COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, June 28, 2019

மேற்கு வங்க இடதுசாரி அணிகளுக்கும் 
ஜனநாயகத்தை விரும்புகிற, முற்போக்கு மேற்கு வங்க மக்களுக்கும் 
இகக மாலெயின் மனமார்ந்த வேண்டுகோள்

(இககமாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் விடுத்துள்ள வேண்டுகோள்)

மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது.
தேர்தல்கள் முடியும் வரை மூடிவைக்கப்பட்ட உண்மைகளை, இப்போது அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துவிட்டது என்று இப்போது நமக்குத் தெரியும். கடந்த அய்ம்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்று இப்போது நமக்குத் தெரியும். பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு, பட்கம் பகுதியில் நொறுங்கி விழுந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இருந்த ஆறு அதிகாரிகளும் சாமான்யர் ஒருவரும் இறந்துபோனார்கள். அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது நமது இந்திய விமானப் படை ஏவுகணைகள்தான் என்று இப்போது நமக்குத் தெரியும்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, புதிய கொள்கை அறிவிப்புகள் துவங்கிவிட்டன என்பதும் நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட 50 பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படும் அல்லது தனியாருக்கத் தரப்படும் என்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும்விதம் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும் என்றும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. கூடுதல் வருமானம் ஈட்டுகிற ரயில் வழித்தடங்களை அம்பானி - அதானி கார்ப்பரேட் கிளப்பிடம் ஒப்படைத்துவிட ரயில்வே அமைச்சகம் திட்டமிடுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கை முன்வரைவு சொல்கிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பெயரில், ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் சீர்குலைக்க, ஒரே நேரத்தில் எல்லா மட்டங்களிலும் தேர்தல்கள் நடத்தும் விதம் தேர்தல் முறையை மாற்றியமைக்க அரசாங்கம் தீவிரம் காட்டுகிறது.

இந்தச் சூழலில், இடதுசாரி செயல்பாட்டாளர்களாகிய நாம், ஒரு கணமும் தாமதமின்றி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டும். நமது ஜனநாயத்தை, நமது நாட்டின் கூட்டாட்சி முறையை, நமது வாழும் உரிமையை மோடி அரசாங்கத்திடமோ அல்லது வேறு எந்த அரசாங்கத்திடமோ நாம் நிச்சயம் ஒப்படைக்க முடியாது. ஒப்படைத்துவிடக் கூடாது.

மேற்குவங்கத்தில் இன்று இன்னும் ஓர் அவசர பிரச்சனை நம் முன் உள்ளது. மாநிலத்தின் சமூக – கலாச்சார சூழலும் அரசியல் இயல்பும் வேகமாக மாறி வருகின்றன. நாடெங்கும் மக்களின் அமைதியை, ஒற்றுமையை, வாழும் உரிமையை தாக்குதலுக்கு உள்ளாக்கி வரும் பாஜக, இங்கு ஜனநாயகத்தை மீட்பதற்காக போராடும் போராளியாக தன்னைக் காட்சிக் கொண்டு மேற்கு வங்க மக்களை ஈர்க்கப் பார்க்கிறது.

சைதன்யாவின், லாலன் பகீரின் வங்கம், ராம் மோகனின் வித்யாசாகரின் வங்கம், ரவீந்திரநாத்தின், நஸ்ருலின் வங்கம், சூர்யா சென், பாகா ஜதின், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வங்கம், இன்று ஒரு மிகப் பெரிய நெருக்கடியை, அதன் சமூகத்தின், கலாச்சாரத்தின், அரசியலின் மீது அனைத்தும் தழுவிய தாக்குதலை எதிர்கொள்கிறது.

அமித் ஷா நடத்திய பேரணி, வித்யாசாகர் சிலைகளை உடைத்துக் கொண்டு கொல்கத்தா வீதிகளில் சென்ற போது, இந்த நெருக்கடியின் முகத்தை நம்மால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. தேர்தல்களுக்குப் பிறகு, அரசியல் பயங்கரவாதத்தின் இந்தப் புதிய முகமும் அதன் அழிவு நடனமும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் தெரிய வருகிறது. அசாம், திரிபுரா மாநில மக்கள் இந்த முகத்தை சமீப காலங்களில் பார்த்து வருகின்றனர். தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்த மசோதா என்ற பெயர்களில், அசாமின் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடியுரிமையை இழந்துவிடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த ஆண்டு நடந்த தேர்தல்களில், மோடியும் அமித் ஷாவும் மேற்குவங்கத்தில் இதே விதைகளைத்தான் விதைத்துள்ளனர். ஆயினும், இந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் மேற்குவங்கத்தில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. இது நமக்கு மிகவும் கவலையளிக்கும் விசயமாகும்.

மேற்குவங்கத்தில் பாஜகவின் வாக்குகள் 24 சதம் அதிகரித்துள்ளபோது, இடதுசாரிகளின் வாக்குகள் 23 சதம் குறைந்திருப்பதும் இடதுசாரிகளிடம் இருந்து வாக்குகளின் பெரும்பகுதி, பாஜகவுக்குச் சென்றிருப்பதும் நமக்கு அவமானகரமானது. தெபாகா காலத்தில் இருந்து, உணவுக்கான இயக்கங்கள் மூலமாக, எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தினூடே, லட்சக்கணக்கான மக்களின் விடாப்பிடியான முயற்சிகளின், போராட்டங்களின் ஊடே, கொஞ்சம் கொஞ்சமாக சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட இடதுசாரிகளின் வெகுமக்கள் அடித்தளத்தை, இன்று மிகப்பெரிய வலதுசாரி, ஜனநாயக விரோத சக்தி கைப்பற்றப் பார்க்கிறது.

சித்தார்த் சங்கர் ரேயின் காவல்துறையால் இடதுசாரிகளை அழித்துவிட முடியவில்லை. திரிணாமூல் காலத்தின் மோசமான ஆட்சிக்கு எதிராக, பயங்கரத்துக்கு எதிராக, இடதுசாரிகள் மீண்டும் மீண்டும் குரல் எழுப்பினார்கள்; போராட்டங்களில் இறங்கினார்கள். ஆனால், இன்று அதே இடதுசாரிகளின் பெரிய பிரிவொன்று, பொய்களும் நஞ்சு தோய்ந்த மதவாத வெறுப்பும் நிறைந்த பாஜகவின் பிரச்சாரத்தின் முன், திக்குத் தெரியாமல் இருக்கிறது.

மேற்குவங்கத்திலும் இந்தியாவிலும் உள்ள இடதுசாரி அரசியல் இதற்கு முன்பு இது போன்ற ஒரு மோசமான திசைவழி நெருக்கடியை சந்தித்ததில்லை. திரிணாமூலின் மோசமான ஆட்சியை வேறு எப்படித்தான் எதிர்கொள்வது என்று சில இடதுசாரி நண்பர்கள் கேட்கின்றனர். பாஜகவுக்கு எதிராக பிறகு போராடிக் கொள்ளலாம், இப்போது திரிணாமூலை அகற்ற பாஜகவை பயன்படுத்திக் கொள்ளலாம், முள்ளை முள்ளால் எடுக்கலாம் என்கிறார்கள். ஆனால் சற்று பொறுமையாக, கண்ணைத் திறந்து பார்த்தால், பாஜகதான் முள்ளை முள்ளால் எடுக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
நேற்று வரை திரிணாமூலில் இருந்த ஊழல்வாதிகளின், குற்றவாளிகளின் நன்கறியப்பட்ட குழுக்கள், இன்று பாஜகவைச் சுற்றி நிற்கின்றனர்; அவர்களது சேவையுடன் ஆட்சியைப் பிடிக்க பாஜக வெறித்தனமாக முயற்சி செய்யும். கட்சித் தாவல், கட்சி அலுவலகங்களை கட்டாயமாக ஆக்கிரமிப்பது, மாணவர், தொழிலாளர் சங்கங்களை பலவந்தமாக கைப்பற்றுவது என்ற இந்த மாதிரியில், ஜனநாயகத்தை மீட்டெடுக்க வாய்ப்பேதும் உள்ளதா?

வங்கத்தின் இடதுசாரி உணர்வும் மனச்சாட்சியும் இந்த நெருக்கடியின் முன் நிச்சயம் வீழ்ந்துவிடாது; தங்களை வலதுசாரிகள் கைப்பற்றிக் கொள்ள ஒருபோதும் அனுமதிக்காது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்கிற நண்பர்களே, உங்களை நீங்களே இன்னும் நெருக்கமாக பாருங்கள். முள்ளை முள்ளால் எடுப்பது என்ற பெயரில் உங்களை நீங்களே முள்ளால் காயப்படுத்திக் கொள்ளவில்லையா? இது பிழைப்பதற்கான உத்தி அல்ல. இது அரசியல் தற்கொலை. நாட்டின் இடதுசாரி, ஜனநாயக முகாமை ஒரு காலத்தில் வலுப்படுத்திய மேற்குவங்கம், இப்போது, அரசியல் தற்கொலை என்ற ஆபத்தான அச்சுறுத்தல் பற்றி இடதுசாரிகளுக்கு எச்சரிக்கை தருகிறது.

கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது, வாருங்கள், போராடலாம் என்று இடதுசாரிகளாகிய நாம் சொல்கிறோம். வேலையிழந்த மூடப்பட்ட ஆலைகளின் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள், வன்முறையை எதிர்கொள்கிற பெண்கள் உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று அவர்களிடம் சொல்கிறோம். இன்று அதே செய்தியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; இடதுசாரி இயக்கத்துக்கு அதைப் பொருத்த வேண்டும். தனது கொள்கைகளை கைவிட்டுவிட்டு, சரணடைவது, தற்கொலை செய்துகொள்வது, இடதுசாரிகளுக்கு பொருத்தமாக இருக்காது. இடதுசாரிகளாக இருப்பது என்றால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து போராடிக் கொண்டு இருப்பதாகும். இடதுசாரிகளாக இருப்பதென்பது இறுதி வரை போராடுவதாகும். இறுதி வரை போராடுபவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று வரலாறு நமக்குச் சொல்கிறது.

இந்தத் தேர்தலில் பிழை செய்துவிட்ட இடதுசாரி நண்பர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்: உங்கள் பிழையை உணர்ந்து கொள்ளுங்கள். அதைத் திருத்திக் கொள்ளுங்கள். மீண்டும் இடதுசாரி பாதைக்கு வாருங்கள். இந்த ஆபத்துக்கு எதிராக உறுதியாக நின்ற இடதுசாரி நண்பர்களுக்குச் சொல்கிறோம்: தோழர்களே, செங்கொடியை இன்னும் உறுதியாக ஏந்துங்கள்.

எங்களது இகக மாலெ நீரோட்டத்தின் இடதுசாரிகள், மேற்குவங்கத்தில் எங்கள் கொள்கையில் உறுதியாக நிற்கிறோம்; பல்வேறு போராட்டங்கள் நடத்துகிறோம்; அந்தப் போராட்டங்களினூடே தவறுகள் செய்கிறோம்; பல பின்னடைவுகளை எதிர்கொள்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் நடுவில், கட்சியின் அய்ம்பதாவது ஆண்டில் நாங்கள் நுழைகிறோம். கட்சியின் நிறுவன பொதுச் செயலாளர் தோழர் சாரு மஜ÷ம்தாரின் பிறந்த நாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

சித்தார்த்தா காலத்து பயங்கரத்தின் உச்சத்தில் எழுதிய தனது கடைசி கட்டுரையில் தோழர் சாரு மஜும்தார், ஒரு பரந்த இடதுசாரி - ஜனநாயக ஒற்றுமையை கட்டியெழுப்ப கவனம் குவிக்க வேண்டும் என்று இகக மாலெ செயல்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் நலனே பிரதானமானது என்று அவர் எங்களுக்கு நினைவுபடுத்தினார்; மக்களுடன் சேர்ந்து நின்று பின்னடைவுகளை வெற்றி கொள்ள வேண்டும் என்று எங்களுக்குச் சொன்னார்; காரிருளின் மத்தியிலும் வெளிச்சத்தைத் தேட எங்களுக்கு உத்வேகம் அளித்தார்.

இன்று அய்ம்பது ஆண்டுகள் கடந்து, வேறு மாறிய சூழல்களில், இடதுசாரிகள் மீண்டும் அதே போன்ற ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது போன்ற புத்திசாலித்தனமானவை போல தோன்றும் கருத்துகளின் இந்த சரணாகதி பாதையை, தற்கொலைப் பாதையை விட்டு நாம் விலக வேண்டும்; மீண்டும் இடதுசாரி மாற்றை வலுப்படுத்த வேண்டும். இதற்கு, கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கும் துணிவும் தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் வலுவான உறுதிப்பாடும் நமக்கு வேண்டும். அனைத்து இடதுசாரி செயல்பாட்டாளர்களுக்கும், ஜனநாயக, முற்போக்கு பிரிவினருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்: வங்கத்தின் மண்ணில் பாஜக என்ற நச்சு மரம் வேர் விட்டு வளர நாம் அனுமதிக்கக் கூடாது.

வங்கத்தின் மண்ணில், வங்கத்தின் நீரில், வங்கத்தின் சூழலில் முற்போக்கு, பகுத்தறிவு நீரோட்டங்கள் வலுவாக வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றுக்கு ஆபத்து உருவாக்கிவிடக் கூடாது. மானுடமே அனைத்தையும் விட உயர்ந்தது. பதினைந்தாவது நூற்றாண்டு கவிஞர் சந்திதாசின் இந்த வார்த்தைகள் பல நூற்றாண்டுகளாக வங்கத்தின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளது. மானுடத்தின் அந்த பூமியில், கொள்ளையும் மதவெறி பிளவும் வெறுப்பும் காலித்தனமும் இடம் பிடிக்க அனுமதிக்கக் கூடாது.

பாஜகவின் கரங்களில் இன்று ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகமும் பேராபத்தில் உள்ளது. அரசியல் சாசனம் பேராபத்தில் உள்ளது. சட்டத்தின் ஆட்சியும் பேராபத்தில் உள்ளது. நாட்டு விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, இந்த சக்திகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்கள்; மதவெறி நஞ்சை பரப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று பெண்களும் தலித்துகளும் பழங்குடியினரும் கடுமையான போராட்டங்களினூடே வென்றெடுத்த உரிமைகளை பின்னோக்கித் தள்ளுகிறார்கள். ஏதிலிகளான, ஒடுக்கப்பட்ட மேற்குவங்க மக்களின் ஜனநாயகத்துக்கான, வளர்ச்சிக்கான விருப்பங்களை பயன்படுத்திக் கொண்டு, கார்ப்பரேட் முகவர்களும் மதவாத பிளவின் வெறுப்பின் வியாபாரிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றப் பார்க்கிறார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக, பஜ்ரங் தள் அமைப்புகளின் முரடர் கூட்டம், நாட்டு விடுதலைப் போராட்டத்தின் கோட்டையான, அறிவு, அறிவியல், கலை, இலக்கியம், விவாதம், பகுத்தறிவு, சுதந்திர சிந்தனை ஆகியவற்றின் இதயமான, ஆன்மாவான வங்க மண்ணை இன்று விரட்டிக் கொண்டு வருகிறது. இன்னும் மோசமான பேரழிவு என்பதைத் தவிர இவர்கள் மேற்கு வங்கத்துக்கு வேறென்ன பரிசுகள் தர முடியும்?

பாஜக மேற்குவங்கத்துக்குள் நுழைவதை திரிணாமூலின் மோசமான ஆட்சியும் மமதாவின் எதேச்சதிகார மாதிரியும் நிச்சயம் எளிதாக்கியுள்ளன. அதிகரித்து வரும் பாஜக அச்சுறுத்தலுக்கும் துயரத்தில் தள்ளும் திரிணாமூலின் மோசமான ஆட்சிக்கும் எதிராக சமூக, கலாச்சார, அரசியல் எதிர்ப்பு மதிலை கட்டியெழுப்பி வலுப்படுத்தி மேற்கு வங்க மக்களுக்கு இடதுசாரி மாற்றை முன்வைப்பது, இடதுசாரிகள் பக்கம் இருக்கிற அனைவரின் கடமை. வாருங்கள், இந்த இலக்கை எட்ட நாம் எழுவோம்; கவிஞர் சுகந்தா தனது மறக்க முடியாத வரிகளில் சொன்னதுபோல் 'வங்க மண்ணை வெற்றி கொள்ள முடியாது' என்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் காட்டுவோம்.

Search