பசுவின்
புனிதமும், மாட்டிறைச்சி அரசியலும்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
மார்ச் 2015ல், மகாராஷ்டிர மாநில கால்நடைகள் பாதுகாப்பு (திருத்த) சட்டம்-1995க்கு ஒப்புதல் அளித்த பிறகு, மாட்டிறைச்சி
வியாபாரத்தின் மீது, மகாராஷ்டிர மக்கள் மீது கடுமையான
தாக்குதலை நாக்புரி பார்ப்பன முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தொடுத்துள்ளார். இது
1996 சனவரியில், முந்தைய பாரதிய சனதா-சிவசேனா கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்
பட்ட சட்டம். இச் சட்டத்தின் படி, மாட்டிறைச்சி வைத்திருப்போர், விற்போருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும்
விதிக்கப்படும்.
மேலும், மாட்டிறைச்சி (பீஃப்) உண்பதுகூட
குற்றச் செயலாகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பயிர்ச்சேதம், கடன் சுமையால் 2015 சனவரி-மார்ச்சில் 257 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட பின்னணியில் விவசாய வளங்களை
பாதுகாப்பது என்ற நாடகத்தை பாஜக மாநில அரசாங்கம் அரங்கேற்றுகிறது; கால்நடைகளை பராமரிக்க ஆணையம் அமைக்கவுள்ளதாகவும், அதற்காக 5000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது; துன்புறுகிற மகாராஷ்டிர விவசாயிகளை
ஏமாற்றுகிறது. இதைத் தொடர்ந்து, அரியானாவின் பாஜக அரசு, மாடுகளை கொல்வதை அனைத்து கால்நடைகளுக்கும் விரிவுபடுத்தி, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என சட்டம் இயற்றியுள்ளது. பாஜக ஆட்சி
செய்யும் ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநில அரசுகளும் இத்தகைய
சட்டங்களை இயற்ற தயாராகி வருகின்றன.
பசுவை தாயாக அறிவிக்கக் கோரி, பாஜக எம்பி யோகி ஆதித்யநாத் மிஸ்டு கால் பிரச்சாரம் தொடங்கியுள்ளார்.
பசு பாதுகாப்பிற்காகச் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, அடுத்த ஆண்டில் பசு பாதுகாப்பு மகா கும்பா (தேசிய மாநாட்டை)
நடத்தவிருப்பதாகவும், கால்நடைகளை கொல்வதை நாடு முழுவதும் தடை
செய்வதற்கான மத்திய சட்டம் இயற்ற பணியாற்றும் என்றும் ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது.
பசு புனிதமானது, பசு தெய்வம், பசு தாய் என்கிற ஆர்எஸ்எஸ்சின் மதவாத
பிரச்சாரம், கால்நடைகளை இறைச்சிக்காக கொல்வது,
விற்பது, சாப்பிடுவதை பல்வேறு, பாஜக மாநில அரசாங்கங்கள்
குற்றங்களாக்குவது போன்ற நடவடிக்கைகள் திட்டவட்டமான இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை
அரசியல் அரங்கில் கொண்டுவருகிறது; ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை உடனடி
இலக்காகவும் கொண்டிருக்கிறது. மாடு மற்றும் எருமையின் இறைச்சியை உண்பவர்கள் நாட்டு
மக்கள் தொகையில் சரி பாதி. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் (சுமார் 30%) முஸ்லீம்கள் (10%க்கும் மேல்) கிறித்துவர்கள் (5%)
ஆகியோரில் கிட்டத்தட்ட அனைவரும், கணிசமான ஏழை இந்துக்களும் மாட்டிறைச்சியை உணவாக கொண்டுள்ளனர்.
கேரளாவில் மட்டும் இந்து மதத்தைச் சார்ந்த 72 சாதிகள் மாட்டுக் கறியை உண்கின்றனர். மலிவான விலையில் கிடைக்கிற
புரதச் சத்து மிக்க உணவு என்பது இதற்கான காரணம். மாட்டிறைச்சி தடை மக்களின் உணவு
உரிமை மீது, ஆரோக்கியத்தின் மீது, ஏழ்மையின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல். கிலோ ரூ.400க்கும் கூடுதலாக விற்கப்படும் ஆட்டிறைச்சியை வாங்க சக்தியில்லாத
மக்களை ரசாயன முறையில் நஞ்சாக உருவாக்கப்படுகிற பிராய்லர் கோழி நுகர்வை நோக்கி
தள்ளும் நடவடிக்கை. பசுவதை தடுப்பு தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்,
அரசு கொள்கைக்கான வழிகாட்டும் நெறிமுறையின் 48வது பிரிவை அடிக்கடி சுட்டிக்காட்டும் இந்துத்துவா பிரச்சாரகர்கள்,
வசதியாக அதற்கும் முந்தைய பிரிவு 47அய் மறைத்து விடுகின்றனர்.
அரசு மக்களுக்கு சத்துமிகுந்த உணவையும்,
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்க
வேண்டுமென பிரிவு 47 சொல்கிறது.
பசு புனிதமானது, மரியாதைக்குரியது, தங்களது முன்னோர்கள், குறிப்பாக, வேதகால ஆரியர்கள் பசுவின் இறைச்சியை
உண்ணவில்லை என மீண்டும் மீண்டும் வரலாற்று ஆதாரங்களுக்கு முரணாக இந்துத்துவா
சக்திகளும் அமைப்புகளும் மீண்டும் மீண்டும் பேசியும், எழுதியும் வருகின்றனர். இப் பிரச்சனையை அரசியல் அரங்கிற்குள் கொண்டு
வருகிறார்கள். இந்தியாவிற்குள் முசுலிம் வருகையோடுதான் மாட்டிறைச்சி உண்ணும்
வழக்கம் தோன்றியதாகவும் சித்தரிக்கிறார்கள்; மாட்டிறைச்சியை முசுலிம் சமூகத்தின்
அடையாள முத்திரையாக குத்துகிறார்கள்; பிரச்சாரம்
கட்டமைக்கிறார்கள். எனவேதான், இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சியை
உண்டதில்லையா என்ற பரிசீலனை தேவைப்படுகிறது.
கால்நடைகள் அல்லது விலங்குகளை உயிர்பலி
தரும் வேள்விகள் (யக்ஞம்) தொடக்க கால ஆரியர்களால் (அவர்கள் வாழ்ந்திருந்த முந்தைய
பகுதியின் பண்பாடு) இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டு பரவலாக நடை முறையிலிருந்தன என
இந்திய வரலாற்றாய்வாளர்கள் பலரும் தெளிவாக நிறுவியுள்ளனர். இந்திரன், அக்னி, சோமன் என்ற வேத கால கடவுள்கள்
மாட்டிறைச்சி மீது பேரார்வமாக இருந்ததை ரிக் வேதம் விளக்குகிறது. வேத கால
ஆரியர்கள் தாங்கள் உண்ண விரும்பிய பொருட்களையே கடவுளுக்குப் படைத்தார்கள். மிகப்
பெரிய கடவுளான இந்திரனுக்கு படைக்க, எருதுகளின்
இறைச்சி சமைக்கப்பட்டது பற்றி பல இடங்களிலும், அக்னியால் சுடப்பட்ட எருமைகளைப் பற்றியும், எருதையும், மலட்டுப் பசுவையும் உணவாகக் கொண்ட
சோமன் பற்றியும் ரிக் வேதப் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன; அஸ்வமேத யாகத்திலும் (குதிரைப் பலி சடங்கு) வேள்வியின் இறுதியில்
இருபத்தியொரு மலட்டுப் பசுக்கள் பலியிடப்பட்டுள்ளது குறிப்பிடப்படுகிறது.
விருந்தினர்களை கவுரவிக்க, திருமண விழாவின் போது, சிரார்த்தத்தின்போது பசுக்களை, காளைகளை பலி தந்து உண்ணுவதைப் பற்றி பிராமணங்கள், தர்ம சூத்திரங்கள் விரிவாக சொல்கின்றன. வேதகால பார்ப்பனர்களுக்கு
தட்சணையாகத் தரப்பட்ட பசுக்கள் பற்றியும், தட்சணை
வழங்குபவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி, தட்சணையைத் தடுப்பவர்களுக்கு ஏற்படும் கேடுகள் பற்றி அதர்வண
வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பார்ப்பனர்கள்-மாட்டிறைச்சி-தீண்டாமைப்
பற்றி விரிவாக ஆய்வு செய்து அம்பேத்கர் எழுதியுள்ளார். ‘... பார்ப்பனர்கள் மிகப் பெருமளவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக
இருந்துவந்த ஒரு காலம் இருந்தது. அச்சமயம் பார்ப்பனர் அல்லாதோரும் மாட்டிறைச்சி
சாப்பிடுபவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால், நாள்தோறும் அதனை சாப்பிடக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. ....
பார்ப்பனர் விசயம் அப்படியல்ல. அவன் புரோகிதனாக இருந்தான். பசு பலியிடப்படாத நாளே
இல்லை எனலாம். பார்ப்பனனுக்கு ஒவ்வொரு நாளும் மாட்டிறைச்சி விருந்து நாள்தான்.
இதன் காரணமாக அந்நாட்களில் பார்ப்பனர்கள் மிக அதிகமாக மாட்டிறைச்சி
சாப்பிடுபவர்களாக இருந்து வந்தனர்.’ (பக். 153.
பாபாசாகிப் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தமிழ் தொகுதி 14. தீண்டப்படாதவர்கள் யார்?) மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கி.மு.
ஆயிரம் ஆண்டுகள் முழுவதிலும் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான தொல்லியல்
ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.
பல்வேறு நிகழ்ச்சிகளிலே பார்ப்பன
புரோகிதர்களுக்கு, வேதமறிந்த பார்ப்பனருக்கு
(ஸ்ரோட்ரியன்) வழங்க வேண்டிய இறைச்சி/விலங்கு காணிக்கைகளைப் பற்றியும், உண்ணத் தகுந்தவை பட்டியலில், தெய்வக்
கட்டளையாக மாட்டிறைச்சியை உண்ணும் வழிமுறைகளை மனுவும், யாக்ஞவல்கியரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
கி.பி 18ம் நூற்றாண்டு வரையிலான பல புராணங்களும் (விஷ்ணு புராணம், மார்க்கண்டேய புராணம், தேவி புராணம்,
கருட புராணம் இன்னபிற) பார்ப்பனர்களுக்கு
மாட்டிறைச்சி விருந்து தரப்பட்டதை சுட்டி காட்டுகின்றன. குப்தர் காலத்தில் இலக்கிய
வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமாயணத்தில் மாட்டிறைச்சி பற்றி தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
பார்ப்பனர்களுக்கு மாட்டிறைச்சி தந்து புகழ்பெற்ற மன்னர் நந்தி தேவரின் அரண்மனைச்
சமையலறையில் தினந்தோறும் 2000 பசுக்கள் கொல்லப்பட்டதாக
மகாபாரதத்தின் வனபர்வம் பகுதியில் சொல்லப்படுகிறது. வால்மீகி இராமாயணத்திலும்
ஏராளமான ஆதாரங்களை பார்க்க முடிகிறது. இராமன்-சீதை முதல் கதை மாந்தர்கள் பலரும்
இறைச்சி மீது ஆர்வம் காட்டியுள்ளனர். தன் கணவன் அவன் சபதத்தை
நிறைவேற்றி முடித்தால் ஆயிரம் பசுக்களையும், நூறு ஜாடி மதுவையும், யமுனை ஆற்றுக்கு படையல் செய்வதாக சீதை
வேண்டுகிறார். கி.பி.1-4ம் நூற்றாண்டு இந்திய மருத்துவ (மூல)
நூல்கள் மருந்தாக பட்டியலிடப் பட்டுள்ள இறைச்சிகளில் மாட்டிறைச்சி முக்கிய இடம்
பிடித்திருக்கிறது. பசு புனிதமானது,
மரியாதைக்குரியது எனக் கருதப்பட்டிருந்தால்,
பசுவதை தடை செய்யப்பட்டிருந்தால், மருந்தாகச் சொல்லப்பட்டிருக்குமா? பசு பற்றிய இந்துத்துவா சக்திகளின் மொத்த பிரச்சாரமும் கட்டுக்
கதையே.
இறைச்சி உணவை எதிர்க்கவில்லை என்றபோதிலும்
பவுத்தமும், சமணமும் வேள்விகளையும் ஏராளமான
விலங்குகளை குறிப்பாக பசுக்களை, எருதுகளை பலியிடுவதையும் கொண்ட
பார்ப்பனிய மதக் கோட்பாடுகளை நிராகரித்தன. பலரும் விவசாயிகளாக இருந்ததும், பசு பல்வேறு வகையில் பயனுள்ள விலங்காக இருந்ததாலும் மக்கள்
பவுத்தர்களின் பிரச்சாரத்தையும், கோட்பாடுகளையும் ஆதரித்தனர்; பார்ப்பனர் தங்கள் அதிகார நிலையை இழந்தனர். கி.பி. 5ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரண்டாம் சந்திரகுப்தனுடைய ஒரு செப்புத்
தகடு ஆணையில் பசுவைக் கொல்வது, பார்ப்பனரைக் கொல்வதற்கு சமமான
குற்றமாக, கொடிய குற்றமாக, பாவமாக கருதப்பட்டதையும், வேறு சில
கல்வெட்டு ஆதாரங்களையும் சுட்டிக்காட்டும் அம்பேத்கர், பார்ப்பனர்கள் தாங்கள் இழந்துவிட்ட அதிகார அந்தஸ்தை மீட்க மேற்கொண்ட
ஒரே வழிமுறைதான் இருந்தது- அது பசுவதையை கைவிடுவதும், பசு வழிபாட்டை மேற்கொள்வதும்தான் என்கிறார்.
அதற்கு பிறகு
மாட்டிறைச்சியை சாப்பிட்டவர்களை பார்ப்பனர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கிவிட்டனர்
எனவும் குற்றஞ்சாட்டுகிறார், அம்பேத்கர். விவசாயத்தின் வளர்ச்
சியும்-விரிவாக்கமும், வணிக சமூகத்தின் நலன்களுக்கு
அடிப்படையாக இருந்தது. விவசாயத்தின் வளர்ச்சிக்கு, கால்நடைகள் தேவையாக இருந்தன. கால்நடைகளுக்கு எதிரியாக பார்ப்பன மதம்
இருந்தது. எனவே தான், விவசாயிகளும் வணிகர்களும்
பவுத்தத்தையும், சமணத்தையும், வலுவாக ஆதரித்தனர்; அரசர்களும் கூட ஏற்றனர். இதனால் இழந்த
இடத்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பார்ப்பனியத்திற்கு ஏற்பட்டது.
கி.பி. 500க்கு பிறகு தர்ம சாஸ்திரங்கள் பலவும் பசு வதையை கடுமையாக கண்டனம்
செய்வதை பார்க்க முடிகிறது. விவசாயத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான விரிவாக்கமும்,
மிகப் பெரிய கோவில்கள் கட்டமைக்கப்பட்டதும்,
நில மானியங்கள் வழங்கப்பட்டதும், கிராமப்புற சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதுவரையிலும்
வைசியர்களின் தனிப்பட்ட தொழிலாக பார்க்கப்பட்ட விவசாயத்தில், பிறரும் குறிப்பாக நிலங்களை தானமாகப் பெற்ற ஏராளமான பார்பபனர்களும்
இணைந்து கொண்டார்கள்.
விவசாய சமூகத்தில் பண்பு ரீதியான மாற்றம் ஏற்பட்டது.
விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பும் முக்கிய பங்காற்றியது. இறைச்சி உணவு உண்பது
தொடரப்பட்டாலும், பசு வதையை தடுக்க வேண்டிய
அவசியமேற்பட்டது. தர்ம சாஸ்திரங்கள் இக் கடமையை மேற்கொண்டன. பிந்தைய காலங்களில்,
கி.பி.9-17ம் நூற்றாண்டு வரையிலுமான ஏராளமான கல்வெட்டுகள் கோவில்களுக்கு
அருகில் கோசாலைகளை/பசு காப்பகங்களை கட்டப்பட்ட செய்திகளை தெரிவிக்கின்றன. தற்போது,
வேதகால வேள்விகளுக்குப் பதிலாக வேறு வகையான
தட்சணைகளை பார்ப்பனர்கள் பெற்றுக் கொண்டனர். மாட்டிறைச்சியையும், பிற இறைச்சி வகைகளையும் படிப்படியாக கைவிட்டனர்.
வேள்விகளில்
பலிகளாக்கப்பட்ட பசு இப்போது புனிதமாக்கப்பட்டுவிட்டது.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழ்,
19ம் நூற்றாண்டின் இறுதியில், இந்திய வரலாற்றில் பல்வேறு சமூக, அரசியல் கொந்தளிப்புகளை பார்க்க முடிகிறது. காலனிய ஆட்சியாளர்கள்
தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இந்து-முஸ்லீம் இடையிலான வேறுபாடுகளை
பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் சூடாக வைத்திருந்தனர். பரவலான தொழிலாளர் போராட்டங்
கள், நிலப் பிரபுத்துவத்திற்கெதிரான பண்ணையடிமைகள்
மற்றும் குத்தகை விவசாயிகளின் கிளர்ச்சிகள், பழங்குடியினர் கிளர்ச்சிகள், மகாராஷ்டிராவில்
அம்பேத்கர் காலத்திற்கு முந்தைய தலித் மக்களது போராட்டங்கள், பார்ப்பனர்களுக்கு எதிரான பார்ப்பனரல்லாதோரின் (வேலை வாய்ப்பு
மற்றும் அரசியல் சலுகைகளுக்கான) இயக்கங்கள் என பலவண்ண அரசியல் போக்குகள், வர்க்கப் போராட்டங்கள் வெடித்து எழுந்த போதிலும், இவற்றுக்கு தொடர்பில்லாத வகையில், வட இந்தியாவில் பசு வதைக்கு எதிராக பரவலாக மத கலவரங்கள் உருவானது. 1883-1895 வரை பஞ்சாபில் 15 கலவரங்கள், கிழக்கு உ.பி. மற்றும் பீகாரில் பல்லியா, பனாரஸ், ஆஜம்கார், கோரக்பூர், அர்ரா, சரண், கயா, பட்னா மாவட்டங்களை பாதித்த மோசமான கலவரங்கள், பம்பாய் மாநகரம் மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களைப் பாதித்த
கலவரங்கள் மிகவும் கவனத்துக்குரியதாகும். 1893ல் பம்பாயில் ஒரு குஜராத்தி நூற்பாலை முதலாளி பசு பாதுகாப்பு
சங்கத்தை உருவாக்கினார்.
திலகரின் தீவிர இந்துத்துவா, ஆரிய சமாஜத்தின் தோற்றம், நிலைமையை
படுமோசமாக்கியது. “பசு நமது தாய், என்றும் மறவாதீர்’ என்ற பிரச்சாரமும் சூடு பிடித்தது.
கல்கத்தா நகரின் பல்வேறு பகுதிகளிலும் 1891-97ல் கலவரங்கள் வெடித்தன.
அக் காலகட்டத்தில் எழுச்சி பெற்ற
வர்க்கப் போராட்டங்களால் அச்சமுற்ற, உயர்சாதி
நிலவுடைமையாளர்கள் மதவாதத்தைப் பயன்படுத்தி தங்கள் பிடியை கிராம மட்டங்களில் தக்க
வைத்துக் கொண்டனர். சனாதன தர்ம சபா மற்றும் ஆரிய சமாஜ் கிளர்ச்சியாளர்களால்
கட்டமைக்கப்பட்ட பசு பாதுகாப்பு இயக்கமானது, மதக் கலவரங்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது.
அக்.1917ல் மாபெரும் பீகார் கலவரம்
வெடித்தது. 50,000 இந்துக்கள் சாகாபாத்தில் 124 கிராமங்கள், கயாவில் 28 கிராமங்கள், பட்னாவில் 2 கிராமங்களில் உள்ள முஸ்லிம்களை தாக்கினர். உடனடிக் காரணமாக பசு
பாதுகாப்பு இயக்கம் எனச் சொல்லப்பட்டது. அப்போது, பரந்த தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களையும் நாடு எதிர் கொண்டது. 1922ல் கிழக்கு இந்திய ரெயில்வே வேலை நிறுத்தம், ஜாம்ù‘ட்பூரில் டாடா நிறுவனத்தில் வேலை
நிறுத்தம், 1923ல் அகமதாபாத்தில் 56 ஜவுளி ஆலைகளில் வேலை நிறுத்தம், சென்னை பி&சி மில் தொழிலாளர் போராட்டம்,
1925ல் வடமேற்கு ரெயில்வே வேலை நிறுத்தம்,
1924-25ல் ஒன்றரை இலட்சம் பேர் பங்கேற்ற பம்பாய் ஜவுளி
ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் எனப் பல தொழிலாளர் வர்க்க போராட்டங்கள்
வெடித்துப் பரவின.
இப் பின்னணியில் தான் இந்தியாவில் கம்யூனிச இயக்கமும்
தோன்றியது. இப் போராட்டங்களை எல்லாம் மூடி மறைக்கும் வகையில் மதக் கலவரங்களும்
பற்றி படர்ந்தது. 1924 செப்டம்பரில், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் கோஹட்டில் 155 பேர் கொல்லப்பட்டனர். 1926-ஏப்ரல் முதல் ஜ÷லை வரையிலான மூன்று கலவரங்களில் கல்கத்தாவில் 138 பேர் கொல்லப்பட்டனர்; டாக்கா, ராவல்பிண்டி, பட்னா, டெல்லியில் கலவரங்கள். 1923-27ல், உத்திரபிரதே சமானது 91 மதக் கலவரங்களை எதிர்கொண்டது. இதற்கெல்லாம் உடனடி பிரச்சனையாக
சொல்லப்பட்டது என்னவெனில், மசூதிகள் முன் இந்துக்களின் வழிபாட்டு,
இசையை முஸ்லிம்கள் நிறுத்தக் கோரியதும்,
இந்துக்கள் பசு வதையை தடை செய்யக் கோரியதும்
ஆகும்.
இப் பின்னணியில் தான், 1925ல் நாக்பூரில் தீவிர இந்துவாத திலகரின்
சீடரான மூஞ்சேவின் கூட்டாளியான கே.பி.ஹெட்கேவர் தலைமையில் ஆர்எஸ்எஸ் உருவானது 1937ல், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழே நடைபெற்ற 11 மாகாண தேர்தல்களில் 6ல் காங்கிரசானது (உபி, மத்திய மாகாணம், மெட்ராஸ், பம்பாய், ஒரிசா, பீகார்) ஆட்சியமைத்தது. பிறகு தகிடுதத்தங்களை செய்து வடமேற்கு
எல்லைப்புற மாகாணம், அசாமிலும் ஆட்சியமைத்தது. 1937-39 காலகட்டத்தில், காங்கிரஸ் கொள்கைகள் மற்றும்
அணுகுமுறைகள் காரணமாக, முஸ்லிம்கள் அந்நியப்பட்டு இருந்தனர்.
பல்வேறு மாகாண அரசாங்கங்களில் உள்ளூர் மட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு மாடு
வெட்டுவது தடை செய்யப்பட்டிருந்தது.
இந்திய அரசியலில் பசு/மாட்டிறைச்சி
அரசியலாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. தேவைப்பட்ட போதெல்லாம் ஆர்எஸ்எஸ்,
ஜனசங்கம் அப்பிரச்ச னையை விருப்பம் போல
கையாண்டன. சுதந்திரத்திற்கு பின்னர், 1966ல் இந்து மத
அமைப்புகள் ஒன்றுதிரண்டு, பசு வதைக்கு நாடு தழுவிய அளவில் தடை
விதிக்கக் கோரி ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டின; பாராளுமன்றம் நோக்கிச் சென்ற பேரணி வன்முறையாக மாறியது; 8 பேர் கொல்லப்பட்டனர்.
பசுவதை தடுப்புச் சட்டத்தை அ.இ.காங்கிரஸ்
கமிட்டி தலைவராக இருந்த காமராஜர் எதிர்த்தார். அவர் தங்கியிருந்த பங்களா
ஆர்எஸ்எஸ்-ஜனசங்க சக்திகளால் தாக்கப்பட்டது. இதைக் கண்டித்த பெரியார், தமிழ்நாட்டில் மாட்டுக் கறி விருந்தை இயக்கமாகவும் மேற்கொண்டார்.
ஆர்எஸ்எஸ், பசு வதை/பசு புனிதம் அரசியலை
தேவைப்படும் பொழு தெல்லாம் கையிலெடுத்துக் கொள்கிறது. அயோத்தியில் பாபர் மசூதி
இடிப்பிற்கு முன்பு 1990 அக்டோபரில், அயோத்தியிலும் ஃபைசாபாத்திலும் ‘பசுக்களை கொல்பவர்களைக் கொலை செய்வது இந்துக்களின் கட்டாயமான மதக் கடமை’
என வீடுகள், கோவில் சுவர்களில் எழுதப்பட்டன. புனிதப்பசு அரசியல் மதவெறி அரசியலாக
சாமியார்களாலும், பாஜக தலைவர்களாலும் தொடர்ந்து
சூடேற்றப்பட்டது. காலப் போக்கில் பசு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் அரசியல்
ஆயுதமாக்கப்பட்டுவிட்டது.
பசுவின் புனிதத் தன்மை என்பது ஒரு
ஏமாற்று வித்தை. பசுவை தெய்வமாக வழிபடும் ஒரு கோவிலும் நமது நாட்டில் இல்லை. நீண்ட
நெடுங்காலமாக மாட் டிறைச்சியை இந்துக்கள் உணவாகவே கொண்டி ருக் கின்றனர். பல்வேறு
போக்குகளை, வேறுபாடுகளை கொண்ட இந்து மதத்திற்கு
இந்துத்துவா சக்திகள் ஒற்றை அடையாளத்தை வழங்குவதற்கான முயற்சியாக பசு
புனிதமாக்கப்பட்டது. பசு அரசியலும் ஆக்கப்பட்டது.
இப்பிரச்சனை பசுவின் புனிதம் பற்றிய,
மாட்டி றைச்சி பற்றிய பிரச்சனை மட்டும் அல்ல.
பற்றிப் படரும் கார்ப்பரேட்-காவிப் பாசிசம், பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்க, அவர்களுக்கு ஆதரவான அவசர சட்டங்களை இயற்றிட, அவற்றிற்கெதிராக எழுந்துவரும் விவசாயிகள், தொழிலாளர்வர்க்கப் போராட்டங்களை சிதறடித்திட, வர்க்க ஒற்றுமையை, மக்களின் போராட்ட வலிமையை முறியடித்திட,
மேற்கொள்ளும் சதியாகும். ஆர்எஸ்எஸ்-பாஜகவின்
இந்த சதித் திட்டத்தை முறியடித்திட இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் பரந்த
ஒற்றுமையைக் கட்டமைத்திட வேண்டும்.