COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 16, 2019

ஆன்லோட் கியர்ஸ்: தொழிலாளர்களை அரசியல்படுத்தும் சங்கங்களை ஜனநாயகப்படுத்தும் ஒரு முயற்சி

க.பழனிவேல்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கும் ஆன்லோட் கியர்ஸ் ஆலையில் 210 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்தத் தொழிலாளர்களின் சங்கம் ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்டது. இந்த சங்கத்தில் தோழர் கே.பழனிவேல் தலைமையில் 3 ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு, இககமாலெ நிகழ்ச்சிகளுக்கு வருவதிலும் நிதி தருவதிலும் எப்போதும் முன்னணிப் பங்காற்றியுள்ளனர். இவர் கள் கேரளா புயலுக்கு ஒரு நாள் சம்பளம், கஜா புயலுக்கு ஒரு நாள் சம்பளம் நிவாரண நிதியாகத் தந்தவர்கள். இககமாலெயின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு நாள் சம்பளத்தை நிதியாக தந்தவர்கள். இவர்கள், கட்சி 15 நாளுக்கு ஒரு முறை கொண்டு வரும் மாலெ தீப்பொறி பத்திரிகைக்கு மாதம் 210 சந்தாக்கள் செலுத்துபவர்கள். அனைவரும் ஒருமைப்பாடு வாங்குகின்றனர். 2017ல் கட்சி உறுப்பினர் சேர்ப்பில் சுமார் 200 ஓஎல்ஜி தொழிலாளர்கள் கட்சி உறுப்பினர்களாயினர்.
சென்னை மாநகர கட்சியில் உள்ள சிக்கல்கள், தொழிலாளர்களை அரசியல்படுத்துவதில், சங்கங்களை ஜனநாயகப்படுத்துவதில் உள்ள போதாமை ஆகியவற்றால், இந்த தோழர்கள் தொடர்பான அரசியல் கடமைகளை கட்சியால் போதுமான அளவுக்கு நிறைவேற்ற முடியவில்லை. மக்களவைத் தேர்தல் பிரச்சார நேரத்தில், தோழர்கள் பழனிவேல், குமாரசாமி ஆகியோருக்கும், ஓஎல்ஜி முன்னோடிகளுக்கும் இடையில் எதிர்பாராமல் நடந்த ஒரு நீண்ட உரையாடலில், தேர்தல் முடிந்தவுடன் பயிற்சி வகுப்பு நடத்த முடிவானது.
தேர்தல் முடிந்தவுடனேயே, சங்க முன்னணிகளும் தோழர் பழனிவேலும் பயிற்சி வகுப்புக்கான முயற்சிகளை காத்திரமாக துவக்கினார்கள். ஆலையில் மிகை நேரப்பணி இருந்ததால், நாள் முடிவு செய்வது தாமதமானது. தோழர் பழனிவேல் திரும்பத் திரும்ப சங்க நிர்வாகிகளையும் அனைத்து தோழர்களையும் சந்தித்த பிறகு, ஒரு வழியாக பயிற்சி வகுப்பு 09.06.2019 நடைபெறும் என முடிவானது.
ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் நேரிடையாகத் தலையிட்டு வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிலந்தியும் ஈயும், மே தின வரலாறு, பெண் ஏன் அடிமையானாள்? புத்தகங்கள் கொண்ட ஒரு தொகுப்பு கிடைப்பதை உறுதி செய்து, பயிற்சி வகுப்பில் அவரே அதனை தோழர்களுக்கு வழங்கினார்.
பயிற்சி வகுப்புக்கு, வெளியிலிருந்து வந்திருந்த கட்சி மாநகரச் செயலாளர் தோழர் சேகர், மாநகரக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், முனுசாமி, வேணுகோபால், பசுபதி, பாலகிருஷ்ணன், தோழர் சுகுமார் ஆகியோர் பல விதங்களில் உதவினர். தோழர்கள் பயிற்சி வகுப்பின்போதும் முடிந்த பிறகும் பருக, உண்ண சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்த கட்சி மாநிலக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழல் பழனிவேல், தொழிலாளர்களை அரசியல்படுத்தும், சங்கங்களை ஜனநாயகப்படுத்தும் நமது கடந்த கால முயற்சிகளால்தான், சென்னை மாவட்டத்தில் செயல்படும் ஏறத்தாழ அனைத்து கட்சி, சங்க முன்னணிகளும் உருவாயினர் என்றும், அந்த முயற்சியில் உள்ள இடைவெளி ஆபத்தானது என்றும், அந்த முயற்சி தொடரப்படுவது இயக்கத்தின் முதன்மை வேலை என்றும், தடைகள் தாண்டி விடாப்பிடியாய் அக்கறையுடன் அர்ப்பணிப்புடன், இந்த வேலையைக் கவனிக்க வேண்டும் என்பதாலேயே இந்த வகுப்பு நடைபெறுகிறது எனத் தெரிவித்தார். வகுப்பில் ஓஎல்ஜி தோழர்கள் 50 பேர் வரை கலந்து கொண்டனர். வகுப்பு ஆலை வளாகத்திலேயே நடந்தது.
இகக(மாலெ) மத்திய குழு உறுப்பினர் தோழர் ஆர்.வித்யாசாகர் 12 சுற்றுகள் கொண்ட வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினார். வகுப்பில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும். சரியான பதில் தந்தால் மதிப்பெண் தரப்படும். தவறான பதில் தந்தால், அடுத்த கேள்வி அடுத்த குழுவுக்குச் செல்லும்.
12 சுற்றுகளில் தொழிற்சங்க இயக்கம், புவியியல் அரசியல், இலக்கியம், விளையாட்டு போன்ற தலைப்புகளில் 48 கேள்விகள் கேட்கப்பட்டன. நான்கு குழுக்களும் முறையே 100, 55, 90, 88 மதிப்பெண்கள் பெற்றனர். 48ல் 32 (75%) கேள்விகளுக்கு முழுமையாகவும் 2 கேள்விகளுக்கு ஒரு பகுதியும் பதில் சொல்லி விட்டனர். வினாடி வினா நிகழ்ச்சியை நாம் இன்னமும் சிறப்பாக நடத்தி இருக்கலாம். வினாடி வினா அமர்வு நிகழ்ச்சியில் தொழிலாளர் ஈடுபாட்டை உறுதி செய்தது.
சமகால கார்ப்பரேட், மதவெறி, பாசிச வலதுசாரி சூழலில், சிவப்பு, கருப்பு, நீலம் சேர்ந்து செயல்பட வேண்டிய முக்கியத்துவம் கருதி, பெரியார், அம்பேத்கார், பகத்சிங், மார்க்ஸ் பற்றிய தலைப்புகளில் உரையாற்ற தொழிலாளர்கள் அழைக்கப்பட்டனர். குறிப்புகள் எடுத்து வந்து, தேடிப் படித்து வந்து ஒரு தோழர் அம்பேத்கர், இரண்டு தோழர்கள் பெரியார், ஒரு தோழர் பகத்சிங், ஒரு தோழர் மார்க்ஸ் பற்றிப் பேசினார்கள். தயாரிப்புகள் வியப்பு தந்தன. அம்பேத்கர் பற்றி தோழர் துரை, பெரியார் பற்றி தோழர்கள் ராஜீவ் காந்தி, சீனிவாசன், பகத்சிங் பற்றி தோழர் ரூபன், மார்க்ஸ்  பற்றி தோழர் ஜெகன்னாதன் பேசினார்கள். 11.15 முதல் 1.15 வரை நிகழ்ச்சி நடந்தது.
தோழர் குமாரசாமி எடுப்பதாக இருந்த வகுப்பை, வேலை நாளில் அனைவரும் கலந்து கொள்ளும் பொதுப் பேரவையில் வைத்துக் கொள்ளலாம் என முடிவானது. பயிற்சி முகாமில் கலந்துகொண்ட தோழர்கள் நிகழ்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் தங்கள் பங்களிப்பை உறுதி செய்வதாகவும் அமைந்தது என்றனர்.
இந்த நிகழ்ச்சி, மற்ற  இடங்களில் இது போன்ற வகுப்பு நடத்துவதற்கான, காஞ்சிபுரத்தில் உடனடியாக அம்பேத்கர் -பகத்சிங் படிப்பு வட்டம் துவங்குவதற்கான அவசர அவசியத்தை முன்கொண்டு வந்துள்ளது.

Search