COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 16, 2019

கட்டாய ஆட்சி மொழி ஒன்று தேவைதானா?

லெனின்
ஜனவரி 18, 1914


துவக்கப் பள்ளிகளிலாவது தாய் மொழிக் கல்வி பயிலும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் தாராளவாதிகள் பிற்போக்குவாதிகளிடம் இருந்து மாறுபடுகிறார்கள்.
ஆனால், ஒரு கட்டாய ஆட்சி மொழி தேவை என்பதில் அவர்கள் பிற்போக்குவாதிகளுடன் முழுவதுமாக உடன்படுகிறார்கள்.
கட்டாய ஆட்சி மொழி என்பது என்ன? நடைமுறையில் அது, ரஷ்யாவின் சிறுபான்மை யினரான மகாரஷ்யர்களின் மொழி; ரஷ்யாவின் பிற மக்கள் பிரிவினர் மீது திணிக்கப்பட்ட மொழி. பள்ளிகளில் ஆட்சி மொழியை பயிற்று விப்பது கடமை. எல்லா அலுவல் தொடர்புகளும் ஆட்சி மொழியில் இருக்க வேண்டுமே தவிர உள்ளூர் மொழியில் அல்ல.
ஒரு கட்டாய ஆட்சி மொழி வேண்டும் என்று சொல்கிற கட்சிகள் எந்த அடிப்படையில் அதன் அவசியத்தை நியாயப்படுத்துகிறார்கள்?
கறுப்பு நூற்றுவர்களின் ‘வாதங்கள்’ முரட்டுத்தனமானவை. ரஷ்யர் அல்லாதவர்கள் நம் ‘கைகளை மீறிச் சென்று விடாமல் இருக்க’ அவர்களை இரும்புத் தடிகள் கொண்டு ஆள வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ரஷ்யா பிளவுபடுத்தப்பட முடியாததாக இருக்க வேண்டும்; மகாரஷ்ய ஆட்சிக்கு மக்கள் அனைவரும் கீழ்படிந்தவர்களாக இருக்க வேண்டும்; ஏனென்றால் மகாரஷ்யர்கள்தான் ரஷ்யா என்ற தேசத்தை கட்டியெழுப்பி ஒன்றுபடுத்தினார்கள். எனவே ஆளும் கட்சியின் மொழி கட்டாய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். ரஷ்ய மொத்த மக்கள் தொகையின் 60 பேர் ‘உள்ளூர் மொழிகளை’ பேசுகிறார்கள் என்றாலும், அந்த மொழிகளை மொத்தமாக தடை செய்வதில் புரிஷ்கேவிச்சுகளுக்கு ஆட்சேபணை இருக்காது.
தாராளவாதிகளின் அணுகுமுறை மிகவும் ‘நாகரிமானது’; ‘பண்பட்டது’. குறிப்பிட்ட எல்லைகளுக்குள் (உதாரணமாக துவக்கப் பள்ளிகளில்) தாய்மொழி பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கி றார்கள். அதே நேரம், ‘கலாச்சாரத்தின்’ நலன்களுக்காக, ‘ஒன்றுபட்ட’, ‘பிளவுபடுத்தப்பட முடியாத’ ரஷ்யாவின் நலன்களுக்காக, இன்னும் இது போன்ற நலன்களுக்காக, ஆட்சி மொழி என ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
“கலாச்சார ஒற்றுமையின் உறுதிப்பாடுதான் தேசம்..... ஆட்சி மொழி ஒன்று தேச கலாச்சாரத்தின் சாரமான பகுதி.... தேசம், அதிகாரத்தின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது; ஆட்சி மொழி அந்த ஒற்றுமையின் ஒரு கருவி. தேசத்தின் மற்ற அனைத்து வடிவங்களையும் போல, ஆட்சி மொழியும் அதே கட்டாய, அனைத்தும் தழுவிய நிர்ப்பந்திக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது....”
“ரஷ்யா ஒன்றுபட்டதாக, பிளவுபடுத்தப் பட முடியாததாக இருக்க வேண்டுமானால், ரஷ்ய இலக்கிய மொழியின் அரசியல் அவசியம் பற்றி நாம் உறுதிப்பட வலியுறுத்த வேண்டும்”.
ஆட்சி மொழி ஒன்று அவசியம் என்பது பற்றிய ஒரு தாராளவாதியின் வகைமாதிரி சித்தாந்தம் இது.
மேலே உள்ள பத்தியை டையன் என்ற தாராளவாதப் பத்திரிகையில் திரு.எஸ்.பேட்ரஷ்கின் எழுதிய கட்டுரையில் இருந்து நாம் மேற்கோள் காட்டியிருக்கிறோம். இந்த கருத்துகளின் ஆசிரியருக்கு கறுப்பு நூற்றுவர்களின் நோவோயே விரெம்யா, ஓர் ஆரவாரமான முத்தம் தருவது புரிந்து கொள்ளக் கூடியதே. திரு.எஸ்.பேட்ரஷ்கின் ‘மிகவும் அழுத்தமான’ கருத்துகள் சொல்கிறார் என்று மென்ஷிகோவின் பத்திரிகை சொல்கிறது (எண்.13588). இது போன்ற ‘அழுத்தமான’ கருத்துகளுக்காக, கறுப்பு நூற்றுவர்கள் தொடர்ந்து பாராட்டும் மற்றொரு தேசிய - தாராளவாத பத்திரிகை ரஷ்கயா மிசல். தாராளவாதிகள் தங்கள் ‘பண்பட்ட’ வாதங்களின் உதவியுடன் நோவோயே விரெம்யாகாரர்களை மகிழ்விக்கும் கருத்துகளை முன்னெடுக்கும்போது, அவர்களை பாராட்டாமல் கறுப்பு நூற்றுவர்களால் எப்படி இருக்க முடியும்?
ரஷ்ய மொழி மகத்தானது, வலிமையானது என்று தாராளவாதிகள் நமக்குச் சொல்கிறார்கள். ரஷ்யாவின் எல்லை பிராந்தியங்களில் வாழும் அனைவருக்கும் இந்த மகத்தான, வலிமையான மொழி தெரிய வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா? ரஷ்ய மொழி, ரஷ்யர்கள் அல்லாதவர்களின் இலக்கியத்தை செழுமைப்படுத்தும், பண்பாட்டின் மகத்தான பொக்கிஷங்கள் அவர்களுக்கும் கிடைக்கும்படி செய்யும், இப்படி இன்னும் பல... என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
கனவான்களே, இவை அனைத்துமே உண்மை என்று நாம் தாராளவாதிகளுக்குச் சொல்கிறோம். டர்க்னோவ், டால்ஸ்டாய், டோப்ரோல்யுபோவ், செர்னிஷ்வ்ஸ்கி ஆகியோரின் மொழி மகத்தானது, வலிமையானது என்று உங்களை விட எங்களுக்கு நன்றாகத் தெரியும். ரஷ்யாவில் வசிக்கும் எல்லா தேசங்களின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் இன்றி, சாத்தியமான அளவுக்கு நெருக்கமான உறவுகளும் சகோதர ஒற்றுமையும் உருவாக்கப்பட வேண்டும் என்று உங்களை விடக் கூடுதலாக நாங்கள் விரும்புகிறோம். அந்த மகத்தான ரஷ்ய மொழியை கற்கும் வாய்ப்பு ரஷ்யாவில் வசிக்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றுதான் நாங்களும் கருதுகிறோம்.
நாங்கள் வேண்டாம் என்று எதைச்  சொல்கிறோம் என்றால், திணிப்பை. தடியால் அடித்து மக்களை சொர்க்கத்துக்குள் விரட்ட வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். கலாச்சாரம் பற்றி நீங்கள் என்ன நுட்பமான வார்த்தைகள் சொன்னாலும், ஒரு கட்டாய ஆட்சி மொழி என்பது திணிப்பே. தடியை பயன்படுத்துவதே. அப்பட்டமான திணிப்பின் மூலம் படிக்க வேண்டும் என்ற அவசியம் அந்த மகத்தான வலிமையான ரஷ்ய மொழிக்கு இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் பொதுவாக ஒட்டுமொத்த சமூக வாழ்வின் போக்கும், எல்லா தேசங்களையும் நெருக்கமாக ஒருங்கே கொண்டு வந்து கொண்டிருக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். பல லட்சக்கணக்கான மக்கள் ரஷ்யாவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்; வெவ்வேறு தேசிய இனங்கள் ஒன்று கலக்கின்றன; தனிப்பட்ட தன்மையும் தேசிய பிற்போக்குவாதமும் மறைந்தாக வேண்டும். ரஷ்ய மொழியை கற்பது தங்கள் வாழ்நிலை மைகளுக்கும் வேலைக்கும் அவசியம் என்றால், நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலேயே அவர்கள் அதை கற்பார்கள். ஆனால் திணிப்பு (தடி) ஒரே ஒரு விளைவைத்தான் உருவாக்கும்: அந்த மகத்தான வல்லமை பொருந்திய ரஷ்ய மொழி பிற தேசிய குழுக்கள் மத்தியில் பரவுவதை அது தடுத்துவிடும்; மிகவும் முக்கியமாக, அது பகைமையை கூர்மைப்படுத்திவிடும்; பல லட்சக்கணக்கான வடிவங்களில் மோதல்களை உருவாக்கிவிடும்; அதிருப்தியை அதிகரிக்கும்; பரஸ்பர புரிதலின்மையை அதிகரிக்கும்; இன்னும் பல பிரச்சனைகள் உருவாகும்.
இது போன்ற நிலைமைகள் யாருக்கு வேண்டும்? ரஷ்ய மக்களுக்கு அல்ல. ரஷ்ய ஜனநாயக சக்திகளுக்கு அல்ல. எந்த வடிவத்திலும், ரஷ்ய கலாச்சாரம் மற்றும் தேசத்தின் நலன் என்று வந்தாலும், தேசிய ஒடுக்குமுறையை அவர்கள் அங்கீகரிப்பதில்லை.
அதனால்தான் ரஷ்ய மார்க்சிஸ்டுகள் சொல்கிறோம்: கட்டாய ஆட்சி மொழி இருக்கக் கூடாது; எல்லா உள்ளூர் மொழிகளிலும் பாடங்கள் கற்பிக்கும் பள்ளிகள் மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்; ஒரே ஒரு தேசத்துக்கு இருக்கும் முன்னுரிமைகள் அனைத்தும், தேச சிறுபான்மையினரின் உரிமை மீறல்கள் அனைத்தும், செல்லாது என்று அறிவிக்கும் அடிப்படைச் சட்டம் அரசியல் சாசனத்தில் புகுத்தப்பட வேண்டும்.

Search