பற்றியெரியும்
மக்கள் பிரச்சனைகளை தற்காலிகமாகத் தட்டிக்கழிக்க
வாய்ப்பு
தரும் இன்னொரு இடைத்தேர்தல்
ஒன்று அதன் எதிர்மறையாக மாறும் என்ற
மார்க்சிய விதியை தமிழ்நாட்டில் பல பத்தாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிகளின்
காலம் மெய்ப்பித்துள்ளது. இந்துத்துவ சக்திகளின் ஆபத்து சூழ்ந்துள்ள இன்றைய
நிலையிலும், பெரியார் சொன்ன பகுத்தறிவு
கருத்துக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து வந்துள்ளன. அந்தக்
கருத்துக்களுக்கு, ஜனநாயக விழுமியங்களுக்கு முடிவு கட்ட,
இந்துத்துவ, பிற்போக்கு சக்திகளை விட தீவிரம் காட்டுபவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பவர்களே. உதாரணமாக சமீபத்திய நான்கு
வெவ்வேறு நிகழ்வுகளைச் சொல்லலாம்.
1. தமிழ்நாட்டில் தேங்காய் விற்பனை
அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேங்காய் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனராம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதால் அவரது பக்தர்கள் நேர்ந்து
கொண்டபடி தமிழ்நாட்டின் கோயில்களில் தேங்காய் உடைக்கிறார்களாம். அஇஅதிமுக சட்டமன்ற,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி தீ மிதித்த
நிழற்படங்கள் பத்திரிகைகளில் வெளியாயின. இன்னும் சிலர் மண்சோறு சாப்பிட்டனர். 5,000 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். இது இன்னும் அதிகரிக்கலாம்.
இவர்கள் அனைவருமே இதை தொலைக்காட்சிகள் மற்றும் செய்தி பத்திரிகைகளின் கேமராக்கள்
முன்புதான் செய்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் யாரும் எந்த நேர்த்திக் கடனையும்
நிறைவேற்றவில்லை.
2. மக்களின் முதல்வர் விடுதலையாகி
தீர்ப்பு வந்தவுடனேயே பதவியேற்கவில்லை
என்று தற்கொலை செய்து கொண்டார்கள், தீக்குளித்தார்கள் என்று செய்திகளைப்
பார்த்து ஜெயலலிதா மிகவும் மனம் வாடிப் போனதாகச் சொல்லப்பட்டது. அவரது இரங்கல் செய்திகளும்
வாசிக்கப்பட்டன. (பிக்சட் ரேட். ஒரு சாவுக்கு ரூ.3 லட்சம்). நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்களோ, அமைச்சர்களோ, மாவட்ட, வட்டங்களோ தற்கொலை செய்து கொண்டதாகவோ,
தீக்குளித்ததாகவோ நாம் அறியவில்லை.
3. ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது
ஆண்டவனின் பெயரால் சத்திய பிரமாணம் செய்தார். (குமாரசாமியாக இருக்குமா?)
4. சேலம் மாநகராட்சியில் அரசியல்
அநாகரிகத்தின் உச்சத்தை காண முடிந்தது. மேசை தட்டியது போதும், மக்கள் பிரச்சனைகளை பேசுவோம் என்று சொன்னதற்காக திமுக கவுன்சிலர்
ஒருவரை அஇஅதிமுக கவுன்சிலர்கள் புரட்டி எடுத்து, கீழே தள்ளி, அடித்து உதைத்துத் தாக்கிய காட்சி
தமிழ்நாட்டு அரசியலுக்கு மாபெரும் இழுக்கு சேர்க்கக் கூடியது.
தனிநபர் துதி பாடுவது, மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுப்பது, சுயமரியாதை இழந்து நிற்பது என எவற்றையெல்லாம் பெரியார் மண்மூடிப்
புதைக்கச் சொன்னாரோ அவற்றையே அஇஅதிமுககாரர்கள் பிழைப்பாக மாற்றிக் கொண்டுவிட்டதை
இந்த நான்கு நிகழ்வுகளும் காட்டுகின்றன. ஜெயலலிதா முதல்வர் பதவியேற்ற அன்று அவர்
முன் நின்ற ஓ.பன்னீர்செல்வம் ஆங்கில எழுத்து எல் தலைகீழாக போடப்பட்டதைப் போல்
நின்றிருந்தார். அவரது இடது கை அவர் மார்பின் குறுக்காகவும், வலது கை அவரது வாய் பொத்தியும் இருந்தது. ஒரு மூத்த அமைச்சர் இப்படி
நிற்க வேண்டும் என்றால், சாமான்யர்கள் அடிமைகள் போல்
நடந்துகொள்ள வேண்டும், ஜெயலலிதா கண்ணிலேயே படக்கூடாது என்றா
அமைச்சர்கள் சொல்கிறார்கள்?
தமிழ்நாட்டின் முற்போக்கு ஜனநாயக
சக்திகளுக்கு, மத்தியில் உள்ள இருண்மைவாத சக்திகளை
எதிர்கொள்வதுடன் தமிழ்நாட்டின் முற்போக்கு மரபையும் மீட்டெடுக்க வேண்டிய இரட்டைக் கடமை இருக்கிறது.
ஏப்ரல் 27 தீர்ப்பு, அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம்
ஊழல் பற்றி சொன்ன கறாரான விசயங்கள் எல்லாம், ஜெயலலிதாவுக்கு பாதகமாகவே இருந்ததால், அவர் தண்டனை உறுதி செய்யப்படும் என்று எதிர்ப்பார்த்த எதிர்க்
கட்சிகளுக்கு, அவர் விடுதலையானது திகைப்பையே ஏற்படுத்தியது. பல்வேறு கோணங்களிலும் சர்ச்சைக்குரியது என்றாலும்,
மேல்முறையீட்டில் வேறு தீர்ப்பு வரும் வரை
தீர்ப்பு தீர்ப்புதானே. ஊழல் எதிர்ப்பு விழுமியங்களுக்கு, அரசியல் அறங்களுக்கு முரணாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிவிட்டார்.
முதல்வர் வேட்பாளரை அறிவித்து 2016 நோக்கி நகரத் துவங்கிவிட்ட பாமக, நானும் தயார் என்று மதுரையை மீட்பதில் துவங்கிய மு.க.ஸ்டாலின்,
2016 கூட்டணிக்கு தானே தலைமை எனக் காட்ட
டில்லிக்குச் சென்று வந்த விஜயகாந்த், மத்தியில்
சிறப்பான ஆட்சி என்று சொல்லி மாநிலத்தில் கால் பதிக்க விடா முயற்சி செய்யும்
தமிழிசை, இருப்பைக் காட்டும் முயற்சியில் ஊழல் புகார்கள்
எழுப்பிக் கொண்டிருந்த இளங்கோவன் என காற்றில் கம்பு சுழற்றிக் கொண்டிருந்தவர்களின்
வேகம் சற்று மட்டுப்பட்டது. ஜெயலலிதா ஆகப் பெரிய மக்கள் செல்வாக்கு பெற்றவர்
என்பதால் அல்ல. மாற்று என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் மக்கள் மத்தியில்
செல்வாக்கு பெறாததும் நம்பகத்தன்மை இழந்து நிற்பதும்தான் ஜெயலலிதாவை வல்லவராகக் காட்ட உதவுகிறது.
பெரிய சங்கடம் பாஜகவுக்குத்தான். ஊழல்,
டாஸ்மாக் எதிர்ப்பு, அரசியல் வெற்றிடம் எனப் பேசிக் கொண்டிருந்த தமிழிசை திடீரென்று
ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொல்லும் நிலை வந்தது. ஜெயலலிதா நல்லாட்சி தருவார்
என்று சொல்லிவிட்டு பொன்.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள, தமிழிசை தனக்கு அழைப்பு இல்லை என்றார். தமிழிசையை சமாளிக்க
பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதி வீட்டு துக்கத்துக்கும் சென்று வந்துவிட்டார்.
மத்திய பாஜக மிகத்தெளிவாக ஜெயலலிதா ஆதரவு சமிக்ஞை காட்டும்போது, தமிழக பாஜக இன்னும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. உள்குத்து
சூடு பிடிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சியிலும்
நண்பர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் நாட்டின் இளங்கோவன் தீர்ப்பைப் பற்றி
காரசாரமான விமர்சனங்கள் வெளியிடுகிறார்; மேல்முறையீடு
வேண்டும் என்கிறார். ஆனால், கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி, கூட்டம் கூட்டுகிறேன்,
முடிவு எடுக்கிறேன் என்று போக்குக் காட்டிக்
கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ ஆட்சியின் அவலங்களைச் சொல்லியே
தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் பெரும்வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு
சாதாரண காய் நகர்த்த கர்நாடகா காங்கிரஸ் இரண்டு வேறு கருத்துக்கள் சொல்கிறது.
மேல்முறையீடு செய்ய யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று விவாதித்துக்
கொண்டிருக்கிறது கர்நாடகா அமைச்சரவை. காவிரி, மேக்கேதாட்டு என கர்நாடக அரசுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியவர்கள்,
இந்த விசயத்தில் கர்நாடக அரசு போக்குகாட்டுவது
தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதாக இருக்கும் என்று சொல்லவில்லை.
கருணாநிதி கொண்ட கொள்கையில்
(எப்படியாவது ஆட்சியில் அமர்வதில்) விடாப்பிடியாக இருக்கிறார். தயாநிதி மீது
கூடுதல் குற்றச் சாட்டுக்கள் சொல்லி முன்னாள் ட்ராய் தலைவர் புத்தகம்
வெளியிட்டுள்ள நிலையில், மேல் முறையீடு செய்தாவது, ஜெயலலிதாவை அரசியல் வெளியில் அகற்றுவதுதான் அவருக்கு ஒரே வழியாகத்
தெரிகிறது. எனவே, நீதியின் மாண்பை காக்கப் போவதாகச்
சொல்லி, அதற்குத் தயாராகிறார். மு.க.ஸ்டாலின்,
இன்று ஒரு தகவல் போல், இன்று ஒரு விமர்சனம் என்று அறிக்கை வெளியிடுகிறார். திடீரென
தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம்,
அவற்றில் படிக்கும் மாணவர்களின் தரம் பற்றி
கவலைப்படுகிறார். அது பற்றி ஆய்வு வேண்டும் என்கிறார். தனியார் கல்லூரிகளே,
தனியார் கல்வியே வேண்டாம் என்று அவர்
சொல்லமாட்டார். அப்படிச் சொல்லாதவர்கள் ஜெயலலிதாவுக்கு உண்மையான மாற்று என மக்கள்
மத்தியில் எடுபட வாய்ப்புக்கள் மிகக் குறைவு. திறந்த கடிதம் எழுதி விவாதத்துக்கு
அழைத்தவர் வீட்டுக்குச் சென்று திருமணத்துக்கு அழைப்பது பெரிய பலன் தராது. அங்கும்
ஒரு முதலமைச்சர் வேட்பாளர் தயாராக இருக்கிறார்.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி
தகுதி பெற்றுள்ள விஜயகாந்த் எப்போது, எந்தப் பிரச்சனையில், என்ன செய்வார், என்ன சொல்வார் என்று அவருக்கே
தெரியாது. அவருக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்பதுதான் அவரைப் பற்றி உறுதியாக
சொல்லக் கூடிய ஒரே விசயம்.
மத்திய அமைச்சராக பார்த்த மகனை மாநில
முதலமைச்சராக பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதல் ராமதாசை செலுத்துகிறது. நாயக்கன்
கொட்டாய், நாடாளுமன்றத்தில் ஓர் இடம்
தந்திருந்தாலும், அது உருவாக்கிய தனிமைப்படு தல் சுமையை
இறக்கி வைப்பது எளிதல்ல.
ஆக, தலைக்கு மேலே கத்தி, காலின் கீழே வெற்றிடம் என்று இருக்கிற
கட்சிகள்பால் மக்களுக்கு இருக்கிற
நம்பிக்கையின்மை மீது ஜெயலலிதா மீண்டும் பந்தயம் கட்டுகிறார்.
அனைத்து பிரிவு மக்களும் தங்கள் வாழ்வு
பறிக்கப்படுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகிறார்கள். இந்த எந்தப்
போராட்டத்துக்கும் பதில் சொல்லாமல், ஜெயலலிதா
விடுதலை ஆனதுதான் மக்களுக்கு விடியல் என்பது போல் காட்ட, அடையாளபூர்வமாக அய்ந்து
திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள
நூற்றுக்கணக்கான டைமன்ட் என்ஜினியரிங், எமரால்டு
என்ஜினியரிங், ரூபி என்ஜினியரிங் ஆலைகளின் தொழிலாளர் பிரச்சனைகளையோ, கல்விக் கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்பட்டுள்ள அமிர்த்தா கல்லூரி
மாணவர் பிரச்சனையையோ, செய்த வேலைக்குக் கூட கூலி கிடைக்காமல்
காத்திருக்கிற கிராமப்புற வறியவர் பிரச்சனையையோ இந்த அறிவிப்புகள் தீர்க்கப்
போவதில்லை.
பெயருக்காவது மக்கள் நலத் திட்டங்கள்
அறிவிக்க நேரும் என்பதற்காகவே, ஏதாவது பதில் சொல்ல நேரும்
என்பதற்காகவே, அவசர அவசரமாக இடைத்தேர்தலுக்கு ஏற்பாடு
செய்தது போல் தெரிகிறது. இனி ஜ÷ன் இறுதி வரை தேர்தல் விதி, ஏதும் செய்ய முடியாது என்று
சொல்லி ஜெயலலிதா தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்வார். ஆனால், ஜெயலலிதா மக்கள் பிரச்சனைகளுக்கு பதில் சொல்வதை நீண்ட நாட்கள்
தள்ளிப் போட முடியாது.