ஈரானை வம்புக்கிழுக்கும் அய்க்கிய அமெரிக்கா
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
ஏகாதிபத்தியத்துக்கு எப்போதும் போர் வேண்டும். அதற்கு என்ன காரணங்கள் வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளும்.
பேரழிவு ஆயுதங்கள் இருந்தன என்று சொல்லி ஈராக் மீது போர் தொடுத்து, சதாம் உசேனை கொன்று எல்லாம் முடிந்த பிறகு அங்கு பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று அய்க்கிய அமெரிக்கா சொன்னது. போர் தளவாடங்கள், மறுகட்டுமானப் பணிகள் என அய்க்கிய அமெரிக்க நிறுவனங்கள் கொழுத்து வளர்ந்தன. அக்கம்பக்கமாக திரும்பி வந்த சவப்பெட்டிகள் உள்நாட்டில் எதிர்ப்புகளை உருவாக்கின. சித்திரவதைக் கூடங்கள் சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாயின. இனி போர் இல்லை, ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று அடுத்தடுத்து தேர்தலில் நின்றவர்கள் சொல்ல நேர்ந்தது. பெருமளவு துருப்புகள் நாடு திரும்பினாலும் ராணுவத்தை முழுமையாக திரும்பக் கொண்டு வர முடியாது என்ற சிக்கலில் அய்க்கிய அமெரிக்கா மாட்டிக் கொண்டது. பட்ட அடி அடியாகவே தொடரும் போதும் அடுத்த தாக்குதலுக்கு அய்க்கிய அமெரிக்கா அடி போடுகிறது.
இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசத்தை பரிசோதனை செய்து பார்க்கும் வெனிசூலாவின் முதுகெலும்பை உடைக்க அதன் எண்ணெய் வர்த்தகத்தின் மீது கொடூரமான தடைகள் விதித்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த அய்க்கிய அமெரிக்காவின் பார்வை ஈரான் மீது கவனம் குவிக்கிறது. அங்குள்ள எண்ணெய் வளத்தின் மீது திரும்புகிறது. ஈராக் மீதான போரில் முக்கிய பங்கு வகித்த ஜான் போல்டன்தான் இன்று ட்ரம்ப்பின் பாதுகாப்பு ஆலோசகர். ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று தொடர்ந்து பேசுபவர். அய்க்கிய அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோவும் போல்டனைப் போலவே சிந்திப்பவர்.
ஈரான் ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்டது. சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினர் பெரும்பான்மை. ஷியா - சன்னி முரண்பாடு அவர்களுக்குள் ஓயாதது. சவுதி அரேபியா அய்க்கிய அமெரிக்காவின் ஏவல் நாடு. ஈரானுக்கு கேடு வர இன்னும் என்ன வேண்டும்?
போர்ப் பதட்ட விஷச் சுழலேணியின்
விசை கூட்டப்படுகிறது
பொய்க் காரணங்கள் தேடும் அய்க்கிய அமெரிக்காவுக்கு, மே 12 அன்று ஈராக்கின் பாக்தாதில் அய்க்கிய அமெரிக்க தூதரகமும் அரசு அலுவலகங்களும் இருக்கிற பசுமை மண்டலமாக அறியப்படுகிற பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடந்ததும் மே 12 அன்று சவுதியின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதும் சவுதியில் மே 14 அன்று எண்ணெய் குழாய்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்ததும், ஏமனின் சவுதி ஆதரவு பெற்ற அரசுக்கு எதிரான ஹவுதி கலகக் குழு ஆளில்லா விமானம் மூலம் நடந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றதும் வாய்ப்பாகிப் போனது.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தூண்டுதலில்தான் நடந்தன என்று சவுதி பத்திரிகை செய்தி வெளியிட, ஹவுதியும் ஈரானும் அந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும் ஈரானும் தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என்றும் சொன்ன பிறகும், சர்வதேச ரவுடி நாடான அய்க்கிய அமெரிக்கா தனது நாட்டாமை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
சவுதியிலும் ஈராக்கிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அய்க்கிய அமெரிக்காவின் ஆதரவும் இருப்பதால் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனா மீது சவுதி தாக்குதல் நடத்தியதில் ஏமனியர்கள் 6 பேர், 2 குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டார்கள். பதட்ட விஷச் சுழலேணியை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அய்க்கிய அமெரிக்கா அதன் விசையை மேலும் முடுக்கிவிட்டுள்ளது.
ஈராக், லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள தனது ஷியா குழுக்கள் மூலம் ஈரான் போருக்கு தயாராவதாக செய்திகள் உள்ளன என்று போல்டன் சொல்கிறார். ஈரான் தான் இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என எந்த சான்றும் இது வரை போர் வெறிக் கூச்சல் போடும் அய்க்கிய அமெரிக்கா தரவில்லை. ஆயினும், அய்க்கிய அமெரிக்காவின் அல்லது அதன் நட்பு நாடுகளின் நலன்கள் மீது தாக்குதல் நடந்தால் அதற்குப் பதிலாக ஈரான் மீது சமரசமற்ற தாக்குதல் நடத்தப்படும் என்றும் லெபனான், ஈராக், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு ஷியா குழுக்கள் தாக்குதல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டால், அது நேரடியாக அய்க்கிய அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான நேரடி ஆயுத மோதலுக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் பாம்பியோவும் போல்டனும் சொல்கிறார்கள்.
ஈராக்கிலோ, சிரியாவிலோ இருக்கிற ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களால் எந்த கூடுதல் அச்சுறுத்தலும் இல்லை என்று மே 14 அன்று, அய்எஸ்அய்எஸ்சுக்கு எதிரான அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான ராணுவ குழுவின் துணை தலைவர், இங்கிலாந்தின் மேஜர் ஜெனரல் கிரிஸ் ஜிகா சொல்கிறார். அவருக்கு போதுமான தகவல்கள் தரப்படவில்லை என்று சொல்லி அவர் சொல்வது நிராகரிக்கப்பட்டது.
ஏமனில் ஹவுதிகளை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் சவுதி எடுக்கும் தாக்குதல் நடவடிக்கைகளில் சாமானியர்கள் உயிரிழப்பு தொடர்கிறது. 2018 அக்டோபரில் அய்க்கிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சவுதி ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல்களை ஒட்டி, சவுதிக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத விற்பனை செய்ய எடுக்கப்பட்ட முடிவுக்கு அய்க்கிய அமெரிக்க காங்கிரஸ் தடை விதித்திருந்தது. ட்ரம்ப் தனது அதிகாரத்தின் மூலம் இந்த முடிவுக்கு முடிவு கட்டி, தற்போதைய அச்சுறுத்தல்களின் ஊடே மே 24 அன்று அய்க்கிய அமெரிக்கா சவுதி அரபியாவுக்கு 7 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள் விற்க முடிவு செய்துள்ளார். இது போன்ற விற்பனைக்கு காங்கிரசின் ஒப்புதல் தேவை. ஆனால், தேசப் பாதுகாப்பு நலன் கருதி அதிபர் முடிவுகள் எடுக்க அங்கு ஜனநாயகத்தில் வாய்ப்பு இருப்பதால், சவுதிக்கு ஈரானால் ஆபத்து என்று சொல்லி இந்த முடிவை ட்ரம்ப் எடுத்திருக்கிறார். ஈராக் மீதான போர் நடப்பதற்கு முன்பு புஷ்ஷ÷ம் இதுபோன்ற முடிவு ஒன்று எடுத்தார். அய்க்கிய அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் போர் தளவாட உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றின் விற்பனைக்குதான் முன்னுரிமை என்பதால், உலக அமைதியும் சாமான்ய மக்கள் வாழ்க்கையும் பலி பீடத்தில் கிடத்தப்படுகின்றன.
ஒரு பக்கம், போர் என்றால் மக்கள் மடிவார்கள். அதனால் போர் கூடாது என்கிறார். மறுபக்கம், எதிர்க்க வேண்டும் என்று ஈரான் முடிவு செய்துவிட்டால், அதுவே ஈரானுக்கு அதிகாரபூர்வமாக முடிவு கட்டுவதாக இருக்கும் என்கிறார். 1,20,000 பேர் படையை ஈரானுக்கு அனுப்ப தயாராக வேண்டும் என்று போல்டன் சொன்னதாக செய்திகள் வந்தன. அது பொய்ச் செய்தி என்று சொன்ன ட்ரம்ப் இப்போது 1,500 பேர் கொண்ட படையை அனுப்புவதாக அறிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜேவத் சரீப், பொருளாதார பயங்கரவாதமும் மனிதப் படுகொலை அச்சுறுத்தல்களும் ஈரானுக்கு முடிவு கட்டாது, ஈரானை ஒருபோதும் மிரட்டாதீர்கள், மதிக்க முயற்சி செய்யுங்கள், அது விளைவுகள் தரும் என்றும் அய்க்கிய அமெரிக்க அதிபரை போல்டன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யஹ÷ மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் கொண்ட அவரது பி டீம் தூண்டுகிறது என்றும் சொல்கிறார்.
பதட்டத்தை உருவாக்கும்
அணுசக்தி ஒப்பந்த மீறல்
2015ல் பிரிட்டன், பிரான்ஸ், சீனம், ஜெர்மனி, ரஷ்யா, அய்ரோப்பிய ஒன்றியம், ஈரான் மற்றும் அய்க்கிய அமெரிக்க நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி உற்பத்தி நடவடிக்கைகளை குறுக்கிக் கொள்வ தாக ஈரானும், ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அய்க்கிய அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. ஈரான் தனது நாட்டுக்குள் வந்து நடத்தப்படும் சோதனைகளுக்கும் ஒப்புக்கொண்டது. மே 2018ல் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதித்தார். ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்றார்.
ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்தி வந்த ஈரான், ஓர் ஆண்டு காத்திருத்தலுக்குப் பிறகு, சர்வதேச சமூகம் எந்த பதில்வினையும் ஆற்றாத நிலையில் இப்போது, தானும் ஒப்பந்தத்தை மீறும் நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டுவிட்டது என்றும் ஒப்பந்தத்தை மீறி அணுசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தனது எண்ணெய் மற்றும் வங்கி துறை சந்திக்கும் நெருக்கடியை தணிக்கும் விதம் அய்க்கிய அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வதை அய்ரோப்பிய நாடுகள் உறுதி செய்யவில்லை என்றால் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மேலும் மீறும் நிர்ப்பந்தம் தனக்கு நேரிடும் என்று சொல்கிறது.
அய்க்கிய அமெரிக்காவின் தடைகளைத் தொடர்ந்து நாளொன்றில் 28 லட்சம் பேரல்கள் என்பதில் இருந்து 10 லட்சம் பேரல்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி குறைந்திருக்கிறது. இந்த மாதம் அது 5 லட்சம் பேரல்களாகக் கூட குறையலாம் என்று சொல்லப்படுகிறது. அதை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்று அய்க்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ சொல்கிறார்.
இந்தியாவில் என்ன தாக்கம்?
2018ல் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் வெளியேறிய பிறகு, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருந்த தடைக்கு அய்க்கிய அமெரிக்கா அளித்திருந்த விலக்கு ஏப்ரல் 22 அன்று ரத்து செய்யப்பட்டது. ஈரானில் இருந்து மே 2க்குப் பிறகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது என கெடு விதித்தது. ஈரானுடன் வர்த்தகம் செய்பவர்கள் யாரும் அய்க்கிய அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்று ட்ரம்ப் ட்விட்டரில் சொன்னார்.
ஈரான், பதிலுக்கு ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு வழிவிடப் போவதில்லை என்று சொல்கிறது. இப்படி நடந்தால் சர்வதேச எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்திய எண்ணெய் இறக்குமதியில் மாதம் 12 லட்சம் மில்லியன் டன், 10% ஈரானில் இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஈரானில் இருந்து வாங்குவது ஒப்பீட்டுரீதியில் மலிவானது. டாலரில் அல்லாமல் யூரோவில் ரூபாயிலும் அந்த எண்ணெய்க்கான நிதியை, ஒப்பீட்டுரீதியில் கூடுதல் கால அவகாசத்தில் இந்தியா தருகிறது. பணமாக மட்டுமின்றி, ஈரான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசி, மருந்துகள் போன்ற பொருட்களுக்கான விலைக்கும், எண்ணெய்க்குத் தர வேண்டிய தொகை ஈடு செய்யப்படுகிறது.
ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை முடித்துக் கொள்வதில், தேர்தல் நடப்பதால் கால அவகாசம் கேட்டிருந்த இந்திய அரசாங்கம், இப்போது வெனிசூலா மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இந்தப் பற்றாக்குறையை சவுதியும் அய்க்கிய அரபு அமீரகமும் தங்கள் உற்பத்தியை அதிகரித்து ஈடு செய்யும் என்று உறுதித் தரப்பட்டாலும், இந்த உற்பத்தி அதிகரிப்பு அவ்வளவு எளிதானதல்ல என்றும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஈரானை, வெனிசூலாவை முறியடிக்கும் அய்க்கிய அமெரிக்கச் சதியின் சுமையை உலகின் எளிய மக்கள் முதுகில் ஏற்றுகிறார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏறத் துவங்கிவிட்டது. ஒரு பக்கம் போர்ப் பதட்டம், மறுபக்கம் விலையேற்றம் என நாட்டு மக்கள் பெரும் துன்பத்தை எதிர்கொள்ளும் கெடுவாய்ப்பு காத்திருக்கிறது.
ஈரானுடன் போர் என்ற பதட்டத்தை செயற்கையாக உருவாக்கி ஒரு சுற்று ஆயுத விற்பனையை உறுதி செய்துவிட்ட ட்ரம்ப், இதற்கு மேலும் செல்லாமல் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெட்ட போரிடும் உலகம் வேரொடு சாய்க்கப்பட வேண்டும்.