குழந்தைத்
தொழிலாளர் முறையை சட்டபூர்வமாக்கும் சட்டத் திருத்தம்
‘நான் சிறு வயதில் ரயில் நிலையத்தில்
என் அப்பாவுடன் சேர்ந்து டீ விற்றேன்’. பிரதமர்
நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் இதைச் சொல்கிறார்.
நான் 10 அல்லது 11 வயது சிறுவனாக இருந்தபோது மாலையில்
பள்ளி முடிந்ததும் ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மான்கஞ்ச் சந்தைக்குச் சென்று அங்கு
வெங்காயம் விற்றுக் கொண்டு இருக்கும் என் அம்மாவிற்கு உதவியாக இருப்பேன். -
மோடியைப் பின்பற்றும் மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டரு தத்தத்ரேயா
தந்தையின் பூ வியாபாரத்திற்கு உதவிய
மகள் முத்துவேணி பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் - பத்திரிகைகள்
இந்த மூன்று கூற்றுகளும் ஒரே விசயத்தை
சித்தரிக்க முயற்சிக்கின்றன. பள்ளிக்கூட நேரம் தவிர மற்ற நேரங்களில் பெற்றோரின்
தொழிலுக்கு உதவியவர்கள் சாதித்துள்ளார்கள்.
குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்
சட்டத்தில் கொண்டு வரப்போகும் திருத்தங்களுக்கும் இதையே பதிலாகச் சொல்கிறார்கள்
மோடியும் அவர் விசுவாசிகளும்.
அய்முகூ அரசு குழந்தைத் தொழிலாளர்
தடுப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டம் 1986 திருத்தம் கொண்டு வந்து 14 வயதுக்குட்ட
குழந்தைகள் எந்தவொரு தொழிலிலும் வேலை செய்வதையும் 14 முதல் 18 வயதுக்குட்டவர்கள் ஆபத்தான
தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதையும்
தடை செய்ய வேண்டும் என்றது. அய்முகூ சட்டங்களையே அதிவேகமாக அமல்படுத்திக்
கொண்டிருக்கும் மோடி அரசு குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் திருத்தம்
கொண்டு வருகிறது. அந்தத் திருத்தப்படி 14 முதல் 18 வயதுக்குட்டவர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதை,
14 வயதுக்குட்பட்டவர்களை எந்த வொரு தொழிலிலும்
பணிக்கு அமர்த்துவது குற்றம், ஆனால், ஆபத்து விளைவிக்காத குடும்பத் தொழில்களில் பெற்றோர் செய்யும்
தொழிலில், வயலில், காட்டில், வீட்டில் பெற்றோரோடு சேர்ந்து படிப்பு
பாதிக்காத வகையில், மாலை நேரத்தில், பள்ளி விடுமுறை நாட்களில் பணி செய்வது குற்றமாகாது என்கிறது.
அதேபோல்,
விளையாட்டு தொடர்பான தொழில்களில், பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் (சர்க்கஸ் தவிர) சினிமா,
நாடகம், விளம்பரம் ஒளி, ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் 14
வயதுக்குட்பட்டவர்களை அவர்களின் பள்ளிப் படிப்பு பாதிக்காத வகையில்
பணிக்கமர்த்துவது குற்றமாகாது என்கிறது.
சட்டத்தில் உள்ள விதிவிலக்கை விதியாக
யாரும் மாற்றி குழந்தைத் தொழிலாளர்களை
வேலை வாங்கிவிடக் கூடாது என்பற்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளும் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறார் மத்திய
தொழிலாளர் அமைச்சர். அதாவது, சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு மாறாக
குழந்தைகளை வேலை வாங்கும் பெற்றோர்களுக்கு, அது முதல் தடவையென்றால், மன்னிப்பு
வழங்கப்படும். இரண்டாவது தடவையும் அதே குற்றத்தைச் செய்தால் பத்தாயிரம் ரூபாய்
அபராதம் விதிக்கப்படும்.
பெற்றோரோ, குடும்பத்தாரோ அல்லாத மற்றவர்கள்
இந்தச் சட்டத்தின் விதிகளுக்கு மாறாக, குழந்தைத்
தொழிலாளர்களை வேலை வாங்கினால், முதல் தடவை என்றால், ஆறு மாதங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை
அல்லது ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் கூட தண்டனை
வழங்கப்படும். இரண்டாவது மூன்றாவது முறையும் அதே குற்றம் செய்தால் ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை.
உண்மையில், மோடி அரசு கொண்டுவரும் இந்தச் சட்டத் திருத்தம் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதை
சட்டபூர்வமாக்குவதற்கான ஓர் ஏற்பாடே அன்றி அதை ஒழிப்பதற்கான முயற்சி அல்ல.
இந்தியாவில் ஏற்கனவே பீடி, தீப்பெட்டி, பட்டாசு, விசைத்தறி, செங்கல் சூளை, பாய் முடைதல், சமுக்காளம் நெய்தல், கண்ணாடி தயாரித்தல், மாணிக்கக் கற்கள் வெட்டுதல் (ஜெம் கட்டிங்) கால்பந்து செய்தல் போன்ற
பல தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் தான் பெரும் எண்ணிக்கையில் வேலை
பார்க்கின்றனர். குடும்பம் குடும்பமாக இந்தத் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பள்ளி விட்டு வந்து பெற்றோருடன் சேர்ந்து பீடி
சுற்றுவதும் தீப்பெட்டி ஒட்டுவதும் அன்றாட நிகழ்வுகள்.
தாங்கள் செய்யும் தொழிலையே தங்கள்
பிள்ளைகளும் தொடர வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் விரும்புவது கிடையாது. அதிக
எண்ணிக்கையில் பீடிகள் சுற்றினால், தீப்பெட்டிகள் ஒட்டினால் கூடுதலாக
கொஞ்சம் காசு கிடைக்கும். வீட்டுச் செலவைச் சமாளிக்கலாம் என்பதனால் பல வீடுகளில்
வேறு வழியில்லாமல் படிக்கும் பிள்ளைகளை இதில் ஈடுபடுத்துகிறார்கள். படிப்புச்
செலவுக்காக பள்ளிக்கு போகும் முன்பு பேப்பர் போடுவது, பள்ளிக்கூடம் விட்டு வந்து சுண்டல், சுக்குத் தண்ணீர் விற்பது, மருத்துவ
மனைகளில், மளிகைக் கடைகளில் வேலை பார்ப்பது
என்பவை டீ விற்ற மோடி காலத்தில் இருந்து இன்று பூ கட்டும் முத்துவேணி காலம் வரை
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பிரச்சனை இந்நிலையை மாற்றுவதா? அல்லது அதைத் தொடரச் செய்வதா? இந்த நிலை தொடர யார் காரணம்
என்பதுதான்.
தினமணியில் ஒரு கருத்துப்படம். ‘என் அப்பன் குடிச்சுக் குடிச்சே செத்துட்டான். அந்த ஆளு போட்டு
அடிச்சதுலே என் அம்மா நோயாளி ஆயிட்டா. நான் வேலை பார்த்துதான் என்னையும் என்
தங்கையையும் என் அம்மாவையும் காப்பாத்தனும். ஆனா, நீங்க குழந்தைத் தொழிலாளர்... அது இது...ன்னு என்னல்லாமோ சொல்றீங்க.
இந்த நாட்லே என்னைப் போன்றவர்கள் உயிர் வாழக்கூட உரிமையில்லையா சார்?’ என்று ஒரு சிறுவன் ஓட்டல் முதலாளியிடம் கேட்கிறான்.
இது அப்பட்டமாக
குழந்தைத் தொழிலாளர் உழைப்பை நியாயப்படுத்துவது மட்டுமின்றி, குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பராமரிக்க வேண்டிய ஓர் அரசின்
பொறுப்பையும் கடமையையும் முழுவதுமாக மறைக்கப் பார்க்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
பிரிவு 24, எந்தவொரு தொழிற்சாலையிலும் சுரங்கத்திலும் ஆபத்தான தொழிலிலும் 14 வயதுக் குட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்கிறது. பிரிவு 23 குழந்தைகளை கடத்துதல், அவர்களை வைத்து
வியாபாரம் செய்தல், பிச்சை எடுக்க வைத்தல் ஆகியவற்றை
மட்டுமின்றி கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதையும் தடை செய்கிறது. குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக
நிர்ப்பந்தத்தின் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள்
உழைப்பை பெறுவதும் கட்டாய உழைப்புதான்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21ஏ 6 வயது முதல் 14 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு கட்டாய
இலவசக் கல்வி உரிமையை வலியுறுத்துகிறது.
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும்
சிறுவர்கள் அனைவருக்கும் பொதுவான உரிமைகள் குறித்த அய்க்கிய நாடுகள் சபையின்
சர்வதேச உடன்படிக்கையை 1992 டிசம்பர் 11ல் இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த உடன்படிக்கை, ஒரு குழந்தையின் உயிர் வாழும் உரிமை, குழந்தையின் வாழ்வு மற்றும் வளர்ச்சியை அரசு உத்தரவாதப்படுத்த
வேண்டும் என்கிறது. கல்வி பெறும் உரிமை, இலவச கட்டாய
ஆரம்பக் கல்வி, பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும்
ஆரோக்கியம், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றைப் பாதிக்கும் வேலைகளில் பங்கேற்பதில் இருந்தும்
பாதுகாக்கப்படும் உரிமை குழந்தைகளுக்கு உள்ளது.
குழந்தைகள் நலனுக்கு எதிரான எல்லா
சுரண்டல்களில் இருந்தும் அவர்களைக் காப்பது அரசின் கடமை என்கிறது.
இந்த உடன்படிக்கைக்கு நேரெதிராக,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக
குழந்தைகளை குலத் தொழில்களைச் செய்ய வைப்பதற்கும் குழந்தைகளை கொத்தடிமைகளாக மாற்றுவதற்கும் சட்டத்
திருத்தம் கொண்டு வந்து அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கான திட்டங்களை
தீட்டுகிறது மோடி அரசு. ‘நாம் நடைமுறை யதார்த்தத்தில் இருந்து
பார்க்க வேண்டும். நம் நாட்டின் இன்றைய சமூக பொருளாதார நிலைமைகளில்
குடும்பத்தாரின் தொழில்களை குழந்தைகள் ஆரம்பத்திலேயே கற்றுக் கொண்டால் நல்லது
தானே.
பெற்றோரும் உடன்பிறந்தோரும் மாமாக்களும் ஒன்று சேர்ந்து குடும்பத்திற்காகவே
வேலை செய்யும்போது அங்கு உழைப்பு, கூலி, சம்பளம் என்கிற கேள்விக்கே இடமில்லை அல்லவா?’ என்கிறார் தன் அம்மாவுக்கு வெங்காயம் விற்க உதவி, இன்று வெங்காயம்
விற்கப்போகாமல் தொழிலாளர் அமைச்சராக வீற்றிருக்கும் பண்டரு. பண்டருவின்
வாதத்தை ஆமோதித்து, ‘ குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தாவிட்டால் அவர்கள் படிப்பார்களா?
அல்லது தொலைக் காட்சி பார்ப்பார்களா?
...குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது
தவறா, சரியா என்பதே முடிவு பெறாத வாதம்தான்.
இருப்பினும் பள்ளி, பள்ளி இல்லாவிட்டால் தனிப் பயிற்சி, பிறகு தொலைக்காட்சி என்று
பெற்றோரிடமிருந்து அன்னியப்பட்டுவிடும் நிலையைக் காட்டிலும், பெற்றோருக்கு உதவியாக இருப்பது குழந்தை - பெற்றோர் உறவைப் பலப்படுத்த
உதவும் என்பதை மறந்து விடக்கூடாது’
என்கிறது தினமணி தலையங்கம்.
அப்பட்டமான வர்ணாசிரம குலத் தொழில்
முறைக்கு ஆதரவான பார்ப்பனிய கருத்து இது. குழந்தைகளை எந்தத் தொழிலிலும்
ஈடுபடுத்தக் கூடாது என்று பகிரங்கமாகச் சொல்லத் தயாராக இல்லை.
இதுதான் ஆபத்து.
சட்டம் அமலுக்கு வந்தால் பெண் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்வதற்கும் ஆண்
குழந்தைகள் குடும்பத் தொழிலை, குலத் தொழிலைச் செய்வதற்கும் நிர்பந்திக்கப்படுவார்கள்.
இன்றைய சூழலில் தனியார் மெட்ரிக்குலேசன்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் என்பதே மறந்துபோய்
உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை
குடும்பத் தொழிலைப் பார்க்கச் செய்வதன் மூலம் அவர்கள் விளையாட்டை மறப்பது
மட்டுமின்றி, பள்ளிப் பாடத்தையே மறந்திட வேண்டிய
நிலைதான் ஏற்படும். இது கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தைக் காலாவதியாக்கும்.
கட்டாயக் கல்வி என்பது கட்டாய உழைப்பாக மாறும்.
தொழிற்சாலைகள் குடும்பம்போல்
செயல்பட வேண்டும் என்று சொல்லும் மோடி வகையறாக்கள் குடும்பங்களை தொழிற்சாலைகளாக
மாற்றுவதன் மூலம் உழைப்பது உன் கடமை. கடமையைச்செய். பலன் எதிர்பாராதே என்று
சொல்லப் பார்க்கிறார்கள்.
மேக் இன் இந்தியா - இந்தியாவில்
தயாரிப்போம் என்று வெளிநாட்டு
முதலாளிகளையெல்லாம் இந்தியாவுக்கு வாருங்கள் எல்லா வசதிகளையும் செய்து
தருகிறேன் என்று கூவி அழைக்கும் மோடி இந்தியக் குழந்தைகளின் உழைப்பையும் மலிவு
விலையில் அவர்களுக்கு விற்கத்துடிக்கிறார். 2011ம் ஆண்டு கணக்குப் படி இந்தியாவில் 0 - 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 163 மில்லியன்.
அவர்களில் ஆண் குழந்தைகளில் 1000த்திற்கு 26 பேரும் பெண் குழந்தைகளில் 1000க்கு 18 பேரும் குழந்தைத் தொழிலாளர்கள்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2008ல் நடத்திய ஓர் ஆய்வு, மீரட் மற்றும் ஜலந்தரில் கால்பந்து தைக்கும் தொழிலில் மீரட்டில் உள்ள
நான்கு கிராமங்களைச் சேர்ந்த மொத்த குழந்தைகளில் 27% பேர் முழு நேரமாக வேலை செய்கிறார்கள் என்கிறது. அவர்களில் மூன்றில்
இரண்டு பகுதியினர் பெண் குழந்தைகள். இது
விளையாட்டு தொடர்பான பந்து தயாரிக்கும் தொழில் என்றாலும்கூட இது ஆபத்தில்லாத
தொழில் இல்லை. குறைவான வெளிச்சத்தில் பல
மணிநேரங்கள் ஓரக் கண்ணால் பார்த்து ஊசி குத்துவதால் கண் பார்வையை
இழக்கிறார்கள் குழந்தைகள்.
அடிக்கடி கையில் ஊசி குத்தி விடும். பந்து தைக்கப்
பயன்படும் நைலான் கயிறு கை அறுத்து காயங்கள் ஏற்படும். இது போல் பல ஆபத்தான
தொழில்களும் கூட குடும்பத் தொழில்கள் என்று சொல்லப்படுகின்றன. சமுக்காளம் நெய்யும்
தொழிலில் சாயம், இரசாயனம் கலவைகளால் தோல் அரிப்பு
ஏற்படும். நச்சுக்கள் உடலுக்குள் போகும். பஞ்சுகள் நுரையீரலை அடைத்துக் கொள்ளும்.
ஃபெரோசாபாத்தில் கண்ணாடித் தயாரிப்பை கிராமங்களில் அவுட்சோர்சிங் முறையில்
செய்கிறார்கள். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தந்தை, குழந்தைகள் என்று குடும்பமே
உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள்.
குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதல்
உதவிக்குக் கூட வழி கிடையாது. தீக்காயம் பட்டால் கோல்கேட் பற்பசையைத்
தடவுகிறார்கள் என்கிறார் ஆவணப்படத் தயாரிப்பாளர் மீரா தேவன். ஜ÷டாய் எனப்படும் வளையல் தயாரிப்பிலும் குழந்தைகள்தான்
ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெரியவர்கள் வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறார்கள்.
வளையல் செய்யும்போது வரும் நச்சு
தீப்பொறிகளையும் சேர்த்துதான் அவர்கள் சுவாசிக்கிறார்கள்.
காலையில் 4 மணிக்கே எழுந்து பள்ளி சென்று வந்து இரவு 10 மணி வரை வேலை பார்க்கிறார்கள் குழந்தைகள்.
இப்படிப்பட்ட மோசமான தொழில்களில்
குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பதற்கு மாறாக, ஆபத்தில்லாத குடும்பத் தொழில்களில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது
குற்றமில்லை என்று கூறி கால்பந்து, கண்ணாடி, வளையல் தயாரிக்கும் முதலாளிகள்
சுதந்திரமாக குழந்தைகளின் உழைப்பைச் சுரண்ட சட்டப் பாதுகாப்பு வழங்குகிறது
மோடி அரசு. தொழிலாளர் அமைச்சர் பண்டரூ, அடுத்த சட்டத்
திருத்தம் தொழிற்சாலைகள் சட்டத்தில்தான்
என்கிறார்.
50 பேர் இருந்தால்தான் தொழிற்சாலை
சட்டத்திற்குள் வரும் என்று திருத்தம் வரப்போகிறது. இதன் மூலம் ஆபத்தான தொழில்கள்
உட்பட அனைத்துத் தொழில்களிலும் 49 பேர் வரை குழந்தைகளை வேலைக்கு
அமர்த்திக் கொண்டுகூட கொள்ளை லாபம்
பார்ப்பார்கள். தொழிற்சாலைச் சட்டத்திற்குள் வராததால் அதிகாரிகள் பெயருக்குக்கூட
முதலாளிகளைத் தொந்தரவு கூட செய்ய வரமாட்டார்கள்.
பள்ளிப் பருவத்தில் துள்ளி விளையாட
வேண்டிய குழந்தைகளின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டு பன்னாட்டு முதலாளிகள்
கொள்ளையடிக்க பட்டுக் கம்பளம் விரிக்கும் மோடி ஆட்சியின் மற்றுமொரு மக்கள் விரோத
நடவடிக்கையே இந்தச் சட்டத் திருத்தம்.