COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 15, 2019

பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள்
கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம்


எ.கோவிந்தராஜ்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஏறி வரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல்,
ஜவுளி உற்பத்தியாளர்கள் லாபங்களை தங்களுக்காக்கி தொழிலாளர்களுக்கு கூலி இழப்பை, வேலை இழப்பை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளபோது, தொழிலாளர்கள் மத்தியில் கூலி உயர்வு போராட்டம் வெடித்துள்ளது.
07.03.2019 முதல் பள்ளிப்பாளைம் அருகில் உள்ள ஆவத்திபாளையத்தில் சுமார் 100 விசைத்தறி கூடங்களில் 1000 தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஏஅய்சிசிடியு சங்கத்தின் மூலம் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
ஏஅய்சிசிடியு சங்கம் முதலாளிகள் சங்கத்திற்கு வைத்த கோரிக்கை மனுவில், தினசரி 8 மணி நேர வேலைக்கு ஒரு தறிக்கு ரூ.150 சம்பளம், தார் ஓட்டும் பெண்களுக்கு ஒரு தறிக்கு ரூ.100 சம்பளம், பாவு ஓட்டுபவர்களுக்கு அச்சு, மலுக்கு அச்சு பிணைப்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியை விட ஒரு பாவுக்கு ரூ.100 உயர்வும் கோரப்பட்டது. சிஅய்டியு சார்பில் ஒரு பகுதியில் 28.01.2019 அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் பழைய முறைப்படி பீஸ் ரேட் அடிப்படையில் கூலி உயர்வு கோரிக்கை வைத்தனர்.
ஏஅய்சிசிடியு சங்கம் சமரசமின்றி தொழி லாளர்கள் பக்கம் நிற்பதால் ஏஅய்சிசிடியு சங்கத்தை முதலாளிகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு முறையாக அழைக்க மாட்டார்கள். அழையா விருந்தாளிகள் போல் ஏஅய்சிசிடியு சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
2015ல் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பள்ளிபாளையம், குமாரபாளையம் இரண்டு  பகுதிகளுக்கும் 20% கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது பள்ளிப்பாளையத்தில் 25% கூலி உயர்வு ஒப்பந்தம் அமலில் இருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பால் 5% குறைந்து போனது. மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்து, அமைச்சர் தங்கமணி முன்னிலையில் 2.5% கூடுதலாக உயர்வு ஒப்புக்கொள்ளப்பட்டு ஒப்பந்தத்தில் சிஅய்டியு கையொப்பமிட்டது. ஏஅய்சிசிடியு கையொப்பம் இடவில்லை.
தற்போது 22.5% கூலி உயர்வு அமலில் இருக்கும்போது முதலாளிகள் சங்கம் 8%தான் கூலி உயர்வு தர முடியும் எனச் சொல்கின்றனர்.
ஏஅய்சிசிடியு சங்கம் வழக்கமாக பீஸ் ரேட் முறையில்தானே கூலி உயர்வு கேட்கும், இந்த முறை ஏன் சம்பள முறை  கேட்கிறீர்கள் என்று முதலாளிகள் சங்கம் ஏஅய்சிசிடியு நிர்வாகிகளிடம் கேட்கிறது. பள்ளிபாளையத்தில் இயங்கும் தறிகளுக்கு வயது 50. அந்தத் தறிகளை ஓட்டும் தொழிலாளர்களுக்கு வயது 60. இளைய தலைமுறை தொழிலாளர்கள் தறி ஓட்டுவதில்லை. 8 மணி நேர வேலை நாட் கூலி ரூ.1,000 என்றால் படித்த இளைஞர்கள் வருவார்கள். இந்த விசயங்களை முன்வைத்து புதிய சம்பள முறை கேட்பதாகவும், தற்போது ஆக்டிங் தறி ஓட்டுபவர்கள் சம்பளம் பெறுவ தாகவும் விளக்கம் தரப்பட்டது. முதலாளிகள் சங்கம், ஏஅய்சிசிடியு தலைமையிலான சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை.
முதலாளிகள் சங்கம் தருவதாக கூறிய 8% உயர்வை, ஒப்பந்தம் எதுவும் போடாமல் சிஅய்டியு வேலை நிறுத்தம் நடத்திய பகுதியில் முதலாளிகள் அமல்படுத்தியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் கூலி உயர்வு பிரச்சனையில் அரசு தலையிட கோரியும் விசைத்தறியில் உற்பத்தி செய்த ஜவுளிகள் விற்காமல் தேங்கி உள்ளதால் அதை அரசு கொள்முதல் செய்து ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் 07.03.2019 முதல்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
பள்ளிபாளையம் பகுதியை மய்யப்படுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை விரிவாக எடுத்து செல்லும் நடவடிக்கையாக இரு சக்கர வாகன பிரச்சாரமும் தெருமுனைக் கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டது. காவல்துறை அனுமதி பெற்ற பிறகு 09.03.2019 அன்று முதலமைச்சர் பள்ளிபாளையம் வருவதாகச் சொல்லி காவல்துறை அனுமதியை ரத்து செய் தது. ஆனால் முதலமைச்சர் வரவில்லை.
11.03.2019 அன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிடப்பட்டது. தேர்தல் அறிவிப்பால் திரும்பப் பெறப்பட்டது. வேலை நிறுத்தம் தொடர்கிறது.
தேர்தல் அறிவிப்பு வந்துள்ளதால், எந்த கோரிக்கைக்கும் தேர்தலைக் காரணம் காட்ட அதிகாரிகள் தயாராக இருக்கிற அதேநேரம், தேர்தல் சமயத்திலாவது தொழிலாளர்களின் போராட்டம் தரும் நிர்ப்பந்தத்தால், கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முன்வருமா என பார்க்க வேண்டியுள்ளது.

Search