COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 2, 2019

எஸ்ஆர்எம் நிறுவனத்தின் கல்வி வளாகங்கள்
மாணவர்களின் தற்கொலை கூடங்களாகிவிட்டனவா?


இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 45 தொகுதிகளில் போட்டியிட்டார்.
2019 மக்களவைத் தேர்தலில் தான் கேட்ட பெரம்பலூர் தொகுதி பாஜக கூட்டணியில் தராததால் பாஜக எதிர்ப்பு கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார்.
இடையில் அவரது எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கு கட்டணம் என்ற பெயரில் அநியாயமாக நன்கொடை வசூலிப்பதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ரூ.75 கோடி வைப்புத் தொகை செலுத்தி பின் வெளியே வந்தார். பச்சமுத்து சிறைக்குச் சென்று திரும்பி வந்த காலத்தில், காணாமல் போன அவரது உதவியாளர் மதன் சில மாத நாடகங்களுக்குப் பின் திரும்ப வந்தார். காணாமல் போனாரா, தலைமறைவானாரா, வந்த பிறகு என்ன நடக்கிறது, வழக்கு எதாவது இருக்கிறதா, திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் மதன் மீது எழுப்பிய மோசடி புகார்கள் என்னவாயின என்று எதுவும் தெரியவில்லை. மோடி அரசுடன் பச்சமுத்து நெருக்கமாக இருந்ததால், எல்லாம் ‘அவன்’ செயல் என்று மட்டும் நமக்குத் தெரிகிறது. எல்லாம் மர்மம்.
பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் தொடர்பான மர்மம் மதன் விசயத்துடன் நின்றுவிடவில்லை. பஞ்சமி உள்ளிட்ட நிலங்களை ஆக்கிரமித்த புகார்களுக்கு உள்ளான பச்சமுத்துவுக்குச் சொந்தமான, கிட்டத்தட்ட ரூ.15,000 கோடி மதிப்புள்ள கல்வி வியாபார சாம்ராஜ்ஜியத்தில் மர்மங்களுக்கு பஞ்சம் இருப்பதில்லை.
எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தில் 2019 மே 25 அன்று ஒரு மாணவியும் மே 26 அன்று ஒரு மாணவரும் முறையே கல்லூரி மற்றும் விடுதியின் மாடிகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அந்த மாணவி தற்கொலை குறிப்பு வைத்திருந்ததாகவும் தனது பெற்றோர் கட்டுப்பாடு விதித்ததால், சுதந்திரமாக இருக்க முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மாணவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு அப்பால் அவர் தற்கொலை பற்றி செய்தி இல்லை. சத்தத்தை குறைக்கச் சொல்லி தற்போதைய மக்களவை உறுப்பினர் ஆணையிட்டிருக்கலாம்.
2018, ஜனவரி 22 அன்று எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி மாணவர், நான்காம் ஆண்டு படிப்பவர் ஏழு பாடங்களுக்கான தேர்வில் தோல்வி அடைந்ததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 2016, அக்டோபர் 16 அன்று, தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி விடுதியில் ஒரு மாவர் தற்கொலை செய்துகொண்டார்.
எஸ்ஆர்எம் கல்வி வளாகங்களில் மிகவும் எளிமையாக, தற்கொலைகளுக்கு காரணங்கள் சொல்லப்பட்டு அடுத்து நகர்ந்து சென்றுவிட முடிகிறது. இப்போது அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையிலும் பிரச்சனை என்று எந்தப் பேச்சும் இல்லை. பாரிவேந்தர் நடத்தும் புதிய தலைமுறை என்ற பெயர் கொண்ட தொலைக்காட்சி அலைவரிசை, பிரேக் கிங் நியூஸ், எக்ஸ்கிளூசிவ் என்ற அட்டைகள் பளபளக்க செய்திகளைச் சொல்லும் தொலைக்காட்சி, புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்வது ஏன் என்று விவாதம் நடத்துவதில்லை. இந்தத் தற்கொலைகள் பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை. அதனாலேயே நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு வளாக நடைமுறைகளின் கெடுபிடிகள் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதா? தற்கொலைகள் தொடர்ந்து நடப்பதால், மாணவர் நலன் கருதி எஸ்ஆர்எம் பல்கலைகழக நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுமா? இந்தத் தற்கொலைகள் தொடர்பாக கறாரான விசாரணைகள் நடத்தப்படுமா? நடப்பது மோடியின் ஆட்சி! நம்பிக்கை.... அதானே எல்லாம்...!

Search