தொலைபேசியில் அழைப்பது
அவ்வளவு அச்சமூட்டுவதாக ஆகிவிட்டது
சாதாரண குடும்பங்களில் பயத்தை விதைப்பதன் மூலம்
நாம் பயங்கரவாதத்துக்கு அடிபணிந்து விட வேண்டாம்
தபீஷ் கைர்
இது மூன்று சகோதரிகளின் கதை. அவர்களில் ஒருவரை எனக்கு தெரியும். தனது 70 வயது முதுமைக் காலத்தில் இந்தியாவின் ஒரு சிறு நகரில் வசித்து வருகிறார்.
அவரது மூத்த சகோதரி இந்தியாவின் இன்னொரு பெரிய நகரத்தில் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். அந்த மகன்கள் அரசுப் பணிகளில் இருக்கின்றனர். இந்த இருவருக்கும் மூத்த சகோதரி, நாட்டு பிரிவினையின்போது தனது கணவர் குடும்பத்துடன் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். அங்கு கராச்சியிலோ, இசுலாமாபாதிலோ தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் என நினைக்கிறேன். நடுத்தர வர்க்க இசுலாமிய குடும்பங்களில் 1940 - 1950 கால கட்டத்தில் இது போல் குடும்பத்தில் சிலர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது சாதாரண நிகழ்வுதான்.
தொலைபேசியில் பேசும் தூரத்தில்தான்
இந்த மூன்று சகோதரிகளுமே கணவனை இழந்தவர்கள். இவர்களது பிள்ளைகள் வேலை விஷயமாக வெளியூரில் இருக்கிறார்கள். தங்களது வேலைகளில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். பல பத்தாண்டுகளாக ஒன்றாக சந்தித்துக் கொள்ள முடியாத இந்த மூவருக்கும் தங்கள் இளம்பிராய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர பொழுதைக் கழிக்க வேறு எதுவும் இல்லை. இந்தக் காலத்தில் எளிதானதாய் மாறியுள்ள தொலைபேசி மூலம் கலந்துரையாடுவது ஒன்றுதான் இவர்களின் மிகப்பெரிய இன்பமே. பல பத்தாண்டு காலமாக இருந்த தொலைபேசிக் கட்டண கவலைகளுக்குப் பிறகு, இப்போது உப்புசப்பில்லாத விசயங்களுக்குக் கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடிகிறது. மூத்த சகோதரியின் மகிழ்ச்சியான தருணங்கள் இந்தியாவில் இருந்த காலங்களில் நிகழ்ந்தவை என்பதால் அவர் அடிக்கடி தொலை பேசியில் பேசுவார்.
இவர்களில் இளைய சகோதரியை மட் டுமே நான் அறிவேன். அவர் ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்து, என்னிடம் பேசுகிற வரை இவர்களுள் நடக்கும் இந்தக் கலந்து ரையாடல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. திடீரென அவர் என்னை அழைத்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு, சாதாரணமாக வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டோம். பிறகு என்னை அழைத்த விசயமென்ன, எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறதா? என உருதுவில் கேட்டேன்.
அதற்கு அவர், எனக்கென்ன குறை மகனே, அல்லா என்னைப் பார்த்துக் கொள்கிறார், அக்கம்பக்கத்தார் எனக்கு உதவுகின்றனர் என்றார்.
அவருக்குக் குழந்தைகள் இல்லை. கணவனை இழந்த அந்தப் பெண் தனியாக வாழ்கிறார் என்பது எனக்குத் தெரியுமென்பதால் அதற்கு மேல் நான் எதுவும் கேட்கவில்லை. என்னை ஏன் அழைத்தீர்கள் என்ற நேரடியான கேள்வியை அவரிடம் கேட்டேன். (அவர் இதற்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசியதாக நினைவில்லை. நான் இந்தியாவில் வேலை செய்தபோது கூட அவர் என்னை அழைத்துப் பேசியதில்லை).
அவர், எனது சகோதரிகள் பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் என்றார். நீ வெளிநாட்டில் வேலை செய்கிறாய், நீ ஒரு பத்திரிகையாளன். உனக்கு அதிகாரிகளைத் தெரியும். எனக்கு கேட்பதற்கு உன்னைத் தவிர வேறு யாருமில்லை என்றார்.
பின்னர் தனது இரண்டு சகோதரிகளைப் பற்றி அவர் சொன்னார். அது வரை எனக்கு அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது (அல்லது எனக்கு நினைவில் இல்லை.) ஆனால் அப்போதும் அவர் பிரச்சனை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. தொலைபேசியில் அழைத்து பணம் கேட்கும் அளவுக்கு எனக்கும் அவருக்கும் பரிச்சயம் கிடையாது. அவர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லையென்றாலும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். முன்பின் தெரியாதவர்களிடமோ, நண்பர்களிடமோ கூட கடன் வாங்காத பெருமையுள்ள குடும்பம். இப்போதுதான் பிரச்சனையை அவர் என்னிடம் விவரித்தார்.
எல்லைப் பிரச்சனை
பாகிஸ்தானில் வசிக்கும் இவரது மூத்த சகோதரி வாரத்தில் இரண்டு முறை இவரிடமும், இவரது இன்னொரு சகோதரியிடமும் தொலைபேசியில் பேசி வந்தார். இப்போது ஒரு பிரச்சனை உருவாகியிருக்கிறது. தனியாக அய்ஃபோனுடன் வாழ்ந்து வரும் இந்த மூதாட்டியிடம், பாகிஸ்தானிலிருந்து வரும் எந்த தொலைபேசி அழைப்பிற்கும் பேசாதே என்று அக்கம்பக்கத்தினரும் உறவினரும் சொல்லியிருக்கின்றனர். அது தேச விரோத செயலாக கருதப்படும் என்றும் சொல்லியிருக்கின்றனர். இந்தியாவிலிருக்கும் இளைய சகோதரியின் மகன்கள் அரசுத் துறையில் பணிபுரிவதால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த சகோதரி ஏற்கனவே பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். அவர் திடீரென பேசுவதை நிறுத்திவிட்டதால் பாகிஸ்தானில் வசித்து வரும் இவரது சகோதரி மிகவும் கவலையுடன் இப்போது அடிக்கடி தொலைபேசியில் அழைக்கிறார்.
நான் இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருந்தபோது, பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது, வாழ்விடம் பெயர்ந்தது என இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் துயரம் என் மனக் கண்முன் வந்து சென்றது. அந்தத் துன்பத்திற்கு முடிவே கிடையாது போல் தெரிகிறது. ஓர் அரசியல் எல்லைக் கோடு இரண்டு பேரையும் பிரித்ததால், 80 வயது மூதாட்டியிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கு பேச 70 வயது மூதாட்டி ஏன் பயப்பட வேண்டும்? தனது மகன்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற அய்யத்தில் இன்னொரு சகோதரி பேச்சையே நிறுத்திக் கொண்டதற்கு என்ன காரணம்?
நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதால் இந்த மூதாட்டி இதற்கான பதிலை என்னிடம் எதிர்பார்க்கிறார். குறைந்தபட்சம் நம் இந்தியாவில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் என்ற அமைப்பு இருப்பதால், உம்மைப் போன்றவர்கள் பாகிஸ்தானில் ஒருவருடன் தொலைபேசியில் பேசினார் என்பதற்காக தண்டனை தர மாட்டார்கள் என மறுஉறுதி தருவதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல முடியும்? ஆனால் அவர் பதட்டமாக, கவலையோடு இருந்தார். அக்கம்பக்கத்திலுள்ள இந்து, முஸ்லீம் என இரு சமூகத்தாருமே என்னை பாகிஸ்தான் சகோதரியுடன் பேசாதே என்கிறார்கள் என்று முணுமுணுத்தார். எனது உத்தரவாதத்தை அரைகுறையாக நம்பிய அவர் என்னிடம் நான் ஒரு வயதான பெண்மணி என்றார். நான் எனது நலன் அல்லது எனது மூத்த சகோதரியின் நலன் என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய விரும்பவில்லை என்றார். என்னை தொலை பேசியில் அழைக்காதே என்று எப்படி நான் அவளிடம் சொல்ல முடியும்? என்றார். இளைய சகோதரி போனை எடுத்து ஏன் பேசவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும் என்று கேட்டார்.
என்னால் உண்மையிலேய அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் இது தனி ஒரு நபர் சொல்கிற பதில் இல்லை. மாறாக இது ஒரு கூட்டு மனசாட்சியை கோருகிறது. கூட்டுக் குரலோடு கூட்டு மனசாட்சி இல்லையென்றால் அது கும்பல் வன்முறையாக மட்டுமே இருக்கும்.
எந்த வித பயங்கரவாதத்துக்கும் எதிராக நாம் தீர்மானகரமாக செயல்படவேண்டும். ஆனால் சாதாரண மக்களின் இதயத்தைப் பிளவுபடுத்த வேண்டாமே. நாம் மனிதர்களை சித்தப்பிரமை பிடித்தவர்களாக உருவாக்காமல் இருந்தால் நல்லது. நாம் மகாத்மா காந்தியின் இந்தியாவுக்கு, அடிப்படை மானுடத்துக்கு இதையாவது செய்ய வேண்டும். சாதாரண குடும்பங்களில் பயத்தை விதைப்பதன் மூலம் பயங்கரவாதத்துக்கு நாம் அடிபணிந்து விட வேண்டாம்.
நன்றி: தி ஹிந்து, 12.03.2019
தபீஷ் கைர் டென்மார்க்கில்
வசிக்கும் இந்தியர், நாவலாசிரியர்
தமிழில்: தேசிகன்