COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 1, 2019

ஆதி சிவனுக்குச் சிலையும் 
ஆதிவாசிகள் வாழ்க்கைக்கு உலையும் வைத்த
ஆன்மீக மோடி

ஜி.ரமேஷ்

கோவையில் ஆதிவாசி மக்களின் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்து, காடுகள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் ஜக்கி கார்(ப்)பரேட் சாமியாரால் அமைக்கப்பட்ட 112 அடி உயர ஆதி சிவன் சிலையை 2017 பிப்ரவரி 23 அன்று திறந்து வைத்தார் மோடி.
2019 பிப்ரவரி 20 அன்று மோடி அரசின் மோசடியால், நாடு முழுவதும் உள்ள 11 லட்சம் ஆதிவாசி குடும்பங்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு வெளியிட்டுள்ளது.
2019 பிப்ரவரி 13 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய மூவர் அமர்வு, வன உரிமைச் சட்டம் 2006ன் கீழ், நிலங்களுக்குப் பட்டா நிராகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வரும் ஜுலை 24க்குள் காடுகளில் இருந்து வெளி யேற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 20 அன்று அந்த உத்தரவு எழுத்துபூர்வமாக வெளியிடப்பட்டது. எல்லா மாநில தலைமைச் செயலாளர்களும் பட்டா நிராகரிக்கப்பட்ட பழங்குடி மக்களை அவர்கள் வசிக்கும் நிலங்களில் இருந்து வெளியேற்ற வேண்டும், இல்லை என்றால், நீதிமன்றம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும், அவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை என்று அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் ஜ÷லை 12 அன்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற மூவர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. செயற்கைக் கோள் மூலம் தற்போது ஆதிவாசி மக்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும், அவர்களை வெளியேற்றிய பிறகு செயற்கைக் கோள் மூலம் படம் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய காடுகள் கணக்கெடுப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் 17 மாநிலங்களில் இருந்து 11 லட்சத்து 72 ஆயிரத்து 931 பழங்குடியின குடும்பங்கள் காடுகளிலிருந்து அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட உள்ளனர். 11 லட்சத்து 73 ஆயிரம் குடும்பங்கள் என்றால் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 80 லட்சம் பேர். மத்தியபிரதேசத்தில் 3,54,787,  கர்நாடகாவில் 1,76,540, ஒடிசாவில் 1,48,870, மேற்கு வங்கத்தில் 86,144, தெலுங்கானாவில் 82,075,  திரிபுராவில் 68,257, உத்தரபிரதேசத்தில் 58,661,  ராஜஸ்தானில் 37,069, ஜார்க்கண்ட்டில் 28,107, அசாமில் 27,534, மஹாராஷ்ட்டிராவில் 22,509, சத்திஸ்கரில் 20,095, தமிழ்நாட்டில் 9,029, பீஹாரில் 6,824, கேரளாவில் 894, உத்தர்கண்டில் 51 என 16 மாநிலங்களில் மொத்தம் 11,27,446 குடும்பங்கள் தலைமுறைகளாக வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து விரட்டப்பட உள்ளனர். ஆந்திராவில் பட்டா மறுக்கப்பட்ட பழங்குடிகள் எண்ணிக்கை 66,351. இந்த 17 மாநிலங்கள் மட்டுமின்றி, இதர மாநிலங்களின் பழங்குடியினரும் பரம்பரையாக காட்டைச் சார்ந்து வாழ்பவர்களும்கூட இந்த உத்தரவின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள். பழங்குடியினர், ஆதிவாசிகள் காடுகளே தஞ்சம் என வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களை காடுகளில் இருந்து வெளியேற்றுவது அவர்களை கொல்வதற்குச் சமம். இந்த கருத்தை லண்டனில் உள்ள சர்வைவல் இண்டர்நேஷனல் என்கிற மனித உரிமை அமைப்பின் தலைவர் ஸ்டீபன் காரியும் கூறியுள்ளார். வனத்தை பாதுகாப்பது என்ற பெயரில் வனத்தின் பாதுகாவலர்களான ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினரை வனத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றம் எந்த அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது? இந்த உத்தரவில் அற உணர்வு உள்ளதா? இந்தியாவில்தான் உலகிலேயே மிக அதிகமாக ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை அவர்களது வாழ்விடமான காடுகளிலிருந்து வெளியேற்றி என்ன செய்யப் போகிறார்கள்? வெளியேற்றப்பட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள்?
வைல்ட் லைப் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் ஓய்வு பெற்ற சில வன அதிகாரிகளும் சேர்ந்து, வன உரிமைச் சட்டம் 2006க்கு எதிராகவும் வனங்களையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டுமெனில் வனங்களில் இருந்து ஆதிவாசிகள் மற்றும் பழங்குடிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று 2008ல் வழக்கு தொடுத்தனர். வன உரிமைச் சட்டம் 2006, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆதிவாசி மக்களின் போராட்டங்களால், இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சிகளால் உருவாக்கப்பட்டு 2007 டிசம்பர் 30 அன்று நடைமுறைக்கு வந்தது. வன உரிமைச் சட்டம் 2006ன் படி, 2005 டிசம்பர் 31க்கு முன்பு காடுகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்லது 75 ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 3 தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அந்த நிலத்தின் மீது உரிமை கோர தகுதியுடையவர்கள். அவர்களுக்கு அந்த நிலத்தின் உரிமை வழங்கப்பட வேண்டும். சட்டம், பழங்குடியினருக்கும் காடுகளில் வசிக்கும் மற்றவர்களுக்கும் வனங்களில் உள்ள நீர் நிலைகள் மீது உரிமையையும் சமுதாயக் காடுகளின் வளங்களைப் பாதுகாக்கும் நிர்வகிக்கும் உரிமையையும் அதிகாரத்தையும் வனங்களில் உள்ள கிராமங்களை, குடியிருப்புகளை வருவாய் வட்ட கிராமங்களாக மாற்ற அங்கீகாரமும் வழங்குகிறது. அந்த அடிப்படையில் 2018 டிசம்பர் வரை இந்தியா முழுவதும் 42.19 லட்சம் மனுக்கள் உரிமை கோரி வந்தன. அந்த மனுக்களில் 18.89 லட்சம் மனுக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டன. 23.30 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பட்டா நிராகரிக்கப்பட்ட பழங்குடிகளும் ஆதிவாசிகளும் வனங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின பழங்குடிகளுக்கும் காடுகளில் வசிக்கும் இதர மக்களுக்கும் வன உரிமையை அங்கீகரிப்பதும் வழங்குவதும் மத்திய அரசின் கையில் உள்ளது. வன உரிமைச் சட்டம் பிரிவு 4ன்படி, அங்கு வசிப்பவர்களால் வன விலங்குகளுக்கு அவற்றின் வாழ்விடங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத பட்சத்தில், வன உரிமை உடையவர்களின்  நிலங்களில் மாற்றம் செய்யவோ, மறுகுடியிருப்பு செய்யவோ முடியும். இது ஒரு சட்டம் சார்ந்த நடவடிக்கை மட்டுமே.
மாநில அரசுகள் அந்த மக்களுக்கு முறைப்படி பட்டா வழங்கி மீள்குடியேற்றம் செய்து தர வேண்டும். ஆனால், பல மாநிலங்களிலும் வன அதிகாரிகள், பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு, பரம்பரையாக காடுகளில் குடியிருப்ப வர்களுக்கு பட்டா வழங்கத் தேவையான ஆவணங்களை, அடையாள அட்டைகளை வழங்க அக்கறை காட்டவே இல்லை. சைதன்யா என்ற தொண்டு நிறுவனத்தின் சீனிவாச கஞ்சிவரப்பு என்பவர், கிழக்கு மலைத் தொடரில் உள்ள காடுகளில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகளில் வனதுறை அதிகாரிகள் அக்கறை காட்டவேயில்லை என்கிறார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள சிறிசைலம் மலைப்பகுதியில் உள்ள செஞ்சு பழங்குடியினருக்கு அவர்கள் பழங்குடியினர்தான் என்று வனத் துறை அதிகாரிகள் அடையாள அட்டை வழங்கவில்லை. அதனால் பழங்குடிகள் நலத் துறை, அவர்களுக்கு வன உரிமைப்பட்டா வழங்கவில்லை. இப்படி வனத்துறை அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் ஊழல் நடவடிக் கைகளால் பல லட்சக்கணக்கானவர்களுக்கு பட்டா மறுக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வனங்களில் வாழ்ந்து வரும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினரை வனத்துறை அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே விந்தையானது. வனத்தில் உள்ள மரங்கள் அல்லாத பொருள்களை பழங்குடியினர் தங்கள் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வனத் துறை அதிகாரிகள்தான் உரிமைச் சான்று அளிக்க வேண்டுமாம். ஆனால், வனத்துறை அதிகாரிகளோ, ஆதிவாசிகளிடம் அவர்கள் ஆதிவாசிகள், பழங்குடியினர் என்பதற்குத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று சொல்லி, அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அடையாள அட்டைகள் வழங்குவதில்லை. காட்டுக்குள் வாழும் ஆதிவாசிகளி டம், பழங்குடியினரிடம் எப்படி ஆவணங்கள் இருக்க முடியும்? ஆதிவாசி, பழங்குடியினர் கிராம சபைகள் மூலம் யார் பழங்குடியினர், ஆதிவாசிகள் என்று கண்டறிந்து அடையாளப்படுத்துவதற்கு மாறாக, நாட்டிற்குள் இருந்து காட்டிற்குள் சென்று வேலை பார்க்கும் வன அதிகாரிகளின் கையில் ஆதிவாசிகளை அடையாளப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டால் இதுதான் நடக்கும். கர்நாடகாவைச் சேர்ந்த ஜெனு குரும்பா இனத்தைச் சேர்ந்தவரும் வன உரிமைச் செயற்பாட்டாளருமான அப்பாஜி, ஆதிவாசிகளிடம் எந்தவொரு அடையான ஆவணமும் இருக்காது, வட்டாட்சியர்களும் ஆதிவாசிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வழங்குவதற்கு முன்வரமாட்டார்கள், ஆதிவாசிகளிடம் சாதிச் சான்றிதழ் கிடையாது, அதுபற்றி அவர்கள் கேட்டிருக்கக் கூட மாட்டார்கள் என்கிறார்.
வன உரிமைச் சட்டம் 2006, பழங்குடியினருக்கான உரிமை வழங்குவதற்கு பழங்குடி மக்கள் கிராம சபைகளுக்கு நீதித்துறைக்கான அதிகாரமும் அங்கீகாரமும் வழங்கியுள்ளது. மாவட்ட அளவில், உட்கோட்ட அளவில் இது போன்ற சபைக் குழுக்கள் உள்ளன. அக்குழுக்கள் அவர்களுக்கான அடையாள ஆவணத்தை வழங்க முடியும். கீழ் மட்டக்குழுவினால் நிராகரிக்கப்பட்டால், அதற்கு அடுத்த மேல் மட்ட குழுவிற்கு ஒருவர் செல்ல முடியும். அங்கும் நிராகரிக்கப்பட்டால், உரிமையியல் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த எல்லா அதிகாரத்திலும் தலையீடு செய்துள்ளது என்கிறார் கேரளாவின் ஆதிவாசி கோத்ரா மகாசபையின் மாநில ஒருங்கிணைப்பாளரான கீதா நந்தன்.
முதலில் கிராம சபைக்கு மனு தந்து, அங்கீகாரம் பெற்று அதன் பின்னர் பட்டா வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால், தற்போது வனத்துறை அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில், பல லட்சக்கணக்கானவர்களுக்கு பட்டா மறுக்கப்பட்டுள் ளது, 80%க்கும் மேலான ஆதிவாசி, பழங்குடியினர் மனு செய்யவே இல்லை, அவர்களுக்கு அது பற்றிய விவரமே தெரியாது என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வன உரிமைச் செயற் பாட்டாளரான செல்வராஜ்.
ஆட்சியாளர்கள், ஆதிவாசிகளை பழங்குடியினரை வனங்களில் இருந்து அப்புறப்படுத்துவதிலேயே அக்கறையாக உள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆதிவாசிகளும் பழங்குடியினரும்தான் காடுகளைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள். காடுகளில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிக்க வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு ஆதிவாசிகள் பழங்குடியினர் இடையூறாக உள்ளனர். இவர்களை அப்புறப்படுத்தவே, வனத்தைப் பாதுகாப்போம், வன விலங்குகளைப் பாதுகாப்போம் என்று வேஷம் போட்டு, அதிகாரிகள் மூலம் செயலில் இறங்கியுள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
ஏற்கனவே, 23.11.2001 அன்று உச்சநீதிமன் றம் பிறப்பித்த உத்தரவு, 30.09.2002க்குள் வனங்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றது. கார்ப்பரேட்டுகளுக்காகவே எல்லா திட்டங்களையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த அன்றைய வாஜ்பாய் அரசு, அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி, நடவடிக்கை எடுக்கக் கோரியது. அதற்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் ஆதிவாசிகள், காலங்காலமாய் வனங்களில் வசிப்பவர்கள் வனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அய்முகூ ஆட்சி காலத்தில் வன உரிமைச் சட்டம் 2006 உருவாக்கப்பட்டது.
அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு, சட்டத்தின் விதிகளைப் பின்பற்றாமல், ஆதிவாசிகளை, பழங்குடிகளை திட்டமிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதனால்தான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளில், மத்திய, மாநில அரசுகள் முறையான பதில்களை தாக்கல் செய்யவில்லை. ஒப்புக்கு சில பேருக்கு பட்டா வழங்கி விட்டு, அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளன அரசு கள். 2016 ஜனவரி 29ல் எவ்வளவு பேர் பட்டா உரிமை கோரியுள்ளார்கள் என்கிற விவரத்தை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யக் கூறியது உச்சநீதிமன்றம். அரசுகளும் அரைகுறை தகவல்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன. பிப்ரவரி 13க்கு முன்பு மூன்றுக்கு மேற்பட்ட வாய்தாக்களுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதனால் வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராக வாதங்களை வைக்கவும் இல்லை. இதில் இருந்தே மத்திய அரசின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. மலைவாழ் மக்களின் தேசிய ஆணையம் 2018 ஜனவரி 2 அன்று, புலிகள் பாதுகாப்பு பகுதியில் இருந்து கூட பழங்குடி மக்களை அவர்களின் விரும்பத்திற்கு மாறாக, சரியான மாற்று இடமும் ஏற்பாடு செய்யாமல் வெளியே போகச் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றமோ, ஊழல் பிடித்த, மக்கள் மீது அக்கறையற்ற ஆட்சியாளர்கள், அதிகாரிகளால் தரப்பட்டுள்ள அரைகுறை கணக்குகளின் அடிப்படையில், 11 லட்சத்திற்கும் மேலான ஆதிவாசிகள், பழங்குடியினர் குடும்பங்களை காடுகளிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது வேதனையானது. உரிமைப் பட்டா கோரி மனு செய்தவர்கள் 42.19 லட்சம் பேர். 18.89 லட்சம் பேருக்கு பட்டா தரப்பட்டது. ஆனால் பட்டா மறுக்கப்பட்டவர்கள் 23.30 லட்சம் பேர் என்றால், இவ்வளவு பேர் வன ஆக்கிரமிப்பாளர்களா?
இந்தியா முழுவதும் பட்டாவிற்கு மனு செய்தவர்கள் 42 லட்சம் பேர்தான், ஆனால், விவரம் தெரியாமல் மனு செய்யாமல் இருப்பவர்கள், தமிழ்நாட்டில் மட்டுமே 80% பேர் இருக்கிறார்கள் என்கிறார் செல்வராஜ். தமிழ்நாட்டில் 31,000 பேர் மனு செய்து சுமார் 9,000 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். பாஜகவினர் ஆளும் மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பாஜக ஓராண்டிற்கு முன்பு ஆண்ட கர்நாடகாவிலும், வெளியேற்றப்பட வேண்டிய ஆதிவாசிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைப் பார்க்கும்போது, வாஜ்பாய் வழியில் அதானி, அம்பானி, வேதாந்தாவின் உற்ற நண்பர் மோடியின் பாஜக அரசும், கார்ப்பரேட்டுகளுக்கு காடுகளைக் கைப்பற்றிக் கொடுக்க ஆதிவாசி பழங்குடியினரை விரட்டும் திட்டத்துடன் திட்டமிட்டே அவர்களுக்கு பட்டா வழங்க மறுத்துள்ளது என்பது தெரிகிறது.
ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் அதானி, அனில் அகர்வால், ஜின்டால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளும் காடுகளை ஆக்கிரமிக்க, காட்டு விலங்குகள் நாட்டிற்குள் வந்து வீடுகளுக்குள் நுழைந்து கொண்டிருக்க, வனத்தை வணங்கி வழிபட்டு பாதுகாத்து வரும் பூர்வகுடிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி காடுகளில் இருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. வேண்டுமென்றே நீதிமன்றத்திற்கு வழக்கறிஞரை அனுப்பாமல், உண்மையை எடுத்துச் சொல்லாமல் இருந்துவிட்டன பாஜகவின் மத்திய, மாநில அரசுகள்.
ஆனால், பாஜக ஆளும் அனைத்து மாநில முதல்வர்களும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளாராம். அமித் ஷா அவர்களே, தேர்தல் நாடகம் வேண்டாம். சீராய்வு மனு தேவையில்லை. உங்களுக்கு ஆதிவாசிகளின் பழங்குடியினரின் நலனில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், எதுஎதற்கோ அவசரச் சட்டம் போடும் மோடியிடம் சொல்லி உடனடியாக பழங்குடி மக்களைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்றச் சொல்லுங்கள்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என் பார்கள். சாதுவான பூர்வகுடி ஆதிவாசி மக்களை, பழங்குடியினரை, பரம்பரையாக காடுகளைச் சார்ந்து வாழ்பவர்களை காடுகளில் இருந்து வெளியேற்றினால், நாடு தாங்காது. காடும் அழியும். நாடும் அழியும்.
40 லட்சம் பேரை திடீரென அசாமிலிருந்து வெளியேறு என்கிறார்கள். 11 லட்சம் குடும்பங்களை வாழ்விடங்களில் இருந்து வெளியேறு என்கிறார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றினால்தான் நாட்டு மக்களுக்கு சாதாரண வாழ்வு கூட சாத்தியம். 27.02.2019
(பின்குறிப்பு: உச்சநீதிமன்றத்தின் இந்த கொடூரமான உத்தரவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்துள்ள பின்னணியில் உச்சநீதிமன்றம் தனது உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 28.02.2019)

Search