COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 1, 2019

அய்க்கிய அமெரிக்க நீதிமன்றத்தில் 
அம்பலமாகும் தமிழ்நாட்டு ஊழல்

ஹிலாரி கிளின்டனுக்கு ஜெயலலிதாதான் அரசியல் கற்றுத் தந்தார், தேர்தலில் போட்டி போட உத்வேகம் தந்தார் என்று அம்மா பக்தர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
2011 ஜுலையில் இவர்கள் சந்தித்தபோது இப்படி சொல்லவில்லை. 2016 சந்திப்பின்போது ஜெயலலிதாவை தெய்வ பிம்பமாகக் காட்டும் பித்து அதிமுகவினருக்கு உச்சத்தில் ஏறியிருந்த போது இப்படிச் சொல்லப்பட்டது. இவர்கள் சந்திப்புக்கும் இங்கு நாம் பேச வரும் பொருளுக்கும் தொடர்பில்லை என்று நம்புவோம்.

 அய்க்கிய அமெரிக்க தகவல்தொடர்பு நிறுவனமான காக்னிசன்ட் தானாக முன்வந்து தனது நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அய்க்கிய அமெரிக்க செக்யூரிட்டீஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் கமிசனில் (எஸ்இசி) செப்டம்பர் 2016ல் தெரிவித்தது. அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாக நடந்த விசாரணையின் அடிப்படையில், முறைகேட்டால் கிடைத்த ஆதாயம் 19 மில்லியன் டாலர் மற்றும் அபராதமாக 6 மில்லியன் தர வேண்டும் என்ற, வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான அய்க்கிய அமெரிக்க நீதிமன்ற உத்தரவை காக்னிசன்ட் நிறுவனம் ஏற்றது.

2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை ரூ.12,595.40 கோடிக்கு அந்நிய நேரடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இதில்தான் அய்க்கிய அமெரிக்க காக்னிசன்ட் நிறுவனம் சிக்கிக் கொண்டது. முதலீட்டில் முதலிடம் என்று ஜெயலலிதா பெருமை பேசிக் கொண்டிருந்த இந்த காலகட்டத்தில், சென்னை மாநகர வளர்ச்சி குழுமத்திடம்  (சிஎம்டிஎ) உள்ள ஆவணங்கள் படி 2 பிப்ரவரி, 2013 அன்று காக்னிசன்ட் நிறுவனம் சார்பாக, எல்அன்டி நிறுவனம் கட்டிட அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது.

சென்னை சிறுசேரியில் தனது நிறுவனத்தை துவக்க இன்னும் வேறு பல அனுமதிகளுக்கும் காக்னிசன்ட் நிறுவனம் விண்ணப்பித்தது. இந்த அனுமதிகள் பெற்றுத்தர 2 மில்லியன் டாலர் (ரூ.13 கோடி) கமிசன் வேண்டும் என தமிழக அரசு அதிகாரி கேட்டிருக்கிறார். காக்னிசன்ட் அதிகாரிகளான கார்டன் கோபர்ன், ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் இதற்கு ஒப்புதல் தர, அந்தப் பணம் கட்டுமான நிறுவனமான எல்அன்டி மூலம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கை மாறியுள்ளது. காக்னிசன்ட் அதிகாரிகள் கூடுதல் செலவு என கணக்கு காட்டியுள்ளனர். இது நடந்தது ஜுன் 2014ல். ஜெயலலிதாதான் முதலமைச்சர். 2014 நவம்பரில் கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி தரப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஜெயலலிதா பிணையில் வெளியே வந்துவிட்டார்.

ஒரே ஒரு தொழில் துவங்க, ஒரே ஒரு நிறுவனத்திடம் ஒரே ஒரு வகை வேலை நிறைவேற தமிழக அரசு அதிகாரிகள் பெற்றுள்ளதாகச் சொல்லப்படும் தொகை ரூ.13 கோடி என்றால், இந்த காலகட்டத்தில் வந்த முதலீடுகள், அதற்கு முன்பும் பின்பும் வந்த முதலீடுகளில் தமிழக ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எந்த அளவுக்குப் பெரிய தொகை கிடைத்திருக்கும் என்பதன் பின்னால்தான், முதலீடு பற்றி ஆட்சியாளர்கள் காட்டும் ஆர்வத்தின் ரகசியம் உள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடந்த இந்த எந்த கொடுக்கல்வாங்கலுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வைத்துக் கொள்வோம். தமிழ்நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டே, அய்க்கிய அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும். எடுக்க வேண்டும் என கோரிக்கை வந்த பின்னும் அடிமைகளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

2016ல் காக்னிசன்ட் நிறுவனம் நடந்த முறைகேட்டை தெரியப்படுத்தியபோதே, இந்திய வருமான வரித்துறை அது தொடர்பான ஆவணங்களை காக்னிசன்ட் நிறுவனத்திடம் கேட்டது. அய்க்கிய அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அந்த ஆவணங்களை தரவில்லை. இப்போது வருமான வரித் துறை மீண்டும் காக்னிசன்ட் நிறுவனத்திடம் ஆவணங்களைக் கேட்டுள்ளது. ஆவணங்கள் வந்து, பின் விசாரித்து குற்றவாளிகளை உறுதி செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித் துறையை நம்ப, இதற்கு முன் நடந்த அதிரடி சோதனைகள் இடம் தரவில்லை.

ஊழல் வழக்கில், ஊழல் நடந்துள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்து தண்டனையும் தந்த பிறகு, இறந்து போனதால் தப்பித்துவிட்ட ஒருவரை மட்டும் ஊழல் குற்றவாளி என்று சொல்லக் கூடாது என்று அதற்குக் கீழ் உள்ள நீதிமன்றம் சொல்கிறது. ஊழல் குற்றவாளியை ஊழல் குற்றவாளி என்று ஏன் சொல்லக் கூடாது என்று கேள்வி எழுப்ப முடியவில்லை. ஏனென்றால் நீதிமன்றம் ஊழல் குற்றவாளி என்று சொல்லாதே என்று சொல்லி விட்டது. எனவே இனி நாம் ஊழல் குற்றவாளி என்று சொல்லக் கூடாது. இப்போது, மீண்டும் முதல் பத்தியை படிக்கலாம்.

Search