COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 2, 2019

ஏர் ஓட்ட வயலில் இறங்கியவர்களை
போராட வயலில் இறங்க வைத்துள்ள 
மோடி-எடப்பாடி அரசுகள்


ஜி.ரமேஷ்

தமிழ்நாடு எங்களைப் புறக்கணித்தாலும் கிருஷ்ணாவையும் கோதாவரியையும் இணைத்து தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கப்போகிறேன் என்று
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தான் பதவி ஏற்பதற்கு முன்பே தெரிவித்ததைப் பார்த்த ஒருவருக்கு கண்ணீர் வந்து விட்டதாம், தன் கட்சிக்கு ஓட்டுப் போடாத தமிழ்நாட்டு மக்களின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கப் போகிறேன் என்கிறாரே என்று. இப்படியொரு செய்தி சமூக வலைத் தளங்களில் சுற்றி வந்து கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடியும்கூட, கட்கரியின் இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை தீரும். இக்கட்டான சூழலில் இத்திட்டம் தமிழகத்திற்கு அவசியம் தேவை என்று சொல்லி கட்கரிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு வழிச்சாலை வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்க, அதற்காக நிலம் கையகப்படுத்த நீதிமன்றமும் தடை விதித்திருக்க, எப்படியும் எட்டு வழிச் சாலை அமைத்தே தீருவோம் என்று எடப்பாடியையும் ராமதாசையும் மேடையில் வைத்துக் கொண்டே தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த கட்கரி தைரியமாக அறிவித்தார் என்றால், தூத்துக்குடியில் 14 பேரைச் சுட்டுக் கொல்ல காரணமாக கொலைகார வேதாந்தாவின் அனில் அகர்வாலுக்கு டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் ஆய்வு செய்ய தேர்தல் நேரத்திலேயே அனுமதி அளித்தது மோடி அரசு என்றால், தஞ்சைப் பகுதி மக்கள் தண்ணீர் இன்றி, இருக்கும் கொஞ்சத் தண்ணீரைக் கொண்டு நடவு செய்திருக்க, நடவு செய்த நிலத்திற்குள் மனசாட்சியே இன்றி இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் எண்ணெய்க் குழாய்களை பதிக்க குழி தோண்டுகிறார்கள் என்றால், எந்த தைரியத்தில் இவற்றைச் செய்ய முடிகிறது?  எப்படி வந்தன இந்த எண்ணங்கள்? மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமரத் தேவையான அனைத்தையும் ஏற்கனவே செய்து வைத்து விட்டோம் என்கிற தைரியத் திலும் இறுமாப்பிலுமா?
அடிமைகளின் ஆட்சியில் தமிழ்நாட்டை அகர்வாலுக்கும் அம்பானிக்கும் அதானிக்கும் பட்டா போட்டுக் கொடுக்க மீண்டும் பதவி ஏற்கும் முன்னரே ஆரம்பித்து விட்டது மோடி அரசு. முதலில், நெடுஞ்சாலைகள் இணைப்பாம். அப்புறம் தமிழ்நாட்டின் நலனிற்காக நதிகள் இணைப்பாம். கட்கரி சொல்கிறார். “தமிழகம் எங்களைப் புறக்கணித்தாலும்கூட” என்று வேறு சொல்லிக் கொள்கிறார். அதற்குப் பொருள் உங்கள் எதிர்ப்பை வாக்களிப்பில் காட்டினாலும் சரி என்ன எதிர்ப்பு வந்தாலும் சரி, ஏற்கனவே தமிழ்நாட்டைச் சுரண்டிச் சுடுகாடாக்க நாங்கள் எடுத்துவிட்ட முடிவில் இருந்து பின் வாங்க மாட்டோம் என்பதுதான்.
விவசாயிகளை எரிக்கும்
எண்ணெய் நிறுவனங்கள்
தஞ்சை, நாகை, கடலூர், சீர்காழி, மன்னார்குடி, டெல்டா பகுதி மக்கள், “பயிர் விளையும் வயல்களில் பாழ் எண்ணெய் கிணறுகளைத் தோண்டாதே, குழாய்களைப் பதிக்காதே” என்று அன்றாட வயிற்றுப் பிழைப்புக்குக்கூட போக வழியின்றி, வயல்களில் இறங்கி நித்தம் நித்தம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 70 எரிவாயு கிணறுகளுக்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு 250க்கும் மேற்பட்ட கிணறுகளைத் தோண்டி விட்டார்கள் என்கிறார்கள் மக்கள்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகில் பழையபாளையத்தில் எரிவாயு எடுக்க கிணறு தோண்டுகிறார்கள். அங்கு எடுக்கப்படும் எரிவாயுவை 29 கி.மீ. அப்பால் உள்ள செம்பனார்கோவில் அருகில் உள்ள மேமாத்தூருக்கு ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு சென்று சேமிக்கப் போகிறார்களாம். இதற்காக கிணறுகளையும் ராட்சத குழாய்கள் பதிக்கக் குழிகளையும் விளைநிலங்களில், நில உரிமையாளர்களிடம் விவசாயிகளிடம் அனுமதியே பெறாமல் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மாதம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள எருக்காட்டூரில் செல்வராஜ் என்பவரின் நிலத்திற்கு அடியில் பதிக்கபட்டிருந்த எண்ணெய்க் குழாய் வெடித்ததில் எண்ணெய் வெளியே வந்து  2 ஏக்கர் நிலம் பாழானது.
ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் பதித்ததற்கு வாடகை கொடுத்தாலும் அதனால் எவ்வித பயனும் இல்லை, இப்போது போட்டிருந்த பருத்தி பாழாகிவிட்டது, அதற்குரிய இழப்பீட்டை வழங்கவில்லை, அருகருகே எரிவாயு எண்ணெய் இதுபோல் 6 முறை வெளி வந்துள்ளது, இதனால், பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, நிலத்தை மீண்டும் பயிர் செய்வதற்கேற்ப மாற்ற அதிகம் செலவாகிறது, அரசோ, எண்ணெய் நிறுவனமோ அதை செய் தும் கொடுப்பது கிடையாது என்றார் அவர்.
2018 ஜ÷ன் மாதம் மயிலாடுதுறை பாண்டூர் கிராமத்தில் எண்ணெய் குழாய் வெடித்து ராஜதுரை என்பவரின் நிலம் பாழானது. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை எண்ணெய் நிறுவனம் தரவில்லை என்றார். 2017 ஜ÷ன் 3 அன்று தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய்க் குழாய்கள் வெடித்து தீ பிடித்தது. மாவட்ட ஆட்சியர் நிகழ்விடத்திற்கு வர வேண்டும் என மக்கள் அங்கு வந்த அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, அரு கில் இருந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. மக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டார்கள். போலீஸôரே தீ வைத்துவிட்டு எங்கள் மீது பழி போட்டு தடியடி நடத்தினார்கள் என்றார்கள் மக்கள். போலீஸ் பாதுகாப்புடன் மேலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் ஓஎன்ஜிசியின் எண்ணெய்க் குழாய்கள் பல்வேறு இடங்களில் வெடித்து விளை நிலங்கள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் எண்ணெய் நிறுவனத்தின் பொய்ப் பேச்சை நம்பி தங்கள் விளை நிலத்தில் குழாய் பதிக்க இடம் கொடுத்தவர்கள் இன்று நிலத்தின் செழுமையை இழந்து, நிலத்தடி நீரை இழந்து, குடிநீரும் கூட அழுகிய முட்டை வாடை அடிக்குது என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே தோண்டப்பட்டுள்ள கிணறுகளால், பதிக்கப்பட்டுள்ள குழாய்களால் விவசாய நிலங்கள் பாழாகிக் கொண்டிருக்க, அதைச் சரிசெய்யத் தயாராக இல்லாத அரசும் எண்ணெய் நிறுவனங்களும் மீண்டும் மீண்டும் புதிய கிணறுகளைத் தோண்டி, புதிய குழாய்களைப் பதித்து, புதிய இடங்களில் உள்ள விளை நிலங்களைப் பாழ்படுத்தி பாலைவனமாக்கப் பார்க்கிறார்கள்.
ஆட்கொல்லி அனில் அகர்வாலின்
அடுத்த அûஸன்மென்ட்
ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க, மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்ட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன அரசுகள். கஜா புயலால் டெல்டா பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டது தெரிந்திருந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு, அவர்கள் தாங்களாகவே அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று அரசாங்கமும் கார்ப்பரேட்டுகளும் நினைத்ததும் ஒரு காரணம் என்கிறார்கள் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள்.
ஸ்டெர்லைட்டைத் திறக்கமாட்டோம் என்று சொல்லிக் கொண்டே, அதற்கு எதிராகப்  பேசுபவர்களை அச்சுறுத்திக் கொண்டி ருக்கும் எடப்பாடி அரசு, கொலைகார அனில் அகர்வாலின் வேந்தாந்தா நிறுவனம் காவிரிப் படுகையில் 274 ஹைட்ரோகார்பன்  கிணறுகள் அமைக்க மோடி அரசு அனுமதி வழங்கும் போது, ஹைட்ரோகார்பன் மீத்தேன் எடுக்க தமிழக அரசு 08.10.2015ல் அரசாணை எண்: 186 மூலம் ஏற்கனவே  தடை விதித்துள்ளதை மறைத்து, வாயை மூடிக் கொண்டு மவுனம் காக்கிறது. ஆய்வு செய்வதற்குத்தான் நாங்கள் வேதாந்தா அனில் அகர்வாலுக்கு அனுமதி அளித்துள்ளோம் வாயுவை எடுக்க அல்ல என்கிறது அரசு. கிராமங்களில் சொல்வார்கள் “காண ஒருக்க, கும்பிட ஒருக்கவா” என்று.
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களைக் கொன்ற வேதாந்தா அனில் அகர்வால் மீது, அந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது இது வரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக மக்கள் சீற்றமுற்று இருக்கிறார்கள் என்று தெரிந்து இருந்தும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க, தனக்கு லண்டனில் விருந்து வைத்த வேதாந்தா அகர்வாலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது மோடியின் அரசு.
காவிரிப் படுகை இரண்டு மண்டங்களாகப் பிரிக்கப்பட்டு முதல் மண்டலமான விழுப்புரம் புதுச்சேரியைச் சுற்றி 116 கிணறுகளும்  கடலூரில் இருந்து நாகப்பட்டினம் வரை உள்ள இரண்டாவது மண்டலத்தில் 158 கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கிணறுகள் பூமிக்கடியில் 4,500 மீ ஆழம் வரை தோண்டப்படும் என்கிறார்கள்.
இந்தக் கிணறுகளால் ஒட்டுமொத்த விவசாய நிலங்கள் மட்டுமின்றி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாரவத்தில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலமும் கடலும் சேரும் பகுதியில் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாக சில அடி உயரங்களுக்கு நீர் நிறைந்து, எண்ணற்ற மீன் இனங்கள், ஆமைகள், நண்டுகள் பாதுகாப்பாக வாழ்கின்றன. மீன்கள் மற்ற உயிர்களிடமிருந்து பாதுகாப்பாக வாழக்கூடிய பகுதி இது. மருத்துவ குணம் கொண்ட 20 வகை தாவரங்களும் 18 வகை மூலிகைத் தாவரங்களும் 5,000 ஏக்கர் பரப்பளவில் இங்கு வளர்ந்து கிடக்கின்றன. பிச்சாவரத்தில் உள்ள இந்தக் காடுகள் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகள் ஆகும். இது இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் ஆகும். இங்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான அமைப்புடன் மிக அழகாக அமைந்திருக்கும். இதை ரசிப்பதற்காகவே வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து படகுச் சவாரி செய்வார்கள். அதனாலேயே இதை சுந்தரவனக் காடுகள் என அழைக்கிறார்கள்.
இந்த சதுப்பு நிலக் காடுகள் அலையாத்திக் காடுகள் என்றும் அறியப்படுகின்றன. கடல் சீற்றத்தில் இருந்து நிலப்பரப்பை இந்தக் காடுகள் காக்கின்றன. 2004ல் ஏற்பட்ட சுனாமியில் பரங்கிப்பேட்டை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேவேளை, பிச்சாவரத்தைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயிரிழப்புகள் ஏதும் கிடையாது. அதற்குக் காரணம் இந்த அலையாத்திக் காடுகள்தான். இந்தக் காடுகள் சுனாமி பேரலை களையே தடுத்திடும் வல்லமை கொண்டவை. இந்தப் பகுதிகளில்தான் வேதாந்தா இப்போது ஹைட்ரோகார்பனுக்காக கிணறுகளைத் தோண்ட உள்ளது.
இங்கு கிணறுகள் தோண்டப்பட்டால், இந்த சதுப்பு நிலப் பகுதி முற்றிலும் அழிக்கப் பட்டு அலையாத்திக் காடுகள் அழியும். இனி சுனாமி ஏற்பட்டால் அதில் இருந்து மக்களைக் காப்பாற்ற அலையாத்திக் காடுகள் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். புதிதாகக் காடுகளை உருவாக்கவில்லை என்பதுடன், இருக்கிற காடுகளை அழிக்கத் துடிக்கிறார்கள் ஜெயலலிதா பெயர் சொல்லி ஆட்சி நடத்துபவர்கள். இந்தக் காடுகள் அழிக்கப்பட்டால்  அரிய வகை மூலிகைகள், மருத்துவ தாவரங்கள், உயிரினங்கள் அனைத்தும் அழிந்து விடும். இந்தப் பகுதி சுற்றுலா மய்யமாக உள்ளதால் அதை நம்பி வாழும் மக்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள். 
காவிரி படுகையை பாலைவனமாக மாற்றி விட்டு, அலையாத்திக் காடுகளை அழித்து விட்டு, சுந்தரவனக்காடுளை சுடுகாடாக மாற்றி விட்டு கிருஷ்ணா, கோதாவரி நதிகளை பெண்ணாற்றுடன் இணைத்து காவிரியில் தண்ணீர் கொண்டு பஞ்சத்தைப் போக்கிடப் போறாங்களாம்.
இது புதுத் திட்டம் ஒன்றும் இல்லை. இது 2015ஆம் ஆண்டிலேயே கட்கரியால் அறிவிக்கப்பட்ட திட்டம். அவரது குடும்ப நிறுவனமான பூர்த்தி குரூப்பின் கனவுத் திட்டம். பக்கிங்காம் கால்வாயை உள்ளடக்கி கிருஷ்ணா கோதாவரியை இணைத்து நீர்ப் போக்குவரத்து உருவாக்கப்படும் என 2015லேயே சொல்லிவிட்டார். அவர் நெடுஞ்சாலைப் போக்குவரத்து மற்றும் நீர் வழிப் போக்குவரத்துக்கு அமைச்சர். நாடு முழுவதும் உள்ள நதிகளை நீர் வழிப் போக்குவரத்திற்குத் தகுந்த மாதிரி இணைப்பதுதான் அவரது திட்டம்.
2015ல் இந்தத் திட்டத்தை அறிவித்தபோது, காவிரியோடு இணைப்பதாகவோ தமிழகத்தின் பஞ்சத்தை தீர்ப்பதாகவோ அவர் சொல்லவில்லை. இப்போது  தமிழ்நாட்டில் தோற்றுப் போனதால், தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ள, இந்தத் திட்டத்தால் தமிழக தண்ணீர் பிரச்சனையைத் தீரும் என்று கதையளக்கிறார். உடனே தமிழ்நாட்டில் நாளைக்கே தண்ணீர் பஞ்சம் இருக்காது என்பதுபோல் கட்கரிக்கு தமிழ்நாட்டின் மீது என்னவொரு அக்கறை என்று எடப்பாடியும் ராமதாசும் புளங்காகிதம் அடைந்து பில்டப் கொடுக்கிறார்கள்.
விவசாயிகள் தண்ணீர் இல்லாத நேரத்திலும் கஷ்டப்பட்டு தங்கள் நிலங்களில் பயிர் செய்துள்ளார்கள். அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், அவர்களின் அனுமதியேயின்றி எண்ணெய் நிறுவனங்கள் கிணறுகள் தோண்டியும் குழாய்கள் பதித்தும் நிலங்களை நாசப்படுத்தி வருகிறார்கள். அதைத் தடுக்க துப்பில்லாத சுயநல, கொள்ளைக்கார, அடிமை ஓபிஎஸ் இபிஎஸ் அரசு, தங்கள் நிலங்களைப் பாதுகாக்கப் போராடும் மக்கள்  மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறது. ஏர் ஓட்ட வயலில் இறங்கிய மக்களையெல்லாம் போராட வயலில் இறங்க வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டை வளமாக்கப் போகிறோம் என்று சொல்லி, எண்ணெய் கிணறுகள், எட்டு வழிச் சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், அணு உலை, நீட், பாரத் மாலா, சாகர் மாலா, புதிதாக ஜலமாலா என நாசகர திட்டங்களை தமிழ்நாட்டு மக்கள் தலையில் கட்டுகிறார்கள்.
சங்கிகளும் எடுபிடிகளும் இணைந்து அந்தத் திட்டங்களை இன்னும் மூர்க்கமாக அதானிக்காக, அம்பானிக்காக, அகர்வாலுக்காக அமல்படுத்த நிச்சயம் முயற்சிப்பார்கள். வாக்குச் சீட்டால் தங்கள் எதிர்ப்பைத் தெளிவாகக் காட்டிவிட்ட தமிழ்நாட்டு மக்கள் இன்னுமொரு அய்ந்து ஆண்டுகளுக்கு பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். போராட்டமே நேர் பாதை, புதிய உலகுக்கு நடை பாதை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

Search