COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 2, 2019

இந்தியாவின் ஆன்மா
ஒரு கருப்பு அரசியலின் முன் வீழ்ந்துவிட்டது


இந்தியாவின் ஆன்மா ஒரு கருப்பு அரசியலின் முன் வீழ்ந்துவிட்டதையே மோடியின் வெற்றி காட்டுகிறது என்று
எங்கோ இருக்கிற கார்டியன் பத்திரிகை எழுதுகிறது. அந்த பத்திரிகை எழுதியது இந்தியாவில் உடனே உடனே நடக்கிறது. ஆன்மா வீழ்ந்துதான்விட்டது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்னரே ஆன்மா அடிபடத் துவங்கிவிட்டது. மே 23 அன்று முடிவுகள் வர வர, அன்றும் அடுத்தடுத்த நாட்களும் கொடூரமான அடிகளை இந்தியாவின் ஆன்மா சந்தித்துவிட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று உத்தரபிரதேசத்தின் பிஜ்நோர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது.
மே 22 அன்று மத்தியபிரதேசத்தில் இசுலாமிய இளைஞர்கள் இரண்டு பேர் பசு வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டார்கள். வாக்கு எண்ணிக்கை நாளன்று இந்தக் காணொளி காட்சி வெளியானது. மரத்துடன் சேர்த்து இரண்டு பேர் இரண்டு கைகளையும் பிடித்துக் கொள்ள மூன்றாமவர் நீண்ட கம்பு கொண்டு அடிக்கிறார். இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ராம் சேனை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
மே 23 அன்று குஜராத்தின் வதோதராவில் தலித் இணையர்களை ஆதிக்க சாதியினர் 200 பேருக்கும் மேல் கும்பலாக திரண்டு தாக்கினார்கள். கிராமத்தில் உள்ள கோயிலில் தலித் மக்கள் திருமணங்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்று அவர் முகநூலில் எழுதினாராம். தாக்குதல் நடத்தியவர்களில் 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள காவல் துறையினர், பாதிக்கப்பட்டவர் மீதும், அவரது முகநூல் பதிவு பகையை தூண்டுகிறது என்று சொல்லி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மே 25 அன்று அரியானாவின் குருகிராமில் இசுலாமிய இளைஞர் ஒருவரை சூழ்ந்த சிலர் அவரது தொப்பியை கழற்றச் சொல்லி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லியுள்ளனர்.
ஜேம்ஷெட்பூர் கல்லூரியின் பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டா, மாட்டிறைச்சி உண்பது பழங்குடிகளின் உரிமை என்று ஜ÷ன் 2017ல் தனது முகநூலில் எழுதியிருந்தார். இரண்டாண்டுகள் கழித்து இப்போது ஜார்க்கண்ட் அரசாங்கம் மே 25 அன்று அவரை கைது செய்திருக்கிறது. ஏற்கனவே அவர் சங்கிகளின் ஹிட் லிஸ்டில் இருந்திருக்கிறார்.
மே 26 அன்று, பீகாரின் பெகுசராயில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இசுலாமியர் ஒருவரை நிறுத்தி அவரது பெயர் என்ன எனக் கேட்டு, அவர் இசுலாமியர் என்று தெரிந்ததும் இங்கே என்ன செய்கிறாய், பாகிஸ் ôனுக்குப் போ என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் ஒருவர்.
இந்த மதவெறி, சாதிவெறி தாக்குதல் நிகழ்வுகளில் கைதுகள் நடந்துள்ளன. பிரக்யா தாகுர் மக்களவை உறுப்பினராகிவிட்ட பிறகு, இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு என்ன பயன் இருக்கும்? வரும் அய்ந்து ஆண்டுகளில் சிறுபான்மையினரும் தலித்துகளும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரும் நிரந்தரமான அச்சத்திலும் அச்சுறுத்தலிலும்தான் வாழ வேண்டுமா? அய்ந்தே நாட்களில் ஆறு மதவெறி நடவடிக்கைகள். தூக்கம் பிடிக்க மறுக்கிறது.
இந்த வெறுப்புப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அப்பால், மும்பை டோபிவாலா மருத்துவ கல்லூரியில் மே 22 அன்று மருத்துவர் பாயல் தத்வி செய்துகொண்ட தற்கொலை தந்துள்ள அதிர்ச்சி ஆழமானது. படித்தவர்கள், அதுவும் மெத்தப் படித்தவர்கள், மும்பை போன்ற ஒரு பெருநகரத்தில், சர்வதேச கலாச்சாரம் நிலவுகிற ஒரு நகரத்தில் வாழ்பவர்கள் மத்தியில் சாதிய துவேசம் நிலவுகிறது. படிப்பு, நாகரிகம்... இவற்றுக்கு என்ன பொருள்?
மோடி 2.0வில் ரோஹித் வேமுலா 2.0. இந்த முறை மத்திய அமைச்சர்கள் தலையீடு எல்லாம் இல்லை. சக மாணவர்களே சாதிரீதியாக இழிவுபடுத்திப் பேசி, துன்புறுத்தி, மன உளைச்சலை உருவாக்கி பாயல் தத்வியை தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து முடித்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என அந்த பழங்குடிப் பெண் கனவு கண்டிருப்பார்? அனிதா கண்முன் தோன்றி மறைகிறார். இவர்கள் எல்லாம் மறைந்துவிட வேண்டும் என்று சொல்கிறது சனாதனம். அதை உறுதிப்படுத்துகிறது மதவெறி ஆட்சி தரும் துணிவில் சூடேறி கிடக்கிற சூழல்.
பாயல் தற்கொலைக்குக் காரணமான மூன்று மருத்துவர்களும் தலைமறைவானார்கள். முன் பிணை பெற முயற்சி செய்தார்கள். முதலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். பிறகு மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்து, என்ன செய்து விடுவார்கள்? என்ன செய்தாலும் பாயல் திரும்பிவர மாட்டார். பாயல், ஒரு தலைமுறையின் கனவு. அது முடிந்துவிட்டது. தனக்கு நேரும் சாதிய துன்புறுத்தல்கள் பற்றி பாயல் புகார் செய்தும் கல்லூரி நிர்வாகம் பொருத்தமான நடவடிக்கை எடுக்காததால் தற்கொலையில் தனக்கான நீதியை அவர் தேடியிருக்கிறார். இப்படித்தான் ரோஹித் வேமுலாவும் நீதியைத் தேடினார். தான் வெறும் எண்ணாக சுருக்கப்பட்டுவிட்டது அந்தச் சுடர் மிகும் அறிவுக்குப் பொறுக்கவில்லை. ரோஹித் வேமுலா நிறுவனப் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமான ஸ்மிருதி இரானி இனி மீண்டும் மத்திய அமைச்சராவார். பாயல் தத்வி மரணத்திலும் அவரது புகார் மீது செயலாற்றாத, அவர் தற்கொலைக்குக் காரணமான நிலைமைகள் தொடர அனுமதித்த, சாதியரீதியான துன்புறுத்தல் இருந்தது என்று இப்போது ஒப்புக்கொள்கிற அந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீது இது வரை நடவடிக்கை இல்லை. இனியும் இருக்காது. ரோஹித், பாயல் போன்றவர்களின் பட்டியல் நீளுமா?
ரோஹித் நிறுவனப் படுகொலைக்கு உள்ளானபோது, அதற்கெதிராக நாடு கொந்தளித்த போது, பாயல் சாவுக்குக் காரணமான மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தற்கொலை செய்துகொண்ட ரோஹித் அவர்கள் மீது என்ன விதமான தாக்கம் செலுத்தியிருப்பான்? எங்கும் நிலவிய, ஊக்கம் தரப்பட்ட, தண்டனை பற்றிய அச்சம் நீக்கப்பட்ட சாதிய நச்சு, குற்ற உணர்வு ஏதுமின்றி பாயல் மீது அவர்களை ஏவியிருக்கிறது.
இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும், அனைவரையும் உள்ளடக்கும் ஆட்சி நடக்கும் என மோடி சொன்னார்தான். கூடவே, எதிர்க் கட்சிகள் ஒரு கற்பனை அச்சத்தை உருவாக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். அதாவது, சிறு பான்மை மக்கள் மீதோ, தலித்துகள் மீதோ தாக்குதல் நடக்கவில்லை, எதிர்க்கட்சிகள் சொல்வது பொய் என்பது மோடி சொல்வதன் உள்ளிருக்கும் செய்தி.
ஆக, இந்த அய்ந்து நாட்கள் நடந்திருக்கும் மதவெறி, சாதிவெறி தாக்குதல்களும் எதிர்க்கட்சிகளின் கற்பனை என்று நாளை மோடியும், அவரது அமைச்சரவையும் அவரது அதிகாரிகளும் சொல்வார்கள். நீதியும் நியாயமும் இன்னும் தள்ளிச் செல்லும். சூழ்ந்துவிட்ட இருளை, இருண்மையை மக்களின் விழிப்பும் போராட்டங்களும்தான் போக்க முடியும்.

Search