ஊதிய உயர்வு இல்லை என்ற காரணம் சொல்லி இழுத்தடிப்பு துவங்கியது. தொழிலாளர்களின் அதிகாரிகளின் சங்கங்கள் இணைந்து விதவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜனவரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுக்க வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பார்த்தார்கள். ஊதியமே தரவில்லை என்றால், ஊதிய உயர்வு எப்படி கேட்பீர்கள் என்று, சுதந்திரம் பெற்று இது வரை நடக்காததை எல்லாம் நடத்திக் காட்டுவதாக வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம், இது வரையில் இல்லாத விதத்தில் முதல் முறையாக பிப்ரவரி மாதச் சம்பளத்தைத் தரவில்லை. ஒரு வாரத்துக்குள் தரப்படும் என்று மார்ச் 7 அன்று சங்கங்களிடம் சொன்ன தலைமை நிர்வாக இயக்குநர், ஹோலிப் பண்டிகைக்குள் தரப்படும் என்று பத்திரிகையாளர்களிடம் மார்ச் 13 அன்று சொல்கிறார்.
ஒட்டுமொத்த பாசிசச் சூழல், பிஎஸ்என் எல்லின் அதிகார வர்க்கத்துக்கு துணிச்சல் தருவதாகவும் அமைந்துள்ளது. 2017 டிசம்பரில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தில் ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டது. அந்த வேலை நிறுத்தம் தொடர்பாக அதிகாரிகளிடம் இருந்து வெளிப்பட்ட பதில்வினை அவ்வளவுதான். இப்போது மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்ததற்கு நிர்வாகம் ஊழியர்களுக்கு தந்துள்ள பரிசுதான் சம்பள நிறுத்தம். இந்த வேலை நிறுத்தத்துக்கும் நிர்வாகத்தின் பதில்வினை இது மட்டும்தான்.
தனியார் நிறுவன மனிதவள அதிகாரிகள் போல், ஊழியர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, அவர்களாக வெளியேறும் நிலையை உருவாக்கவே பிஎஸ்என்எல் அதிகாரிகள் அரும்பாடுபடுகின்றனர். சமூகம் பற்றிய பார்வை எதுவும் இல்லாத, சமூகம் பற்றிய அக்கறை சற்றும் இல்லாத கல்வி பெற்ற ஒரு குழுவிடம் பிஎஸ்என்எல்லை மீட்பது எப்படி என்பது பற்றி ஆராயச் சொல்ல, வயதாகிக் கொண்டு வரும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதை ஒரு பரிந்துரையாகச் சொல்கிறது. மற்ற பரிந்துரைகள் வெளியிடப்படும் முன் இந்தப் பரிந்துரை மட்டும் வெளியாகிறது. ஓய்வு பெறும் வயதை 58 என குறைக்க வேண்டும் என்கிறது.
தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நடந்துகொள்வதுபோல், அக்டோபர் 2018 முதல், ஊழியர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, கூட்டுறவு சொசைட்டி கடன், ஆயுள் காப்பீடு, வங்கிக் கடன் ஆகிய வற்றுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பணம் அந் தந்த கணக்குகளுக்குச் செல்லவில்லை. வங்கி யில் கடன் வாங்கியவர்கள் அபராதம் செலுத்த நேர்ந்தது. வருங்கால வைப்பு நிதியில் கடன் வாங்குபவர்களுக்கு கடன் தரப்படவில்லை. ஊழியர்களது பாதுகாப்பான நிதிச்சூழல், படிப் படியாக பதட்டத்துக்கு உள்ளாக்கப்பட்டது. 2018 அக்டோபர் முதல் மருத்துவச் செலவுக் கான பணம் கூட நிறுத்தி வைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பணி நிறைவுப் பயன்கள் சென்று சேர்வது தாமதமானது. எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதற்கும் நிறுவனத்தின் நிதிநிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், நாடு முழுக்க பிப்ரவரி மாத ஊதியம் தரப்படாத போது, கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் கேரளா, ஒடிஷா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநில ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது. இனி அவ்வளவுதான், கிடைத்ததை வாங்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்ற மன நிலையை ஊழியர்கள் மத்தியில் உருவாக்க நிர் வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் பிப்ரவரி மாதச் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போதும், இனி சம்பளம் சரியாக வராது, ஏர் இந்தியா போல் ஆகிவிடும் என்று ஊழியர் மத்தியில் புரளிகள் பரப்பப்படுகின்றன.
நிறுவனம் நட்டத்தில் இருக்கிறது என்றால், சரி செய்ய வேண்டிய அரசாங்கம் அதற்காக என்ன முயற்சி எடுத்தது என்பதுதான் எழுப்பப் பட வேண்டிய கேள்வி. 4 ஜி சேவை தர நிறு வனத்துக்கு அனுமதி வேண்டும், நிறுவனத் துக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ.6,000 கோடிக்கும் மேல் நிதியை தர வேண்டும், பிஎஸ் என்எல் செல் கோபுரங்களை தனியாருக்கு தரக் கூடாது என்று சங்கங்கள் எழுப்பும் எந்த கோரிக்கையையும் காது கொடுத்துக் கேட்க மோடி அரசாங்கம் தயாராக இல்லை.
புதிதாக துவங்கி, எந்த உள்கட்டமைப்பு வசதியிலும் பிஎஸ்என்எல்லின் எதிரில் நிற்கக் கூட முடியாத ஜியோ லாபம் ஈட்டுமானால், பிஎஸ்என்எல் ஏன் லாபம் ஈட்ட முடியாது என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை என்பது இந்திய மக் கள் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை யின் ஓர் அறிகுறி. பிரச்சனையை வேரிலேயே கெல்லியெறிய வேண்டியுள்ளது. இதற்கான உடனடி கடமையாக பாசிச, கார்ப்பரேட் ஆதரவு பாஜகவை முறியடிக்க வேண்டும்.

Search