COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 15, 2019

1914 - 1915 காலத்து புரட்சியாளர்களின் கருத்துகள்

(லாலா ராம் சரண் தாஸ், 1915ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சேலம் சிறையில் இருந்தபோது ‘கனவு’ என்ற கவிதை நூலை எழுதினார்.
சிறையில் இருந்து விடுதலையான பின் பகத் சிங்கின் இந்துஸ்தான் சோசலிச புரட்சிகர அமைப்பில் இணைந்து பணியாற்றினார். பிறகு மீண்டும் இரண்டாண்டுகள் சிறை தண்டனையில் சிறை சென்றபோது தனது கவிதை நூலை பகத் சிங்குக்கு அனுப்பி அவரது அறிமுக உரையை கேட்டார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையில் கழித்த ஒருவர், காலனிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் எழுதிய கவிதை நூலுக்கு, அந்த சமயத்தில் தூக்குதண்டனையை எதிர்கொண்டு சிறையில் இருந்த, 23 வயது நிரம்பாத இளைஞன் பகத் சிங் எழுதிய அறிமுக உரை. ஏப்ரல் 8, 1929 அன்று கைது செய்யப்பட்ட பகத் சிங், 1931 மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டார். அவருடன் ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டனர்)

என் இனிய நண்பர் எல். ராம் சரண் தாஸ், ‘கனவு உலகம்’ என்ற அவரது கவிதை நூலுக்கு ஓர் அறிமுகவுரை எழுதித் தருமாறு கேட்டார். நான் கவிஞனல்ல. நான் இலக்கியவாதியுமல்ல. நான் ஒரு பத்திரிகையாளனல்ல. விமர்சகனும் அல்ல. எனவே, எப்படிப் பார்த்தாலும் அவர் இப்படி கேட்டதை நியாயப்படுத்த முடியவில்லை. ஆனால் நான் இன்று இருக்கிற நிலைமைகளில் இது பற்றி அவரிடம் பேச முடியவில்லை. இப்படி, அப்படி என்று வாதம் செய்ய முடியவில்லை. எனவே எனது நண்பரின் விருப்பத்தை நிறைவேற்றுவது தவிர எனக்கு வேறு வழியில்லை.
நான் ஒரு கவிஞனல்ல என்பதால், இது பற்றி நான் அந்த கோணத்தில் இருந்து பேசப் போவதில்லை. கவிதையை எதைக் கொண்டு அளப்பது என எனக்குத் தெரியாது. அளந்தால் சரியாக இருக்குமா என்று கூட எனக்குத் தெரியாது. நான் ஓர் இலக்கியவாதியும் அல்ல என்பதால், தேசத்தின் இலக்கியத்தில் அதற்கு பொருத்தமான இடம் தருவது என்ற பொருளிலும் நான் இது பற்றி பேசப் போவதில்லை.
அரசியல் செயற்பாட்டாளனாகிய நான், அதிகபட்சம் அந்த கோணத்தில் இருந்துதான் இது பற்றி விவாதிக்க முடியும். இங்கும் எனது பணியை நடைமுறைரீதியாக சாத்தியமற்ற தாக்கிவிடும் அல்லது மிகுந்த சிரமமானதாக்கிவிடும் ஒரு பிரச்சனை உள்ளது. எழுத்தாளர் ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதும்போது, அந்தப் பணியில் ஒத்த கருத்து உடைய ஒருவர் அறிமுக உரை எழுதுவதுதான் வழக்கம். ஆனால், அப்படி நடக்கவில்லை. எனது நண்பரோடு எந்த விசயத்திலும் நான் உடன்படவில்லை. பல முக்கியமான அம்சங்களில் நான் அவரிடம் இருந்து மாறுபடுவேன் என்று அவருக்குத் தெரியும். எனவே நான் எழுதப் போவது ஓர் அறிமுக உரையாகவே இருக்காது. அது அதிகபட்சம் ஒரு விமர்சனமாகவே இருக்கும். எனது அறிமுக உரை புத்தகத்தின் கடைசி பக்கங்களில் இருக்கும்; அதன் துவக்க பக்கங்களில் இருக்காது.
அரசியல் களத்தில் ‘கனவு உலகம்’ ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இன்றைய நிலைமைகளில், இயக்கத்தில் இருக்கிற ஒரு முக்கியமான இடைவெளியை அது இட்டு நிரப்புகிறது. உண்மையில் நமது நவீனகால வரலாற்றில் இது வரை முக்கிய பங்காற்றியிருக்கிற நமது நாட்டின் எல்லா அரசியல் இயக்கங்களுக்கும் அவற்றின் நோக்கங்களை அடைவதற்கு அவசியமான உன்னதமான பார்வை இல்லை. புரட்சிகர இயக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எவ்வளவோ முயற்சி செய்தும், தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பது பற்றிய தெளிவான கருத்துகள் கொண்ட ஒரு புரட்சிகர கட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. அய்க்கிய அமெரிக்க அரசாங்க வடிவத்தால் உத்வேகம் பெற்றுள்ள கதார் கட்சி ஒரு விதி விலக்கு. நிலவுகிற அரசாங்கத்தை குடியரசு முறையிலான அரசாங்கம் கொண்டு மாற்ற வேண்டும் என்று அவர்கள் தெளிவாக அறிவித்தனர். பிற கட்சிகளிலும் அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட வேண்டும் என்ற ஒரு கருத்து இருந்தது. இந்தக் கருத்து பாராட்டத்தக்கது. ஆனால் இதை ஒரு புரட்சிகர கருத்து என்று சொல்ல முடியாது. புரட்சி வெறும் எழுச்சியோ, ரத்த வெறி கொண்ட சண்டையோ அல்ல என்பதை நாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். இருக்கிற நிலைமைகளை (ஆட்சியை) முழுவதுமாக தூக்கியெறிந்த பிறகு, சமூகத்தை புதிய, மேலான அடிப்படையில், கட்டமைக்கப்பட்ட விதத்தில் மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தை குறித்துக் காட்டுவதுதான் புரட்சி.
அரசியல் களத்தில், தற்போதைய அரசாங்கம் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தாராளவாதிகள் கேட்கிறார்கள்; தீவிரவாதிகள் இன்னும் சற்று கூடுதலாக கோருகிறார்கள்; அவர்கள் அதற்காக அதிதீவிரமான வழிமுறையை கையாளவும் தயாராக இருக்கிறார்கள். புரட்சியாளர்கள் மத்தியில், அந்நிய மேலாதிக்கத்தை தூக்கியெறிவது என்ற ஒரு விசயத்தில், அதிதீவிர வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு எப்போதும் ஆதரவு உள்ளது. அந்த வழிமுறைகள் மூலம் சில சீர்திருத்தங்களை பலவந்தமாக பெற்றுக் கொள்வது என்ற கருத்துக்கு ஆதரவாகவும் சிலர் இருந்தனர் என்பதில் அய்யமில்லை. இந்த இயக்கங்களை எல்லாம் புரட்சிகர இயக்கம் என்று சொல்லி விட முடியாது.
ஆனால், எல்.ராம் சரண் தாஸ், தலை மறைவு வாழ்வில் இருந்த, வங்கத்தைச் சேர்ந்த ஒருவரால், 1908ல், பஞ்சாபில், முறைப்படி சேர்க்கப்பட்ட முதல் புரட்சியாளர் ஆவார். அப்போதிருந்தே அவர் புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தார். கடைசியில் கதர் கட்சியில் சேர்ந்தார். ஆனால், தங்கள் இயக்கத்தின் லட்சியம் பற்றிய தனது பழைய கருத்துகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் அழகுக்கும் மதிப்புக்கும் இன்னும் கூடுதல் அழகும் மதிப்பும் சேர்க்கும் சுவையான விசயம் ஒன்று உள்ளது. 1915ல் எல்.ராம் சரண் தாசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இன்று இந்த தண்டனைச் சிறையில் அமர்ந்து கொண்டு, மரணத்தை விட ஆயுள் தண்டனை ஒப்பீட்டுரீதியில் கடுமையானது என்று நான் வாசகர்களுக்கு முழுஉரிமையுடன் சொல்ல முடிகிறது. எல்.ராம் சரண் தாஸ் உண் மையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுப விக்க வேண்டியிருந்தது. தென்னிந்திய சிறை ஒன்றில் அவர் இந்த கவிதையை எழுதியிருக்கிறார். அப்போது அவருக்கு இருந்த மனநிலையும் மனப் போராட்டமும் கவிதையில் தாக்கம் செலுத்தி, அதனை இன்னும் அழகானதாகவும் சுவையானதாகவும் மாற்றியுள்ளன. எழுதுவது என முடிவெடுக்கும் முன்பு மனஉளைச்சலுக்கு எதிராக அவர் கடுமையாக போராடியிருக்கிறார். உறுதிமொழிக் கடிதங்கள் தந்ததன் அடிப் படையில் அவரது தோழர்கள் பலரும் விடுவிக்கப்பட்டுவிட்ட அந்த நாட்களில், அனைவருக்கும், அவருக்கும் அந்த சலனம் வலுவானதாக இருந்தது. மனைவியின், குழந்தைகளின் இனிய நினைவுகள் வேதனை தந்ததும் அவரது கவிதைக்கு கூடுதல் அழகும் மதிப்பும் தந்துள்ளன. எனவே, துவக்க வரிகளில் ஒரு திடீர் வெடிப்பை நாம் காண்கிறோம்:
‘மனைவியும் குழந்தைகளும் நண்பர்களும்
விஷப் பாம்புகள் போல என்னைச் சூழ்ந்தார்கள்’
முதலில் அவர் சித்தாந்தம் பேசுகிறார். இந்த சித்தாந்தம்தான், வங்கத்தின், பஞ்சாபின் புரட்சிகர இயக்கத்தின் முதுகெலும்பு. இந்த விசயத்தில் நான் அவர் சொல்வதில் இருந்து பெரிதும் மாறுபடுகிறேன். பிரபஞ்சம் பற்றிய அவரது வியாக்கியானம், நோக்கவியல் வகைப்பட்டது; இயக்க மறுப்பியல் வகைப்பட்டது. பொருள்முதல்வாதியான எனது வியாக்கியானம் சாதாரணமானதாக இருக்கும். ஆயினும் அது தொடர்பற்றதாகவோ, காலம் கடந்ததா கவோ இல்லை. நமது நாட்டில் நிலவுகிற பொதுவான லட்சியம், அவர் வெளிப்படுத்தியுள்ளவற்றுடன்தான் பெரிதும் பொருந்திப் போகிறது. அந்த துயரமான மன நிலையுடன் போராட அவர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்; அவரது புத்தகத்தின் துவக்க பக்கங்கள் கடவுளுக்கு, கடவுள் பற்றிய புகழுக்கு, கடவுள் பற்றிய வரையறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதில் அது தெளிவாகத் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை மாயாவாதத்தின் விளைவாகும். துன்பத்தின் இயல்பான விளைவு அது. இந்த உலகம் ‘மாயா’ அல்லது ‘மித்யா’, மாயை அல்லது பொய் என்பது தெளிவான மாயாவாதம். இது சங்கராச்சாரியார் மற்றும் பிறர் போன்ற பண்டைய காலங்களின் இந்து துறவிகளால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனால் பொருள்முதல்வாத சித்தாந்தத்தில் இது போன்ற சிந்தனை முறைக்கு சற்றும் இடம் இல்லை. ஆனால், ஆசிரியரின் இந்த மாயாவாதம் இழிவானதோ, வருந்தத்தக்கதோ அல்ல. அவர்களும் உற்பத்தி உழைப்பில் ஈடுபடுகிறார்கள். கருத்தால் வேலை செய்பவர்கள் கரத்தால் வேலை செய்பவர்களை விட மேலானவர்கள் என கருதப்படக் கூடாது என்று சோசலிச சமூகம் எதிர்ப்பார்க்கிறது என்பதுதான் ஒரே ஒரு வேறுபாடு.
இலவச கல்வி பற்றிய எல்.ராம் சரண் தாசின் கருத்துகள் உண்மையில் கணக்கில் கொள்ளத்தக்கவை. ரஷ்யாவின் சோசலிச அரசாங்கம் கிட்டத்தட்ட இதே போன்ற ஒன்றைத்தான் கடைபிடிக்கிறது.
குற்றம் பற்றி அவர் சொல்வது உண்மையில் மிகவும் முன்னேறிய சிந்தனை வகைப்பட்டது. குற்றம் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சனை. அதற்கு சாதுரியமான அணுகுமுறை தேவை. தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர் சிறையில் கழித்திருக்கிறார். அவருக்கு நடைமுறை அனுபவம் இருக்கிறது. ஓர் இடத்தில் ‘இலகுவான உழைப்பு, இலகுவானதும் அல்லாத கடினமானதும் அல்லாத உழைப்பு, கடினமான உழைப்பு’ என, அவர் வகைமாதிரி சிறை சொல்லாடலை பயன்படுத்துகிறார். மற்ற எல்லா சோசலிஸ்டுகளைப் போல, அவரும் பழிக்குப் பழியாக தண்டனை தருவது, அதாவது பதிலடி தருவது என்பதற்குப் பதிலாக, சீர்திருத்துவது என்பது தண்டனையின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். தண்டிப்பது அல்ல, பழைய நிலைக்கு மீட்டு கொண்டு வருவதே, நீதி பரிபாலனத்தின் வழிகாட்டும் கோட்பாடாக இருக்க வேண்டும் என்கிறார். சிறைகள் சீர்திருத்தக் கூடங்களாக இருக்க வேண்டுமேயன்றி, உண்மையான நரகங்களாக இருக்கக் கூடாது என்கிறார். இது தொடர்பாக வாசகர்கள் ரஷ்ய சிறை கட்டமைப்பு பற்றி படிக்க வேண்டும்.
ராணுவம் பற்றி பேசும்போது, போர் பற்றியும் அவர் பேசுகிறார். என்னைப் பொறுத்தவரை, போர், ஒரு நிறுவனம் என்ற பொருளில், சொற்களஞ்சியத்தின் மிகச் சில பக்கங்களில் மட்டும்தான் இருக்க வேண்டும், போர் பற்றிய செய்திகளும் தரவுகளும் போருக்குக் காரணமான, எதிரெதிரான, பல்வகைப்பட்ட நலன்களை வியந்து சொல்வதாக இருக்கக் கூடாது.
மாறிச் செல்லும் கட்டத்துக்கான ஒரு நிறுவனமாக போரை பயன்படுத்த வேண்டும் என்று நாம் அதிகபட்சம் சொல்லலாம். இன்றைய ரஷ்யாவை உதாரணமாகக் கொண்டால் நாம் இதனை எளிதாக புரிந்து  கொள்ளலாம். இப்போது அங்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நடக்கிறது. அவர்கள் ஒரு சோசலிச சமூகம் உருவாக்க விரும்புகிறார்கள். அதே நேரம் முதலாளித்துவ சமூகத்துக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு படையும் அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் போரின் இலக்குகள் மாறுபட்டவையாக இருக்கும். இனி ஏகாதிபத்திய சதிகளுக்கு இடம் கிடையாது. இனி மேலும் போர் பதக்கங்கள் இருக்கக் கூடாது. புரட்சிகர படைகள் மற்ற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களை சிம்மாசனத்தில் இருந்து அகற்றி, ரத்தம் குடிக்கும் அவர்களது சுரண்டலை தடுத்து நிறுத்தி, உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும். ஆனால் போர் புரிய வேண்டியவர்களுக்கான தூண்டுதலாக, பழைய தேசிய அல்லது இன வெறுப்பு இருக்கக் கூடாது.
சுதந்திர சிந்தனையாளர்கள் அனைவருக் கும் சர்வதேச கூட்டமைப்பு மிகவும் ஜனரஞ்சகமான, உடனடி நோக்கமாக உள்ளது. ஆசிரியர் அது பற்றி விரிவாக எழுதியுள்ளார். லீக் ஆஃப் நேஷன்ஸ் என்று அழைக்கப்படுவது பற்றிய அவரது விமர்சனம் அழகாக உள்ளது.
பத்தி 571க்கான (572) அடிக்குறிப்பில், வழிமுறைகள் பற்றி ஆசிரியர் சுருக்கமாக பேசுகிறார். ‘வன்முறை புரட்சி மூலம் அது போன்ற ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அதை வெளியில் இருந்து சமூகத்தின் மீது திணிக்க முடியாது. அது உள்ளுக்குள் இருந்தே வளர வேண்டும். பரிணாம வளர்ச்சியின் படிப்படியான இயக்கப்போக்கில், மேலே சொல்லப்பட்டுள்ளவை பற்றி மக்களுக்கு கல்வி தருவதன் மூலம், இதை உருவாக்க முடியும்’ என்றெல்லாம் சொல்கிறார். இதில் அதற்குள்ளேயே எந்த முரண்பாடும் இல்லை. அது சரிதான். ஆனால் முழுமையான விளக்கம் தரப்படாத தால் அது சில தவறான புரிதல்களை, குழப்பங்களைக் கூட உருவாக்கக் கூடும். வன்முறை கலாச்சாரத்தின் பயனற்ற தன்மையை எல்.ராம் சரண் தாஸ் உணர்ந்துவிட்டார் என்று இதற்கு பொருளாகுமா? அகிம்சாவாதத்தின் பழமைவாத ஆதரவாளராகி விட்டாரா? இல்லை. இதற்கு அதுவல்ல பொருள்.
இந்த கூற்றுக்கு என்ன பொருள் என்று நான் விளக்குகிறேன். வன்முறை மூலம் சோசலிச சமூகத்தை உருவாக்க முடியாது என்று வேறு யாரையும் விட புரட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்; ஆனால் அது உள்ளுக்குள் இருந்தே உருவாகி வளர வேண்டும். கல்வி மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரே ஆயுதம் என்று ஆசிரியர் சொல்கிறார். ஆனால், இன்று இங்கு இருக்கிற அரசாங்கம், அல்லது எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் இது போன்ற ஒரு முயற்சிக்கு உதவப் போவதில்லை. மாறாக, கருணையே இல்லாமல் அதை நசுக்கி விடும். பிறகு, இந்தப் ‘பரிணாமம்’ எதைச் சாதிக்கும்? புரட்சியாளர்களாகிய நாம் நமது கைகளில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என, இன்று ரஷ்யாவில் நடப்பதைப் போல், தனது அனைத்து ஆதாரங்களையும் வெகுமக்கள் கல்விக்காக பிரயோகிக்கும் ஒரு புரட்சிகர அரசாங்கம் அமைக்க வேண்டும் என  பாடுபடுகிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஆக்கபூர்வமான பணிகளுக்கு அமைதியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படும். தடைகளை தகர்க்க பலவந்தங்கள் பயன்படுத்தப்படும். ஆசிரியர் இதைத்தான் சொல்கிறார் என்றால், நாங்கள் ஒரே விசயத்தைச் சொல்கிறோம் என்று பொருள். அவர், இதைத்தான், மிகச் சரியாக இதைத்தான் சொல்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தப் புத்தகம் பற்றி நிறைய சொல்லியுள்ளேன். உண்மையில் அது பற்றிய விமர்சனம் முன்வைத்துள்ளேன். ஆனால் இதில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டும் என நான் சொல்லப் போவதில்லை. ஏனென்றால், அதற்கு அதன் வரலாற்றுரீதியான மதிப்பு உள்ளது. 1914 - 1915 கால புரட்சியாளர்களின் கருத்துகள் இவை.
இளைஞர்கள் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன். ஆனால் ஓர் எச்சரிக்கை. அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்ற அதைப் படிக்க வேண்டாம்; அதில் இருப்பதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். படியுங்கள். விமர்சனம் செய்யுங்கள். அது பற்றி சிந்தியுங்கள். அதன் உதவியுடன் உங்கள் சொந்த கருத்துகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்

Search