COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, June 16, 2015


ஊழல் வேட்பாளரை தோற்கடிக்க இடதுசாரி வேட்பாளரை
வெற்றி பெறச் செய்வோம்!

ஊழல் வழக்கில் இரண்டு முறை முதலமைச்சர் பதவி இழந்த ஜெயலலிதா, அவர் இரண்டாவது முறையாக ஊழல் வழக்கில் பதவியிழந்த பிறகு நடக்கும் இரண்டாவது இடைத் தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டிருக்கிற நிலையில், ஊழல் குற்றவாளியாக இருந்தவரை எதிர்த்து இடதுசாரி கட்சிகளின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் களமிறங்குகிறார்.

மக்கள் பணத்தை வாரியிறைத்து தேர்தல் நடத்தப்பட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் எந்த காரணமும் இல்லாமல் அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார். மீண்டும் அங்கு தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடப்பதற்கு பதவி விலகல்களுக்கு எல்லாம் பின்னால் இருக்கும் காரணம் ஊழல். பொதுவில் சொல்லும்படி எந்தக் காரணமும் இல்லாமல் பதவிக் காலம் முடியப் போகிற நேரத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார் என்றால் ஆதாயம் இல்லாமலா இருக்கும்? மீண்டும் மக்கள் பணம் விரயமாகப் போகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ரூ.3 லட்சம் தரும் அஇஅதிமுக இந்த தேர்தல் செலவுகளை ஏற்குமா?

இடைத்தேர்தல் வந்தாதான் ஏதோ கொஞ்சம் நடக்குது
ஜெயிச்சுப் போன எம்எல்ஏ செத்தாக்க நல்லது...
அறிவுமதியின் பாடல் வரிகள் இன்றும் பொருந்துபவை. மக்களுக்கு ஏதும் நடக்கிறதோ இல்லையோ, பதவி விலகிய ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவுக்கு ஏதாவது நிச்சயம் நல்லதுநடந்திருக்கும். அக்கம்பக்கமாக மக்களுக்கும் ஏதோ நடக்கிறது. சென்னையின் விளிம்பு நிலை மக்கள் வாழ்கிற ஆர்கே நகர் தொகுதியில் இன்று சாலைகள் போடப்படுவதாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 2011ல் இருந்து 2015ல் ரூ.117 கோடி என இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது ஜெயலலிதாவே காட்டியுள்ள கணக்கு. குமாரசாமிக்கு இந்தக் கணக்கில் எந்த சம்பந்தமும் இல்லை.

 ஊழல் குற்றவாளியாக இருந்த ஒருவரின் வருமானம் எப்படிப் பெருகுகிறது என்று இனி தமிழ் நாட்டில் அவரவர் புரிந்துகொள்வார்கள். கொடநாடு எஸ்டேட் மதிப்பே ரூ.4,500 கோடி என்று கருணாநிதி ஒரு கணக்கு சொல்கிறார். இதற்கு ஜெயலலிதா என்ன கணக்கு தருவார்? அவரது அசையாச் சொத்துக்களின் சந்தை மதிப்பு உயர்ந்து இரண்டு மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதே கால கட்டத்தில், அஇஅதிமுகவை தங்கள் தொகுதியில் வெற்றி பெற வைத்த ஆர்கே நகர் தொகுதியின் வறிய மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே சவாலாக இருந்தது
1991 முதல், 1996 - 2001 காலகட்டம் தவிர, 2015 வரை கிட்டத்தட்ட இருபதாண்டு காலம், இந்தத் தொகுதியில் அஇஅதிமுக காரர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள். இருபதாண்டு காலமாக குடிநீர், குடியிருப்பு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் கூட பெறாத அந்தத் தொகுதி, புரட்சித் தலைவி வெற்றி பெற்ற பிறகு, சொர்க்க பூமியாகப் போகிறது என்கிறார்கள் அஇஅதிமுககாரர்கள்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிற தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் ஆர்கே நகர் தொகுதி. முதலமைச்சர் என்ற விதத்தில் ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் உருவாக்குவதில் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் பொறுப்பு உண்டு. ஆர்கே நகர் தொகுதி அஇஅதிமுக காரர்களிடம் இருந்த இருபதாண்டு காலமும், ஊழல் வழக்குகளில் பதவி இழந்த காலங்கள் தவிர, ஜெயலலிதாதான் முதலமைச்சர். முதலமைச்சராக இருந்து பாதுகாக்காத மக்கள் வாழ்வுரிமைகளை, சட்டமன்ற உறுப்பினர் ஆகி பாதுகாத்து விடுவார் என்று அஇஅதிமுகவினர் நம்மை நம்பச் சொல்கிறார்கள். ஜெயலலிதா மனுதாக்கல் செய்ய வந்த போது, தேர்தல் அலுவலரின் அந்தச் சிறிய அறையில் மூன்று குளிர்சாதனப் பெட்டிகள் இருந்ததாகவும், அதற்கு முந்தைய நாள் ஜெயலலிதா வரும் வழியில் புதிய சாலை போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நடக்கும் நல்லது எதுவானாலும் ஜ÷ன் 27க்குப் பிறகு வடிந்துவிடும்.

நலத்திட்டங்கள் என்று அவர் சொல்லி வருவதை மட்டும் சொல்லி, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு இல்லை. இருபதாண்டுகள் செய்யாததை இனி செய்வதாகச் சொன்னால் தொகுதி மக்கள் நம்ப மாட்டார்கள் என்று நம்புகிறார். எனவே, அனைத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி தேர்தல் பிரச்சார வேலைகளை முடுக்கிவிடுகிறார். சட்ட மன்றம் இயங்கவில்லை, அமைச்சர்கள் எல்லாம் போய்விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. சட்டமன்றம் இயங்கியபோதும் மக்களுக்கு  எதிரான நடவடிக்கைகள்தான் அரங்கேறின.
ஆந்திர காவல்துறையினர் தமிழ்நாட்டின் பழங்குடி தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற பிரச்சனையில் மனித உரிமை ஆணையம் நடத்தவிருந்த விசாரணைக்கு அய்தராபாத் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. மீண்டும் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதுகிறார் ஜெயலலிதா. சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டும் என்று இன்னும் ஜெயலலிதாவிடம் இருந்து எந்த உறுதியான குரலும் வரவில்லை.
மழை பொய்க்கிறது. விவசாயிகள் மேட்டூர் தண்ணீரை எதிர்ப்பார்த்திருக்க, அது வராது என்று சொன்னவர் மாற்று ஏற்பாடுகள் பற்றி கவலைப்படவில்லை. நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தச் சொல்லி, நடத்தப்பட்ட பூஜைகள் பற்றிய விவரங்களை அவருக்கு உடனடியாக தெரிவிக்கச் சொல்லி ஆணை பிறப்பிக்கிறார். நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படுகிறது. வெளிநாட்டு வங்கிகள் உதவியுடனான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படுகின்றன.
 இவற்றை நிறைவேற்ற வேண்டிய அதிகாரி, கடவுளிடம் கையேந்தச் சொல்கிறார். மழை பெய்யாததற்கு தமிழக மக்களுக்கு கடவுள் பக்தி இல்லாதது காரணம் என்று ஜெயலலிதாவும் தலைமைப் பொறியாளரும் சேர்ந்து சொன்னாலும் வியப்படைவதற்கில்லை. கடவுளை நிந்திக்கும் கருணாநிதி ஆட்சி செய்வதால்தான் தமிழ்நாட்டில் மழை பெய்யவில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பூஜை செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தவர்கள், அதிகாரபூர்வமாகக் கூட இது போன்ற கருத்துக்களை வெளியிடலாம். பால் கொள்முதல் செய்யாதது அரசின் தவறு. ஆவின் நிறுவன ஊழல் வெளிவந்ததால் பால் உற்பத்தியாளர்களுக்கு தண்டனையா? ஊட்டச் சத்து, உணவு எதுவும் இன்றி தமிழகக் குழந்தைகள் வாடும்போது பால் தெருவில் கொட்டப்படுகிறது. ஜெயலலிதா இந்த விசயத்திலும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
டில்லியில் போராடுகிற துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி சுட்டெரிக்கிற வெயிலில் நடுச்சாலையில் அமர்ந்திருக்கிறார். மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வருமா? துன்பங்கள் அனைத்துக்கும் காங்கிரஸ் காரணமாக இருந்ததை மக்கள் மறப்பார்களா? தமிழ்நாட்டு மக்கள் துன்பத்துக்கு நான்காண்டு கால அஇஅதிமுக ஆட்சியின் குற்றமய                   அலட்சியமே காரணம் என்பதை தமிழக மக்களும் மறக்க மாட்டார்கள். அதனால், ஆர்கே நகரை சந்திக்கும் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு இல்லை.
இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது, அஇஅதிமுகவின் பண பலமும் அதிகார பலமும் ஜனநாயக இயக்கப்போக்கை முடக்கிவிடும் என்று காரணம் சொல்லி திமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டன. அஇஅதிமுகவினர் ஒரு வாக்குக்கு ரூ.8,000 தர இருப்பதாக ராமதாஸ் கண்டுபிடித்துள்ளார். அறுக்க மாட்டாதவனுக்கு அருவாள் கோணல், ஏதோ ஒரு குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று சொல் வழக்குகள் உண்டு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தவிர, தமிழ்நாட்டில் 2016ல் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகச் சொல்லி வரும் எதிர்க்கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணிப்பதற்குச் சொல்லும் காரணங்கள் அப்படித்தான் உள்ளன. ஆர்கே நகர் உட்பட தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் பொருளுள்ள போராட்டங்கள், தலையீடுகள் செய்யாத கட்சிகள் எந்த அடிப்படையில் மக்களை அணுக முடியும்? மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையிழந்து நிற்பது தான் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம் என்பதை இந்தக் கட்சிகள் மறைக்கப் பார்க்கின்றன. ஸ்டாலினோ, கருணாநிதியோ மக்கள் மத்தியில் என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள்? ஊழல் ஜெயலலிதாவை முறியடிக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அவர்களால் சொல்ல முடியாது. காங்கிரசுக்கும் இது பொருந்தும். சுயவிவரங்கள் தந்த அன்புமணி இளவரசன் மரணம் பற்றி, அந்த மரணத்தின் பின் பாமக இருந்தது பற்றி சொல்லவில்லை. ஆர்கே நகர் வாக்காளர்கள் இளவரசனை மறந்துவிட மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு கொடியன்குளம் என்றால் ராமதாசுக்கு நாயக்கன்கொட்டாய். என்ன சொல்லி வாக்கு கேட்பது? கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமல்படுத்துவதை ஜெயலலிதா பார்த்துக் கொள்வார், நாங்கள் ஆர்கே நகரில் உள்ள மசூதிகளை, பாகிஸ்தானுக்கு மாற்றுவோம் என்று சொல்லியா பாஜகவினர் வாக்கு கேட்பார்கள்?
ஊழல் மலிந்துள்ள அஇஅதிமுக ஆட்சியின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட, இடதுசாரி அரசியலை பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் களத்தில் நிற்கிறார்.

இடதுசாரி அரசியலே, மக்கள் ஆதரவு அரசியலே, நவதாராளவாத கொள்கை எதிர்ப்பு அரசியலே சரியான மாற்று என்று மக்கள் மத்தியில் சொல்ல வேண்டியுள்ளது. மாற்றம் காண காத்திருக்கும் மக்கள், இடதுசாரி வேட்பாளரை வெற்றி பெறச் செய்து 2016 எப்படி இருக்கும் என்பதை ஊழல் ஆட்சியின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இப்போதே உணர்த்த வேண்டும்.

Search