COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, June 16, 2015

பாரு பாரு அய்க்கிய அமெரிக்கா பாரு...
கேளு கேளு மூலதனத்தின் கதை கேளு...

             தி நியு யார்க் டைம்ஸ் மே 22 தலையங்க விவரப்படி, சிடி கார்ப், ஜேபி மோர்கன் சேஸ், பார்க்லேஸ் மற்றும் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் ஆகிய நிதி நிறுவனங்கள் நிதி குற்றவாளிகள் என முடிவாகி உள்ளது. 17.05.2015 அன்று இந்த நிதி நிறுவனங்கள் உலக நாணயங்களின் மதிப்பை மாற்றும் குற்றமயச் சதியில் ஈடுபட்டதை  ஒப்புக்கொண்டனர். 2007 முதல் 2013 வரை 85 பில்லியன் டாலர் (ரூ.5,30,000 கோடி)யை அந்நியச் செலாவணி வருவாயில் ஈட்டியதாகச் சொன்ன இவர்கள், வெறும் 9 பில்லியன் டாலர், ரூ.54,000 கோடி அபராதம் கட்டித் தப்பித்துக் கொண்டனர். (சொத்துக் குவிப்பு வழக்கில் பெரிய மனிதர்களுக்கு எங்கும் தண்டனை கிடையாது போலும்!)
             அடுத்த பத்தாண்டுகளில் அணு ஆயுதங்களை நவீனப்படுத்த, 348 பில்லியன் டாலர், ஒரு கப்பல் 8 பில்லியன் டாலர் (ரூ.48,000 கோடி) என 12 புதிய ஓஹியோ தர அணுநீர் மூழ்கிகள் கட்ட, அய்க்கிய அமெரிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இப்போது பயங்கரவாத எதிர்ப்புப் போர் அய்எஸ்அய்எஸ்சுக்கு எதிராக என்றுதானே சொல்கிறார்கள். அய்எஸ்அய்எஸ்சிடம் இப்போது துடுப்பு போடும் ஒரு படகு கூட இல்லையே! அரசாங்க கஜானாவிலிருந்து மக்கள் வரிப் பணத்தை, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் அள்ளி அள்ளி விழுங்கப் போகிறார்கள்.
             நுண்ணறிவு சேகரிப்பில் (கண்காணிப்பில்) அய்க்கிய அமெரிக்கா வருடத்தில் 100 பில்லியன் டாலர் (ரூ.6,00,000 கோடி) செலவழிக்கிறது. இதில் 70% வருவாய் பூஸ் ஆலன் ஹோமில்டன் போன்ற தனியார் ஒப்பந்தக்காரர்களுக்குச் செல்கிறது. பூஸ் ஆலன் ஹாமில்டனின் 99% வருவாய் அரசாங்கத்திடமிருந்து வருவதாகும். அய்க்கிய அமெரிக்காதான் உலகின் முதன்மை ஆயுத (சாவு) வியாபாரி ஆகும்.
             பணக்காரர்களுக்கான நலம்புரி அரசு, நிதி மேட்டுக் குடியினருக்கான அரசு சோசலிசம் அய்க்கிய அமெரிக்காவில் நிலவுவதாக அங்குள்ள இடதுசாரி அறிஞர்கள் கேலியாக எழுதுகிறார்கள்.
             9 டிரில்லியன் டாலர் சொத்துக்களுடன், அய்க்கிய அமெரிக்க நிதி பொருளாதாரத்தின் சிகரங்களின் உயரத்தில் உள்ள, ஜேபி மோர்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப், சிட்டி குரூப் இன்ங், வெல்ஸ் பார்சோ அணிட்டோ மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற அய்ந்து மிகப் பெரிய நிதி நிறுவனங்கள், கிட்டத்தட்ட அவர்களது ஒரு வருட லாபத்திற்கு இணையான 64 பில்லியன் டாலரை (ரூ.3,84,000 கோடி) அரசு மான்யமாகப் பெறுகின்றன.
             மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அரசாங்கச் செலவுகள் 41%. கார்ப்பரேட் முதலாளிகள் இந்தப் பணத்தைக் கைப்பற்ற, இராணுவத்தின் சில பகுதிகளை முழுமையாகத் தனியார்மயமாக்கி விட்டனர்; 16 நுண்ணறிவு முகாமைகளின் (இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிஸ்) 70% நுண்ணறிவு கார்ப்பரேஷன்களால் சேகரிக்கப்படுகிறது; சிறைகள் கூட தனியார்மயமாக்கப்பட்டுள்ளன; பொதுப்பள்ளி முறைக்கு மாறாக கல்வி தனியார்மயமும், பெருகிய கல்விக் கடன்களும் அச்சுறுத்துகின்றன. வைத்தியம் - சிகிச்சை, லாபத்திற்கானது என மாற்றப்பட்டுள்ளது; ஓட்டை உடைசல் ஒபாமா ஹெல்த் கேரே படாதபாடு பட்டது; இப்படி கைப்பற்றப்பட்ட எந்த சேவைகளும் திறன் வாய்ந்தவையாகவோ, செலவு குறைந்தவையாகவோ இல்லை. முதலாளித்துவத்தை தாக்குப்பிடிக்க வைக்கும் கட்டமைப்புகளையே முதலாளித்துவம் விழுங்குகிறது. அரசின் பிணமாகிய பகுதிகளை சப்புக் கொட்டித் தின்கிறது. இன்று சுதந்திர வர்த்தகம், சுதந்திர சந்தை, தனி மனித உந்து விசை, படைப்பாக்கம் போன்றவை எல்லாம் கற்பனாவாத முதலாளித்துவமே அல்ல, முதலாளித்துவ யதார்த்தத்தின் பகுதிகள் அல்ல. அந்தோனியோ கிராம்சி, பழையது செத்துக் கொண்டிருக்கிறது, புதியது பிறக்கப் போராடுகிறது, இடைப்பட்ட காலத்தில் பல மரணப்படுக்கை அறிகுறிகள் தெரிகின்றன என எழுதுகிறார்.

செல்வம் குவிகிறது. வறுமை பெருகுகிறது. உற்பத்தி சக்திகள் மேலும் வளர முடியாமல், (குறை கூலி குறை வருமான) உற்பத்தி உறவுகளே தடையாக உள்ளன. மேற்கொண்டு வளர்வதற்கான ஆற்றல் முதலாளித்துவத்திற்கு இல்லாமல் போகும்போதுதான் சோசலிசம் சாத்தியமாகும். முதலாளித்துவத்தின் முடிவு நெருங்குகிறது என்பது தெளிவு.ஆனால் எப்போது என்றுதான் சொல்ல முடியாது. முதலாளித்துவம் தாங்கும் திறனை நிறையவே வெளிப்படுத்தியுள்ளது என்றாலும், அது அதன் மரணப் படுக்கையை நோக்கிச் செல்லாமலும் சவக்குழி தோண்டுபவர்களை தயார் செய்யாமலும் ஓயாது.

Search