COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 16, 2019

எங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள்!
எங்கள் உரிமைகளைப் பறிக்காதீர்கள்!


‘நீட் மார்க் கம்மி. நா இனி இருக்க கூடாது. நா சாகரேன். சாரி அப்பா’. இது விழுப்புரம் மோனிஷாவின் தற்கொலை குறிப்பு.
அவருக்கு முன்பு திருப்பூரின் ரிதுஸ்ரீயும் அவருக்கு முன்பு பட்டுக்கோட்டையின் வைசியாவும் தீக்குளித்தும், தூக்குப் போட்டுக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. இடையில் ஒரு மக்களவைத் தேர்தலே நடந்து முடிந்து புதிய இந்தியா படைப்பதாகச் சொல்லும் புதிய ஆட்சி உருவாகிவிட்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சொன்ன மாநில ஆளும் அடிமை கட்சி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து  அதன் முடிவு வெளியாவதற்கு இடைப்பட்ட காலத்தில் நீட் தேர்வை நடத்தி முடித்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் நடந்ததுபோல் நீட் தேர்வுகள் சில உயிர்களை பலிகொள்வது இந்த ஆண்டும் நடந்துவிட்டது. அந்த மசோதாக்கள் என்ன ஆயின, எங்கே உள்ளன என்று கேட்பதற்குப் பதிலாக நீட் எழுத பயிற்சி மய்யங்கள் நடத்துவதாகச் சொல்லி, வலியுறுத்தும் கட்சி போக்கு காட்டுகிறது.
பொதுவாக பல்வேறு விதங்களிலும் மக்களை சாகடிக்கும் மோடி அரசாங்கம், தமிழக மக்களை துன்புறுத்துவதில் அவர்கள் கண்ணீர் சிந்துவதைக் காண்பதில் தனி இன்பம் காண்கிறது. இதோ, மூன்று குழந்தைகள், +2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள். சரியாகச் சொல்வதானால், மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை அவர்களை கொன்று விட்டது. ரிதுஸ்ரீ திருப்பூரின் பின்னலாடை தொழிலாளியின் மகள். மோனிஷா மீன் விற்பவரின் மகள். இவர்கள் மருத்துவப் படிப்பு பெற்று குடும்பத்தை மேலே கொண்டு வரலாம் என்று நினைத்தார்கள். நீட் குறுக்கே வந்து நின்றுவிட்டது.
நீட் தேர்வு மதிப்பெண்களில் முதல் 50 பேரில் 7 பேர் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர். தலித், பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை. மற்றவர்கள் மேல்சாதியினர். ஒருவர் கூட தமிழ்நாட்டில் இருந்து இல்லை. முதல் 20 பெண்களில் 10ஆவதாக தமிழக மாணவர் ஸ்ருதி. மொத்தத்தில் 57ஆவது இடம். முதல் 100க்குள் இருக்கும் தமிழ்நாட்டு மாணவரும் அவர் மட்டும்தான். தர வரிசைப் பட்டியலில் முதல் 100 பேரில் தலித், பழங்குடியின மாணவர் ஒருவர் கூட இடம் பெறவில்லை.
அனிதா கொல்லப்பட்டபோது, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரப் பட்டியல், சாதிவாரியாக, மதிப்பெண்வாரியாக தனித்தனியாக தரப்பட்டது. இப்போது, மத்திய மனித வள அமைச்சகம் அந்த விவரங்களின் தொகுப்புகளை மட்டும் தருகிறது. முதல் 50 மாணவர்கள், முதல் 20 பெண் மாணவர்கள் விவரங்களில், பெயர், சமூகப் பிரிவு, மதிப்பெண், தர வரிசை, மாநிலம் என தரப்பட்டதுபோல், தேர்ச்சி பெற்ற எல்லா மாணவர்களின் விவரங்களும் தரப்படவில்லை. இந்த மாணவர்களின் விவரங்களைத் தர முடியும் என்றால், தேர்ச்சி பெற்ற 7,97,042 மாணவர்களின் விவரங்களும் மனித வள அமைச்சகத்திடம் உள்ளன. ஏன் வெளியிடவில்லை? 
எஸ்சி மாணவர்கள் 2,11,303 பேர் பதிவு செய்து 18,115 பேர் தேர்வு எழுத வரவில்லை. 99,890 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்டி மாணவர்கள் 96,456 பேர் பதிவு செய்து 10,246 பேர் தேர்வு எழுத வரவில்லை. 35,272 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் 6,77,544 பேர் பதிவு செய்து 46,071 பேர் தேர்வு எழுத வரவில்லை. 3,75,635 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில் 5,34,072 பேர் பதிவு செய்து 34,188 பேர் தேர்வு எழுதவில்லை. 2,86,245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமூகப் பிரிவுவாரியாக இந்த விவரங்கள் தந்துவிட்டு, மதிப்பெண்வாரியாக பொதுப் பிரிவில் 7,04,335 பேர், எஸ்சி 20,009 பேர், எஸ்டி 8,455 பேர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் 63,789 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் சொல்கிறார்கள். அப்படியானால், எஸ்சி பிரிவினரில் தேர்ச்சி பெற்ற 99,890 பேரில் இந்த 20,009 பேர் போக, எஸ்சி பிரிவினருக்கான மதிப்பெண்ணை விட உயர்மதிப்பெண் பெற்றுவிட்டவர்கள் 79,881 பேர். எஸ்டி பிரிவினரைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 26,817. ஆக 20,009க்கும் 8,455க்கும் மருத்துவப் படிப்புக்கு வாய்ப்பே இல்லை. விதிவிலக்காக வசதி இருந்தால் வாய்ப்பை வாங்கலாம். 79,881 மற்றும் 26,817 பொறுத்தவரை, அந்த மாணவர்கள் நீட் தேர்ச்சியும் பெற்றுவிட்டார்கள்; இட ஒதுக்கீடும் கிடைக்கும். அதனால் மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடுவார்களா? பொதுப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களில் மீதமுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்குவதற்கு முன் இவர்கள் இடம் பெற்றுவிடுவார்களா? நீட் தேர்வு சமூக நீதியை நிலை நாட்டிவிட்டதா?
இந்திய மருத்துவ கழகம் தரும் விவரப்படி நாட்டில் உள்ள 529 மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்ட 22 கல்லூரிகள் போக மற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு 70,878 இடங்கள்தான் உள்ளன. (தனியார் கல்லூரிகளில் 35,538 இடங்கள். அரசுக் கல்லூரிகளில் 35,340 இடங்கள்). 8 லட்சம் பேருக்கு 70,000 இடங்கள்! என்ன சூதாட்டம் இது?
எஸ்சி, எஸ்டி பிரிவினரே கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மூன்றேமுக் கால் லட்சம். மற்றவர்கள் கிட்டத்தட்ட மூன்று லட்சம். இவர்களில், எல்லா விதங்களிலும் தக்க மாணவர்கள் பிழைக்க, மற்றவர்கள், அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டும். தையல் தொழிலாளி மகள் வெற்றி பெற்றுவிட்டார் என்று காட்டி நீட் படுகொலைகளை மறைத்துவிட தமிழிசை எடுக்கும் முயற்சி பெரிய பலன் தராது. அந்த மூன்று இழவு வீடுகளுக்குச் செல்ல முடியுமா அவரால்?
தேர்ச்சி பெற்றுள்ள 7 லட்சம் பேரில், 70,000 பேர் போக மற்றவர்களுக்கு தமிழிசை என்ன ஆறுதல் சொல்வார்? மருத்துவப் படிப்பில் சேர நீட் எழுதுங்கள் என்று அவர்கள்தானே சொன்னார்கள்? அவர்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடம் தருவது அவர்களது கடமையல்லவா?
தேர்ச்சி பெற்றுள்ளவர்களில் 35,340 பேர் மட்டும்தான் அரசுக் கல்லூரிகளில் சேர முடியும். இன்னும் 35,538 பேர் தனியார் கல்லூரி களில் பணம் கொட்ட, அவர்கள் குடும்பங்கள் பணம் படைத்தவையாக இருக்க வேண்டும். இதற்கும் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் எப்படி அடிப்பது என்று கிட்டத்தட்ட ஆறரை லட்சம் பேருக்குள் முகம் தெரியாமல் போர் செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகப்பெரிய அயற்சியும் அழுத்தமும் தரும் நிலைமை இது.
இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களில் பலர் இரண்டு ஆண்டுகளாக நீட் எழுதுபவர்கள்; நீட் பயிற்சி மய்யங்களில் படித்தவர்கள். நீட் பயிற்சி மய்யங்களின் வணிக நோக்கம், இடஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுவது, பணமும் ஆதிக்கமும் படைத்தவர்களிடம் எல்லாவற்றையும் சிந்தாமல் சிதறாமல் வாரித் தருவது ஆகியவைதான் இந்த மொத்த போக்குவரத்திலும் உள்ள நோக்கங்கள். பாசிச பாஜககாரர்கள் சொல்லிக் கொண்டிருப்பதுபோல், மருத்துவ துறையை செம்மைப்படுத்த வந்த தேவதூதன் அல்ல நீட். சாமான்ய மக்களை பலிகொள்ள வந்துள்ள ஆட்கொல்லி. எங்கள் குழந்தைகளை அது பலி கொள்கிறது. மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் தற்கொலை என்று இந்த நீட் பிசாசு வருவதற்கு முன்பு எங்கள் மாநிலத்தில் நடக்கவில்லை. எங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். எங்கள் உரிமைகளைப் பறிக்காதீர்கள்.
நீட் பயிற்சி மய்யங்கள் அமைத்து, பாடத் திட்டத்தை மேம்படுத்தி, எங்கள் மாணவர்கள் மருத்துவம் படிக்க வைப்பது எங்கள் கடமை என்பதுபோல் பேசும் கல்வி அமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ஆறு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதைப் பற்றி பேசவில்லை. இங்கு குறைவான மாணவர்கள்தான் இருக்கிறார்கள் என்று காரணம் சொல்லப்படுகிறது. கல்வித் துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழக மக்கள் வேண்டாம் என்று சொல்லும் நீட் வேண்டும் என்றும், தமிழக மக்கள் வேண்டும் என்று சொல்லும் அரசுப் பள்ளிகள் வேண்டாம் என்றும் அடிமைகள் ஆட்சி முடிவு செய்கிறது. இத்தனை உயிர்கள் போன பிறகும் நீட் வேண்டாம் என்று அடிமை ஆட்சியாளர்கள் சொல்ல மறுக்கிறார்கள். பெரியார் இருந்திருந்தால் நீட்டை நம்புபவன் முட்டாள், நீட்டை பரப்புபவன் அயோக்கியன், நீட்டை நடத்துபவன் கொலைகாரன் என்று சொல்லியிருக்கக் கூடும். நீட் வேண்டாம். நீட் வேண்டாம். நீட் வேண்டவே வேண்டாம். நீட் விலக்குக்கு தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அடிமை ஆட்சியாளர்களை நிர்ப்பந்திப்பது நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு, மாநில சுகாதாரத்தின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம்.

Search