COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, June 16, 2015

மோ(ச)டி அரசின் மூன்று சமூக நலத் திட்டங்கள்: 
ஆடு நனைவதற்காக ஓநாய் அழாது

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி  ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா ஆகிய திட்டங்கள் பற்றி அமிதாப்பச்சன் அசத்தல் விளம்பரம் செய்கிறார். தேச நலனுக்காக அமிதாப்பச்சன் தன்னுடைய பொன்னான நேரத்தில் இரண்டு நாட்கள் செலவழித்து மோடி அரசின் சமூக நலத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு பைசா கூட வாங்காமல் கொளுத்தும் வெயிலில் 10 மணி நேரம் நடித்துக் கொடுத்தாராம்.   (மேகி விளம்பரத்தில் நடித்ததற்கு வழக்கு வந்தால் வேறெப்படி சமாளிப்பது?)
ஜன் தன் திட்டம் (மக்கள் நிதித் திட்டம்), சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டம் (செல்வ மகள் சேமிப்புத் திட்டம்), அடல் பென்சன் யோஜனா (அடல் ஓய்வூதியத் திட்டம்) ஆகிய மூன்றும் மோடியின் முத்தான மூன்று திட்டங்கள் என்று தமிழகத்தின் தமிழிசை சவுந்தரராஜன் பெருமையாகப் பேசுகிறார். மன்மோகன்சிங் அரசின் உங்கள் கையில் உங்கள் பணம் திட்டத்தை பெயரை மாற்றி மக்கள் நிதித் திட்டம் என்று பெயர் வைத்தார் மோடி.
 நாட்டில் உள்ள 83 சதம் மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமலேயே வாழ்க்கை நடத்துகிறார்கள், பின்னர் நாடு எப்படி முன்னேறும், எல்லாருக்கும் வங்கி கணக்கு என்று சொல்லி 2014 ஆகஸ்டு 15 அன்று அனைவருக்கும் வங்கிக் கணக்குத் திட்டத்தைத் துவக்கி வைத்தார் மோடி. வங்கிக் கணக்கு துவக்க அய்ந்து ரூபாய் கூடத் தேவையில்லை, ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதும்  என்றார்.
நீங்கள் வங்கிக் கணக்குத் துவக்கி விட்டால், உங்களுக்கான அரசாங்கத்தின் மானியங்கள், பண உதவிகள் அனைத்தும் உங்கள் கணக்கிற்கு வந்து விடும், நீங்கள் ரூபே கார்டை வைத்துக் கொண்டு வங்கிக்குச் செல்லாமலேயே பணத்தை எடுத்துக் கொள்ள முடியும், உங்கள் கையில் உங்கள் பணம் நேரடியாக என்று மன்மோகன் சொன்னதையே கொஞ்சம் மாற்றி விளம்பரம் செய்தார்கள். வங்கிக் கணக்கின் மூலம் உங்கள் தொழிலுக்கு, விவசாயத்திற்கு கடன் பெற முடியும், காப்பீடு பெற முடியும், ஓய்வூதியம் பெற முடியும், உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்த்தப் போகிறது என்றார்கள். 
கிராமப்புற, நகர்புறக் குடும்பங்கள் நிதிச் சேவைகளை எளிதாகவும் உலகலாவிய அளவிலும் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும், வங்கி சேவைப் பயன்பாட்டில் இருந்து மக்களை விலக்கி வைப்பதானது, தற்கால நிதி அமைப்பின் வாயிலாக அவர்கள் பெறக் கூடிய பயன்கள் எல்லாவற்றிலும இருந்து அவர்களை விலக்கி வைப்பதாகும் என்று இந்தத் திட்டத்தை துவக்கி வைக்கும் போது மோடி சொன்னார்.
2015 ஜனவரி 26ஆம் தேதிக்குள் 7.5 கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2015 ஜனவரி 17ம் தேதிக்குள்ளாகவே இந்தத் திட்டத்தின் கீழ் 11 கோடியே 50 லட்சம் வங்கிக் கணக்குள் துவக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்து விட்டோம் என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொண்டார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. எல்லாரையும் வங்கிக் கணக்குகளைத் துவக்கச் செய்ததைத் தொடர்ந்து, மேலே சொல்லப்பட்ட மூன்று சமூகப் பாதுகாப்பிற்கான காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை மோடி கொல்கத்தாவில் துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி நம் வங்கிக் கணக்கில் இருந்து காப்பீடு நிறுவனத்திற்கு நேரடியாகவே (ஹன்ற்ர்-க்ங்க்ஷண்ற் ச்ஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்)சந்தாத் தொகை  செலுத்தப்பட்டுவிடும். நாம் கஷ்டப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திற்குப் போய் பணம் கட்ட வேண்டியதில்லையாம்.
அமிதாப்பின் அசத்தல் விளம்பரம் சொல்கிறது. ஆண்டுக்கு வெறும் 12 ரூபாய். அதாவது மாதத்திற்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து காப்பீடு சந்தா செலுத்தினால் போதும். உங்களுக்கு விபத்தினால் முழுமையான ஊனமோ மரணமோ ஏற்பட்டால் உங்கள் குடும்பத்திற்கு சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டத்தின் மூலம்  ரூ.2 லட்சமும் பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சமும் கிடைக்கும். இந்தத்         திட்டத்தில் ஆதார் எண்ணும் வங்கிக் கணக்கும் உள்ள 18 வயது முதல் 70 வயது வரை உள்ள எவரும் சேர்ந்து கொள்ளலாம். மற்றொரு திட்டமான ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 சந்தாவாகச் செலுத்த வேண்டும். இது ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.இறந்தால் குடும்பத்திற்கு 2 லட்சம் கிடைக்கும். ஆதார் எண்ணும் வங்கிக் கணக்கும் வைத்துள்ள 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம்.
அடுத்து அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள அடல் பென்சன் யோஜனா என்கிற ஓய்வூதியத் திட்டம். இதில் 60 வயதிற்குப் பிறகு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நீங்கள் செலுத்தும் சந்தாத் தொகைக்கு அதாவது பிரிமியம் தொகைக்கு ஏற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.18 வயது முதல் 40 வயது வரை இதில் சேரலாம்.18 வயதில் சேர்ந்து உங்களுக்கு 60 வயதுக்குப் பிறகு 5,000 ரூபாய் பென்சன் வேண்டும் என்றால், மாதாமாதம் ரூ. 210 பிரிமியமாக 42 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் 40 வயதில் சேர்ந்தால் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெற ரூ.1,454 மாதா மாதம் பிரிமியமாக 20 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டும்.
மோடியின் மோசடிக் கணக்கு
இந்தத் திட்டங்களில் சேர்ந்தவர்கள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை நேரடியாக நம் வங்கிக் கணக்கில் இருந்து காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்டு விடும். நம் வங்கிக் கணக்கில் அதற்கேற்ப பணம் இருப்பு இருந்து கொண்டிருக்க வேண்டும்.முதல் இரண்டு காப்பீட்டுத் திட்டங்களும் ஓவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.அதாவது ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் அடுத்த மே 31 வரைதான் காப்பீடு செய்யப்படும்.அந்தக் காலக்கட்டத்திற்குள் ஏற்படும் மரணம் அல்லது விபத்துக்குத்தான் பணம் கிடைக்கும்.தொடர்ந்து சந்தா பணம் நம் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதிக பட்ச காப்பீட்டுத் தொகையே ரூ.2 லட்சம்தான்.காயத்திற்குத் தகுந்தமாதிரி விபத்துக்கு ஏற்ப பணம் குறைக்கப்படும்.ஓர் உயிரின் அதிக பட்ச விலை ரூ.2 லட்சம்தான் என்று மோடி அரசு சொல்கிறது.
 இந்த திட்டத்தில் முதிர்வுப் பயன்கள் (ஙஹற்ன்ழ்ண்ற்ஹ் ஆங்ய்ங்ச்ண்ற்ள்)எதுவும் கிடையாது.விபத்தோ மரணமோ நடக்கவில்லை என்றால் கட்டிய பணத்தை நமக்கு வட்டி போட்டெல்லாம் தர மாட்டார்கள். அடல் பிகாரி வாய்பாய் பெயரில்  உள்ள அடல் ஓய்வூதியத் திட்டத்தில் பிரிமியம் (சந்தா) தொகை 6 மாதங் கள் செலுத்தவில்லை என்றால் காப்பீடு கணக்கு முடக்கப்படும். 12 மாதங்கள் கட்டவில்லை என்றால் கணக்கு செயலிழந்து விடும். அப்புறம் அபராதம் கட்டித்தான் தொடர வேண்டும். 24 மாதங்கள் கட்டவில்லை என்றால், கணக்கே முடிக்கப்பட்டு விடும்.கட்டிய பணமெல்லாம் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிக்கு.
எந்தக் காப்பீட்டு நிறுவனத்தில் சேர்வது என்பதை அந்தந்த வங்கிகளே அவ்வப்போது தீர்மானிக்கும். அது பற்றி அரசாங்கம் அவ்வப் போது முடிவு செய்யும். அது தேசிய காப்பீடு நிறுவனமாகவோ அல்லது தனியார் காப்பீட்டு நிறுவனமாகவோ இருக்கும். எந்தக் காப்பீட்டு நிறுவனத்தில் பணம் போடலாம் என்று நாம் முடிவு செய்ய முடியாது.  காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதா வேண்டாமா என்றும் நாம் தீர் மானிக்க முடியாது. ஆதார் அட்டையை, வங்கிக் கணக்கை எல்லாவற்றிற்கும்  கட்டாயப்படுத்திக் கேட்பதுபோல் காப்பீடும் நம் விருப்பம் இல்லாமலேயே நேரடியாக வங்கியில் இருந்து பணம் செலுத்தப்படுவதன் மூலம் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறது. 
உண்மையில்  இது உங்கள் கையில் உங்கள் பணம் திட்டம் அல்ல. மக்கள் பணத்தை முதலாளிகளின் கைக்கு மாற்றும் மோ(ச)டித் திட்டம். இப்போதே 31.50 கோடிக்கு மேல் வங்கிச் சேமிப்புக் கணக்குகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இன்னும் 10 - 20 கோடிக்கு மேல் வங்கிக்கணக்குகள் கண்டிப்பாக துவக்கப்படும். 40 கோடி வங்கிக் கணக்குகள் என்று வைத்துக் கொண்டால் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் மாதத்திற்கு 1 ரூபாய் வீதம் 40 கோடி ரூபாய். ஆண்டுக்கு 480 கோடி ரூபாய் கார்ப்பரேட் காப்பீட்டு கம்பெனி முதலாளிகளுக்கு நம் பணம் கை மாற்றப்படப் போகிறது. ஜோதி பீமா யோஜனா மூலம் ஆண்டுக்கு 330 ரூபாய் வீதம் 40 கோடி வங்கிக் கணக்குகளில் இருந்து ஆண்டுக்கு 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவன முதலாளிகள் எந்தச் செலவும் செய்யாமல் கஷ்டப்படாமல் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் இருந்து அவர்கள் விபத்து மற்றும் மரணங்களுக்கு கொடுக்கப் போகும் தொகை சில லட்சங்கள் மட்டுமே.
உதாரணத்திற்கு ஆண்டுக்கு 10,000 விபத்து மற்றும் மரணங்கள் என்றும் காப்பீட்டு முழுத் தொகையான ரூ.2 லட்சத்தையும் (முழு காப் பீட்டுத் தொகையையும் எந்தவொரு நிறுவனமும் எப்போதும் கொடுப்பது கிடையாது) கொடுக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் 200 கோடி ரூபாய்தான் கொடுக்கப் போகிறார்கள். இரண்டு காப்பீட்டுத் திட்டங்களிலும் சேர்த்து சுமார் ரூ.13480 கோடி ஒவ்வொரு ஆண்டும் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள் அதானி அம்பானி வகையாறாக்கள்.வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை உயர உயர இந்தக் கோடிகளின் எண்ணிக்கையும் உயரும்.
காப்பீட்டில் அடிக்கப் போகும் கொள்ளை போதாது என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்குப் பென்சன் என்று கார்ப்பரேட் முதலாளிகள் பல ஆயிரக் கணக்கில் பணம் பார்க்க வழி செய்கிறது மோடி அரசு. 60 வயதிற்கு மேல் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெற இளைஞர் ஒருவர் 18 வயதில் இருந்து 42 ஆண்டுகள் மாதம் ரூ.210 கட்ட வேண்டும். 18 வயதுடைய ஒரு தொழிலாளியிடம் இருந்து மட்டும் ரூ.1,05,840. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2012ம் ஆண்டைய கணக்கின் படி அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை 33 கோடி. அது இப்போது இரண்டு மடங்காகக் கூட ஆகியிருக்கும்.எல்லாரையும் ஏதோ ஒரு வகையில் வங்கிக் கணக்கு துவங்கச் சொல்கிறது மோடி அரசு.ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குக் கூட வங்கிக் கணக்கு கண்டிப்பாக துவங்கப்பட வேண்டும் என்று புதிய சாலைப் பாதுகாப்புச் சட்டம் சொல்கிறது. யாரும் 1,000 ரூபாய் 2,000 ரூபாய் பென்சன் திட்டத்தை தேர்வு செய்ய மாட்டார்கள்.ஏறிக் கொண்டிருக்கும் விலை வாசியில் 5,000 ரூபாய் பென்சனே பற்றாது. அப்படி இருக்கும்போது எல்லா வயதினரும் 5,000 ரூபாய் பென்சன் திட்டத்தில்தான் இணைய விரும்புவார்கள். அப்படியென்றால் 40 வயதுடைய ஒருவர் மாதம் ரூ.1,454 வீதம் 20 ஆண்டுகளுக்குக் கட்ட வேண்டும். 40 வயதுடைய ஒருவர் கட்டப் போகும் மொத்தத் தொகை ரூ.3,48,960. 35 வயதுடையவர் 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.902 வீதம்  மொத்தம் ரூ.2,70,600 கட்டுவார். இந்தத் திட்டத்தில் சேர்ந்த எவரும் 60 வயதிற்கு முன் அதிலிருந்து வெளியில் வர முடியாது. 
நம் வங்கிக் கணக்கில் மாதச் சந்தாவிற்கான தொகை இருப்பு இல்லை என்றால், பின்னர் நம் கணக்கில் பணம் வரும் போது  தாமதமாகக் கட்டுவதற்கும் சேர்த்து அபராதத்துடன் அந்தத் தொகையை வங்கி எடுத்து பென்சன் திட்டத்திற்குக் கொடுத்து விடும். 100 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு ஒரு ரூபாய் அபராதம். ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதியத்திட்டத்தில் உள்ளவர்களை அப்படியே அடல் ஓய்வூதியத்         திட்டத்திற்கு மாற்றி விடுவார்களாம். அரசாங்கம் 50 சதவீதம் பங்குத் தொகை போடுமாம்.ஆனால், அது 1,000 ரூபாயோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருக்க வேண்டுமாம். அதுவும் 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான்.01.06.2015ல் இருந்து 31.12.2015க்குள் சேர்பவர்களுக்கு மட்டும்தான் அரசின் பங்குத் தொகை உண்டு. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி பண வீக்கம் இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது 40 ஆண்டுகள் கழித்து பெறப் போகும் ரூ.5,000த்தின் மதிப்பு வெறும் ரூ.1,000 கூட இருக்காது. இது கிடைக்க வேண்டும் என்றாலும் தொடர்ந்து திட்டத்தில் அடிமையாக பூட்டப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி ஏழைத் தொழிலாளர்களிடம், பென்சன் தருகிறோம் என்று பணத்தை வலுக் கட்டாயமாகப் பிடுங்கி, அப்படி வரும் பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் முதலாளிகள் முதலீடு செய்வதற்கு கொடுக்கப்  போகிறது மோடி அரசு.
நடுத்தர மக்கள் பணத்தையும் பறிக்க செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
இந்தத் திட்டப்படி 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோரோ, பாதுகாவலரோ வங்கி அல்லது அஞ்சலகத்தில் ரூ.1,000 செலுத்தி கணக்கு துவங்க வேண்டும். இந்தக் கணக்கில் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்த பட்சம் ரூ.1000 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை வைப்புத் தொகையாகச் செலுத்தலாம். அப்படி 14 ஆண்டுகள் அல்லது பெண்ணிற்கு திருமணம் ஆகும் வரை செலுத்த வேண்டும்.அந்தத் தொகைக்கு ஆண்டு 9.1 வட்டி வழங்கப்படும்.வருமான வரி விலக்கு உண்டு. 21 ஆண்டுகள் கழித்து முதிர்வுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பெண் 18 வயதை அடையும் போது கல்வி அல்லது திருமணச் செலவிற்காக அதில் 50 சதவீதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மேல் இந்தத் திட்டத்தில் சேர்க்க முடியாது.இரட்டை குழந்தைகள் என்றால் மட்டும் மூன்றாவது குழந்தை திட்டத்தில் சேரலாம். என்னவொரு அற்புதமான திட்டம். நாட்டில் 85 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க வகையில்லாமல் இருக்கும் போது மாதம் 1000 ரூபாய் பணம் சேமிக்க வேண்டுமாம். ஏழைத் தொழிலாளர்களிடம் பணம் பறிக்க காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்கள் என்றால், நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் பிடுங்க செல்வ மகள் சேமிப்புத் திட்டம். இந்த மொத்த விசயத்திலும் ஓர் ஆணாதிக்க தன்மையும் இருக்கிறது.
எல்லாரையும் வங்கிக் கணக்கு துவங்கச் செய்து, அதில் அவர்களின் சொற்ப பணத்தையும் போடச் செய்து, அந்தப் பணத்தையெல்லாம் அவர்களின் அனுமதியில்லாமலேயே கட்டாயப்படுத்தி கபளீகரம் செய்து கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லா நிரப்புவதற்கு மன்மோகன், சிதம்பரம் வகையாறாக்களைவிட மோடி, ஜெட்லி கோஷ்டிகள் போடும் அதி வேக மோசடி திட்டங்கள்தான் இவை.  ஜன் தன் யோஜனா மக்களுக்கான நேரடி நிதி உதவித் திட்டம் இல்லை. இந்திய உழைக்கும் மக்களின் கொஞ்ச நஞ்சப் பணத்தையும் அவர்களிடம் இருந்து  பிடுங்கி அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நேரடியாகக் கொடுப்பதற்கான திட்டங்கள்தான் மோடியின் இந்த சமூகப் பாதுகாப்பு திட்டங்கள். சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் என்றால் அதில் அரசின் பங்குதான் அதிகமாக இருக்க வேண்டும்.ஆனால், இந்தத் திட்டங்களில் அரசின் பங்கே இல்லை.

வங்கிக் கணக்கு கட்டாயம் அதற்கு ஆதார் கட்டாயம் என்று சொல்ல மக்களும் கொளுத்தும் வெயிலில் ஆதார் அட்டைக்காக நாட்கணக்கில் காத்துக் கிடந்து, நெருக்கடியில் சிக்கிச் சீரழியச் செய்து வங்கிக் கணக்கைத் துவங்கி வைப்பு நிதி போட்ட பின்னர், வக்கணையாக அந்தப் பணத்தை வாரி எடுத்துக் கொண்டு போவார்களாம் கார்ப்பரேட் முதலாளிகள். அய்ந்து பைசா போடாமல் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னதன் ரகசியம் இதுதான். எல்லாரும் வங்கிக் கணக்கு வைத்து ஏற்றம் பெறலாம், நேரடியாக நிதி உதவி பெற்று நிம்மதியாக செலவு செய்யலாம் என்று மோடி சொல்வதன் மர்மம் இதுவே. ஆடு நனைவதற்காக ஓநாய் அழுமா?

Search