COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 1, 2019

மோடி அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மோசடிகளால் நிறைந்தது

நாடு ரபேல் ஊழல் பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.
நாட்டில் ஊழல் ஒழிந்துவிட்டதாக மோடி மேடை மேடையாக சொல்லிக் கொண்டிருக்க, ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு வேண்டாம் என்று பிரதமர் அலுவலகமே சொன்னது பற்றி, கூடுதல் விலை, கூடுதல் கால அவகாசம் தந்து விமானம் பெறப்படுவது பற்றி நாடு கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்து நமது ராணுவ வீரர்கள் 44 பேரை கொன்றுவிட்டார்கள்.
எல்லா விவாதமும் இந்தத் தாக்குதல் மீது மய்யங்கொள்ள, ரபேல் ஊழல் மட்டுமின்றி, பிப்ரவரி 1 அன்று மோடி அமைச்சரவை முன் வைத்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இந்திய சாமான்ய மக்கள் மீண்டும் ஒரு முறை வஞ்சிக்கப்படுவதும் ஏமாற்றப்படுவதும் மோடியின் அய்ந்தாண்டு கால அவரது ஆட்சி மக்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்கவே பெரும்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதும் பெரிய அளவில் விவாதமாக மாறாமல் போனது.
துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை மோடி கழுவ, துப்பரவுத் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் கடமையை மோடி கை கழுவி விடக் கூடாது என சரியாகவே கேள்விகள் எழுப்பப்பட்டன. துப்புரவுத் தொழிலாளர்களது கால்களை கழுவுவதற்கு பல நாட்கள் முன்னரே நாட்டின் நிதிநிலை அறிக்கை முன் வைக்கப்பட்டுவிட்டது. மனிதக் கழிவகற்றும் மனிதத் தன்மையற்ற பணிகளை பார்க்கும் இந்தத் தொழிலாளர்களின் நிலைமைகளில் மாற்றம் கொண்டு வரும் எந்தத் திட்டமும் அறிவிப்பும் 2019 - 2020 நிதிநிலை அறிக்கையில் இல்லை. மோடியின் செல்லமான திட்டமான தூய்மை இந்தியாத் திட்டத்துக்குக் கூட 2017 - 2018ல் ரூ.19,427.02 கோடி செலவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.16,978.03 கோடி செலவு என்று  சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக ரூ.35,000 கோடிக்கு மேல் மக்கள் பணம் செலவிடப்பட்டும் துப்புரவுத் தொழிலாளர் நிலைமை களை மாற்றும் வழிகள் இந்தத் திட்டத்தில் இல்லை. 5.45 லட்சம் கிராமங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் அல்லாத கிராமங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. மோடி அரசு பொய்களால் பின்னப்பட்டது. எத்தனையோ பொய்கள் சொல்கிறார்கள். அவற்றில் இதுவும் ஒரு பொய். மெய்யாக இருந்தாலும், வெறும் கழிப்பிடங்களைக் கட்டி பயனில்லை மோடி அவர்களே. அங்கு தண்ணீர் வசதி வேண்டும். வரும் ஆண்டிலும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12,750 கோடி ஒதுக்கப்படுகிறது. ரயில்வே தண்டவாளங்களை சுத்தம் செய்யக் கூட முடியாத இந்தத் திட்டம் வெற்று விளம்பரத்துக்கானது. மேலும் இந்தத் திட்டத்தில் அரசாங்கம் செலவு செய்தால் அது மாபெரும் குற்றம்.
பணமதிப்பகற்றம், ஜிஎஸ்டி என பொருளாதார சாகசங்கள் பல மோடி ஆட்சியில் செய்யப்பட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். வேலைகள் பறிக்கப்பட்டுவிட்டன, சாமான்ய மக்கள் வாழ்க்கை நாசமாகிவிட்டது என எதிர்க்கட்சிகள் சொல்வது பொய் என்றார்கள். தமிழ்நாட்டை அடிமை ஆட்சியாளர்கள் பெரும் கடனில் ஆழ்த்திவிட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். அடிமைகளின் எசமானர்களும் அதையே செய்திருக்கிறார்கள். நாட்டின்  மொத்த கடன் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.69,12,614.12 கோடி. வரும் ஆண்டு இது ரூ.66,00,616.52 கோடி என மதிப்பிடப்படுகிறது. இந்தக் கடனுக்கு வட்டி செலுத்த வரும் ஆண்டில் ரூ.6.65 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது மொத்த செலவினங்கள் என்று காட்டப்படும் ரூ.27,84,200 கோடியில்  கிட்டத்தட்ட 25%. விவசாயம், கல்வி, சுகாதாரம், உணவு ஆகிய அடிப்படை தேவைகளுக்கு ஒதுக்கப்படும் மொத்த தொகை வட்டி செலுத்த ஒதுக்கப்பட்டிருப்பதை விடக் குறைவுதான். 56 அங்குலத்தால் எந்தப் பயனும் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கியமான அம்சங்களாக, விவசாயிகள் நலன் காப்பது என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான ஆதாரம், அமைப்புசாரா தொழிலாளர் நலன் காப்பது என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் மற்றும் வருமான வரியில் அறிவிக்கப்பட்டுள்ள நடுத்தரப் பிரிவினருக்கு ஆதரவானவை என்று சொல்லப்படுகிற மாற்றங்கள் ஆகியவற்றை பாஜக முன்னிறுத்துகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வரு மான ஆதாரம் மூன்று தவணைகளில் தரப்படும் என்றும் அதனை பின்தேதியிட்டு 2018 டிசம்பர் மாதத்தில் இருந்து தரப்படும் என்றும் நிதிநிலை அறிக்கை சொல்கிறது. இதற்காக நடப்பு ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.20,000 கோடியும், வரும் ஆண்டுக்கு ரூ.75,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஒட்டுமொத்தமாக விவசாயத்துக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 100% கூடுதல் ஒதுக்கீடு என்று செய்தித் தலைப்புகள் வெளியிடப்படுகின்றன. விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசா யிகள் நலன் என்ற வகையில் வரும் ஆண்டுக்கு ரூ.1,29,585 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருமான ஆதாரம் தரும் திட்டத்துக்கு இதில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்படுகிறது என்றால், விவசாயம் தொடர்பான மற்ற செயல்பாடுகளுக்கு ரூ.54,585 கோடி மிச்சம் இருக்கும். நடப்பு ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இந்த வகையில் ஒதுக்கீடு ரூ.67,800 கோடி. ஆக, உண்மையில் நாட்டின் விவசாயத்துக்கு, வழக்கமான நடவடிக்கைகளுக்கு நடப்பு ஆண்டு ஒதுக்கப்பட்டதில் இருந்தும் ரூ.13,215 கோடி வெட்டப்படுகிறது. ஆக, மோடி சொல் கிற வருமான ஆதரவு எந்த விதத்திலும் விவசாய நெருக்கடிக்கு தீர்வாகப் போவதில்லை. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய, விளைபொருளுக்கு கூடுதல் விலை தர, இடுபொருட்கள் விலையைக் குறைக்க, தேவையான இருப்பு வசதிகள் ஏற்படுத்த, விளைபொருள் கொள்முதலை அதிகரிக்க, புதிய எந்த நடவடிக்கையும் மோடி ஆட்சியின் பார்வையில் இல்லை. திருத்தப்பட்ட மதிப்பீடும் அறிவிக்கப்பட்டதை விட ரூ.21,100 கோடி கூடுதல் என்றாலும் இதிலும் ரூ.20,000 கோடி வருமான ஆதாரத் திட்டத்துக்கு. நாடெங்கும் உள்ள விவசாயிகள் போராட்டங்களில் கொந்தளித்து எழுந்த ஓர் ஆண்டில் வெறும் ரூ.1,100 கோடிதான் ஒட்டுமொத்தமாக பிற திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரூ.6,000 திட்டத்தை மோடி துவக்கி வைத்துவிட்டார். 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் இந்த ஆதாரத்தைப் பெற தகுதியானவர்கள். விவசாய அமைச்சகத்திடம் இரண்டரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் விவரம் இருக்கிறது. 2015 - 2016 நிலைமைகள் பற்றி, 2018, செப்டம்பர் 24 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கைப்படி, நாடு முழுவதும் இரண்டரை ஏக்கருக்கும் குறைவான நிலஉடைமைகள் எண்ணிக்கை 9,98,58,000. கிட்டத்தட்ட 10 கோடி. நடப்பு நிதி ஆண்டில் 10 கோடி பேர் என்ற கணக்கில்தான், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. அதே 10 கோடி பேர் என ரூ.6,000 தந்தாலும் ரூ.60,000 கோடி ஆகும். ஏன் ரூ.75,000 கோடி ஒதுக்கப்படுகிறது? இந்தத் திட்டம் துவங்கப்பட்ட பிறகு, அதைப் பெற முயன்ற குத்தகை விவசாயிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த குறைந்த அளவு நிலம் பெரும்பாலும் குத்ததைதாரர்களிடம் உள்ளது, ஆனால் வருமான ஆதாரம் நிலச் சொந்தக்காரர்களுக்குச் செல்கிறது, விவசாயம் செய்பவர்களுக்கு இந்த உதவியும் கிடைக்காது என்றனர். 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் 2,57,77,000 பேர், 10 ஏக்கர் வரை நிலம் உள்ள நடுத்தர விவசாயிகள் 1,37,76,000 பேர் என விவசாய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்படும் இன்னும் கிட்டத்தட்ட 4 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்துக்குள் வரமாட்டார்கள். இதற்கு மேல் இன்னும் 63 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். இவர்களும் நிலஉடைமையில் மேல் நிலையில் இருந்தாலும் விவசாய நெருக்கடியால் பாதிக்கப்படுபவர்கள்தான். ஆக விவசாய நெருக்கடிக்கு எந்தத் தீர்வும் தராத ஒரு திட்டம் அறிவித்துவிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்து ஒட்டுமொத்த விவசாயத்துக்கான ஒதுக்கீடு என ரூ.1.4 லட்சம் கோடி வரை அறிவித்துவிட்டு, விவசாயத்தின் மீது விவசாயிகள் மீது கூடுதல் அக்கறை இருப்பதால் கூடுதல் ஒதுக்கீடு என்று கணக்கு காட்டி போக்கு காட்டுகிறார்கள்.
உண்மையில் விவசாயிகள் குடும்பங்களில் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.3 தந்து அவர் களை இழிவுபடுத்தும் மோசடித் திட்டம்தான் மோடியின் வருமான ஆதாரத் திட்டம்.
இந்த நிதிநிலை அறிக்கையின் இன்னொரு ஜ÷ம்லா அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம். ரூ.15,000 வரை மாதச் சம்பளம் பெறுகிற 29 வயது உள்ள ஓர் அமைப்புசாரா தொழிலாளி தனது 60 வயது வரை மாதம் ரூ.100 செலுத்தினால், 60 வயதுக்குப் பிறகு அவருக்கு ரூ.3,000 ஓய்வூதியம் தரப்படும் என்று திட்டம் சொல்கிறது. அந்தத் தொழிலாளிக்கு 60 வயது ஆகும்போது, 30 ஆண்டுகள் கழித்து ரூ.3,000 இன்று இருக்கும் ரூ.3,000 மதிப்புடன் இருக்காது. 18 வயதிலேயே திட்டத்தில் சேர்ந்துவிட்டால் மாதம் ரூ.55 செலுத்த வேண்டும். 29 வயதுக்கு மேல் ஆன அமைப்புசாரா தொழிலாளி திட்டத்தில் சேர முடியுமா, 19 முதல் 28 வயது வரை உள்ள தொழிலாளி சேர முடியுமா என்றெல்லாம் திட்டம் பற்றிய அறிவிப்பாணை வரும்போதுதான் தெரிந்து கொள்ள முடியும். நிதிநிலை அறிக்கை அது போன்ற விவரங்கள் பற்றி அக்கறைப்பட வில்லை. அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 10 கோடி தொழிலாளர்களாவது இந்தத் திட்டத்தில் சேருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழிலாளி செலுத்தும் அதே அளவு தொகையை அரசும் செலுத்தும். வரும் ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது. அப்படி யானால், சராசரியாக ஒரு தொழிலாளிக்கு மாதம் ரூ.77 அரசு செலுத்துகிறது என்றால், வரும் ஆண்டில் திட்டத்தில் 54 லட்சம் பேரைத்தான் சேர்க்க முடியும். அப்படி இருக்க அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 10 கோடி பேரை எப்படி சேர்க்க முடியும்? மோடியின் பொருளாதார ஆலோசகர்கள் விளக்கம் தர வேண்டும்.
நாட்டில் உள்ள 43.7 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களில் 24.6 கோடி பேர் விவசாயத் தொழிலாளர்கள். விவசாயத் தொழிலாளர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் பெற புதிதாக எதுவும் இல்லை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு நடப்பு ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.61,084 கோடி ஒதுக்கப்படும்போது, வருகிற ஆண்டுக்கு ரூ.60,000 கோடிதான் ஒதுக்கப்படுகிறது. திட்டத்தில் இருக்கிற பாதகமான நிலைமைகள் அப்படியே தொடரும். இவர்களும் சேர்ந்துதான் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனும்போது, அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்குத்தான் திட்டம் என்றால் மற்றவர்களின் சமூகப் பாதுகாப்புக்கு இன்றும் நாளையும் உத்தரவாதம் இல்லை.
நிதிநிலை அறிக்கை, திட்டத்துக்கு முன்வைக்கும் வயது வரம்புப்படி பார்த்தால், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 - 19 வயதிலான அமைப்புசாரா தொழிலாளர்கள் மொத்தம் 23 கோடி பேர். இவர்களில் 10 கோடி பேருக்கு ஓய்வூதியத் திட்டம் என்றால், மற்றவர்களுக்கு? இன்றைய நிலைமைகளில் நாட்டின் 10 கோடி பேர், ரூ15,000க்கும் குறைவாக ஊதியம் பெறுவதும், அடுத்த அய்ந்து ஆண்டுகளும் இந்த நிலை தொடரும் என்பதும் மிகவும் மோசமான பொருளாதார நிலைதான். இந்த நிலையை மாற்ற, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன் காக்க, அவர்களின் சமூகப் பாதுகாப்புக்காக எந்தத் திட்டமும் மோடி ஆட்சியின் இந்த கடைசி நிதிநிலை அறிக்கை வரை இல்லை. ஆதார், வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ஆகியவற்றின் மூலம் இவர்களிடம் இருப்பதையும் பறிக்கும் திட்டங்கள்தான் மோடி ஆட்சியில் அமலாகின. எல்லாவற்றையும் இன்று பறித்துவிட்டு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு அற்பத் தொகை தரப்படும் என்பது மோடி அரசின் மோசடித் திட்டம்.
நடுத்தரப் பிரிவினரின் வாக்குகளைப் பெற முடியும் என்ற எதிர்ப்பார்ப்பில் வருமான வரியில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளால் 3 கோடி பேருக்கு ஒருவருக்கு ஆண்டில் ரூ.7,700 மிச்சம் என்று நிதிநிலை அறிக்கையே சொல்கிறது. இது ஒரு சலுகையா? இதுவும் 2019 - 2020க்கு  பொருந்தாது. அடுத்த அரசாங்கம் அடுத்த நிதி நிலை அறிக்கையில் என்ன வைத்திருக்கும் என இன்று சொல்ல முடியாது.
இந்த 3 கோடி பேர் செலுத்தும் வருமான வரி மூலம் மட்டும் நாட்டுக்கு வரும் ஆண்டில் ரூ.6,20,000 கோடி வருவாய் வரும். ஜிஎஸ்டி ரூ.7,61,200 கோடி வரும். இதுவும் சாமான்ய மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுவதுதான். 2018ல் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளொன்றில் ரூ.2,200 கோடி என அதிகரித்தது பற்றி ஆக்ஸ்பேம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்தியாவின் வெறும் 9 பில்லியனர்கள் சொத்து மதிப்பு நாட்டின் 50% பேரிடம் இருக்கும் சொத்துக்கு ஈடானது என்று அந்த அறிக்கை சொன்னது. இவர்களது சொத்துக்கு விதிக்கப்பட்ட வரியை மோடி அரசு 2017 - 2018 முதல் ரத்து செய்துவிட்டது. 2018ல் நாளொன்றில் ரூ.2,200 கோடி என்றால் அந்த ஆண்டில் ரூ.8 லட்சம் கோடி என அந்த மதிப்பு அதிகரித்திருக்கும். வெறும் 119 பில்லியனர்களின் சொத்து மதிப்பு ரூ.28 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த சொத்துக்கு, நடுத்தரப் பிரிவினரின் வருமானத்துக்கு விதிக்கப்படும் வரி போல் வரி விதிக்கப்பட்டால் அது நாட்டின் வரி வருவாயை பெருமளவில் பெருக்கும். நாட்டின் நல நடவடிக்கைகள் எல்லாம் வருமான வரி செலுத்துவோரால்தான் நடக்கிறது, அதனால் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக பியுஷ் கோயல் நிதிநிலை அறிக்கை முன் வைக்கும்போது சொன்னார். பில்லியனர்களின் சொத்துக்கும் வரி விதித்து அவர்களுக்கும் சற்று புகழ் சேர்க்க மோடி அரசு மறுக்கிறது. பணக்காரர்களுக்கு கோடிகோடியாக விட்டுத்தந்து விட்டு வெறும் 3 கோடி பேருக்கு இன்னும் தரப்படாத சலுகை பற்றி நிதிநிலை அறிக்கை மோசடி பெருமை பேசுகிறது.
வருவாய் பொறுத்தவரை, பொதுத்துறை நிறுவனங்களை விற்று 2017 - 2018ல் ரூ.1 லட்சம் கோடி வந்தது என்றும், நடப்பு ஆண்டு இலக்கான ரூ.80,000 கோடியை தாண்டும் நம்பிக்கை உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகும், பொதுத் துறை நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து ஈவுத் தொகையாகவும் லாபமாகவும் மத்திய அரசுக்கு நடப்பு ஆண்டில் வந்த வருவாய் ரூ.1,19,264.55 கோடி. வரும் ஆண்டில் இது ரூ.1,36,071.44 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அரசுக்கு நல்ல வருவாய் தரும் பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டி அம்பானியும் அதானியும் லாபம் பார்க்கும் வழிகளை உருவாக்குவதே மோடி அரசின் முன்னுரிமையாக இது வரை இருந்துள்ளது.
10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு என்று சென்ற நிதிநிலை அறிக்கையில் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தில் ரூ.3,000 கோடிக்கு 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தனியார் மருத்துவமனைகளுக்கு இந்தப் பணம் சென்றுள்ளது. (போலியோ தடுப்பு சொட்டு மருந்து இல்லை என்று அது தொடர்பான வேலைகளை நிறுத்தி வைத்தது இதற்கு முன் நடந்ததில்லை). பயிர்க் காப்பீடு என்ற பெயரிலும் பெரும் தொகை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செல்கிறது. 2011 - 2012 முதல் 2015 - 2016 வரையிலான காலத்தில், செலுத்தப்பட்ட முன்தொகையை விட விவசாயிகள் பெற்ற காப்பீட்டுத் தொகை கூடுதல். 2016 - 2017ல் மோடி ஆட்சியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வந்த பிறகு, 2016 - 2017ல் 11 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சம்பாதித்த லாபம் ரூ.3,074 கோடி. 2017 - 2018ல் வசூல் செய்யப்பட்ட முன்தொகை ரூ.25,140 கோடி. தரப்பட்ட காப்பீடு ரூ.12,408 கோடி. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெற்ற லாபம், ரூ.12,732 கோடி. வரும் ஆண்டுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்ற தலைப்பில் ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெயரில் ரிலையன்ஸ், டாடா, பஜாஜ் போன்ற கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களை வளர்க்க மோடி அரசு கண்டுபிடித்த வழிதான் இந்தத் திட்டம்.
வேலை வாய்ப்பு பற்றி கேட்டால் முத்ரா கடன்களை வேலை வாய்ப்புகளாகக் காட்டுகிறார்கள். முத்ரா திட்டத்தில் இது வரை ரூ.7,23,000 கோடிக்கு 15.56 கோடி கடன்கள் தரப்பட்டுள்ளன என்றால் சராசரியாக ரூ.50,000 கூட தாண்டாத கடன் அது. வர்த்தகம் பற்றிய நல்ல அறிவு இருப்பதாகச் சொல்லப்படும் அமித் ஷா மகனால் கூட இந்தத் தொகையில் சுயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாது. தள்ளு வண்டியில் பகோடா விற்க வேண்டும் என்றால் கூட இந்தத் தொகையில் முடியாது.
வரும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.2,10,07,439 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. நடப்பு ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது ரூ.1,88,40731 கோடி. இந்த அளவுக்கு பிரம்மாண்டமான செல்வங்களை உருவாக்கும் இந்திய மக்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து, கார்ப்பரேட்டுகள் கொழுக்க மோடி அரசு கடந்த அய்ந்தாண்டு காலமாக ஆட்சி நடத்திய திசைதான் இந்த நிதிநிலை அறிக்கையிலும் தொடர்கிறது.
இந்த ஒட்டுமொத்த துரோகம் பற்றி நாட்டில் கேள்விகள் எழுப்பப்படக் கூடாது என்பதற்காகத்தான் போர்ச் சூழலை உருவாக்கி சங் பரிவாரும் பாஜகவும் அதில் தேர்தல் ஆதாயம் தேடுகின்றன. மோடி அரசின் இந்த இடைக் கால நிதிநிலை அறிக்கை மொத்தத்தில் மோசடிகளால் நிறைந்தது.

Search