COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 1, 2019

எலக்ஷன் வருது, எங்ககிட்ட வந்துதான ஆகனும் 
(கேசவ பிள்ளை பூங்காவில் ஒலிக்கும் குரல்) 

என்.குமரேஷ், ஆர்.மோகன், ஆர்.குப்பாபாய்

தினமலர் பத்திரிகையில், 192 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் என்று அந்தச் செய்திக்கு பெரிய தலைப்பு.
25,000 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து 192 குடிசைகள் அமைத்து குடிசைவாசி கள் வாழ்ந்து வந்தனர் என்கிறது அந்தச் செய்தி. 25,000 சதுர அடியில் 192 குடும்பங்கள் வாழ்ந்து வந்தது எவ்வளவு கொடூரமான ஒரு வாழ்க்கை? அது எப்படி ஆக்கிரமிப்பாக இருக்க முடியும்?
புளியந்தோப்பு பகுதியில் உள்ள கேசவ பிள்ளை பூங்கா குடிசை மாற்று வாரியப் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசித்து வந்த அவர்களை அங்கிருந்து அகற்றி நடுத்தெருவில் நிற்க வைத்தது பற்றி செய்திகள் பல வெளியாயின. எந்தச் செய்தியும் இப்படி ஒரு குரூரமான, வக்கிரமான தலைப்புடன் வரவில்லை.
இககமாலெ சென்னை மாநகரக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.குமரேஷ், ஆர்.மோகன், ஆர்.குப்பாபாய் ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்று, தங்கள் வாழ்விடத்தில் இருந்து அகற்றப்பட்ட மக்களைச் சந்தித்தினர்.
பிரச்சனையை மேலோட்டமாகப் பார்த்து அந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள் அகற்றப்பட்டது சரியே என்று பலரையும் பேச வைத்திருப்பது அரசின், காவல்துறையின், குடிசை மாற்று வாரியத்தின் வெற்றி என்று சொல்லலாம்.
புளியந்தோப்புவாசிகள் ஒரு விதத்தில் சென்னையின் பூர்வகுடிகள். அவர்களது தமிழ் அவ்வளவு அழகு. அவர்களைக்  கேட்டால் நினைவு தெரிந்த நாளில் இருந்து இங்குதான் இருக்கிறோம் என்று எல்லா வயதினரும் சொல்வார்கள். பணக்காரர்களுக்காக மட்டுமே இயங்கும் உலகத்தில் நகரத்தின் மய்யத்தில் வறிய மக்கள் இருக்கலாமா? இன்று விரட்டப்படுகிறார்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற வாசகம் குடிசை மாற்று வாரியத்தின் முகப்பு வாசகமாக இருக்கிறது. துவக்கத்தில் அப்படி இருந்தது கூட உண்மைதான். இன்று நிலைமை களை தலைகீழாக மாற்றிவிட்டார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். 1970ல் துவங்கப்பட்ட குடிசை மாற்று வாரியத்தால் 1980ல் புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட 35 பிளாக்குகள் கொண்ட குடிசை மாற்று வாரிய வீடுகளில் 1,536 குடும்பங்கள் வசித்து வந்தன. கேசவ பிள்ளை பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு என்று இதற்குப் பெயர். கட்டிடங்கள் பழுதானதால் 2008ல் இடிக்கப்பட்டன. மக்கள் அருகில் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். சால்ட் கோட்டர்ஸ், மண்ணடி, பிராட்வே, சவுகார்பேட்டை என சுற்றியுள்ள இடங்களில் கூலி வேலை, வீட்டு வேலை செய்து வயிற்றை கழுவும் இவர்களின் பல குடும்பங்கள் கண்ணகி நகர், பெரும்பாக்கம் என தொலைதூரப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் அருகமைப் பகுதிகளில் வாடகை வீடுகளுக்குச் சென்றனர்.
இடிக்கப்பட்ட 35 பிளாக்குகளில் 15 பிளாக்குகளை மீண்டும் கட்ட அய்ந்தாண்டு காலம் ஆனது. இப்போது, இன்னும் 864 குடும்பங்களுக்கு வீடுகள் தர வேண்டும். நான்கு அடுக்கு கட்டிடத்தில் 228 சதுர அடி வீடுகளில் இருந்த அவர்களுக்கு ஒன்பதடுக்கு கட்டிடத்தில் 400 சதுர அடியில் வீடுகள் கட்டப்படுகின்றன. மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் தரப்படும் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.
அப்படியிருக்க, பிப்ரவரி 6 அன்று அவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர்?
864 குடும்பங்கள் குடியிருக்கும் அந்த வீடுகளை இடித்து வேறு கட்டிடம் கட்டி அதை விற்று அதில் வரும் பணத்தில்தான் இப்போது இவர்களுக்காக கட்டப்படும் கட்டிடப் பணியை முடித்து இவர்களுக்குத் தர முடியும் என்று அதிகாரிகள் சொல்கிறார்களாம். ஏதோ தவறு நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். அதுவும் அவ்வளவு எளிதல்ல.
இந்த 864 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று முன்னரே அறிவிப்பு தந்துள்ளார்கள். புதிதாக வீடுகள் தயாராகிக் கொண்டிருப்பதை கண்ணெதிரில் பார்க்கும் அவர்கள் வெளியேற மறுத்தது நியாயம் என்றுதான் சொல்ல முடியும். அவர்கள் இப்போது குடியிருக்கிற இடத்தில் உள்ள விளையாட்டுத் திடலை அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் 2,000 பேர் பயன்படுத்துகின்றனர். அந்த இடம் வசதி படைத்தவர்களுக்கு வீடு கட்ட தரப்பட்டு விட்டால், தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு விளையாட இடமில்லாமல் போய்விடும் என்றும், அவர்களை வேறுவிதமாக திசைதிருப்ப சமூக விரோத சக்திகள் முயற்சி செய்யலாம் என்றும் அவர்கள் அச்சம் கொள்கின்றனர். இன்றைய சூழ்நிலைகளில் இதுவும் நியாயமானதே.
விளையாட்டுத் திடல் இருந்த இடத்தில் சற்று வசதி படைத்தவர்களுக்கு வீடுகள் கட்ட திட்டங்கள் உள்ளன. அந்தத் திட்டத்தை முன்னகர்த்த 864 குடும்பங்கள் அலைகழிக்கப்படுகின்றன. பிப்ரவரி 6 அன்று காவல்துறையினர் புல்டோசர் சகிதம் வந்து இறங்கியுள்ளனர். மக்கள் வீடுகளுக்குள் சென்றுவிட்டால் அவர்களை வெளியேற்றுவது கடினம் என்பதால் அவர்களை தங்கள் வீடுகளுக்குள் செல்ல விடாமல் சுற்றி வளைத்து மடக்கி நிறுத்தியுள்ளனர். பாத்திரம், பொருட்கள் எல்லாம் அப்படி அப்படியே, போட்டது போட்டபடி இருக்க, வீடுகளுக்குள் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களது பொருட்களை வீடுகளில் இருந்து அகற்ற, கட்டப்படும் கட்டிடங்களில் வேலை செய்யும் பிற மாநிலத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் பொருட்களை வெளியில் எடுத்துக் கொண்டு வந்து போடுவதுதான் வேலை என்று ஆனதால், என்ன வகை பொருள் என எதுவும் பார்க்காமல் கையில் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொண்டு வந்து வெளியே வைத்துள்ளனர். கை, கால் செயலிழந்த முதியவர் ஒருவரை அவர்கள் வெளியே கொண்டு வரும்போது, மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.  மனிதர்கள், பொருட்கள் எல்லாம் மனிதத்தன்மை இல்லாமல் இப்படி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் கண்ணெதிரிலேயே புல்டோசர்கள் அந்த வீடுகளை இடித்துள்ளன. இதையெல்லாம் பார்த்த அந்த மக்கள் எந்த அளவுக்கு வேதனை அடைந்திருக்க வேண்டும்? சிறுவர்களுக்கு இது வாழ்நாள் முழுதும் மாறாத வடுவாக அல்லவா இருக்கும்? அவர்கள் அந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டபோது ஒரு பெண் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். பெண்களை பிடித்துத் தள்ளுவது சேலையை, நைட்டியை பிடித்து இழுப்பது என காவல் துறையினர் சிலர் அத்துமீறியுள்ளனர். தள்ளு வண்டியில் சிற்றுண்டி செய்து விற்று சிறு வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவரது வண்டி காவல்துறையினரின் இந்த கொடூரமான நடவடிக்கையில் உடைந்து போனது. இப்போது அவருக்கு வாழ்வாதாரம் போய்விட்டது. தற்காலிகமாக குடியிருப்பு மாற்று ஏற்பாட்டுக்கு அவர்களுக்கு ரூ.8,000 தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இவர்கள் அந்த பிப்ரவரி 6 எதிர்கொண்ட துன்பத்தை, அதன் பிறகு இன்று வரை, இனிமேலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் வலியை ஒரு போதும் ஈடு செய்யாது.
பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை அகற்றியதைப் பார்த்தவர்கள், அவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து இங்கு வந்து துன்பப்படுகிறார்கள், நாங்கள் நம் பூமியிலேயே அவர்களைப் போல் ஆக்கப்பட்டுவிட்டோம், எங்களுக்கு இப்போது தரப்பட்டுள்ள வீடுகள், அந்தத் தொழிலாளர்கள் தங்க தற்காலிகமாக தரப்படும் தகர வீடுகள் போன்றவைதான், இது எங்கு போய் முடியும் என்றே தெரியவில்லை என்றனர். 
அந்த 864 குடும்பங்களில் பல குடும்பங்கள் முல்லை நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு சுடுகாட்டின் அருகில் உள்ள திடலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எங்களை பிணத்தோடு பிணமாக எரித்துவிடப் பார்க்கிறார்கள் என்கிறார்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். அங்கும் தகரச் சுவர்களால் பொருத்தப்பட்ட வீடுகள். தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. பாம்புகள் உலவுகின்றன. அருகில் சுடுகாடு. இது போன்ற ஓர் இடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் வகையினரை ஒரு நாளாவது குடியமர்த்த வேண்டும்.
கேசவப் பிள்ளை பூங்காவிலேயே இன்னும் 117 குடும்பங்கள் வரிசையாகக் கட்டப்பட்ட பத்தடிக்கு பத்தடி அளவில் தகரச் சுவர்களால் பொருத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிக்கிறார்கள். தரை போடப்படவில்லை. வெறும் மண். எலி வளைகள், வேறு வேறு பூச்சிகள் சுற்றி வருகின்றன. ஒரு குழந்தையை இரண்டு முறை எலி கடித்துவிட்டதாக ஒரு வீட்டில் சொன்னார்கள். 117 குடும்பங்களுக்கு 12 குளியல் அறைகளும் 12 கழிப்பறைகளும் உள்ளன. தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லை. ஒரு கழிப்பறையின் கதவு உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது.
தண்ணீர் வசதி இல்லாத அந்தக் கழிப்பறைகளுக்கும் குளியலறைகளுக்கும் அருகிலே யேதான் அவர்கள் சமைத்து சாப்பிடும் இடமும் தந்துள்ளார்கள். சமைத்தாலும் சாப்பிட முடியவில்லை என்று பெண்கள் சொல்கிறார்கள். வெளியில் வைத்து சமைத்துவிட்டு வீட்டுக்குள் எடுத்துச் சென்று சாப்பிடுகிறார்கள். அங்கும் நாற்றம் ஓரளவுக்குத்தான் குறைந்திருக்கும் என்கிறார்கள். ஒரு பெண் எங்களுக்கு வனவாசம் அனுப்பப்பட்டதுபோல் உள்ளது என்றார். இன்னொருவர் நாங்கள் அகதிகள் போல் இருக்கிறோம் என்றார்.
இப்போது இந்த 864 குடும்பங்கள் இந்த மோசமான வாழ்விடத்தில், அதிகாரிகள் சொல்வதுபடியே நடந்துவிட்டாலும், இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் வாழ வேண்டும். இதற்கு முன் அவர்கள் இருந்த இடமும் பெரிய மாளிகையாக இருக்கவில்லை. ஆனால் இந்த அளவு மோசமாக இல்லை. மே மாதம் வீடுகள் கட்டி முடித்துத் தரப்படும் என்று சொல்வதே அவர்களுக்கு அச்சம் தருகிறது. மே மாதம் என்கிறார்களே, தேர்தல் வருகிறதே, வேறு ஏதாவது சொல்லிவிட்டார்கள் என்றால், தராமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டுகிறது.
புதிய குடியிருப்புகள் தரப்படும் வரை ஒவ்வொரு மாதமும் குடியிருப்பு உதவித் தொகை தரப்பட வேண்டும், குடியிருப்புப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டுத் திடல், நூலகம் ஆகியவை வேண்டும் என மக்கள் கோரிக்கைகள் முன்வைக்கின்றனர்.
இவர்கள் அகற்றப்பட்ட இந்தத் திடலில் சற்று வசதி படைத்தவர்களுக்கு கட்டப்படவுள்ள குடியிருப்புகளுக்கும் இவர்களுக்குக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கும் இடையில் சுவர் எழுப்பப்படும் திட்டம் உள்ளதாம். இது நவீன தீண்டாமை, அவர்கள் கட்டுவது தீண்டாமைச் சுவர் என்கிறார்கள் இந்த மக்கள்.  ஒன்பது அடுக்குக் கட்டிடம் கட்டுவது அவர்களுக்கு உடன்பாடற்ற விசயமாக இருக்கிறது. இவர்கள் அமைக்கும் மின்தூக்கிகள் தரமற்றவையாக இருக்கும், விரைவில் பழுதாகும், பழுதானால் சரி செய்ய காலம் பிடிக்கும், எங்கள் அன்றாட வாழ்க்கை மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் என்கிறார்கள். கேட்கும் சக்தி இல்லாத இந்த அரசுக்கு அவர்கள் சொல்வது எதுவும் ஒரு பொருட்டாகவே இல்லை. பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் குழாய்கள் உடைந்து மேல் வீட் டில் இருந்து கீழ் வீட்டில் தண்ணீர் கசிவதாகவும் பல முறை புகார் செய்தும் அவற்றை சரி செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள். அவை புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள். இங்கு கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் ஓபிஎஸ் உறவினர் என்று சொல்லப்படுகிறது. கேசவப் பிள்ளைப் பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் புதிய வீடுகளுக்குச் செல்லும் குடும் பங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் குடிசைப் பகுதிகளில் 14.63 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. குடிசை மாற்று வாரிய திட்டம் துவங்கிய 1970 முதல் 2018 மார்ச் வரை 2.12 லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் பலப்பல லட்சக்கணக்கான குடும்பங்கள் குடிசைகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டங்களை துரிதப்படுத்துவதற்குப் பதிலாக, நகரின் மய்யங்களில் வசிக்கும் மக்களை, வீடுகளை இடித்துவிட்டாவது நகருக்கு வெளியே அனுப்பிவிடுவதுதான் முன்னுரிமையாக உள்ளது. கோவை சிஎம்சி காலனி பகுதி மக்களும் சமீபத்தில் அவர்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து வசதியை மேம்படுத்த பாலம் கட்டப் போவதாகச் சொல்லி இந்தப் பாதகச் செயலை செய்தார்கள். சாமான்ய மக்கள் வாழும் பகுதியில்தான் பாலம் கட்டுவார்களா? வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியை தரை மட்டமாக்கிவிட்டு பாலம் கட்டுவது, வேறு கட்டிடம் கட்டுவது பற்றி அவர்கள் திட்டமிடுவதே இல்லை. மக்கள் பணத்தில் சொகுசான வீடுகளில் வசிக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சாமான்ய மக்களை வாழும் வீட்டில் இருந்து வெளியேற்றினால் ஏற்படும் வலி என்னவென்று தெரிவதில்லை. மக்கள் என்ன செய்வார்கள் என்ற அக்கறை சற்றும் இல்லாமல் அவர்கள் வெளியிட்டுவிட்ட அரசாணையும் அதற்குப் பிறகு, குறுக்கும் நெடுக்கும் கோடுகள் போடப்பட்ட கட்டிட வரைபடங்களும் அந்தப் படங்களுக்குப் பின் முகம் காட்டும் கரன்சி நோட்டுகளும்தான் அவர்களுக்கு நன்றாகத் தெரிகின்றன. கேசவப் பிள்ளை பூங்காவிலும் வறிய மக்கள் பெற்ற பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுத் திடல் ஆட்சியாளர்களுக்குக் கண்ணை உறுத்துகிறது.
2023ல் குடிசைகள் இல்லா தமிழகம் அம்மாவின் தொலைநோக்குத் திட்டமாம். அதற்காகப் பாடுபடுகிறார்களாம். கிட்டத்தட்ட வறுமை ஒழிப்பு என்பது வறியவர்களை ஒழிப்பதாக செயல்படுத்தப்படுவதுபோல், குடிசைகளை ஒழிப்பது குடிசைகளில் வசிப்பவர்களை ஒழிப்பது என்பதாக தமிழக அரசு செயல்படுத்துகிறது. எலக்ஷன் வருது, எங்ககிட்ட வந்துதான ஆகனும் என்கிறார்கள் தங்கள் குடிசைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அகதிகள் போல் உணரும் கேசவ பிள்ளை பூங்கா மக்கள்.

Search