COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 7, 2015

ஆயிரம் நிரபராதிகள் தப்பித்து விடலாம்...
ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படக் கூடாது!

ஆயிரம் நிரபராதிகள் தப்பித்துவிடலாம், ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற புது விதி நோக்கி நாட்டின் சட்ட அமலாக்கம் சென்று கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை சமீபத்திய சில நாட்டு நடப்புகள், எழுப்புகின்றன. நீதி தேவதையின் கண்களைக் கட்டியிருக்கும் கருப்புத் துணியில் ஓட்டைகள் போடப்பட்டுவிட்டன.
பணம், ஆள், அம்பு, அரசியல் என பெரும்செல்வாக்கு பெற்றுள்ள சல்மான் கான் குடித்துவிட்டு கார் ஓட்டி ஒருவர் உயிரிழக்கக் காரணமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறுகிறார். 
தண்டனை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பிணையும் பெறுகிறார். இரண்டு நாட்களுக்குப் பிறகு பிணை முறைப்படுத்தப்படுகிறது.
18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட ஒரு வழக்கை தமிழ்நாட்டில் பார்க்கும் நமக்கும் நாட்டுக்கும் நீதிமன்றங்கள் எவ்வளவு துரிதமாக இயங்க முடியும் என்பதை இந்த வழக்கில் நடந்த பரபரப்பு மாற்றங்கள் காட்டின. இந்த வழக்கும் இதற்கு முன்பு 13 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது என்றாலும், இழுத்தடிக்கப்பட்டதற்கு பின் செல்வாக்கு இருப்பதையும் உடனடியாக பிணை வழங்கப்பட்டதற்குப் பின் செல்வாக்கு இருப்பதையும் நாடு பார்த்தது.
ஏழை சொல் அம்பலமேறாது, பணம் பாதாளம் வரை பாயும் என்பவற்றை அனுபவிக்கும் நாட்டு மக்களுக்கு சல்மான் கான் பெற்றுள்ள இடைக்கால விடுதலை பெருவியப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரது விடுதலையை நியாயப்படுத்தி திரைப்பட உலகினர் சிலர் வெளிப்படுத்திய கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சகமனிதர்கள் உணர்வுகள், துன்பங்கள் பற்றி சற்றும்  கூருணர்வு இன்றி இருப்பதை, சட்டத்தின் பெயராலும் ஜனநாயகத்தின் பெயராலும் மேட்டுக் குடிகள் சிலரால் நியாயப்படுத்த முடிகிறது.
2002ல் குஜராத்தில் ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டது, காரில் அடிபட்டு நாய்க்குட்டி இறந்துபோனால் மனம் வருத்தப்படுவதைப் போல் வருத்தம் உருவாக்குவதாகச் சொல்லும் ஒரு பிரதமர் இருக்கிற நாட்டில், பணமும் செல்வாக்கும் பெற்றுள்ள பிரஜை ஒருவர், சாலைகள் கார்களுக்கும் நாய்களுக்கும் மட்டும்தான், யாரும் படுத்து உறங்க அல்ல என்று சொல்ல துணிச்சல் பெறும் சூழல் உருவாகிவிட்டதும் யதார்த்தமே. 
அவர்கள், சாலையில் ஏன் படுத்து உறங்கினார்கள், அந்த விபத்துக்கு அவர்கள் அங்கு படுத்திருந்ததே காரணம் என்று அடித்துச் சொல்ல முடிகிறது. கார் சாலையின் மீதுதான் ஓட வேண்டுமே தவிர நடைமேடையில் அல்ல என்பதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்பதும் சட்டம்தானே. மேட்டுக் குடிகள் புழங்கும் இடங்களில் அழுக்கானவர்கள், வறியவர்கள், சாலைகளில் தூங்குபவர்கள் குற்றவாளிகள் ஆகிவிடுகிறார்கள். இதுபோன்ற கூருணர்வற்ற போக்குகளுக்கு, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ஜனநாயகம், மற்றவர்கள் அடிபணிந்து போக விதிக்கப்பட்டவர்கள் என்ற கருத்துக்களுக்கு மோடியின் தூய்மை இந்தியா முழக்கம் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
எப்படிச் செலவழிப்பது என்று திக்குமுக்காடிப் போகும் அளவுக்கு செல்வம், அதைத் துய்க்கும் போக்கில் நிகழும் உடன்விளை சேதங்கள் துய்ப்பதைத் தடுத்துவிடாமல் இருக்க மேலும் மேலும் குற்றம் மேலும் மேலும் உடன் விளை சேதங்கள் என விஷச் சுழலேணி தங்கு தடையின்றி மேலே மேலே செல்கிறது. இறந்து போனவரின், படுகாயத்துக்கு உள்ளானவர்களின் குடும்பங்கள் நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராடினாலும்     அவர்களின் படுமோசமான இன்றைய வாழ்க்கை நிலைமைகளுக்குக் காரணமான சல்மான் கான் எந்தச் சிக்கலும் இன்றி தனது சொகுசு வாழ்க்கையைத் தொடர்வதுதான் இன்றைய சட்டம் என்றாகியுள்ளது. 
சல்மான் கான் பிரச்சனை பரபரப்பான செய்தியானதுபோல், இதுபோன்ற பல நிகழ்வுகள் யார் கவனத்துக்கும் வராமல் சென்றுவிடுவதும் நடக்கிறது. முகேஷ் அம்பானி மகனின் கார் விபத்து நடந்தபோது, அவரிடம் வேலை செய்பவர் தான்தான் காரை ஓட்டியதாகச் சொன்னார். விபத்தில் யாருக்கு என்ன பாதிப்பு என்பது கூட முழுமையாக வெளியே சொல்லப் படவில்லை. வழக்கு நடக்கிறதா என்னவென்று செய்தியே இல்லை. சென்னையில் சாராயம் காய்ச்சுகிற எம்பி பிரூவரிஸ் நிறுவனச் சொந்தக் காரர், மது அருந்திவிட்டு, கார் ஓட்டி, சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி 13 வயது சிறுவனைக் கொன்று, இன்னும் சிலரை படுகாயத்துக்கு உள்ளாக்கி விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி, பிறகு வழியே இல்லை என்று நாட்டுக்குத் திரும்பி வந்து, காவல்துறையில் சரணடைந்து, பிறகு பிணையில் வெளியே வந்துவிட்டார். இப்போது சகஜ வாழ்க்கையைத் தொடர்கிறார்.
இந்தச் சித்திரத்தின் மறுபக்கத்தில் விநாயக் சென் போன்றவர்கள் இருக்கிறார்கள்.    செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் போதுமான சாட்சியங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி மெய்ப்பிக்கப்படும் முன்னரே விநாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டார். எடுத்துக் கொண்டே ஆக வேண்டிய மருந்துகள் தரப்படாமல் சிறையிலும் மனித உரிமை மீறலுக்கு உட்படுத்தப்பட்டார். சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் எழுந்த தொடர்ச்சியான கண்டனங்களுக்குப் பிறகுதான் விநாயக் சென் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
நேற்று விநாயக் சென்னுக்கு நடந்ததுதான் இன்று டில்லி பல்கலை கழகத்தின் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சாய்பாபாவுக்கு நடந்திருக்கிறது. சக்கர       நாற்காலியின் உதவியுடன் மட்டுமே இங்கும் அங்கும் நகரும் அவரை டில்லியில் அவரது வீட்டு வாசலில் இருந்து, சாதாரண உடையில் வந்த மகாராஷ்டிரா காவல்துறையினர் கடத்திச் சென்று நாக்பூர் சிறையில் அடைத்தனர். அவரது வீட்டின் அருகிலேயே அவர் வாகனத்தில் ஏற்றப்படும் முன்னரே அவரது சக்கர நாற்காலி உடைந்துபோனது. பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் உள்ள சாய்பாபாவுக்கும் சிறையில் போதிய மருத்துவ வசதிகள் தரப்படவில்லை. சக்கர நாற்காலி தரப்படவில்லை. அப்படியானால் அவர் சிறையில் எந்தத் தேவைக்கும் தவழ்ந்து தவழ்ந்துதான் நகர வேண்டும். அவருக்கு போதுமான மருத்துவ வசதிகள் தரப்படவில்லை என்றால் அவர் மாரடைப்புக்கு உள்ளாகலாம். அவர் உயிருடன் சிறையில் இருந்து வெளியே வருவாரா என்பது கூட கேள்விதான் என்று அஞ்சப்படுகிறது.
மலைவாழ் மக்கள் உரிமைகளுக்கு குரல் எழுப்பிய விநாயக் சென்னும் சாய்பாபாவும் மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்தார்கள் என்பது குற்றச்சாட்டு. அய்முகூ ஆட்சிக் காலம் முடிவடைந்த நேரத்தில் மே 9 அன்று டாக்டர் சாய்பாபா கைது செய்யப்பட்டார். மே 26க்குப் பிறகு மோடி ஆட்சியின் காலத்தில்தான் சிறையில் கடுமையான மனித உரிமை மீறலுக்கு அவர் ஆளாக்கப்பட்டிருக்கிறார். மகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சியே நடக்கிறது.           
கார்ப்பரேட்டுகளுக்காக நிலப்பறி நடத்த ஒரு பக்கம் முயற்சிகள் செய்துகொண்டே சட்டிஸ்கருக்குச் சென்று துப்பாக்கி வேண்டாம், கலப்பை ஏந்துங்கள் என்று சொல்கிற மோடி, சட்டிஸ்கரிலும் மகாராஷ்டிராவிலும் உள்ள பாஜக அரசாங்கங்களிடம், ஒடுக்குமுறை வேண்டாம், அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என்று சொல்வாரா?
பீகாரில் கிராமப்புற வறிய மக்களின் அறுதியிடலுக்காக வெற்றிகரமான        அணிதிரட்டல்களில் ஈடுபட்ட மாலெ கட்சியின் தோழர் ஷா சந்த், பொய் வழக்கில் தடாவில் கைது செய்யப் பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 13 ஆண்டுகள் சிறைவாசத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது கூட பிணை தரப்படாமல்சிறைக் கைதியாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி, 2014 நவம்பர் 2 அன்று உயிரிழந்தார். லாலு ஆட்சி, பாஜக ஆதரவுடனான நிதிஷ் ஆட்சி, பாஜக ஆதரவில்லாத நிதிஷ் ஆட்சி எல்லாம் கடந்தன. தடா கூட வழக்கொழிந்து போனது. அவருக்கு எந்த ஆட்சியிலும் இறுதி வரை பிணை கிடைக்கவில்லை.
 சிறைக் கைதியாக அவர் இறக்கும்போது மத்தியில் ஆட்சியில் இருப்பது மோடி தலைமையிலான அரசாங்கம்தான்.
பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு மோசடி  செய்த சத்யம் நிறுவனத்தின் ராமலிங்க ராஜ÷வுக்கு, ரூ.20,000 கோடி வரை விதிமுறைகளுக்கு அப்பால் பலரிடமும் பணம் வசூலித்துவிட்டு, கைதான பிறகு பிணை பெற ரூ.10,000 கோடி வரை செலுத்தத் தயாராக இருக்கும் சஹாராவின் சுப்ரதா ராய்க்கு, சல்மான் கானுக்கு, ஜெயலலிதாவுக்கு, நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் பிணை கிடைக்கிற இந்தச் சூழலில் ஓராண்டு கடந்தும் டாக்டர் சாய்பாபா சிறையில் இருக்கிறார். வாழ்வுரிமை கேட்ட மாருதி தொழிலாளர்களும் இந்தப் பட்டியலில் சேர்வார்கள். இன்னும் நாடு முழு வதும் உள்ள பல்வேறு சிறைகளில் விசாரணைக் கைதிகள், தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு இன்னும் உட்படுத்தப்படாதவர்கள் என இந்தப் பட்டியல் மிகப்பெரியது. சிறை புள்ளிவிவரங்கள் 2013படி, இந்தியச் சிறைகளில் 2,78,503 விசாரணை கைதிகள்  உள்ளனர்.
 இவர்களில் 3,000 பேர் 5 ஆண்டுகளுக்கும் மேல் சிறைகளில் இருப்பவர்கள். வறிய பின்னணி கொண்ட பல விசாரணை கைதிகளுக்கு பிணையில் வெளியே வருவதற்கு தேவையான சட்ட உதவிகள் கிடைப்பதில் பிரச்சனை இருப்பதாலேயே அவர்கள் உள்ளே இருக்கின்றனர். அவர்கள், காசு         கொடுப்பதற்கிலார், வெளியே வரும் வழியுமிலார் வகையைச் சேர்ந்தவர்கள்.

மோடி ஆட்சியின் ஓராண்டு நிறைவு பற்றி பல்வேறு கோணங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று, நாட்டின் இயற்கை வளங்களை, மனித வளங்களை கூவிக் கூவி விற்பது, நாட்டின் மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபை குழி தோண்டி புதைப்பது, அதானியின், அம்பானியின் செல்வத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளே நாட்டுக்கு நல்லது என்று சொல்வது, நாட்டின் மதச்சார்பின்மை இழையை கிழித்தெறியும் பிளவுவாத சக்திகள் சுதந்திரமாகத் திரிவது, தேநீர் விற்றேன், சாலை ஓரங்களில் வசித்தேன், பற்றற்று அலைந்து திரிந்தேன் என்று சொல்லிக் கொண்டே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் அணிவது, மான்ய வெட்டு, நல்வாழ்வு நடவடிக்கைகள் வெட்டு, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத சட்டத் திருத்தங்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இசுலாமியர்களுக்கு வேலையில்லை, வீடு இல்லை என்று பகிரங்கமாகச் சொல்லும் துணிச்சல் வளர்ந்திருப்பது ஆகியவற்றுடன் குற்றம் செய்யாதவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் சிறைகளில் இருப்பது, பணம் படைத்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் குற்றம் புரிந்தவர்கள் என்றாலும் பிணைகள் பெற்று விடுதலையாவது ஆகியவற்றாலும் இந்தக் கால கட்டம் குறிக்கப்பட்டுள்ளது.

Search