COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 16, 2012

சிறப்புக் கட்டுரை
பணம் மரத்தில் காய்க்கும்
காம்ரேட்
டீசல் விலையை உயர்த்தலாமா சமையல் எரிவாயு மான்யத்தை வெட்டலாமா எனக் கேள்விகள் எழுந்தபோது மன்மோகன் அடிகளார் பணம் மரத்தில் காய்க்காது என இந்திய மக்களுக்கு ஞானோபதேசம் செய்தார். கபட சந்நியாசிகள் மக்களுக்கு உபதேசம் செய்யும் போதெல்லாம், மன்னர்களின் ஆள்வோர் களின் கொள்ளைகள் தொடர வழி செய்வார்கள். சோனியா குடும்ப உறுப்பினர் ஒருவர் மரத்தில், பணம் காய்த்ததை இப்போது பார்ப்போம்.


ராபர்ட் வதேரா: சிறு பின்கதைச் சுருக்கம்டெல்லியைச் சேர்ந்த ராபர்ட் வதேரா ராஜீவ் - சோனியா ஆகியோரின் மகளான பிரியங்காவை 1997ல் திருமணம் செய்து கொண்டார். அந்த வருடம் அவர் ஆர்டெக்ஸ் நிறுவனத்தைத் துவக்கினார். நகைகள் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியாளராகவே தமது வியாபார உலக பயணத்தைத் துவங்கினார். ராபர்ட் வதேரா, தமது சகோதரர் மற்றும் தகப்பனார் சோனியா குடும்பத் தொடர்பு பற்றி பேசி தவறாக ஆதாயம் தேடுவதால் அவர்களோடு தமக்குள்ள தொடர்பை துண்டித்துக் கொள்வதாகச் சொன்னார். 2002ல் ராபர்ட் வதேரா, தமக்கும் கூடா நட்பு முதலாளித்துவத்திற்கும், (க்ரோனி கேப்பிட்டலிசம்) எந்தத் தொடர்பும் இல்லையெனப் பிரகடனம் செய்தார். (அவரது தந்தையார் அவதூறு வழக்கு போடுவதாகச் சொன்னது என்ன ஆனது எனத் தெரியவில்லை). 1997 - 2002 வரையிலும் சரி, 2002 - 2007 வரையிலும் சரி, ராபர்ட் வதேரா கதையில் சிறப்புத் திருப்பங்கள் எதுவும் நிகழவில்லை.
2007ல் கதை சூடு பிடிக்கிறது
ராபர்ட் வதேரா சூரிய உதயம் நோக்கிச் சென்றார். ஆம், ரியல் எஸ்டேட்டில் நுழைந்தார். அதற்குப் பிறகு என்ன? உழைப்பால் ‘உத்தமர்கள்’ உயரும், அதே முதலாளித்துவக் கதைதான்! 7700 இந்தியர்கள் தமது அயராத உழைப்பால் ரூ.45,75000 கோடி சொத்து சேர்த்தனர். முகேஷ் அம்பானி, டாட்டா, மிட்டல், ஹுண்டாய், பிரிக்கால் டிவிஎஸ் முதலாளிகள் தினமும் வியர்வை சிந்தி பாடுபடுகின்றார்கள்! ஏறத்தாழ 80 கோடி நகர்ப்புற கிராமப்புற தொழிலாளர்கள், உழைக்கும் விவசாயிகள், வெள்ளுடை பணியாளர்கள், கருத்தால் உழைப்பவர்கள், வேலை ஏதும் செய்யாமல் சோம்பேறிகளாகத் திரிந்து தாமே கஷ்டத்தைத் தேடிக் கொள்கிறார்கள்!
ராபர்ட் வதேரா விசயத்தில் இந்தக் கதை எப்படி நடந்துள்ளது?
ராபர்ட் வதேரா நடத்துகிற நிறுவனங்களில் 01.11.2007 முதல் 19.06.2008 வரை செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.50,00,000. அய்முகூ அரசாங்கம் 1, 2004ல் பதவி ஏற்றது. அய்முகூ அரசாங்கம் 2, 2009ல் திரும்பவும் பதவிக்கு வந்தது.
புளூ பிரீஸ் நிறுவனத்தில் மட்டும் இருந்த பிரியங்கா, 2008ல் அதிலிருந்து வெளியேறி விடுகிறார். 2008ல் ரூ.7.95 கோடி சொத்துக்கள் 2009ல் 17.18 கோடியானது. 2010ல் ரூ.60.53 கோடியாக 350% உயர்ந்தது. 09.10.2012 அன்று டைம்ஸ் ஆப் இண்டியா நாளேடு ரூ.50 லட்சம் ரூ.300 கோடியாக ஆகிவிட்டதாகச் சொல்கிறது.
கேஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கள்
டிஎல்எப் வதேரா மறுப்புகள்
தொடரும் கேள்விகள்

ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை நடத்திய அர்விந்த் கெஜ்ரிவால், ராபர்ட் வதேரா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய அரசாங்கம் ஆகியவற்றை குஷ்பால் சிங்கின் டிஎல்எப் நிறுவனத்துக்கு சாதகமாக முடிவெடுக்க வைத்தார் என்றும், டிஎல்எப் பல முறைகேடுகளில் ஈடுபட்டது என்றும், ராபர்ட் வதேரா பின்பலம் டிஎல்எப் நிறுவனத்துக்கு இருந்தது என்றும், அதற்கு கைமாறாகத்தான் எந்த வியாபாரமும் செய்யாமல் எந்தத் தொழில் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ராபர்ட் வதேரா சொத்துக்கள் ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.300 கோடியாக உயர்ந்தன என்றும் குற்றம் சாட்டுகிறார். ராபர்ட் வதேரா தமது கடுமையான உழைப்பாலும், டிஎல்எப் தலைவர் குஷ்பால் சிங் போன்றோரின் சிறிய உதவியாலும்தான் தாம் முன்னேறியதாகவும், தம் உதவி அவர்களுக்குத் தேவையில்லை என்றும் சொல்கிறார். டிஎல்எப், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சத்தியம் செய்து சொல்கிறது. எது எப்படி இருப்பினும் 2010ல் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமாக 29 முக்கிய சொத்துக்கள் இருந்தன.
 புதுடில்லியில் உள்ள  ஹில்டன் கார்டன் ஹோட்டலை வைத்திருக்கும் சாகெத் கோர்ட்யார்ட் ஹாஸ்பிட்டாலிட்டியின் 50% பங்குகள் ரூ.31.78 கோடி மதிப்புடையவை.
 டிஎல்எப் அராலியாஸ் காம்ளக்சில் பி 1115 எண்ணுடைய ரூ.89.41 லட்சம் மதிப்புடைய பென்ட் ஹவுஸ்.
 டிஎல்எப் மக்னோலியாவில் ரூ.5.2 கோடி மதிப்புடைய 7 அடுக்ககங்கள்.
 டிஎல்எப் கேப்பிட்டல் கிரீன்சில் ரூ.5.06 கோடி மதிப்புடைய அடுக்ககங்கள்.
 டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்புடைய நிலம்.
 ராஜஸ்தான் மாநில பிகானிரில் 160.82 ஏக்கர் நிலம் ரூ.1.02 கோடி மதிப்பில் வாங்கப்பட்டது. அதே போல ஏக்கர் கணக்கில் விவரம் இல்லாத ரூ.2.43 கோடி மதிப்பு நிலம்.
 டில்லியின் விளிம்பில் மனேசரில் ரூ.15.38 கோடி மதிப்புடைய நிலம்.
 பல்வாவில் ரூ.42லட்சம் மதிப்புடைய நிலம், குர்கானில் ரூ.4 கோடி ஹசன்பூரில் ரூ.76.07 லட்சம், மேவட்டில் ரூ.95.42 லட்சம், அடையாளம் தெரியாத ரூ.69.09 லட்சம் மதிப்புடைய விவசாய நிலம், இதுபோக ரூ.7 லட்சம் மதிப்புடைய ரியல் எஸ்டேட்.
பிஆர்பி பழனிச்சாமி கிரானைட் தொழிலதிபர். ராபர்ட் வதேரா நாடாளும் காங்கிரசின் முதல் குடும்பத்தின் அரசியல் தொழிலதிபர். வெற்றி கொடி கட்டு, மலைகளை முட்டும் வரை முட்டு, லட்சியம் எட்டும் வரை எட்டு, படையெடு படையப்பா, வாழ்க்கையில் ஆயிரம் தடைகளப்பா, தடைகளும் உனக்கு படிக்கல்லப்பா எனச் செல்லும் தமிழ்த் திரைப்பட பாடல் இது போன்றவர்களை, நேற்று வரைக்கும் மனிதனப்பா இன்று முதல் நீ புனிதனப்பா என வாழ்த்துப் பாடும். ராபர்ட் வதேராவிற்கு எந்தத் தடைகளும் இதுவரை வரவில்லை. அவருக்கு தொழிலதிபர் லட்சியங்கள் மட்டுமே உண்டு என்றும் அரசியல் ஆர்வம் இல்லை என்றும் பிரியங்கா சொன்னதில் எவ்வளவு தூரம் ஆறுதல் அடையலாம் எனத் தெரியவில்லை.
வதேரா பதில் சொல்ல முடியாத விசயங்கள் வதேராவின் 5 நிறுவனங்களின் முகவரி 268 சுக்தேவ் விகார், புதுடெல்லி. அவரும் அவரது தாயார் மவுரின் வதேராவும் மட்டுமே இயக்குனர்கள். ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ரியாலிட்டி நிறுவனத்திலிருந்து மட்டும் ரூ.60 லட்சம் ஊதியம் பெறுகிறார். இந்த ஊதியமும், கம்பெனிச் சட்டம் 1956ன் சட்டப்பிரிவு 217(2ஏ) க்குப் புறம்பானது என நிறுவன தணிக்கையாளர் சொல்கிறார். நிறுவன அறிக்கை, அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் அனைவரின் அர்ப்பணிப்புள்ள சேவைக்கு நன்றி சொல்கிறது. ஆனால் வரவு செலவு கணக்கில், வதேராவின் தாயார் அல்லது வேறு எவருக்கும் சம்பளம் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை.
 2009 - 2010 நிறுவனங்களின் லாபம் ரூ.255.64 லட்சம், இதில் எதுவும் வியாபார நடவடிக்கையில் இருந்து வரவில்லை. இனங்காண முடியாத ரூ.5 கோடி நிரந்தர வைப்பு தொகையிலிருந்து வட்டி வருமானமாகக் காட்டப்பட்டுள்ளது.
 ஒரு நிறுவனம் சுமார் ரூ.2.5 கோடி லாபம் காட்டும்போது மற்றவை ரூ.3 கோடி நஷ்டம் காட்டுகின்றன. 2010ல் அந்த வகையில், மூலதனம் இருப்பு எல்லாமே காலியாகி விட்டன. பூஜ்ஜியம் மூலதனம், ஆனால் கோடி கோடியாய் சொத்துக்கள் என்பது எப்படி?
 டிஎல்எப் நிறுவனம் வெளிச் சந்தையில் 14% - 16% வட்டிக்கு பணம் பெறும்போது, அது எப்படி வதேரா நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் தந்தது? அவை கடன் என்றால் ஆண்டுக் கணக்கில் எப்படி திரும்ப பெறாமல் உள்ளது? கரண்ட் லயபிலிடி, அதவாது தற்போதைய பாக்கிகள் என ரூ.72 கோடி 2010ல் கடனாகக் காட்டப்பட்டது. ஆனால் அதற்கு வட்டியில்லை. அதுவே நீண்ட கால சொத்துக்களான நிலத்தில் முதலீடாகக் காட்டப்பட்டுள்ளது.
 வதேராவுக்கு மரத்தில் பணம் காய்த்துள்ளது.
புனித பசுக்களை தொடக் கூடாதாம்
சிதம்பரம், தனி நபர் விவகாரங்களில் தலையிட வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை என்கிறார். 2ஜியில் இப்படிப்பட்ட பணம் கலைஞர் டிவிக்கு வந்ததை ஒட்டியே கனிமொழி பல மாதங்கள் சிறையில் இருந்ததை எவரும் மறக்க முடியாது.
பாரதிய ஜனதாவும் மார்க்சிஸ்ட் கட்சியும், முறையே சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சீத்தாராம் யெச்சூரி மூலம், நிறைய விவரங்களும் ஆவணங்களும் தேவைப்படுகின்றன, அதற்குப் பிறகுதான் எதுவும் சொல்லமுடியும் என்று முதலில் சொன்னார்கள். இப்போது மார்க்சிஸ்ட் கட்சி நீதி விசாரணை கோரியுள்ளது.
தாமரை கையாகும் கை தாமரையாகும். வாஜ்பாய் வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டார்சார்யாவின் முறைகேடுகள் பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பவில்லை. இப்போது காங்கிரஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை குறி வைப்பது அரசியல் நாகரிகமில்லை என்கிறார் சுஷ்மா. காங்கிரஸ் தலைமையிலான அரசின் மீது நாடே நம்பிக்கை இழந்த பின்பும், காங்கிரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர பாஜக தயாராக இல்லை. மமதா கொண்டு வந்தால் ஆதரிப்போம் என நழுவுகிறது. காப்பீடு ஓய்வூதிய நிதிகளில் அந்நிய முதலீடு என்ற விசயத்தில், பாஜக, அதற்கு காங்கிரஸ் பெருமை கொள்ளக் கூடாது, இந்த மாற்றம் தன் ஆட்சியில்தான் துவக்கப்பட்டது எனச் சொல்கிறது. மூலதன சேவை சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, யாமிருக்கப் பயமேன் என பாஜக. சமிக்ஞை தந்துள்ளது. மன்மோகன் அரசை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் அதன் நாசகர கொள்கைகளையும் பின்தள்ள வேண்டியது நாட்டு மக்கள் முன் உள்ள கடமைகளாக உள்ளன.
வதேரா, டிஎல்எப், மற்றும் சில மாநில அரசாங்கங்கள் இடையிலான உறவின் அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றி முழுமையாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று இகக மாலெ கோருகிறது.

Search