COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 16, 2019

கண்மணி ராஜம்

இன்குலாப்

‘தூக்கத்தை விடத் தொழுகை மேலானது
அல்லா பெரியவன்... அல்லா பெரியவன்...’


நெருப்பு விரல்கள் நிலத்து வீணையில்
வெயிலை மீட்டும் வேளைக்கு முந்திய
கருக்கலில் அந்தக் கல்லூரிக்குள்ளே
மசூதியில் இருந்து அழைப்பு வந்தது

வெளியே நீண்ட வீதி... அதுதான்
பீட்டர் சாலை... பெரிய சாலை

ஆதத்தின் குழந்தைகள் அந்தகாரத்தின்
கைதிகளாய் இன்னும் கண்மூடிக் கிடந்தனர்.
‘தூக்கத்தை விட தொழுகை மேலானது...’

பீட்டர்சாலை பெரிய சாலை
இங்கே
வானைச் சுமக்கிற மாளிகை உண்டு
மாளிகை நிமிர மண்ணைச் சுமக்கும்
கூலிகள் அந்தச் சாலையின் ஓரத்தில்
கோணிப்பை அடைப்புக் குடிசைகளுக்குள்
குடும்பம் நடத்தும் கோலங்கள் உண்டு

வெயில் படும் வேளையில் இந்த வீதியில்
எத்தனையோ மனித நிழல்கள் நடக்கும்.

வகுப்பறைக்குள்ளே மானுடத் தத்துவத்தின்
மகத்துவம் பேசும் வேதாந்தக் கேசரிகள்
பேராசிரியர்கள்... சின்ன ஆசிரியர்கள்
இந்தியத் தாயின் எதிர்கால நம்பிக்கைக்கு
காவல் நிதியமாய் வரவேண்டியவர்கள்
கல்வித் திட்டத்தால் மெய்யும் நெஞ்சும்
வலுவிழந்து போன வாலிப வயோதிகர்கள்!

இந்த வீதியில் எத்தனையோ நிழல்கள்

ஜனநாயகத்தின் சாமான்ய திலகங்கள்
கோட்டைக்குச் சென்று கொள்கைகள் பேசி
ஏழையின் சிரிப்பில் இறைவனை அழைத்திட
இந்தச் சாலை வழியிலும் கார்களில் செல்வார்கள்
கப்பல்கள் போன்ற கம்பீரமான கார்கள்

கறுப்புப் பணமும்  கள்ள மார்க்கட்டும்
பெருக்கித் தந்த பெருந்தொகைகளினால்
கனதனவான்கள் வாங்கிய கார்கள்
ஊளையிட்டபடி இச்சாலையில் ஓடும்

பாரத மாதாவின் பார்வைக்குப் படாத
ஏழைகள் மட்டும்  இந்தச் சாலை ஓரங்களில்...

*
பீட்டர் சாலை... பெரிய  சாலை

மேகங்கள் வானவெளிகளில் திரிந்து
மழைப்பாடல் பாடிய மாதங்களிலே
இந்தப்
பூமி நனைந்ததுபோல் சாலையும் நனைந்தது
கட்டிடங்கள் எல்லாம் மழையில் குளித்தன.

மாளிகை ஜன்னலை மழைக்கு மூடி
மனைவியையோ வைப்பாட்டியையோ
அணைத்துக் கொண்டு மன்மதம் புரிந்த
மனிதர்கள் யாரும் நனையவே இல்லை

சாலை நனைந்தது ரிக்ஷா நனைந்தது
குதிரை நனைந்தது... மாடு நனைந்தது
மாளிகை நிமிர முதுகு வளைந்து
கோணிப்பைக் கூடாரத்தில் குடும்பம் நடத்திய
கூலிகள் எல்லாம் குளிரில் விறைத்தனர்.

தஞ்சை நகரின் பெரிய கோயிலும்
மழையில் நனைந்தது... வாசலில் நிற்கும்
ராஜராஜனின் சிலையும் நனைந்தது

மக்களாட்சியின் மகோன்னதம் பேசும்
மாண்புகள் எல்லாம் மழையில் நனைந்த
ராஜராஜனின் சிலைக்காக வருந்தினர்

*
பீட்டர்சாலையில் பெய்த மழையால்
ராஜம் என்ற இந்நாட்டு ராணி
ராஜராஜனின் சிலைபோல் நனைந்தாள்

பதினேழு வயது... கனவுகள்
விழிவீதிகளில் ஊர்வலம் போகும்
வசந்தகாலம்...
இவளோ வறுமையின் கைதி!

கோணி அடைப்பின் கந்தல் கண்களால்
உடைமை வர்க்கத்தின் உல்லாச மாளிகைகளைப்
பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விடுபவள்
ஊருக்கெல்லாம் கட்டிடம் கட்டும்
கொத்தனார் இவளைப் பெற்ற அப்பன்
இவர்கள்-
கோணிப்பை அடைப்புக் குடியிருப்பில்
*
பெய்த மழையில் பெருகிய ஓடையில்
கண்மணி மேகத்தின் கண்ணீரும் கலந்தது
வாடைக் காற்றின் ஊதல் ஒலியில்
இந்தப்
பேதையின் பற்கடிப்பும் சேர்ந்து கலந்தது
அடுப்பெரியாத அந்தக் குடிசையில்
இவளின்
மேனிச் சூடு எத்தனை நாளைக்கு வரும்?

பண்பாடு மிக்க பாரதநாட்டில்
மானுடம் மட்டுந்தான் மலிவாய்ப் போனது
வாடையில்  வருந்திய மயிலுக்காகப்
போர்வையைத் தந்த புண்ணிய பூமியில்
மனிதர்கள் மட்டும் வாடையில் விறைத்தனர்.

பாஞ்சாலி என்ற ராஜகுமாரிக்குத்தான்
பரமாத்மாவும் பட்டாடை கொடுப்பான்
ராஜத்திற்கு ஒரு பருத்தி ஆடை கொடுப்பானா?

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா?
நாளங்கள் உண்டா?
இதயத் துடிப்பையேனும் கேட்டதுண்டா?
சிலையாகு முன்னர் ஜீவித்திருந்த இம்மன்னன்
என்னத்தைச் செய்து கிழித்து விட்டானாம்?

ஈழம் கொண்டானாம்
சாவகம் வென்றானாம்

காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?

கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மாபாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்கு
கால்கோள் விழாச் செய்த காமுகன் இம்மன்னன்

மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னரும் வன்புணர்ச்சி செய்கிறான்!

*
சொல்லுங்கள்
ராஜத்தின் தந்தைக்கு ராஜம் ஒரு பிரியதர்சினிதானே...

தேனாறு பாற்கடலில் சங்கமிக்கும் வேளைகளில்
நம் தலைவர்கள் இன்பப் பொதுவுடைமைத்
தீவுக்குத் தங்கள் பொன் துடுப்பை வலிக்கிறார்கள்!
படகுப் பந்தயம்
ஓணம் கெட்டது
தீர்த்தக் கரைகளில் ராஜங்கள் பிணங்கள்!

மங்களம் பாடுவோம் மங்களம் பாடுவோம்
தூக்கத்தைவிடத் தொழுகை மேலானது
மாநில சுயாட்சி அடைந்தே தீருவோம்
ஜெயஹே... ஜெயஹே... ஜெயஜெயஹே!

Search