COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 16, 2012

களம்
கூடங்குளம் சென்ற
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா கைது

அக்டோபர் 1 2012 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா ராதாபுரத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் மாலெ கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, தமிழ்மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தோழர் திபங்கர் பட்டாச்சார்யா தலைமையில் சென்ற குழுவில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் மற்றும் கோவை சந்திரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். கைது செய்யப்பட்ட தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களை சந்திக்க முடியாமல், அவர்களுடன் ஊடாட முடியாமல் ஏன் குடிமக்கள் தடுக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற கைது நடவடிக்கைகள் மக்கள் எதிர்ப்புக்களை பலவந்தமாக நெறிக்கப் பார்க்கும் மத்திய மாநில அரசுகளின் கொடூரமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றன என்றார்.

இந்த கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலைச் செய்ய வேண்டும் என்று கோரியும், சர்வாதிகார ஜெயலலிதா அரசு ஒடுக்குமுறையை, ஜனநாயக படுகொலையை கண்டித்தும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்தப்பட்டன.
கூடங்குளம் நோக்கி பொதுச் செயலாளர் தலைமையில் நெல்லையில் இருந்து புறப்படும் பேரணிக்காக நெல்லையில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் தலைமையில் திரண்டிருந்த தோழர்கள் அங்கேயே கைது செய்யப்பட்டனர். மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் தேன்மொழி, மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் தலைமையிலான குழு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் நோக்கி பொதுச் செயலாளர் தலைமையில் நெல்லையில் இருந்து புறப்படும் பேரணிக்காக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட தோழர்கள் அந்தோணிமுத்து, மேரி ஸ்டெல்லா, சுசீலா உள்ளிட்ட குமரி மாவட்டத் தோழர்கள் அனைவரும் குமரி மாவட்ட எல்லையிலேயே கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு தோழர் மோகன் தலைமை தாங்கினார். கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் மலர்விழி, ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் பழனிவேல், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் முனுசாமி, கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் தேவகி, நிர்வாகிகள் தோழர்கள் லில்லி, விஜயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் கமிட்டி உறுப்பினர் அய்யன்துரை தலைமை தாங்கினார். மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், தோழர்கள் ராசிபுரம் கணேசன், ஈஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாநில கமிட்டி உறுப்பினர் வி.மு.வளத்தான் கண்டன உரையாற்றினர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் கண்டன உரையாற்றினர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற பேரணி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான விவசாய தொழிலாளர்கள் பங்கேற்றனர். கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.இளங்கோவன், டி.கே.எஸ்.ஜனார்ந்தனன், ரமேஷ்வர்பிரசாத், மாவட்ட நிர்வாகிகள் தோழர் கண்ணையன், தோழர் குருசாமி கண்டன உரையாற்றினர்.  
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: புயலுக்குப் பின்னே புயல்
அய்ந்தாண்டு கால கடுமையான போராட்டத்தின் ஊடே, தமிழகத்தின் தொழிலாளர் வர்க்க இயக்கத்துக்கு சில முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை ஈட்டித் தந்த பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கம் கோவையில் 02.10.2012 அன்று பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடத்தியது. 1000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய மாலெ கட்சி பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா நவதாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்திய முதல் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை நினைவுகூர்ந்து, 2013, பிப்ரவரி 20, 21 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை மக்கள் விரோத அய்முகூ அரசாங்கத்துக்கு தொழிலாளர் வர்க்கம் திருப்பித் தரும் வலுவான தாக்குதலாக மாற்ற வேண்டும் என்றும் அதை தொழிலாளர்களின் வேலை நிறுத்தமாக மட்டும் இல்லாமல், நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவினரின் வேலைநிறுத்தமாக மாற்ற வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, போராடுகிற தொழிலாளர் வர்க்கம் ஆட்சியாளர்களின் எந்தத் தாக்குதலுக்கும் அடிபணியாது என்றும், 2013, பிப்ரவரி 20, 21 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தன்று தமிழ்நாட்டை ஸ்தம்பிக்க வைப்பதன் மூலம் தமிழக ஆட்சியாளர்களுக்கு பதிலடி தர வேண்டும் என்றும்  அறைகூவல் விடுத்தார். மாநில செயலாளர் பாலசுந்தரம், பிரிக்கால் தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
2007ல் போராட்டம் துவக்கக் கட்டத்தில் இருந்தபோதே மாலெ கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் நிதியளித்த பிரிக்கால் தொழிலாளர்கள், இந்த அய்ந்தாண்டு கால போராட்டத்துக்குப் பிறகு, 2013ல் வரவிருக்கிற மாலெ கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு ரூ.1.5 லட்சம் நிதியளித்துள்ளனர். இந்த நிதியை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவிடம் பிரிக்கால் தொழிலாளர்கள் அளித்தனர்.
ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார், மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜானகிராமன், பிரிக்கால் ஒற்றுமைச் சங்க நிர்வாகிகள் சாமிநாதன், விஜி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
காப்பீட்டு துறையை அந்நியர் கொள்ளையிட அனுமதியோம்!
ஓய்வூதிய நிதியை சந்தை சூறையாட அனுமதியோம்!
மன்மோகன் காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதனம் 49% அனுமதிக்கவும், ஓய்வூதிய நிதியை அந்நிய முதலாளிகளுக்கு திறந்துவிட்டு பங்குச்சந்தை சூதாட்டத்திற்கு விடவும் எடுத்துள்ள முடிவுகளை திரும்பப் பெறக் கோரி ஏஅய்சிசிடியு அக்டோபர் 5 முதல் 12 வரை எதிர்ப்பு வாரம் அனுசரிக்கிறது. கோவையில் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரிக்கால் ஆலைவாயிலில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் குமாரசாமி ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.
07.10.2012 அன்று கேஸ் விலை ரூ.12.50 உயர்வை கண்டித்தும், காப்பீட்டில் அந்நிய மூலதன நுழைவைக் கண்டித்தும், ஓய்வூதிய நிதியை அந்நிய முதலாளிகளுக்கு சூதாட்டம் நடத்திட திறந்து விடுவதைக் கண்டித்தும் அம்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆர்ப்பாட்டம் நடத்தியது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் மோகன் தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக அகில இந்திய துணைத்தலைவர் தோழர் பாரதி, மாலெ கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் ஜவகர் கண்டன உரையாற்றினர். மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர் முனுசாமி, தோழர் ஜீவானந்தம், தோழர் லில்லி, தோழர் வீரப்பன், மற்றும் அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி மற்றும் புரட்சிகர இளைஞர் கழக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சுஜாதா, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Search