COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 7, 2015

ரோஹிங்யா அகதிகள்:
சொந்த நாடு இல்லாத மக்கள்

பசித்திருந்த ரோஹிங்யா அகதிகள் பலரை ஏற்றி வந்த படகு ஒன்று, தாய்லாந்து கடலில் தத்தளிப்பதை மே 10 அன்று பார்த்தபோது தான், 2011 வரை ராணுவ ஆட்சி நடந்த,        தற்போது, ராணுவம் தயாரித்த அரசியலமைப்புச் சட்டப்படி, ராணுவத்தின் பின்புலம் கொண்ட யூனியன் சாலிடாரிடி மற்றும் டிவலப்மென்ட் கட்சியின் ஆட்சி நடக்கும் மியான்மிரில் நடக்கும் ஜனநாயக பரிசோதனையின் அலங்கோலமான யதார்த்தம் உலகுக்குத் தெரியவந்தது. அவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று மியான்மர் சொல்லிவிட்டது; இனரீதியான பாகுபாடுகளுக்கு ஆளாகும் ரோஹிங்யா இசுலாமியர்கள் நாடற்றவர்கள் ஆகிப்போனார்கள்; ஆட்கடத்தல்காரர்கள் உதவியுடன் மியான்மரில் இருந்து வெளியேறி மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் புகலிடம் தேடிச் சென்றபோது, நடுக்கடலில் கைவிடப்பட்ட அவர்களை, தெற்காசிய நாடுகள், இனரீதியான பாகுபாடுகளுக்கு ஆளாகி புகலிடம் தேடி வந்தவர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக அவர்களை சட்ட விரோதமாக குடிபுகுந்தவர்கள் என்றன.
ஆஸ்திரேலியாவும் அவர்கள்பால் அதே அணுகுமுறையைத்தான் கடைபிடித்தது. ரோஹிங்யா அகதிகளை அவர்கள் நாடு அனுமதிக்க வேண்டும் என்று கோரியபோது, ஆஸ்திரேலிய பிரதமர், ‘இல்லை, இல்லை, இல்லைஎன்றார். அவர்கள் கரையிறங்கட்டும்; அவர்கள் இங்கு தங்கட்டும்’, ‘ரோஹிங்யா அகதிகளை மீட்போம்என்ற முழக்கங்களுடன் சோசலிஸ்ட் அலயன்ஸ், பெர்த் நகரில் போராட்டம் நடத்தியது. கூட்டாக மீட்பு          நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அழைப்பு விடுவதற்கு, அது போன்ற ஒன்றில் இணைவதற்கு பதிலாக, புகலிடம் தேடி வந்த ரோஹிங்யா அகதிகளை திரும்பிச் செல்லச் சொல்லும் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு டோனி அப்பாட் அவமானகரமாக ஆதரவு தெரிவிக்கிறார்என்று போராட்டக்காரர்கள் குறிப்பிட்டார்கள். ரோஹிங்யா அகதிகள் அவர்கள் இனரீதியான பாகுபாடுகளுக்கு ஆளாவது, தாக்கப்படுவது ஆகியவற்றில் இருந்து அவர்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் விதம் மியான்மரின் எல்லைப் பகுதிகளை பாதுகாக்க கூடுதல் வசதிகள் தரப்பட வேண்டும் என்றும் டோனி அப்பாட் சொன்னார்.
500 முதல் 800 ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச் சென்ற அதுபோன்ற இன்னும் எட்டு படகுகள் அடுத்த சில நாட்களில் சர்வதேச தேடுதல் படைகளால் கடலில் கண்டுபிடிக்கப் பட்டன. இந்தோனேசியாவின் அசே பகுதி மீனவர்களால் மீட்கப்பட்ட, கிட்டத்தட்ட 800 ரோஹிங்யா அகதிகள் இருந்த ஒரு படகு, மூன்று மாதங்களுக்கும் மேல் தண்ணீரும் உணவும் இன்றி கடலில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த முடிவில்லா பயணத்தில் பலர் பட்டினியால் மடிந்தனர். அவர்களுடைய உடல்கள் கடலில் வீசியெறியப்பட்டன.
 இன்னும் 8,000 பேர், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் புகலிடம் கேட்டு காத்திருக்கிறார்கள்.
இந்தப் படகு மனிதர்களின் நிலைமைகள் அவர்கள் எதிர்கொள்ளும் நம்பிக்கையற்ற நிலை பற்றி பேசுகிறது.  எங்களுக்கு உதவி செய்யுங்கள்’, ‘என்னிடம் தண்ணீர் இல்லைபோன்ற குரல்கள் படகில் இருந்து எழுந்ததாக தனது வலைப்பூவில் ஒரு பத்திரிகையாளர் எழுதினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இந்த படகு மனிதர்களைப் பார்த்தாலே அவர்கள் ஊட்ட உணவின்றி இருப்பது, நாள்கணக்காக உணவும் தண்ணீரும் இல்லாமல் இருப்பது தெரிகிறது. மலேசியாவில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டபோது, கப்பலின் மாலுமி அவர்களை நடுக்கடலில் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டது பற்றி படகில் இருந்த ஒருவர் சொன்னார்.
வடக்கு மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யாக்கள் அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்கள் எனும்போதும் அவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் மறுக்கப்படுகிறது. 15ஆவது நூற்றாண்டில் இருந்து ரோஹிங்யாக்கள் மியான்மரில் வாழ்கிறார்கள். வடக்கு மியான்மரின் அராக்கன் பிராந்தியத்தில் புத்தமத ஆட்சியாளர்களின் கீழ் பணிபுரிந்தார்கள். ஆயினும், பர்மா யூனியனின் குடிமக்களாக அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஜெனரல்      நெவின் 1962 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, இப்போது மியான்மர் குடியரசு அவர்களை குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை. 
பல பத்தாண்டுகால ஒடுக்குமுறை, ஓரங்கட்டப்படுதல் ஆகியவற்றுக்குப் பிறகு, 1982 குடியுரிமை சட்டம், அவர்களை அதிகாரபூர்வமாக,        நாடற்றவர்கள் என்று ஆக்கியது. அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு ஓட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.
இந்திய தீபகற்பப் பகுதியில் இனரீதியான பாகுபாடுகளுக்கு மிகவும் மோசமாக ஆளாகும் சிறுபான்மையினராக, உள்நாட்டில் வாழும் இடத்தில் வெளியேற்றப்பட்ட மிகப்பெரிய பிரிவாக ரோஹிங்யா மக்கள் இருக்கக்கூடும். மியான்மரில் பல ஆண்டுகளாக நடந்த உள் நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ரோஹிங் யாக்கள், கடந்த காலத்தில் இந்தியா உள்ளிட்ட இந்திய தீபகற்ப நாடுகளில் புகலிடம் பெற முயற்சி செய்தார்கள்.
ஒரு புத்தமத பெரும்பான்மை நாட்டில், அதிகரித்து வந்த பிளவுவாத வன்முறையால், ரோஹிங்யாக்கள் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறினார்கள். அவர்கள் மீதான மியான் மர் அரசாங்கத்தின் வன்முறை, பக்கத்தில் உள்ள பங்களாதேஷிலும் தாய்லாந்து - மியான்மர் எல்லைப் பகுதிகளிலும் உள்ள மிகவும் மோசமான நிலைமைகள் கொண்ட அகதிகள் முகாம்களில் புகலிடம் தேட அவர்களை நிர்ப்பந்தித்தது. பங்களாதேஷிலும் தாய்லாந்திலும் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ள மோசமான நிலைமைகளில் இருந்து தப்பிக்கவே பெரும்பாலான அகதிகள் முயற்சி செய்ததாகத் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக     மியான்மர் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அதிகரித்து வந்ததால், பிற நாடுகளில் பாதுகாப்பான புகலிடம் பெற ரோஹிங்யா படகு மக்கள் ஆட்கடத்தல்காரர்களுக்கு பெரிய தொகையும் தர நேர்ந்தது.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட மியான்மர் ரோஹிங்யாக்கள் இனரீதியான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். வடக்கு மியான்மரின் வடக்கு ராகின் நகர்ப்புறத்தில் அவர்கள் பிரதானமாக குடியிருக்கின்றனர். 2012ல், மியான்மர் அரசாங்கம், ராகினில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களை ரோஹிங்யாக்களுக்கு எதிராக திருப்பிவிட்டு மிகப்பெரிய படுகொலையை நிகழ்த்தியது.
 ராகின் கலகம் என்று அது அறியப்படுகிறது. அதற்குப் பிறகு அவர்கள் நிலைமைகள் மேலும் மோசமடைந்தன. கிட்டத்தட்ட 1,40,000 ரோஹிங்யாக்கள் அவர்கள் வாழும் இடங்களில் இருந்து அகற்றப் பட்டார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யாக்கள், உள்நாட்டில் வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கான முகாம்களில், இனவெறியால் பாதிக்கப்பட்டது போன்ற நிலைமைகளில் இருப்பதாக அய்க்கிய நாடுகளின் அகதிகள் பிரிவு சொல்கிறது. 

நடுக்கடலில் ஆங்காங்கே நிற்கிற படகுகள், ரோஹிங்யாக்கள் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இனரீதியான பாகுபாட்டின் ஓர் அறிகுறி. செல்வதற்கு இடமில்லாத ரோஹிங்யாக்கள் ஆழமற்ற நீரில் மூச்சு விட முடியாமல் தத்தளிக்கும் மீன்கள் போல் ஆகிவிட்டார்கள்.
ரோஹிங்யா படகு மனிதர்களின் நிலைமைகள் தெரிய வந்த பிறகு, மியான்மர் அரசாங்கம் சர்வதேச அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களை பர்மா குடிமக்களாக ஏற்றுக்கொள்ள மியான்மர் அரசாங்கம் மீண்டும் மறுக்கிறது; படகு மனிதர்கள் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்றும் மியான்மரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் சொல்கிறது. ராகின் மாநிலத் தலைவரான மாங் மாங் ஓன் அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஆட்கடத்தல் பிரச்சனையை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது என்றும், அரசியல் அல்லது மத பாகுபாடு இதற்குக் காரணம் அல்ல என்றும் சொல்கிறார்.
ரோஹிங்யா படகு மனிதர்களின் நிலைமைகள், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு ராஜதந்திரரீதியான போரை தூண்டிவிட்டுள்ளது. உலகில், மிக மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபடும் அய்க்கிய அமெரிக்கா, சீனத்துக்கு நெருக்கமான நாடாகப் பார்க்கப்படும் மியான்மர் அரசாங்கத்துக்கு எதிரான விசயமாக இந்தப் பிரச்சனையை மாற்றப் பார்க்கிறது. மியான்மரில் ரோஹிங்யா மக்கள் எதிர்கொள்ளும் அரசியல்ரீதியான, மதரீதியான பாகுபாடு என்ற பின்னணியில் ரோஹிங்யா நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று அய்க்கிய அமெரிக்கா சொல்கிறது. 
மியான்மர் அரசாங்கம் தொடர்பாக இதே போன்ற விமர்சனங்களை முன்வைத்தாலும், அய்க்கிய அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் பலவும் ரோஹிங்யாக்களுக்கு நிரந்தர புகலிடம் தர மறுத்துள்ளன. பிலிப்பைன்ஸ், காம்பியா போன்ற சிறிய நாடுகள்தான் கடலில் தத்தளிக்கிற ரோஹிங்யா மக்களுக்கு இடம் தரும் இதயம் கொண்டுள்ளன. இந்த  ராஜ தந்திரரீதியான போரில், முதல் உலக நாடுகள், இந்தப் பிரச்சனையில் மியான்மர்        அரசாங்கத்தை கண்டனம் செய்கிறபோது, ரோஹிங்யா மக்களின் நிலைமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
ரோஹிங்யா மக்களின் நிலைமைகள் மியான்மர் அரசாங்கத்தின் பெரும்பான்மை வாத, எதேச்சதிகார இயல்பை காட்டும்போது, மியான்மருக்குள் எதிர்ப்புக் குரல்கள் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சூ கி தலைமையிலான ஜனநாயக ஆதரவு கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியும் இந்தப் பிரச்சனையில் மவுனம் காக்கிறது. 
இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள தேர்தல்களில் தனக்கு உள்ள வாய்ப்பை பிரச்சனைக்குள்ளாக்க சூ கி விரும்பவில்லை என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். ரோஹிங்யா மக்களின் நிலைமைகள் தொடர்பான சூ கியின் மவுனம் மியான்மரில் உள்ள பரந்த அரசியல் சூழல் பற்றி பல விசயங்களைச் சொல்வதாக இருக்கிறது. நாட்டின் அடுத்த அதிபராக முயற்சி செய்கிற சூ கி, மியான்மர் அரசின் பெரும்பான்மைவாத பார்வையை தகர்க்க விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் ரோஹிங்யாக்கள் இந்தியாவிலும் புகலிடம் நாடியுள்ளனர்; இந்தியாவும் இந்த விசயத்தில் போர்த்தந்திரரீதியாக மவுனமாக இருக்கிறது. 2012ல் இந்தியாவில் இந்துத்துவா கும்பல்களின் விஷமத்தனமான மதவெறி வெறுப்புப் பிரச்சாரத்துக்கு ரோஹிங்யா அகதிகள் ஆளாக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் (காண்க: சுசேதா தே எழுதிய நாடற்ற மக்கள்கட்டுரை, லிபரேசன், ÷ன் 2012).
வடகிழக்கு மாநிலமான அசாமில் சென்ற ஆண்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷில் இனரீதியான பாகு பாடுகளுக்கு ஆளாகும் இந்துக்களை திறந்த இதயத்துடன் இந்தியா வரவேற்கும் என்றார். பங்களாதேஷ் இசுலாமியர்களை விட, பங்களாதேஷ் இந்துக்கள்தான், இனரீதியான பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள், அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது நாட்டின் பொறுப்பு என்று பாஜக கருதுவதால், பங்களாதேஷ் இசுலாமியர்கள் நாட்டுக்குள் குடிபுகுவதை எதிர்ப்பதையும் பங்களாதேஷ் இந்துக்களை வரவேற்பதையும் பாஜக நியாயப்படுத்தியது. ஆயினும், ரோஹிங்யாக்கள் பிரச்சனை பற்றிய அதன் நன்கு தெரிகிற மவுனம், இந்துக்கள் எதிர்கொள்ளும் இனரீதியான பாகுபாடு பற்றி மட்டும்தான் மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் கவலைப்படுமே தவிர, இந்த பிராந்தியம் முழுவதும் இசுலாமியர்கள் எதிர்கொள்ளும் இனரீதியான பாகுபாடு பற்றி அதற்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. 
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மோடி புதிய திசை நோக்கி பின்னுகிறார் என்று பலரும் சொல்கிறார்கள்; ஆனால், அந்தப் புதிய திசை ஓர் இந்துப் பெரும்பான்மைவாத திசை என்பது தெளிவு.
ரோஹிங்யாக்கள் இனரீதியான பாகுபாடுக ளுக்கு ஆளாகும் பிரச்சனை மூலம், தீபகற்ப பிராந்தியம் முழுவதும் உள்ள அரசாங்கங்களின் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் விரோத இயல்பை புரிந்துகொள்ள முடியும். சிறிலங்காவில் பெருமளவில் தமிழ் சிறுபான்மை மக்கள் இனரீதியான பாகுபாடுகளுக்கு உள்ளாயினர்.
 ஓர் அப்பட்டமான இசுலாமியர் விரோத கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை இந்தியா பார்த்தது. பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ள அரசாங்கங்களும் தங்கள் நாடுகளுக்குள் உள்ள சிறுபான்மை சமூகங்கள், எதிர்ப்புக் குரல்கள் ஆகியவற்றை ஒடுக்கியுள்ளன. இந்த நாடுகளில் பாசிச பெரும்பான்மை வாத அரசியல் பெருமளவில் ஆழப்பரவியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. சமீப காலங்களில், இந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் இன மோதல்கள் அதிகரித்து வருகின்றன; அரசாங்கங்கள், அவமானகரமான விதத்தில், பெரும்பான்மை இனக் குழுவையே ஆதரித்துள்ளது.

வறிய மக்களுக்கு எதிரான அரசியல் - சமூக பாகுபாடும் அதிகரித்து வருகிறது. ஒரு ஜனநாயக போர்வையுடன் எதேச்சதிகார அரசாங்கங்கள் உருவாக அடையாள மோதல்கள் களம் உருவாக்கிவிடுகின்றன. இது பல்வேறு நாடுகளில் மக்களை வறுமையில் தள்ளுகிறது. இந்த புவி - அரசியல் சூழலில் தாங்கள் வாழ்வதற்கு ஒரு நிரந்தரமான இடம் தேடும் ரோஹிங்யா மக்களின் போராட்டம், உலகெங்கும் உள்ள உண்மையான ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு குரல் எழுப்புவது, ஏகாதி பத்திய அரசாங்கங்களுக்கு எதிராக ஒன்றிணைவது போராடுவது ஆகியவற்றுடன்தான் வெற்றி பெற வேண்டும்.

Search