ஸ்ரீராஜராஜேச்சுவரியம்
இன்குலாப்
கடந்த ஆயிரம் ஆண்டுகளை
அப்படி ஒன்றும்
கைகழுவ முடியாது.
மகுடங்கள் துருப்பிடித்திருக்கலாம்
உறைவாள்கள் முனை முறிந்திருக்கலாம்
சபைத் தலைவர்களைத் திருவுளத் தேர்வு செய்யும்
குடங்கள் ஓவாயாய்
உடைந்திருக்கலாம்.
ஓலைகளைச் செல்லரித்திருக்கலாம்
தஞ்சையிலிருந்து
காந்தலூர் செல்லும்
சாலைகளில்
குளம்படிகள் கேட்காதிருக்கலாம்
அலை மோதும்
துறை தோறும்
புலிக்கொடிகள்
புரளாதிருக்கலாம்
இருந்தாலும்
கடந்த ஆயிரம் ஆண்டுகள்
அப்படி ஒன்றும்
கை கழுவ முடியாது.
2
இனிவரும் ஆயிரம் ஆண்டுகளிலும்
ஏமாந்துவிடக்கூடாது.
மகுடங்களைத் துலக்குங்கள்
சமயம் வரும்
மலர்க் கிரீடங்களை
இப்போதும் அணியலாம்.
உறைவாள்களின் நினைவாகத்
துப்பாக்கிகளில் பயனட்டுகளைச்
சொருகி வையுங்கள்
எண்ணெய் பூசுங்கள்
இலேசாய் இறங்கும்.
சபைகளை சட்டசபைகள் என்பதால்
நாக்குச் சுளுக்கிக் கொள்ளாது.
வாக்குப் பெட்டிகள் இரும்பால் ஆனவை.
வண்ண வண்ணமாய்
வாக்குச் சீட்டுகளை
ஆண்டுதோறும்
அச்சடிக்கலாம்
குளம்படிகள் கேட்காவிட்டால் என்ன?
டாங்கிச் சக்கரங்கள்
செவிகளை நிரப்பும்.
அலைகள் மோதும்
அன்னியத் துறைகள்
இலக்குகளுக்கு
எட்டாதவை இல்லை
3
ஆயிரம் ஆண்டுகள் ஒடுங்கிக் கிடந்த
பெருமூச்சும் கண்ணீரும்
என்னுள் பீறிடுகின்றன.
ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்
காலில் கட்டிய சதங்கை
இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்
அழுது கொண்டிருக்கிறது
இன்னும்
இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்
என் சகோதரன் தசைகள்
பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
வல்லாங்குச் செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்
நான்
கூசி நிற்கிறேன்.
அடிமைச்சூடு பொறிக்கப்பட்ட
என் முதுகுப் புண்
இன்னும் ஆறவில்லை.
இதன் விழிகொள்ளாப்
பிரும்மாண்டத்தின் கீழ்
சிறிய தேசங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
4
அடக்கப்பட்ட
நமது பெருமூச்சு
பற்றிக் கொள்ளட்டும்
தேவடியாளாக்கப்பட்ட
நம் தாய்மார்களின்
ஒவ்வொரு மார்பகமும்
பந்தங்களாய் மூளட்டும்
நமது ஓங்காரம்
ஓதப்படும் தேவாரங்களை மிஞ்சி
உறங்கும் அடிமைகளின்
செவிப்பறையைக் கிழிக்கட்டும்.
மகுடங்களின் மாயையில்
மக்களை மூடும்
சூனியக்காரன்களும்
சூனியக்காரிகளும்
சாம்பலாகட்டும்
உண்மைச்
சரித்திர விழிப்பில்
சொல்வோம்
ஆயிரம் ஆண்டுகளாக
அழுகை -
மொழிமாற்றிக் கொண்டதில்லை;
ஆத்திரமும் கூடத்தான்.
கண்ணீர் -
நிறம் மாற்றிக் கொண்டதில்லை;
ரத்தமும் கூடத்தான்.
(ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் காவிரிப் படுகையின் நிலங்களை வாரிச் சுருட்டிக் கொள்ள வருவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும்போது, எங்களிடம் இருந்து பறித்த நிலத்தை திரும்பக் கொடுங்கள் என்று ரஞ்சித் கேட்டார். ராஜராஜசோழன் காலத்தில் நிலங்கள் பிடுங்கப்பட்டன என்றார்.
ராஜராஜசோழனை ரஞ்சித் இழிவுபடுத்தி விட்டார் என்று வேறு யாரும் புகார் தராமல் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கண்ணும்கருத்துமாய் இருக்கிற தமிழ்நாட்டு காவல்துறையினரே அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். நீதிமன்றம் அவருக்கு முன்பிணை இன்னும் தரவில்லை.
வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதைத்தான் தான் பேசியதாகவும் தான் பேசியதை திரித்துச் சொல்லி வருகிறார்கள் என்றும் ரஞ்சித் சொல்கிறார்.
ராஜராஜசோழன் மேன்மைகள் பற்றி மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதைகள் இங்கு தரப்படுகின்றன.
பறிக்கப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டவர்களிடம் திரும்பத் தரப்பட வேண்டும் என்பதில் ரஞ்சித்துடன் நிற்பதில் என்ன பிரச்சனை?)