உழைக்கும் சிறைவாசிகளுக்கு
என்ன சம்பளம் தர வேண்டும்?
கலியன்
சிறையில் கட்டாயமாய் உழைக்க வேண்டியவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் தர வேண்டியது அவசியம் என, தேசிய மனித உரிமை ஆணையம், மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் மூலம் 1998ல் உச்சநீதிமன்றம் முன்பு வாதாடியது.
கேரள உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகச் செயல்பட்ட பி.சுப்ரமண்யன் போடி, குறைந்தபட்ச சம்பளத்திற்கும் கூடுதலான ஒரு சம்பளத்தை, சிறையில் கட்டாய உழைப்பில் ஈடுபடுவோருக்குத் தர வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினார். இந்தப் பிரச்சனை ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றங்களால் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு சில வழிகாட்டுதல்களும் தரப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 01.02.2019 அன்று வழங்கிய தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வத்தின் சார்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறைவாசிகள் சம்பளத்தில் அவர்களது உணவு உடை பராமரிப்புக்காக 50% பிடித்தம் செய்ய வழி செய்யும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983ன் விதி 481, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, அதை விடக் குறைவான, நியாயமான பிடித்தம் செய்யலாம் என்றும், 01.02.2019 அன்று தீர்ப்பு வழங்கினார்.
இந்தத் தீர்ப்பின் 4ஆவது பத்தியில், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிதியத்திற்காக, சிறைவாசியின் சம்பளத்தில் 20% பிடிப்பது அநியாயமானதல்ல என, நீதிமன்றம் சொல்லி உள்ளது. 50%க்கு குறைவாக ஒரு பிடித்தமும், அதற்குமேல் ஒரு 20% பிடித்தமும் செய்வதை ஏற்கும் இந்தத் தீர்ப்பு, குறைந்தபட்ச சம்பளம் பற்றி ஏதும் பேசவில்லை.
நீதிபதிகள் முன் இருந்த மனு, சிறைவாசிகள் சம்பளத்திலிருந்து கூடுதல் பிடித்தத்திற்கு வழிசெய்யும் விதி 481 சட்ட விரோதமானது என அறிவிக்குமாறும், தற்சமயம் சம்பளத்தில் பிடித்தம் போகத் தரப்படும் 30% தொகையை 75% என உயர்த்துமாறும் கோரியது. மனு, குறைந்தபட்ச சம்பளம் வழங்குவது தொடர்பானதல்ல. இப்போதும் நீதிமன்றம், என்ன சம்பளம் என்ற முடிவை அரசிடமே விட்டுள்ளது.
தமிழக சிறைகள்: சில விவரங்கள்
தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 தனிச் சிறைகள், 9 மாவட்டச் சிறைகள், ஆண்களுக்கான 88 கிளைச் சிறைகள், பெண்களுக்கான 8 கிளைச் சிறைகள், ஆண்களுக் கான 2 தனி கிளைச் சிறைகள். சிறுவர்களுக்கான 12 போர்ஸ்டல் பள்ளிகள். 3 திறந்த வெளிச் சிறைகள் உள்ளன. இங்கு கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள், முத்திரை அரக்கு, நெசவு, காலணி, சோப், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, கைமுறைக் காகிதம், இயற்கை உர உற்பத்தி, செங்கல், சானிடரி நாப்கின், தொப்பி, காலணி, ரெயின்கோட், தபால் கவர், தீ வாளி, மருந்து பெட்டகம், மர நாற்காலிகள் தயாரிக்கின்றனர். இயற்கை விவசாயம் செய்கின்றனர்.
2009 - 2010ல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வேலை செய்த கைதிகளின் எண்ணிக்கை 1,796. அவர்கள் உற்பத்திப் பொருட்கள், 2010 - 2011ல் ரூ.3 கோடியே 89 லட்சத்து 51 ஆயிரத்துக்கு விற்பனையாயின. 2011 - 2012ல் ரூ.6,07,12,000, 2012 - 2013ல் ரூ.9.57 கோடி, 2014ல் ரூ.13.08 கோடி, 2015ல் ரூ.36.97 கோடி, 2016ல் ரூ.40.17 கோடி, 2017ல் ரூ.45.15 கோடி என விற்பனையாயின.
மாநில அரசாங்கம் இத்தகைய சிறைவாசியின் சராசரி செலவு ரூ.153 என்றும், தான் அன்ஸ்கில்டிடம் ரூ.80, செமி ஸ்கில்டிடம் ரூ.90, ஸ்கில்டிடம் ரூ.100 மட்டுமே பிடிப்பதாகவும், இது தனக்கு கட்டுபடியாகவில்லை என்றும் சொல்கிறது. அதாவது கூடுதல் பிடித்தம் செய்ய வேண்டுமாம்!
சிறையில் கட்டாய உழைப்பு செய்ய ஆணையிட முடியுமா?
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 374, சட்டபூர்வமற்ற கட்டாய உழைப்பு என்ற தலைப்பில், எவர் ஒருவரையும், அவரது விருப்பத்திற்கு மாறாக உழைக்கும்படி கட்டாயப்ப டுத்துகிற எவரையும் ஓராண்டு வரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்குள் சிறைத் தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ, அல்லது அபராதமோ அல்லது இரண்டும் விதித்தோ தண்டனை வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி சிறைக்கு உள்ளேயோ வெளியேயோ சட்டபூர்வ வழியில் அல்லாமல் எவரையும் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 53, கடுமையான உழைப்புடன் கடுங்காவல் மற்றும் சாதாரண (சிம்பிள்) என இரு வகை காவல் தண்டனை பற்றிக் குறிப்பிடுகிறது. பிரிவு 60படி தண்டனை வழங்கும் நீதிமன்றம் கடுமையான உழைப்புடன் கடுங்காவல் அல்லது சாதாரண சிம்பிள் காவல் எனத் தண்டனை வழங்கும் போதே, குறிப்பிட வேண்டும். கடுங்காவல் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அந்த சிறைவாசிகளை, கட்டாயம் உழைத்தாக வேண்டும் என சிறையில் சொல்ல முடியும். இது போக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 23, மனிதரைக் கடத்தி விற்கும் வாங்கும் தொழில், கொத்தடிமை முறை மற்றும் கட்டாய உழைப்பைத் தடை செய்துள்ளது. ஆனால் பிரிவு 23(2), இந்த ஷரத்து, கட்டாய சேவை செய்தாக வேண்டும் என, பொது நோக்கம் கருதி அரசு சொல்வதைத் தடுக்கவில்லை எனவும், ஆனால் அப்படிச் செய்யும்போது, மதம், இனம், சாதி, வர்க்கம் போன்றவற்றால் பாகுபடுத்தக் கூடாது எனவும் சொல்கிறது.
ஆக, பொது நோக்கம் கருதி, இந்திய தண்டனைச் சட்டப்படி, கடுமையான உழைப்பு செய்யுமாறு சிறைவாசிகளைக் கோர சட்டத்தில் இடம் உள்ளது.
பொதுவாக ஆயுள் தண்டனை என்பதே கடுங்காவல் தண்டனை என இந்திய உச்சநீதிமன்றம் ஏஅய்ஆர் 1961 சுப்ரீம் கோர்ட் பக்கம் 600, ஏஅய்ஆர் 1983 நெய்ப் சிங் எதிர் பஞ்சாப் அரசு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தின் 24.09.1998 தீர்ப்பு குறிப்பிடுகிறது.
ஆக, விசாரணை சிறைவாசிகள், தடுப்புக் காவல் சிறைவாசிகள், அபராதம் கட்டாமல் வந்த சிறைவாசிகள் போக, மற்ற சிறைவாசிகளில், அதாவது எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளில், கடும் காவல் தண்டனை பெற்றவர்களை, கட்டாயமாய் வேலை செய்ய வைக்க, சிறை அதிகாரிகளுக்கு சட்டப்படி உரிமை உள்ளது.
ஆனால் விசாரணை சிறைவாசிகளிடம் கட்டாய உழைப்பைச் செய்ய வைப்பது, ஏறத்தாழ எல்லா சிறைகளிலும் வாடிக்கை ஆகும். இது குற்றம். இழிவுபடுத்த, அடக்க, கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவது சித்திரவதை வகைப்பட்டதாகும். ஆனால், சிறை அதிகாரி எவரும் இந்தக் குற்றம் செய்ததற்காக, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக இது வரை தண்டிக்கப்படவில்லை. எல்லா கட்சிகளுக்கும் இது தெரியும். எந்த எந்த விஷயத்தையோ தாமாக விசாரிக்கும் நீதிமன்றங்கள், வழக்கில் எழுப்பப்படாத பிரச்சனைகளில் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்கள், சிறையில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 374க்கு, அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 23க்கு எதிராக விசாரணை சிறைவாசிகளின் மீது ஏவப்படும் கட்டாய உழைப்பு பற்றி, கண்டு கொள்வதாகத் தெரியவில்லை0.
கட்டாய உழைப்புக்கு சம்பளமா?
நம் நாட்டின் இன்றைய சிறைகள், தண்டனைகள், குற்றவியல் முறை பிரிட்டிஷ் பாணியிலானவை. 1877 முதல் 1913 வரை பிரிட்டிஷ் சிறைகளில் மிகக் குறைந்த ஒரு சம்பளமோ அல்லது சிறையில் இருந்து வெளியேறும்போது ஒரு பணிக்கொடையோ தரப்பட்டது. 1913ல் இந்த முறை நீக்கப்பட்டு, பின்னர் மக்கள் கருத்தால் திரும்பவும் வந்தது. கேரளாவில் 1983 வாக்கில் ஒரு நாள் கூலி குறைந்தது 50 பைசா, அதிகபட்சம் ரூ.1.60 என இருந்தது. கேரள சிறை விதிகள் 1958ன் விதி 384 படி, சிறைவாசியின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி அவர் தேவைக்கும், மூன்றில் ஒரு பகுதி அவர் குடும்பத்திற்கும், மூன்றில் ஒரு பகுதி அவர் விடுதலையாகும்போதும் தரலாம்.
1974ல் உச்சநீதிமன்றம், டி.பி.எம்.பட்நாயக் என்பவர் வழக்கில், தண்டனை பெற்றவருக்கு, தண்டனையின் காரணமாக எல்லா அடிப்படை உரிமைகளும் பறிபோகாது, சிறைவாசம் சுதந்திர நடமாட்டத்தையும், ஒரு தொழிலை நடத்தும் உரிமையையும் மட்டும் முடக்கும், சொத்து வாங்க, வைத்திருக்க, விற்க, சிறைவாசிகளுக்கு உரிமை உண்டு, சிறைவாசிக்கும், சட்டப்படி அல்லாமல், வாழ்வுரிமையை, சுதந்திர உரிமையை பறிக்க முடியாது என்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 உரிமை உண்டு, என தீர்ப்பு வழங்கியது.
சிறைவாசமே தண்டனை. அதில் சம்பளம் ஒரு சொகுசா, நாட்டில் நிலவும் கடும் வேலையின்மை, வருமானமின்மை, வறுமை என்ற பின்னணியில், சிறை வேலைக்குச் சம்பளம் தந்தால், சோறு, உடை, தங்க இடமும் இருப்பதால், பலரும் சிறைக்குப் போய் சம்பளம் வாங்கி வாழலாம் என நினைக்க மாட்டார்களா என்ற ஒரு சொத்தை வாதமும் கூட உச்சநீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்டது.
கொடூரமான சிறைவாசத்தை, ஏதோ சம்பளம் கிடைக்கிறது என எவரும் ஏற்க மாட்டாகள் என கேரள உயர்நீதிமன்றம் சொன்னதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. வேலை செய்தால் சம்பளம் உண்டு; சம்பளம் தராத கட்டாய உழைப்பு செல்லாது என்ற புரிதல் 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தெளிவாக உள்ளது.
குறைந்தபட்ச சம்பளம் உண்டா?
சம்பளத்தில் பிடித்தம் செய்யலாமா?
1982ல் டில்லியில் ஏசியட் விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது, இந்திய உச்சநீதிமன்றம், குறைந்தபட்ச சம்பளம் தராவிட்டால், அது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 23படி தடை செய்யப்பட்ட கட்டாய உழைப்பை நிர்ப்பந்திக்கும் குற்றமாகும் என்றது.
1976லேயே இமாசலப்பிரதேச இரு நீதிபதிகள் அமர்வம், சிறைவாசிகளின் சம்பளத்தில், அவர்களது பராமரிப்புக்கென்று எந்த தொகையும் பிடிக்கக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. குஜராத் உயர்நீதிமன்றமும் சம்பளத்தில் பராமரிப்பு செலவு பிடித்தம் தவறு என்றது. கேரள உயர்நீதிமன்றம் 1983 ஏஅய்ஆர் (கேரளா) பக்கம் 261ல் பிரசுரமாகி உள்ள தீர்ப்புப்படி, நியாயமான சம்பளம், வாழும் சம்பளம் தருவது பற்றிக் கூட யோசிக்கலாம் என்றது. உழைப்பில் ஈடுபடும் சிறைவாசிகளுக்கு நியாயமான சம்பளம் தரப்பட வேண்டும் எனச் சொன்ன கேரள உயர்நீதிமன்றம், நியாயமான சம்பளம் என்பது, குறைந்தபட்ச சம்பளத்தை விடக் கூடுதலானது என்றது. இப்படிச் சொன்ன பிறகு, சிறைவாசிகளுக்கு எது நியாயமான சம்பளம் என்பதை அரசு முடிவு செய்ய விட்டுவிடுகிறோம் என்றது. அரசு தந்த அதிகபட்ச நாள் கூலி ரூ.1.60 என்பதை 5 மடங்கு உயர்த்தி நாள் கூலி ரூ.8 என இடைக்கால சம்பளம் நிர்ணயித்தது.
உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?
உயர்நீதிமன்றங்களே சம்பளத்தில் பராமரிப்பு செலவு பிடிக்காதே, கடும் காவல் சிறை வாசிகளுக்கு குறைந்தபட்ச சம்பளம் தா எனச் சொன்னபோது, உச்சநீதிமன்றத்தின் 24.09.1998 தீர்ப்பு ஒரு பின்னடைவே ஆகும். உச்சநீதிமன்றம் குறைந்தபட்ச சம்பளம் சிறைகளிலும் தர வேண்டும் என்றது. கூடவே, பாதிக்கப்பட்டவர்கள் நிதியத்திற்காக, அவர்கள் நலனுக்காக சிறைவாசியின் சம்பளத்தில் ஒரு தொகை பிடிப்பது தவறல்ல என்றது. அதற்கும் சட்டம் போடலாம் என்றது. பராமரிப்புச் செலவுக்கு சம்பளத்தில் பிடிப்பதும் சரியே என, பின்வரும் 3 காரணங்கள் சொன்னது.
1. குறைந்தபட்ச சம்பள சட்டமே, வீட்டு வாடகை, நலப்பயன்களுக்குப் பிடித்தம் செய்ய இடம் தருகிறது. சிறைக்கு வெளியே குறைந்தபட்ச சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய முடியுமென்றால் சிறைக்குள்ளும் செய்ய முடியும்.
2. சமூகமே சிறையில் வைக்கிறது. சமூகமே வேலை வாங்குகிறது. சமூகமே சம்பளம் தருகிறது. சமூகமே பராமரிக்கிறது. சமூகம், சம்பளத்தில் பிடித்தம் செய்ய உரிமை கொண்டுள்ளது.
3. சிறைக்கு வெளியே உள்ளவர்க்கு குறைந்தபட்ச சம்பளம் மட்டுமே உண்டு. உணவு, உடை, தங்குமிடம் கிடையாது. சிறைக்குள் இருப்பவர்க்கு, குறைந்தபட்ச சம்பளம் போக, கூடுதலாக உணவு, உடை, தங்குமிடம் தந்தால், அது தண்டிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு கூடுதல் பயன் தருவதாக அமையும்.
கடைசியில் உச்சநீதிமன்றம் பின்வரும் வழிகாட்டுதல்களுடன் முடித்துக் கொண்டது:
1. கடும்காவல் சிறைவாசி ஒப்புக்கொண்டாலும் மறுத்தாலும், அவரை வேலையில் ஈடுபடுத்துவது சட்டபூர்வமானதே.
2. மற்ற வகை சிறைவாசிகளையும், அவர் ள் கோரினால், அவர்கள் கேட்கும் வேலையைச் செய்யச் சொல்ல முடியும்.
3. சிறைவாசிக்கு நியாயமான சம்பளம் தரப்பட வேண்டும். சாத்தியமான அளவுக்கு விரைவாக, இதற்கான குழு அமைத்து சம்பள நிர்ணய பரிந்துரை செய்யலாம்.
4. ஆறு வாரங்களுக்குள் இடைக்கால சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5. பாதிக்கப்பட்டோர் நிதியம் அமைக்க வேண்டும். அதற்காகச் சம்பளத்தில் எவ்வளவு பிடிக்கலாம் எனச் சட்டம் போட வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தாண்டி
சமூகம் குற்றவாளிகளை உருவாக்குகிறது எனவும் குற்றவாளி குற்றம் செய்கிறான் எனவும், எய்தவன் இருக்க அம்பை நோகலாமா எனவும் நாகரிக சமூகம் கேள்வி எழுப்புகிறது. மரண தண்டனை வேண்டாம், நீண்ட கால சிறை வைப்பு வேண்டாம் என்கிறோம். ராஜீவ் காந்தி வழக்கில் எழுவர் 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பது அநீதியானது, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிறோம். சமூகத்தின் முதிர்ச்சியின், பண்பாட்டின் மட்டம், சிறைவாசிகள் நிலைமை கொண்டுதான் அளக்கப்பட முடியும். ஏகப்பெரும்பான்மை மக்கள் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்படவில்லை என்றால், நீதியும் நியாயமும் சமூகத்தில் நிலவினால், அங்கு சிறைகள் படிப்படியாக இழுத்து மூடப்படும்.
சிறை சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கூறாகும். அதற்காக தீர்ப்புக்கள் மறு சீராய்வுக்கு உள்ளாக்கப்படலாம். புதிய தீர்ப்புகள் வரலாம். வரவேண்டும்.
குஜராத் உயர்நீதிமன்றம் முன்வைத்த வாதம் சரியானது:
விசாரணை சிறைவாசிகள், தடுப்புக் காவல் சிறைவாசிகள், சிறையில் உள்ளனர். அவர்களிடம் வேலை வாங்கப்படாமலேயே, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தரப்பட்டுள்ளது. கடுங்காவலில் உள்ளவர்கள் நோயுற்று வேலை செய்ய முடியாமல் போனால், அவர்களுக்கு சோறு கிடையாது எனச் சொல்ல முடியுமா? வேலை இல்லாததால் வேலை தர முடியாத நாட்களில் என்ன செய்வது? மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் மிருகங்களுக்கும், காவலில் வைத்திருப்பவரே காவலில் இருப்பவரைப் பராமரிக்க வேண்டும். அவர்களுக்கு சுதந்திரம் இல்லாதபோது, அவர்களுக்கு சோறு போட்டாக வேண்டும். நல்ல துணி, நல்ல உணவு தராமல், அவர்கள் கேட்ட உணவு உடை தராமல், நீ சாப்பிட்டதற்கு துணி அணிந்ததற்கு, தங்கி இருந்ததற்கு, உன் சம்பளத்தில் பிடிப்போம் என்பது, கொடூரமானதில்லை என்றாலும், அநாகரிகமானது. தண்டனை சிறைவாசிகள் பணம் தர வேண்டும், மற்ற சிறைவாசிகள், தர வேண்டாம் என்பது சமத்துவக் கோட்பாட்டுக்குப் புறம்பானது.
தமிழ்நாட்டில், எழுவர் விடுதலை, குறிப்பாக, இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்டு, பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிற அனைவரின் விடுதலை, சித்திரவதைகளிலிருந்து சிறைவாசிகளுக்கு விடுதலை ஆகியவற்றுக்காக போராடும்போது, சிறைவாசிகளுக்கு குறைந்தபட்ச சம்பளத்துக்கும் சற்று கூடுதலான சம்பளம் என்ற கோரிக்கைகளுக்காக, கட்டாயம் போராடியாக வேண்டும்.