COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 16, 2019

தமிழக தொழிலாளர்களுக்கு விரோதமாக
24 மணி நேரமும் இயங்கும் தமிழக அரசு


தமிழ்நாட்டின் கடைகள் இனி வாரத்தின் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று பழனிச்சாமி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை 10 பேருக்கு மேல் வேலை செய்பவர்கள் இருக்கும் கடைகளுக்கு, அதாவது சூப்பர் ஸ்டோர்ஸ்களுக்குப் பொருந்தும். மூன்றாண்டுகளுக்கு இந்த நடைமுறை தொடரும் என அரசாணை சொல்கிறது. அண்ணாச்சி கடைகளில் அண்ணாச்சியும் அண்ணாச்சிக்கு ஒத்தாசையாக ஒருவரும் இருப்பார்கள். அண்ணாச்சிக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க முடியாது. (சிறுமளிகைக் கடைகள் நடத்தி உழைத்துப் பிழைப்பவர்கள் எல்லோரும் நமக்கு அண்ணாச்சிகள்தான்).
இந்த மத்திய மாநில அரசுகள் இப்படி பித்துப் பிடித்தாற்போல் மக்களை ஏன் சுழற்றி அடிக்கின்றன? இப்போதுள்ள ஏற்பாடு நன்றாக இருக்கும்போது, இதனால் மக்கள் வாழ்வில் என்ன பெரிய மாற்றம் வரும்? வணிகர்களுக்கு ஊக்கமளிக்கும், வேலை வாய்ப்பு உருவாகும் என வாதம் முன்வைக்கிறது முரடர் கூட்டம்.
மோடி அரசு  கொண்டு வந்த கடைகள் மற்றும் நிறுவனங்கள் மாதிரி மசோதா 2016, விரிவான முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் இறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான மாற்றங்களுடன் அந்த மசோதாவை அமலாக்க வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் சொல்லியிருப்பதாக தமிழ்நாடு அரசு 28.05.2019 அன்று வெளியிட்ட அரசாணை எண் 50 சொல்கிறது.
மோடி அரசின் 2016 மாதிரி மசோதாவின் நோக்கம், நாடு முழுக்க ஒரே மாதிரியான சட்டப் பிரிவுகள் கொண்டு வந்து, ஒரே மாதிரியான வேலை நிலைமைகள் உருவாக்கி, அதன் மூலம் தொழில் செய்வதை எளிதாக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்று தமிழ்நாடு அரசின் மே 28 தேதிய அரசாணை சொல்கிறது.
2016ல் வெளியிடப்பட்டு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் மட்டும் அமலாக்கப்பட்டுள்ள மாதிரி மசோதா வேலை வாய்ப்பு உருவாக்கியதாகத் தெரிய வில்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் மோடி அரசில் இருப்பதாக மோடி அரசு 2.0  ஒப்புக்கொண்டு விட்டது. எனவே மசோதாவை அமல்படுத்தியுள்ள நான்காவது மாநிலமான தமிழ்நாடு அரசும் பாடும் அதே வேலை வாய்ப்பு உருவாக்கப் பாடலை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கம் நிறைவேற்றப்படலாம் என்பதை, வேலை அளிப்பவரின் கடமைகள் என்ற தலைப்பில் உள்ள 2016 மசோதா முன்வைப்புகள் உறுதிப்படுத்தும்.
மாதிரி மசோதாவின் பிரிவு 8.1படி வேலை நேரத்தை, அல்லது வார ஓய்வை அவசர வேலை இருந்தால் பெசிலிடேடர் (தொழிலாளர் துறை அதிகாரிகள் போன்ற ஒருவர்) அனுமதியுடன் மாற்றியமைக்கப்படலாம்.
பிரிவு 8.2படி இடைவேளைகள் உட்பட வேலை நாள் பத்தரை மணி நேரம் மிகக் கூடாது. நாளொன்றில் ஒன்பது மணி நேரம், வாரத்தில் 48 மணி நேரம், அவ்வப்போது நடக்கும் வேலை அல்லது அவசர வேலை என்றால் 12 மணி நேரம் வேலை நாள் இருக்கலாம்.
பிரிவு 8.3படி நாளொன்றில் 9 மணி நேரத்துக்கு மேல், வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் செய்யப்படும் வேலை மிகைநேர வேலையாகக் கருதப்படும். மூன்று மாதங்களில் மிகை நேரப்பணி 125 மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது.
பிரிவு 8.4(எ)படி மாநில அரசு வேலை நேரத்தை நிர்ணயிக்கலாம்.
8 மணி நேர நாள் வேலைக்கு மீண்டும் ஒரு முறை சட்டபூர்வமாக சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. வேலை நாள் 9 மணி நேரம் என நீட்டிக்கப்படுவது மறுஉறுதி செய்யப்படுகிறது. மாதிரி மசோதாவில் சொல்லப்படும்படி, வாரத்தில் 48 மணி நேர வேலை என்று இருக்க முடியாது. அதுவும் 54 மணி நேரம் என்றாகிறது. வாரத்தில் ஆறு மணி நேரம் கட்டாய மிகைநேரப் பணி என்பதாக அமையும். பறவையின் இறக்கையை வெட்டுவது ஒரு கொடுமை என்றால் அதை ஒவ்வொன்றாகப் பறித்து எடுப்பது இன்னும் கொடுமை. அதைத்தான் மோடி அரசு செய்யச் சொல்கிறது. 8 மணி நேர வேலை நாள் என்பதை மீண்டும் ஒரு முறை சட்டபூர்வமாக பிடுங்கிவிட்டு, பிறகு மிகை நேரப்பணியை கட்டாயமாக்கிவிட்டு, பிறகு அதற்கு ஊதியம் தரும் அதிகாரத்தை முதலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, நீ பறக்கலாம் என தொழிலாளிக்குச் சொல்லப்படுகிறது. அவசர வேலை, திடீரென வரும் வேலை என்றால் வேலை நாள் 12 மணி நேரமாகக் கூட நீட்டிக்கப்படலாம் என்று பிரிவு 8.2 சொல்கிறது. இதற்கு மேல் என்ன பெரிய சலுகை தொழிலாளிக்கு கிடைத்துவிடும்?
இந்த கொடூரமான மாதிரி மசோதாவின் அடிப்படையில் தமிழக அரசு 28.05.2019 அன்று அறிவிப்பாணை வெளியிடும் முன், 2018 ஜுன் 27 அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்துக்கு சில திருத்தங்கள் கொண்டு வந்து அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த திருத்த மசோதா 27/2018ன்படி, மிகை நேரப் பணி 54 மணி நேரம் என்பதில் இருந்து 57 மணி நேரம் என மாற்றப்பட்டது. வேலை நாள் 10 மணி நேரம் என்பதில் இருந்து பத்தரை மணி நேரம் என மாற்றப்பட்டது.
இப்போது, அரசாணை எண் 50, 8 மணி நேர வேலை, வாரத்தில் 48 மணி நேர வேலை, இதற்கு மேல் மிகை நேரப்பணி, நாளொன்றில் பத்தரை மணி நேரம், வாரத்தில் 57 மணி நேரம் வேலை என்று சொல்கிறது. மாதிரி மசோதா 2016 சொல்வதுபோல், 9 மணி நேர வேலை என்று தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. 2018 ஆகஸ்டில் மாதிரி மசோதா பற்றி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு இணை அமைச்சர் 9 மணி நேர நாள் வேலை என்றுதான் சொன்னார். தமிழ்நாடு அரசுக்கு மக்கள் மீது அச்சம் இன்னும் மிச்சம் இருக்கிறது.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய மாற்றம் பற்றிய அரசாணை எண் (2டி) 14, 05.03.2019 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி இந்தத் தொழிலில் அதிகபட்சமாக மாதம் ரூ.5,960, குறைந்தபட்சம் ரூ.5,396 வரை அடிப்படை ஊதியமும் இதற்கு மேல் மாறுகிற பஞ்சப்படியும் தொழிலாளர்கள் பெறுவார்கள். தமிழக அரசு சொல்லியிருக்கிற இந்த குறைந்த பட்ச ஊதியத்தை விட சில பிரிவு தொழிலாளர்கள் கூடுதலாக பெற வாய்ப்பு உண்டு.
ஆக, மோடி அரசின் ஆணைகளுக்கு ஏற்ப செய்ய வேண்டியவற்றை 2018 ஜ÷ன் மாதத்தில் இருந்தே அடிமை பழனிச்சாமி அரசு படிப்படியாக செய்யத் துவங்கிவிட்டது.
பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறார்களாம். இரவு 8 மணிக்கு மேல் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாதாம். இரவு 8 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றால் அந்தப் பெண் தொழிலாளியிடம் எழுத்துபூர்வமான ஒப்புதல் பெற வேண்டுமாம். எட்டு மணி நேரத்துக்கு மேல், இரவு 8 மணிக்கு மேல், வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படும்போது, இந்தக் கடைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், ஒப்புதல் தர முடியாது, நான் போகிறேன் என்று சொல்ல முடியுமா?
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டப்படியான புகார் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசாணை வலியுறுத்துகிறது. காவல்துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு இப்படி ஒன்று வேண்டும். இந்த அரசு அது பற்றி கூருணர்வற்று கிடக்கி றது. அந்தக் கடைகளில் கமிட்டிகள் அமைத்து, அதில் அந்தப் பெண்கள் புகார் செய்து, அது விசாரிக்கப்பட்டு, பின்னர் குற்றவாளி தண்டனை பெற்று.... உச்சநீதிமன்றத்தில் வேலை செய்த பெண்ணுக்கே நியாயம் கிடைக்காத காலத்திலும் பாலியல் வன்முறை, தொழிலாக நடப்பதை வேடிக்கை பார்க்கும் ஓர் ஆட்சியின் கீழும் நாம் வாழ்கிறோம்.
எட்டு மணி நேர வேலை நாள், 5 நாட்கள் வேலை வாரம், கவுரவமான, நிரந்தரமான, பாதுகாப்பான வேலை வாய்ப்புகள் வேண்டும் எனக் கேட்டு தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும்போது, வாரத்தில் 57 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய யாரும் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்று இந்த கேடுகெட்ட அரசாணை சொல்கிறது. வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை என்றால், நாளொன்றில் சராசரியாக கிட்டத்தட்ட 10 மணி நேர வேலை வாங்கலாம் என்று அரசாணை சொல்கிறது. இப்போது சட்டவிரோதமாக நிலவுகிற வேலை நிலைமைகளுக்கு இந்த அரசாணை சட்ட அங்கீகாரம் தருகிறது. 8 மணி நேரத்துக்கு மேல் செய்யும் வேலைக்கு மிகைநேரப் பணிக்கான ஊதியம் என்று ஏற்கனவே நிலவுகிற சட்டங்களில் இருந்தும் அது அமலாகாமல் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். இதில் என்ன பட்டுக் குஞ்சம் கட்ட வேண்டியிருக்கிறது?
வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளில் எல்லா நேரமும் வாடிக்கையாளர்கள் இருப்பார்களா? மக்கள் கையில் இருக்கிற பணம்தான் இருக்கிறது. அதை பறிக்கும் வேலையும் நடக்கிறது. கூடுதல் நேரம் திறந்திருக்கப் போகும் கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்க கூடுதல் பணம் மக்களிடம் புழங்க வேண்டும். இதற்கு வழி ஏதும் புதிதாக திறக்கப்படாதபோது, நடுத்தர, மேட்டுக்குடியினர் பயன்பாட்டுக்கு மட்டும், அவர்கள் பயன்படுத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் ஆதாயம் பெறும்.
பணக்காரர்கள் மட்டுமே வாழத் தகுதி படைத்தவர்கள் என்று கடந்த அய்ந்து ஆண்டு களாக பாஜக, அஇஅதிமுக ஆட்சிகள் சொல்கின்றன. பணக்காரர்களுக்கான ஆட்சிகளின் மற்றுமொரு பணக்காரர்கள் ஆதரவு நடவடிக்கைக்கு தொழிலாளர்களை பலி தரப் போகிறார்கள். தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக் கட்டி தொழிலாளர் விதித் தொகுப்பு களை கொண்டு வர முந்தைய அரசிலேயே தயாரிப்புகளை துவங்கிவிட்ட மோடி அரசு அவற்றை அமல்படுத்தப் போவதாக சொல்லும் பின்னணியில் தமிழ்நாட்டில் இந்த அரசாணை வெளியாகியுள்ளது. தமிழக, இந்திய தொழிலாளர்களின் போராட்ட வலிமை மட்டுமே மோடி, பழனிச்சாமி அரசுகள் முன்னெடுக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு பதில் சொல்வதாக இருக்கும்.

Search