COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 16, 2012

உலகம்
அமெரிக்க கண்டத்தின் இரு தேர்தல்கள்
எஸ்.குமாரசாமி
வட அமெரிக்காவில், அமெரிக்க அய்க்கிய நாடுகளில் நவம்பர் 2012ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. பாரக் ஒபாமா ஜனநாயக கட்சியின்  வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ராம்னி போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மை மக்களுக்கு ஆர்வமில்லை. 1996ல்  அதிபர் தேர்தலில் 49%பேர்தான் வாக்களித்துள்ளனர். 2008ல் ஒரு கருப்பு அமெரிக்கர் போட்டியிட்ட பின்னணியில் 56% பேர் வாக்களித்தனர். அது விதிவிலக்கு. பெரும்பான்மை மக்கள், வேறு வேலை இருக்கிறது, வேட்பாளர் பிடிக்கவில்லை, ஆர்வமில்லை, என்ற காரணங்களால் வாக்களிப்பதில்லை.

இந்தத் தேர்தலில் எந்தப் பெரிய கொள்கைச் சண்டையும் இல்லை. போர் பொருளாதாரம், நலப் பயன்கள் வெட்டு, தொழிலாளர் நடுத்தர மக்கள் நலன்கள் பற்றிய அக்கறையின்மை, வசதி உள்ளவர்களுக்கு வரிச் சலுகைகள், நிதி மூலதனத்திற்கு அள்ளித் தருவது, என்ற அடிப்படை விசயங்களில் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஜனநாயக கட்சி காங்கிரஸ் போன்றது, குடியரசு கட்சி பாஜக போன்றது. என ஒரு பரந்த பொருளில் சொல்லமுடியும்.
ஒபாமாவின் ‘மாற்றம்’ முழக்கம் மோசமான ஏமாற்றமானது. அவரை ஆதரித்தவர்கள் கூட எங்களுக்கு டாலர்களாகக் கொடுங்கள்; நீங்கள் மீதிச் சில்லறை/மாற்றத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள் (எண்ஸ்ங் ன்ள் ற்ட்ங் க்ர்ப்ப்ஹழ்ள் & ஹ்ர்ன் ந்ங்ங்ல் ற்ட்ங் ஸ்ரீட்ஹய்ஞ்ங்). 2009 - 2011 தேசிய வருமானத்தில் 88% பெரும் தொழில் குழும லாபங்களுக்குச் சென்றது. வெறும் 1% மட்டுமே ஊழியர்களுக்குச் சென்றது. தேசிய மொத்த வருமானத்தின் 93%, 1% பேருக்குச் சென்றது. மாணவர்கள் இளைஞர்கள் பெற்ற சராசரி கல்விக் கடன் 25,000 டாலரானது. உற்பத்தித் திறன் உயர்ந்தது. ஊதியம் உயரவில்லை. இளைய தலைமுறையினருக்கு பாதுகாப்பான வேலை வாய்ப்புக்கு மாறாக, கல்விக் கடன் சுமை மட்டுமே இருக்கும். நிதி மூலதனத்திற்கும் போருக்கும் தீனி போடுவதாலேயே அமெரிக்க பொருளாதாரம் தடுமாறுகிறது. 2011ல் ஆப்கன் ஈராக் போர்களுக்கு அமெரிக்கா செலவழித்த தொகை, அமெரிக்காவின் 50 மாநிலங்களின் பற்றாக்குறைக்கு இணையானது.
அமெரிக்காவில் சுதந்திர சந்தை முதலாளித்துவம் 1% பேருக்கானது, 99% பேருக்கு எதிரானது என்ற எண்ணம் வலுப்பட்டு வருகிறது. முதலாளித்துவமே தீர்வு என 2002ல் 80% அமெரிக்கர்கள் கருதினார்கள். 2009ல் அப்படிக் கருதுபவர்கள் எண்ணிக்கை 60% ஆனது. 2012ல் இது இன்னமும் குறையும்.
அமெரிக்க அரசியல் வெளி இரு கட்சிகளுக்குள் சுருங்கி, அமெரிக்க பொருளாதாரம் அழுத்தும் சுமையாக ஏகப் பெரும்பான்மை மக்களை நசுக்குகிறது. எந்த விதத்திலும் ஆர்வத்தைத் தூண்டாத, வெற்று வாய் வீச்சுகளும் ஆடம்பரமும் மட்டுமே நிறைந்ததாக, நவம்பர் 2012 தேர்தல் அமைந்துள்ளது.
வெனிசுலாவில் மீண்டும் சாவேஸ்
அமெரிக்கக் கண்டத்தின் மறுபாதி தெற்கு அமெரிக்கா. அங்கே பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோவிற்கு அடுத்து நான்காவது பெரிய பொருளாதாரம் வெனிசுலாவுடையது. எண்ணெய் வளம் நிறைந்த வெனிசுலா, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்கு முயற்சிக்கிறது. அமெரிக்க வட்டத்திற்கு வெளியே, பல்வேறு நாடுகளோடும் உறவாடுகிறது.
06.12.98ல் அதிபராக 56.24% வாக்குகள் பெற்று வென்ற சாவேஸ் 02.02.99ல் அதிபர் பொறுப்பேற்றார். 1999ல் தேசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய அரசியலமைப்புச் சட்டமும் குடியரசும் உருவானது. 30.07.2000 அன்று 59.5% வாக்குகள் பெற்று வென்றார். திரும்பவும் 03.12.2006ல் 60% வாக்குகள் பெற்று வென்றார். 15.02.2009ல் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வாக்கெடுப்பு நடந்தது. ஒருவர் இரு முறைகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்பதை மாற்றும் திருத்தம் 54.36% வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் கியூபாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று மீண்ட சாவெஸ், ஏகாதிபத்தியங்களின், உள்நாட்டு பணக்காரர்களின், ஊடகங்களின் கடுமையான எதிர்ப்பை எல்லாம் முறியடித்து, 07.10.2012ல் நடந்த அதிபர் தேர்தலில் 81% பேர் வாக்களித்து, 54.42% வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்.
மந்திரமா? மாயமா? அரசியல் தந்திரமா?
சாவெஸ் 21ஆம் நூற்றாண்டின் சோசலிசம், மனிதரை மக்களை மய்யமாகக் கொண்ட வளர்ச்சி பற்றி பேசுபவர். ஆயுட்கால சர்வாதிகாரியாகப் பார்க்கிறார், நாட்டின் எண்ணை வளத்தை வீணடிக்கிறார். விரயமாக்குகிறார். ஆபத்தான அயலுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுகிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்த சாவெசின் போட்டியாளர், சாவெஸ் மேற்கொண்ட மக்கள் சார்பு நடவடிக்கைகள் தொடரும் எனச் சொல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். 13 ஆண்டு கால சாவேஸ் ஆட்சி காலத்தில், மாற்றத்திற்கான மக்கள் விருப்பமும் பங்கேற்பும் அதிகரித்தது.
வேலையின்மை 50% என்பது 2009ல் 6.1% ஆனது. 15 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 99.6 சதம் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் ஆனார்கள். கல்வி, மருத்துவம் மக்கள் நோக்கித் திருப்பப்பட்டன. சமூக செலவுகள் பிரும்மாண்டமாய் உயர்ந்தன. கண்டத்தின் நாடுகளிலேயே அதிகமான அளவுக்கு 372 டாலர் (ரூ.18,600) என குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. உணவு போனஸ் 139 டாலர்(ரூ.6950) என நிர்ணயிக்கப்பட்டது. இரண்டும் சேர்ந்தால் ரூ.25.550. ஓய்வூதியம் ரூ.18600 என ஆனது. வறியவர் வசதி இல்லாதவர் உணவுப் பாதுகாப்புக்கு வழி செய்யப்பட்டது. மக்கள் கைகளில் வாங்கும் சக்தி உயர்ந்தது. தேசப் பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்தது. இவையே சாவெஸ் வெற்றிக்குப்பின் இருந்த மாயமும் மந்திரமும் தந்திரமும் ஆகும்.
வெனிசுலா இந்தியாவிற்கு உணர்த்தும் செய்தி
வெனிசுலா, அமெரிக்கா, கனடா தவிர்த்த அமெரிக்க கண்டத்தின் நாடுகளோடும், கியூபாவோடும், கரீபிய நாடுகளோடும் நல்லுறவையும் பொருளாதார ஒருங்கிணைப்பையும் வளர்க்க முயற்சிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் விடாப்பிடியாய் நிற்கிறது. பல துருவ உலகம் நல்லது என்ற அடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான் நாடுகளோடு நல்லுறவுக்கு முயற்சிக்கிறது. தனது எண்ணை வளத்தையும் செல்வாக்கையும் மற்ற வளரும் நாடுகளுக்கு செலவழிக்கிறது.
இந்தியா, அமெரிக்க இஸ்ரேல் அச்சுடன் கொண்டுள்ள உறவுகள், பக்கத்து நாடான பாகிஸ்தானிடமும் கொண்டுள்ள பகைமை, நிதி மூலதனத்திற்குப் பணிந்து போவது ஆகியவற்றோடு நாம் வெனிசுலாவின் சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை, சுலபமாக ஒப்பிட்டுப் பார்க்க முடியும். யாருக்கான வளர்ச்சி, என்ன விலை கொடுத்து வளர்ச்சி என்ற கேள்விகளுக்கு வெனிசுலா ஒரு மாற்று பதில் தருகிறது. செல்வத்தை வருமானத்தை மறு பங்கீடு செய்வதிலும் ஒரு மாற்றுப் பாதையைத் தேர்வு செய்தது. வெனிசுலா நவதாராளவாதக் கொள்கைகளை, தனியார்மயத்தை, தாராளமயத்தை நிராகரித்தது. மன்மோகன், தனியார்மயம் தாராளமயம் இல்லாவிடில் முதலீடு வராது, மூலதன வருகை இல்லாமல் வளர்ச்சி வராது எனச் சொல்லி பொதுத் துறைப் பங்குகளை விற்கிறார்; சில் லறை வர்த்தகம், காப்பீடு, ஓய்வூதிய நிதிகளில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கிறார்.
ஆனால், வெனிசுலா, சிமெண்ட் தொழிலில் பிரான்சின் லாபார்ஜ் சுவிட்சர்லாந்தின் ஹோல்சிம் மெக்சிகோவின் செமெக்ஸ் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கியது. உணவுத் தொழிலில், பன்னாட்டு கார்கில் உள்நாட்டு லாக்டினோஸ்லாவேண்டெ நிறுவனங்களையும், வங்கித் துறையில் ஸ்பெயினுக்குச் சொந்தமான சான்டான்டர் குழுமத்தின் பேங்க் ஆப் வெனிசுலாவையும் நாட்டுடைமையாக்கியது.
விலை கட்டுப்பாடு, அவ்வப்போது குறைந்தபட்ச சம்பளம் உயர்வு, வசதி படைத்தவர்கள் மீது கூடுதல் வரி, தொழிலாளர் மற்றும் சங்க உரிமைப் பாதுகாப்பு, வரி ஏய்ப்புக்குச் சவுக்கடி என மூலதனத்தைக் கட்டுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்போதும் வெனிசுலா பொருளாதாரம் துடிப்புடன் முன்னேறுகிறது. பன்னாட்டு நிறுவனங்களான, ஜெனரல் மோட்டார்ஸ் மிட்சுபிஷி டெய்ம்லர் கிரிஸ்லர் போன்ற பலரும் வெனிசுலாவில் செயல்படுகின்றனர்.
இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு மாற்றாக, வெனிசுலா, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுகிறது. முன்னேறியும் செல்கிறது.

Search