புறம்போக்கு என்கிற பொதுவுடைமை
காலுக்கு
மட்டும் அல்ல,
கருத்துக்கும்
காயம் ஏற்படக் கூடாது
முகம் சுளிக்க வைக்கிற காட்சிகள்,
நடனங்கள், வசனங்கள், பாடல் வரிகள், பெண்களை, வறியவர்களை, எளியவர்களை இழிவுபடுத்தும் விதவிதமான வெளிப்பாடுகள், கழிசடை கருத்துக்கள் என திரைப்படம் என்ற பொழுதுபோக்கு ஊடகம் தீரா
நோய் தாக்கி புரையோடிப் போயிருக்கிறபோது, அந்த வெளியில்
வெளியாகியிருக்கிற புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஒரு மாறுபட்ட முயற்சி.
இயக்குநர் ஜனநாதன், தனது காலில் காயம் படாமல் கத்தி மீது நடக்க முயற்சி
செய்திருக்கிறார். தனது படைப்பு வர்த்தகரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம்,
நிர்ப்பந்தம், அவரது முயற்சிகளுக்கும் அப்பால் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. அவர்
காலில் காயம் படாமல் அவர் தாண்டி வந்திருக்கலாம். ஆனால், அவர் சொல்ல ஆர்வப்படும்
கருத்துக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவ்வளவாக சாத்தியப்படாத ஒரு
சேர்க்கையை உருவாக்க அவர் முயற்சித்ததன் விளைவே அது. எனவே சாதக அம்சங்கள் இருக்கிற
அதே நேரம் பாதக அம்சங்களும் படத்தில் உள்ளன.
படத்தின் சாதக அம்சங்களாக சிலவற்றைச்
சொல்லலாம்.
உண்மையிலேயே சமூக அக்கறை என்ற ஒன்றை
வர்த்தகரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் காண முடிகிறது.
ஆபாசமான அங்க அசைவுகளுடன் குத்தாட்டம்
இருந்தால்தான் படம் ஓடும், நாயகி என்று ஒரு பெண்ணோ, அல்லது வேறு ஒரு பெண்ணோ நாயகனுடன் ஆடினால்தான் இளைஞர்கள் படம்
பார்க்க வருவார்கள் என்று சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று படம் சொல்கிறது. பல
காட்சிகளில், திரையரங்கில் உள்ள இளைஞர்கள்
கைத்தட்டுகிறார்கள். கம்யூனிசக் கருத்துக்களுக்கு பரிச்சயம் இல்லாத சில இளைஞர்கள்,
இது படம் அல்ல, பாடம் என்கிறார்கள்.
இந்தப் படத்திலும் நாயகர்களில் ஒருவர் பெண்களுடன்
(அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்று பின்னர் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகிறது)
ஆடுகிறார். பாடலும் ஆடலும் டாஸ்மாக்கைச் சாடுகிறது. கூடவே, மன உளைச்சலால்தான் குடிக்கிறேன் என்று ஆண்கள் சாக்கு சொல்வதையும்
குறிப்பிடுகிறது. எனக்கும்தான் ஏகப்பட்ட பிரச்சனை நான் என்ன குடிக்கிறேனா என்று
ஒரு பெண் நாயகனிடம் கேட்பதாக பாடல் வரிகள் உள்ளன. இருப்பினும் உழைத்துக் களைத்தவன்
உடல் அலுப்பு தெரியாமல் இருக்கக் குடிக்கிறான் என்றும் சொல்லி உழைப்பவனை விட்டுக்
கொடுக்காமலும் இருக்கிறது.
ஒரு பாலியல் தொழிலாளியை தனது மகனுக்கு
மணமுடிக்க தயாராக இருக்கும் ஒரு தாய் படத்தில் காட்டப்படுகிறார். கல்யாணச்
சந்தையில் விலைபோகாத மகனே என்றாலும், கண்ணாம்பாள்
காலத்தில் இருந்து கற்புநிறை நாயகிகளைப் பார்த்து சலித்துப் போயிருக்கும் நமக்கு
இது சற்று ஆறுதலாக இருக்கிறது.
நாயகன் தூக்கிலிடப்படுவது, தலைமறைவு குழுக்களின் சாசக செயல்பாடுகள் போன்றவை படத்திற்கு பரபரப்பு
சேர்க்க சொல்லப்பட்டிருந்தாலும், சாகசவாதம் பயன் தருவதில்லை என்று படம்
சொல்வதாகக் கொள்ளலாம்.
முதலாளித்துவ வரலாறு மறைக்கப்
பார்க்கும் பாலுச்சாமி, குயிலி போன்ற பெயர்கள் முக்கிய
கதாபாத்திரங்களாக வலம் வருகின்றன.
அமெரிக்கா என்றால், அது அய்க்கிய அமெரிக்கா, மிகவும்
நாகரிகமான, உயர்ந்த ஜனநாயக விழுமியங்கள் தழைத்து
ஓங்குகிற நாடு என்று மிகைப்படுத்திக் காட்டப்படுகிற திரைப்பட வெளியில் அது உலகின்
மிகப்பெரிய தீவிரவாதி என்பது படத்தின் துவக்க காட்சியிலேயே காட்டப்படுகிறது.
தூக்கு தண்டனை அரசு மேற்கொள்ளும்
திட்டமிட்ட வன்முறை என்பது வசனங்கள், காட்சி
அமைப்புகள் மூலமாக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வசதி படைத்தவர்கள் பிணை
பெற்றுவிடும் காலத்தில் வசதி இல்லாததால் பிணை கிடைக்காமல் இருக்கிற, பெரிய மனிதர்களை பாதுகாக்கும் போக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறை
வர நேர்ந்த சில குட்டிச் சம்பவங்கள் அரசு எந்திரத்தின் நச்சுப் பற்களை அடையாளம்
காட்டுகின்றன.
சிறைக்குள் நுழைவது முதல்
அங்கு வசிப்பது வரை சிறைவாசிகள் சட்டரீதியாக எதிர்கொண்டே ஆக வேண்டிய சிறுமைப்படுத்துதல்கள்
தைக்கும்படி சொல்லப்பட்டுள்ளது.
சிறை அதிகாரி நல்லவர் என்றாலும்,
மக்களுக்காக போராடுபவனாக காட்டப்படுகிற நாயகனை,
வர்க்க சார்பு கொண்ட ஒடுக்கு முறை
அரசாங்கத்தின் பிரதிநிதியாக சட்டப்படி கொலை செய்வதே கடமை என்கிறார். ஒருவர் எந்த
வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்
என்பதைக் கொண்டு அவர் நல்லவரா கெட்டவரா என படத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
இதுபோன்ற சாதக அம்சங்கள் இருப்பதால்
படத்தைப் பார்க்கலாம் என்று சொல்ல முடிகிறது. ஆனால், அதை எச்சரிக்கையுடன் சொல்ல வேண்டிய நிலையை படத்தின் பாதக அம்சங்கள்
உருவாக்குகின்றன.
கம்யூனிஸ்டுகள் மக்கள் பிரச்சனைகளுக்காக
உறுதியுடன் போராடுகிறார்கள், சமூக மாற்றம் என்கிற மிக உயர்ந்த
லட்சியத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள் என்று சொல்லும் ஒருவர், பிற மசாலா படங்கள் அவர்களை ஆயுதக் குழுக்களாக, கொலைசெய்ய திட்ட மிடுபவர்களாக, வங்கிக் கொள்ளையர்களாக பரபரப்புக்குக் காட்டும் அதே உத்தியை கையாள்வது, எதிர்விளைவை உருவாக்குவதாக, பொதுப்
புத்தியில் உள்ள கருத்தை வலுப்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு வீரமான பெண் திரையில் தோன்றி சில
நிமிடங்களில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று சொல்வது அந்தப் பெண்ணின் தலைமைப்
பண்பை காட்டுவதை விட, நகைப்பையே உருவாக்குகிறது. வீரமான பெண்
பைக் ஓட்டியாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. முறம், புலி கதை நாம் அறிந்ததே.
கனவுத் தொழிற்சாலையின் கற்பனை உலக
கம்யூனிஸ்டுகளில் இருந்து இயக்குநர் ஜனநாதன் விடுபட்டதாகத் தெரியவில்லை.
கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் அவர் சொல்வதை காத்திரத் தன்மையுடன் எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று அவர் விரும்பினால் அந்த வழமைச் சட்டகத்தில் இருந்து அவர் விடுபட
வேண்டும். குறைந்தபட்சம் இதுபோன்ற
காட்சிப்படுத்துதலையாவது தவிர்க்க வேண்டும்.
சிறைகள் பற்றி, கைதிகள் பற்றி, தூக்கு தண்டனை பற்றி விரிவான ஆய்வில்
ஈடுபட்ட அவர் கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டிப் போராடுவதற்கும் அமைப்பு
கட்டுவதற்கும் முக்கியத்துவம் தருபவர்கள் என்று சொல்லாமல் விட்டுவிட்டார்.
பொருந்தாத இடங்களில் பொருந்தவே
பொருந்தாத லெனின், மாவோ மேற்கோள்கள் சொல்லப்படுவது
அவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை முழுவதுமாக போக்கிவிடுகிறது. அந்தக்
கருத்துக்கள் படம் பார்ப்பவர்களை சென்று சேர்வதுதான் நோக்கம் என்றால், நிச்சயமாக இது வழிமுறை அல்ல.
தூக்கு தண்டனை பற்றிச் சொல்வதுதான்
படத்தின் மய்யக் கரு என்றால், கம்யூனிச மேற்கோள்களை வருத்தாத வேறு களம் தேர்ந்து எடுத்திருக்கலாம்
என்று படுகிறது. இயக்குநர் பார்வை இதுதான் என்றால், சிரமம்தான்.
புதுக்காற்று வரும்போது, அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
சினிமா என்கிற வலுவான ஊடகத்தில், ஒட்டுமொத்த சமூகத்தின் மேலான
நகர்வுக்கான கருத்துக்களைச் சொல்லும்போது, சொல்பவர்கள்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை, சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விமர்சனங்களை, படைப்பாளி அவற்றுக்கே உரிய
முக்கியத்துவத்துடன் அணுகுவது நல்லது.