தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை
அனைத்தும் தழுவிய ஊழலில் மூழ்கிவிட்டதா?
சென்னையில் உள்ள
புரசைவாக்கத்தில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் பாலிடெக்னிக்
மாணவர்கள் மூன்று பேரால் அடித்துக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட மாணவர்
பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை நேரத்தில் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலை
பார்த்தவர். அந்தக் கடையில் பெல்ட் வாங்க வந்த மூன்று மாணவர்கள் காசு தராமல்
பெல்ட்டை எடுத்துக் கொண்டு ஓட முயற்சிக்க, அவர்களைப் பிடிக்க அவர்கள் பின் ஓடிய அந்த
மாணவனை, அந்த மூன்று
பேரும் தாக்கியதில் அந்த மாணவர் உயிரிழந்தார்.
ஆந்திராவில்
இருந்து சென்னைக்கு கட்டுமான தொழிலுக்கு வந்த ஒருவர், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில்
இருந்த தனது மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்தார். ஊருக்குச் செல்லும் கனவில்
வந்த அந்தக் குழந்தையை தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு உணவு சமைக்கச் சொல்லியிருக்கிறார்.
தந்தையின் நிர்ப்பந்தத்தால் ஓரிரு நாட்கள் அந்த வேலைகளைச் செய்த அந்தச் சிறுமி
பின்னர் மறுத்திருக்கிறார். தான் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறார்.
எதுவும் பலன் தராமல் போன போது, அந்தக் கட்டிடத்தின் நான்காவது மாடியில்
இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்த இரண்டு
பேரும் படிப்பு நேரம் போக மாலை நேரத்தில், மற்ற நேரத்தில்
வேறு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் மோடி
அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் இதுபோன்ற குழந்தை உழைப்பை சட்டபூர்வ
மாக்குகின்றன. சட்டத் திருத்தங்கள் அமலுக்கு வரும் முன்னரே வறிய குடும்பத்து
குழந்தைகள் இதுபோன்ற சாவுகளை எதிர்கொள்கிறார்கள். வெறும் செய்திகளாகிப் போன இந்தச்
சாவுகளுக்கு மோடி அரசின் சட்டத் திருத்தம் சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்கவும் வழி
வகுக்கலாம்.
மாணவர்களின், குழந்தைகளின்
சாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கக் கூடிய ஆட்சியில் கல்வி பெறுவதை சட்டபூர்வமாக்க
சட்டம் இருந்தும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. வறிய குடும்பத்து மாணவர்கள்
குழந்தைகள் செத்துப் போக களம் தந்திருக்கும் தமிழ்நாடு, கல்வி பெறும் உரிமையை மறுப்பதற்கும் மிகச்
சிறந்த களமாக அமைந்துள்ளது.
குழந்தை உழைப்பு
முறையை தடுக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை ஆந்திரா
சிறுமி மரணம் காட்டுகிறதென்றால், இலவச பாட புத்தகங்கள்,
பேருந்து அட்டைகள், சீருடைகள் போன்ற
அஇஅதிமுக அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் வறிய குடும்பத்து மாணவர்கள் கல்வியை
உறுதி செய்யவில்லை, கல்வி உரிமைச் சட்டம் அவர்களுக்கு எட்டாத
இடத்தில் இருப்பதை புரசை சிறுவன் மரணம் காட்டுகிறது.
சென்னையில் பொது
இடத்தில் பகிரங்கமாக வைக்கப்பட்ட தட்டியில் 12 ஊழல் அதிகாரிகள் படங்களில் பள்ளிக் கல்வித்
துறை செயலர் சபிதாவின் படமும் இடம்பெற்றிருந்தது. சென்னையிலும் தமிழ்நாட்டின் பிற
பகுதிகளிலும் அடுத்தடுத்து நடக்கும் சில விசயங்கள், அந்தத் தட்டியில் உண்மை இருக்குமோ என சந்தேகம்
எழுப்புகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுவதை அஇஅதிமுக
அரசு வேடிக்கைப் பார்க்கிறது. 2011 முதல் ஒவ்வோர் ஆண்டும் மே - ஜ÷ன் மாதங்கள்
பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சவால்மிக்க மாதங்களாக,
போராட்டங்கள் நிறைந்த
மாதங்களாக இருக்கின்றன. கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களை சேர்க்கவில்லை, நிர்ணயிக்கப்பட்ட
கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என ஒவ்வோர் ஆண்டும் பிரச்சனை
எழுந்த வண்ணம் இருக்கிறது.
கல்வி உரிமைச்
சட்டப்படி ஏழை மாணவர்களுக்கு தரப்பட வேண்டிய 25% இடங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுகிறோம் என
தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிக்கும் அளவுக்கு துணிச்சல் உருவாகியிருக்கிறது. காசுக்குத்தான்
கல்வி, அல்லாமல் கல்வி
இல்லை என்று, கல்வி உரிமைச் சட்டம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று அறிவிக்கிறார்கள்.
ஒரு சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை அல்லவா எடுக்க வேண்டும்?தமிழக அஇஅதிமுக
அரசாங்கம் வேடிக்கைப் பார்க்கிறது.
நல்ல பள்ளி என்று
பெயர்பெற்றுவிட்ட அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி ஒரு படி மேலே போனது. கல்வி
உரிமைச் சட்டமாவது? மண்ணாவது? மாணவர்களுக்கு இரண்டு விதமான கட்டணங்களை
அறிவித்தது. ஒரு கட்டணம் வகுப்பறைக்கு வந்து பாடத் திட்டம் சொல்வதில் உள்ளவற்றை
கேட்டுக்கொண்டு போய்விடும் மாணவர்களுக்கு. அதற்கும் மேல்,
உணவு விடுதி, நூலகம், சுற்றுலா போன்றவை
வேண்டும் என்றால் வேறு கல்விக் கட்டணம்.
மாணவர் மத்தியில்
பணம் படைத்தோர், அல்லாதோர் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் சீருடை அணியச்
சொல்கிறோம். சீருடை அணிந்த மாணவர் மத்தியில் பாகுபாடு உருவாக்கும் நடவடிக்கையில்
பால வித்யா மந்திர் பள்ளி இறங்கப் பார்த்தது. பள்ளியின் ஆசிரியர்களே இந்த
நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் பிரச்சனையை ஒட்டி இடமாற்றம் செய்யப்பட்ட
ஆசிரியர் மீண்டும் இந்தப் பள்ளியிலேயே பணிக்கமர்த்தப்பட வேண்டும் என்று கோரி, பெற்றோர்களுடன்
போராட்டம் நடத்த, புகழ்பெற்ற அந்தப் பள்ளி ஒரு வார காலம் செயலற்றுப் போனது. தனது நடவடிக்கையை
நியாயப்படுத்தப் பார்த்த பள்ளி நிர்வாகம் போராட்டத்துக்குப் பணிந்தது. சிங்கார
வேலர் குழு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக கட்டணம் வசூலித்ததும்
அம்பலத்துக்கு வர, தனியார் கல்வியின் தரம் என்ன என்று மக்கள்
புரிந்துகொள்ள சிறப்பான வாய்ப்பானது.
உயர்சாதியினருக்கு மட்டும் கல்வி என்ற
வருணாசிரம முறையை பணக்காரர்களுக்கு கல்வி என்ற பெயரில் புகுத்த நினைத்த, மாணவர் மத்தியில்
பாகு பாட்டை விதைக்கும், சட்டத்துக்குப் புறம்பாக கட்டணம் வசூலிக்கும்
பால வித்யா மந்திர் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலுவாகக் குரல்
எழுந்தது. தலைநகரத்தின் மய்யத்தில் நடந்த இந்தப் பிரச்சனைக்கும் தனது ஆட்சிக்கும்
சம்பந்தம் இல்லை என்பது போல்தான் நேற்றைய மக்களின் முதல்வர் இன்றைய ஆட்சியின்
முதல்வர் ஜெயலலிதா நடந்துகொண்டார்.
பால வித்யா
மந்திர் மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் இருந்தபோதே
மதுரவாயிலில் இன்னொரு தனியார் பள்ளியில் எதிர்ப்புக் குரல் கேட்டது.
நிர்ணயிக்கப்பட்டதைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் செய்தனர்.
ஊடக வெளிச்சத்தில் பள்ளியின் பெயர் தவறான காரணங்களுக்கு வெளிவந்த பிறகு, தவறான நடைமுறை
திருத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து
சென்னையின் மற்றும் ஒரு பிரபலமான பள்ளியான ஆசான் மெமோரியல் பள்ளி மாணவர்களின்
பெற்றோர்கள் கூடுதல் கட்டண வசூலிப்புக்கு எதிராக பள்ளியின் முன் திரண்டார்கள். ரூ.18,000 கட்டணம் வாங்க
வேண்டிய வகுப்புக்கு ரூ.40,000க்கும் மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அம்மா பள்ளி வேண்டும் என்று எழுதப்பட்ட பலகைகளுடன் சில மாணவர்கள்
நின்றிருந்தார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும், நான் பதில் சொல்ல
முடியாது என்று கடுகடுப்பான முகத்துடன் சொன்னார்.
தனியார் பள்ளிகள்
கட்டண வேட்டையில் ஈடுபடுவதற்கு எதிராக, தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும்
என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுக்கும்போது, 2,465 அரசுப் பள்ளிகளின் கட்டிடங்கள் இடிந்து விழும்
நிலையில் இருப்பதாகவும் அவற்றை இடித்துவிடப் போவதாகவும் பள்ளிக் கல்வித் துறை
அறிவித்துள்ளது. மாற்று ஏற்பாடு செய்து விட்டல்லவா இருக்கிற கட்டிடங்களை இடிக்க
வேண்டும்? அப்படி ஏதும்
நடந்துள்ளதாக அறிவிப்பு இல்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான
வகுப்பறைகள் இன்றைய நிலைமைகளிலேயே மரத்தடியிலும் மைதானத்திலும்தான் உள்ளன.
இடிக்கப்படும் பள்ளிகளின் மாணவர்கள் நிலை என்ன என்று எதுவும் சொல்லப்படவில்லை. இது, அவர்களை தனியார்
பள்ளி நோக்கி விரட்டும் நடவடிக்கையாகவே இருக்கிறது.
மத்திய அரசு
தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் மூலம்
நிறைவேற்ற வேண்டும் என்று ஜெயலலிதா மாநில உரிமை காக்க ‘போராடி’ வருகிறார். ஆனால், இடை நிலைக் கல்வி இயக்ககம் தரும் விவரங்கள்படி, 2011 - 2012 வரை, தமிழகத்துக்கு
கல்விக்கென ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்படாமல் ரூ.4,400 கோடி உள்ளது. இந்த நிதியில் புதிய பள்ளிகள்
கட்டுவது உட்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட வில்லை.
1096 புதிய பள்ளிகள் கட்ட வேண்டிய இடத்தில் வெறும் 125 புதிய பள்ளிகளே கட்டப்பட்டுள்ளன. அதனால், 2012 - 2013 முதல் புதிய
பள்ளிகள் கட்டுவதற்கான மத்திய நிதி ஒதுக்கப்படவில்லை என்று மார்ச் மாத வாக்கில்
ராமதாஸ் தெரிவித்திருந்தார். புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டாமல், பள்ளிக் கல்வி
தொடர்பான வேறு பல நடவடிக்கைகள் எடுக்காமல், மத்திய அரசு ஒதுக்கிய நிதியையே கையில்
வைத்திருக்கும் அரசு, இருக்கிற பள்ளிகளை இடித்துவிடப் பார்க்கிறது.
மத்திய அரசு ஒதுக்கி செலவழிக்கப்படாமல் இருக்கிற அந்த ரூ.4,400 கோடி என்ன ஆனது? மாநில அரசு 2011 -
2012 முதல் 2014 - 2015 வரை பள்ளிக்
கல்விக்கு என்று ஒதுக்கிய ரூ.62,583 கோடி நிதியில் என்ன நடக்கிறது?
கடந்த நான்கு
ஆண்டுகளில், 182 புதிய பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் ரூ.2,688 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் சோதனைக்
கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், வரும் நிதியாண்டில் பல்வேறு நிதியாதாரங்களைப்
பயன்படுத்தி ரூ.450 கோடி செலவில் பள்ளிக் கட்டமைப்பு
வலுப்படுத்தப்படும் என்றும் 2015 - 2016 தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை சொல்கிறது.
மத்திய அரசிடம் 125 பள்ளிகள் துவக்கப்பட்டதாகச் சொல்கிற தமிழக
அரசு நிதிநிலை அறிக்கையில் 57 பள்ளிகளை கூடுதலாகக் காட்டியுள்ளபோதும், இலக்குக்கும்
நிறை வேற்றப்பட்டதற்கும் இடையில் பெரும் வித்தியாசம் உள்ளது. இடிக்கப்படப் போவதாக
அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் இந்த எண்ணிக்கைக்கும் கூட தூரம்
அதிகம். இந்த நிதிநிலை அறிக்கையிலும் புதிய பள்ளிகள் பற்றி குறிப்பாக
குறிப்பிடப்பட வில்லை. பொதுவாக பள்ளிக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று
சொல்லப்படுகிறது. அவர்கள் மசூதிகளையும் தேவாலயங்களையும் இடிக்கிறார்கள். இவர்கள்
பள்ளிக்கூடங்களை இடிக்கிறார்கள்.
பள்ளிக்
கட்டிடங்கள் இடிக்கப்படும்போது புத்தகங்கள் மட்டும் எதற்கு? சேலத்தில் ஆட்சியர்
அலுவலகத்துக்கு அருகில், பள்ளிக் கல்வித் துறையின் விலையில்லாப் பாடப்
புத்தகங்கள், கட்டுக்கட்டாக பழைய புத்தகக் கடை ஒன்றில் ரூ.30, ரூ.60 என்று பெரிய பெரிய எழுத்தாக எழுதப்பட்ட விலைப்
பட்டியலுடன் விற்கப்பட்ட காட்சி மேலும் அதிர்ச்சி தந்தது. நேராக மாணவர்கள்
கைகளுக்கு மட்டும் வர வேண்டிய விலையில்லா பாடப் புத்தகங்கள் பழைய புத்தகக் கடைக்கு
விற்பனைக்கு எப்படிச் சென்றன? ஜெயலலிதா பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறார்.
கல்வி உரிமைச்
சட்டம் அப்பட்டமாக மீறப்படுவது, தனியார் பள்ளிகளின் கட்டுக்கு அடங்காத
அத்துமீறல், மாற்று ஏற்பாடு பற்றி ஏதும் சொல்லாமல், அரசுப் பள்ளிகள் இடிக்கப்படும் அறிவிப்பு, இலவசப்
பாடப்புத்தகங்கள் விற்பனை, மத்திய அரசு ஒதுக்கி செலவழிக்கப்படாத நிதி
ஆகியவற்றைச் சேர்த்துப் பார்த்தால் அரசு தரும் பள்ளிக் கல்வியை ஒழித்துக் கட்ட
தனியார் கல்வியை ஊக்குவிக்க, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை விசுவாசமாக
செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது. பள்ளிக் கல்வித் துறை அனைத்தும் தழுவிய ஊழலில்
மூழ்கிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.